பள்ளியில் வருட இறுதித்தேர்வு அட்டவணை போட்டவுடன் ஒரு பிரிண்ட் எடுத்து இந்தாம்மா என்று ஃப்ரிட்ஜ் மேல் ஒட்டி வைத்து எந்தெந்த நாளில் என்னென்ன தேர்வுகள், நேரம் என்பதையெல்லாம் சொல்லி விட்டு மகளும் படிக்க ஆரம்பித்து விடுவாள். மிக நன்றாக படிப்பவள் தான். ஆனாலும் கேள்வி கேளு, சரியா பதில் சொல்றேனா என்று பதட்டமாகவே இருப்பாள். திடீரென நடு இரவில் எழுப்பி, தனியாக படிக்க பயமாக இருக்கிறது. என் அறையில் படுத்துக்கோ என்று நானும் என்ன நடக்கிறது ஏது நடக்கிறதென புரியாமலே தூக்க கலக்கத்தில் அவள் படுக்கையில் 'பொத்' என்று விழும்பொழுது எதிர் வீட்டு ஜன்னல்களில் தெரியும் விளக்குகளும் சொல்லாமல் சொல்லும் அங்கு விழித்திருந்து படிக்கும் பெண் குழந்தைகளை!
இவ்வளவு நேரம் முழித்திருந்து படிக்கிறாளே பசிக்காதோ என்று தூங்கிக்கொண்டே சாப்பிட ஏதாவது எடுத்திட்டு வரவா? இல்ல சூடா டீ போட்டுக் கொடுக்கவா என்று கேட்டால், உனக்குச் சிரமமில்லை என்றால் எனக்கு ஹார்லிக்ஸ் போட்டுக் கொடும்மா என்று புத்தகத்தின் மேலிருந்து கண்ணை எடுக்காமல் பதில் வரும். நானும் கீழே சென்று ஹார்லிக்ஸ் போட்டுக் கொடுத்து விட்டு விட்ட இடத்திலிருந்து தூக்கத்தைத் தொடருவேன். காலையில் அலாரம் அடித்தும் தூங்கிக் கொண்டிருப்பாள். பாவம், எத்தனை மணிக்கு குழந்தை தூங்கினாளோ? மெதுவாக எழுப்பி டீ போட்டுட்டு வர்றேன். எந்திரிக்கிறியா? பைவ் மினிட்ஸ் மாம் என்பாள். எதிர் வீட்டிலும் விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும். அவளை எழுப்பி விட்டு நான் மீண்டும் தூங்கி விடுவேன்.
இப்படித்தான் தேர்வு நடக்கும் நேரத்தில் நானும் மகளும் அல்லாடிக் கொண்டிருப்போம். தேர்வுக்கு முந்தைய இரவே பென்சில்களை கூர்மையாக சீவி அழிரப்பர் இத்யாதிகளை எடுத்து வைத்து விட்டுத் தான் தூங்குவாள். திட்டமிட்டுச் செய்வதில் கில்லாடி அவள்! பெருமையாக இருக்கும்.
டேய், ஸ்கூல்ல எக்ஸாம் ஸ்கெடுல் போட்டாங்களாம். தெரியுமா?
உனக்கெப்படி தெரியும்ம்மா? 😧😧😧
ம்ம்ம்ம்...ஈமெயில் வந்துச்சுடா எனக்கு. உனக்கு வரலை ? எப்ப படிக்க போற?
படிக்கலாம்ம்ம்ம்... சொல்லும் பொழுதே வாசலில் மணி அடிக்கும்.
இந்தா வர்றேன்... அவ்வளவு தான். நான் மட்டும் அட்டவணையைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியது தான்.
இங்கிலீஷ்ல படிக்கிறதுக்கு என்னம்மா இருக்கு?
சரி, மேத்ஸ்?
அதெல்லாம் படிப்பாங்களா?
பின்ன எதைத் தான் படிப்பாங்க?
பிஸிக்ஸ், சோஷியல் ஸ்டடீஸ் தான் படிக்க வேண்டியிருக்கும்.
அப்ப அதையாவது படிச்சுத் தொலைக்க வேண்டியது தான?
இப்ப படிக்கிறேன். கொஞ்ச நேரம் போகட்டும் என்று ராகு காலம், அஷ்டமி, நவமி எல்லாம் பார்த்து ஒரு வழியாக ரோபோ சிட்டி ஸ்டைலில் புத்தகத்தைத் திறந்து குறுக்கு நெடுக்காக பார்வையை ஓட விட்டு.... அம்மா பசிக்குது.
இப்ப தானடா படிக்க ஆரம்பிச்ச? அதுக்குள்ள பசிக்குதாக்கும் சொல்லிக் கொண்டே தோசைக்கல்லை எடுத்து வைத்து நான் என் கடமையைத் தொடர...
மெதுவாக சாப்பிட்டு முடித்து... ரிலாக்ஸ் பண்ண டிவி பார்த்து, வெளியில் சென்று விளையாடி விட்டு.... ரெவ்யூ பாக்கெட் எடுத்துட்டு வா என்றவுடன் சிறிது நேரம் டாம் அண்ட் ஜெர்ரியாக ஓடியவனை... கேள்வி கேட்டால் ஒரு வார்த்தை தான் பதிலாக வரும்.
என்னடா?
அதை வச்சு நான் எழுதிடுவேன்மா! அடுத்த கேள்விய கேளு.
பாதி கேள்விகளுக்குத் தெரியும்ம்ம்ம்ம்ம்ம்... ஆனா இப்ப தெரியலைங்கிற மாதிரியே யோசிப்பான்.
நாளைக்கு வேண்டிய பென்சில், பேனா, அழிரப்பர்லாம் எடுத்து வச்சிக்கிட்டியா?
ம்ம்ம்ம்.... எடுத்து வைக்கிறேன்.
அவ்வளவு தான். எனக்கு முன்னாடியே தூங்கப் போய் நான் எழுந்த பிறகு சாவகாசமாக எழுந்து வந்து நியூஸ் பார்த்துக் கொண்டே ஆற அமர சாப்பிட்டு...கடைசி நிமிடத்தில் பென்சிலைத் தேடி, முனை சீவி.... கோபம் தலைக்கேறினாலும் பரிட்சைக்குச் செல்லும் முன் அப்செட் செய்ய வேண்டாம் என்று எனக்கு நானே....ஷின் சான் மாதிரி 'அமைதி அமைதி அமைதியோ அமைதி அமைதிக்கெல்லாம் அமைதி'ன்னு கையை கட்டிக்கொண்டு சுத்தி சுத்தி வர வேண்டியதுதான்.
சாந்தமு லேது...சவுக்கியமு லேதுங்கிற மாதிரி விஷமத்துடன் சிரித்துக் கொண்டே காருக்குள் ஏறுவான் சுப்பிரமணி.
என்ன பரீட்சைன்னு ஞாபகம் இருக்கா?
ஓ! நல்லா ஞாபகம் இருக்கேம்மா.
தூங்கிடாதேடா! நல்லா பண்ணு.
தேங்க்ஸ்
எழுதி முடித்தவுடன் வரும் குறுஞ்செய்தியில் 'ஈஸி பீஸி'. மதிப்பெண்கள் வரும் பொழுது தான் உண்மை நிலவரம் தெரியும். அப்பொழுதும் தன் மீது தவறு அல்ல. பேப்பரைத் திருத்தியவர் மீது தான், சிஸ்டம் சரியில்லை என்று 'எஸ்' ஆகி விடுவான்.
வழக்கம் போல் 'ஙே’😔
திட்டமிட்டு படிக்க ஒரு குழந்தை. திட்டங்களே இல்லாமல் படிக்குது ஒரு குழந்தை.
காட் இஸ் கிரேட்!
எழுத நேரமே இல்லைம்மா எவ்வளவு மார்க் வரும்னு தெரியல என்று சொல்வாள் செல்லல்ல்ல மகள். . நான் எழுதி முடிச்சு நல்லா தூங்கிட்டேன்ன்ன்ன்ன். நல்லா எழுதியிருக்கேன்னு தான் நினைக்கிறேன்.... இது சுப்பிரமணி 😞
குழந்தைகள் பல விதம்! ஒவ்வொன்றும் ஒரு விதம்!
ஹ்ம்ம்... இப்படி பொலம்ப வச்சிட்டியேடா மாதவா!
No comments:
Post a Comment