திருச்செந்தூர் முருகனைத் தரிசித்து விட்டு திருநெல்வேலியில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் செல்லும் வழியில் வன திருப்பதி ஊரில் சரவண பவனில் மதிய உணவை முடித்துக் கொள்ளலாம் என்று அங்கே சென்றோம். உச்சி வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. வறட்சியுடன் கூடிய தோட்டங்களை கடந்து தனியாக ஒரு சாலை. அதற்குள் செல்ல கட்டணம் வேறு வசூலிக்கிறார்கள்! கேட்டால் தனியார் பராமரிப்பாம்! அந்த உணவகத்திற்குச் செல்ல காசு கொடுத்து உள்ளே சென்றது கொடுமையென்றால் சரவண பவன் உரிமையாளர் சொந்த ஊராம். சாப்பாடு விலையும் அதிகம். தரமும் குறைவு. கார், பஸ், வேன் என்று கூட்டம் அள்ளுகிறது. பின் வேறு எப்படி இருக்கும்? உணவகத்தின் எதிரே தங்கும் விடுதியும் கட்டி வைத்திருக்கிறார்கள். அருகே திருப்பதி பெருமாள் கோவிலும் கட்டி வைத்து அங்கும் கூட்டம்.
நாங்களும் சாப்பிட்டு முடித்து விட்டு வாசலில் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தோம். கோவில் என்றால் கடைகள் இருக்க வேண்டுமென்பது கட்டாயமாயிற்றே! இரண்டு மூன்று கோவில் கடைகளில் சாந்துப் பொட்டு முதல், கண்ணாடி வளையல்கள், தோடு இத்யாதிகள், கிரிக்கெட் மட்டை, பந்து, சிறு குழந்தைகள் விரும்பும் அத்தனை பொருட்களும் அங்கிருந்தன. ஒரு சிறுவன் ஒவ்வொரு பொருளாக கேட்டு வாங்கிப் பார்த்து கடைசியில் கையோடு அவன் அப்பாவை அழைத்து வந்து அவரும் ஒவ்வொன்றாக பார்த்து விலைகளைக் கேட்டு யோசித்தவாறே பேரம் பேசி எதுவும் படியாமல் அந்தச் சிறுவனை அழைத்துச் சென்றார். மகன் கேட்டதை வாங்கிக் கொடுக்க முடியவில்லையே என்ற வருத்தம் அவருக்கு. தான் கேட்டு வாங்கிக் கொடுக்கவில்லையே என்று அழுத படி அந்தப் பையனும் முரண்டு பிடித்துப் போவதைப் பார்க்க பாவமாக இருந்தது. அந்த அப்பாவிற்குத் தானே தெரியும் அவ்வளவு செலவு செய்ய முடியாதென்று!
என் அம்மா சும்மா இருக்காமல் நீ கேட்குறதுக்கு முன்னாடியே அப்பா உனக்குப் பிடிச்சத வாங்கி கொடுத்துருவார் என்றார். உண்மை தான். நான் கேட்காமலேயே பலதும் எதிர்பாராத நேரங்களில் எனக்கு வாங்கிக் கொடுத்து திக்குமுக்காட வைத்திருக்கிறார் அப்பா. ஆனால் ஒரு முறை கோவில்கடையில் நான் கேட்ட பொருளை வாங்கிக் கொடுக்க மாட்டேன் என்று அழிச்சாட்டியம் பண்ணி விட்டார். நானும் ஆர்ப்பாட்டம் எல்லாம் பண்ணிப் பார்த்ததில் வர வர வம்பு அதிகமாகிட்டே போகுது. சொல்ற பேச்ச சுத்தமா கேட்குறதில்ல வீட்டுக்குப் போனவுடனே முதுகுல நாலு வச்சா தான் சரியா வருவே அது இதுவென்று அவர் கத்த நான் முரண்டு பண்ண...அம்மா சமாதானம் பண்ண...கோபத்துடன் கோவிலை விட்டு வந்த நாளை அம்மாவிற்கு ஞாபகப்படுத்தினேன். அப்படி ஒரு நாள் தான் நடந்தது. அதை மட்டும் தெளிவாக நினைவில் வைத்திருக்கிறாய். எந்த ஊருக்குச் சென்றாலும் உனக்குப் பிடித்தவைகளை வாங்காமல் அப்பா வந்ததில்லை. அதையெல்லாம் மறந்து விட்டாயே என்று கோபித்துக் கொண்டார்.
அதையெல்லாம் நானும் மறக்கவில்லைம்மா. ஆனாலும்...அன்று நான் கேட்டு வாங்கிக் கொடுக்காதது மட்டுமில்லாமல் சாப்பிடச் சென்ற ஆரிய பவானில் கூட அவர் சொன்னதைத் தான் சாப்பிட வேண்டும் என்று அன்று நடந்த நிகழ்ச்சிகளை அசை போட்டுக் கொண்டே வந்தோம். இந்த அப்பாக்களுக்கு எப்பொழுது கோபம் வரும், எப்பொழுது செல்லம் கொஞ்சுவார்கள் என்பதே தெரியாது. என்னையெல்லாம் கோபித்தால் எனக்கும் கோபம் வரும் என்று நானும் பதிலுக்குப் பதில் பேச, அதில் அவருக்கு இன்னும் கோபம் அதிகமாகும். இருவரின் சுபாவம் தெரிந்ததால் அம்மா தான் பாவம் நடுவில் கிடந்து தத்தளிப்பார். வேடிக்கைப் பார்த்துக் கொண்டே சாப்பிட பிடிக்கும் என்று ஜன்னலோர சீட்டிற்குத் தாவினால் அங்கே உட்காரக் கூடாது. என் முன்னால் உட்காரு என்று சொன்ன கணத்திலிருந்து எனக்கு அப்பாவிடம் பேசக் கூட பிடிக்கவில்லை. சாப்பிட்டு முடித்து ஐஸ்கிரீம் கேட்டால், மசாலா பால் தான் குடிக்க வேண்டும் என்று ஆரம்பித்து நான் வாந்தியெடுப்பேன் என்று மிரட்டியும் அதை குடிக்க வைத்து...அப்பப்பா... இனி உன்னோட நான் ஹோட்டலுக்கெல்லாம் வர மாட்டேன் என்று அப்பாவிடம் சொல்லி விட்டு மூஞ்சியைத் திருப்பி பேசாமல்... நான் கேட்ட பொருள் வாங்கிக் கொடுக்கும் வரை அவரைத் தவிர்த்து...ஞாயிறன்று மதியம் திகர்தாண்டா பாய் கொண்டு வரும் ஐஸ்கிரீம் வாங்கித் தரும் வரை தொடர்ந்த போராட்டம் ஒருவழியாக முடிவுக்கு வந்ததில் அம்மாவுக்குத் தான் நிம்மதியாக இருந்திருக்கும். இனி அடம் பிடிக்க மாட்டேன், சொல் பேச்சு கேட்பேன் என்று சொன்னால் தான் ஐஸ்கிரீம் என்று அங்கும் கண்டிஷன் போட...இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா என்று அப்போதைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு...ஹ்ம்ம்... எப்படியெல்லாம் செல்லமாக வளர்ந்து அரட்டி உருட்டி மிரட்டி இருந்திருக்கேன்.
கல்யாணம் பண்ணி வச்சு பாதிய தொலைச்சு சுப்பிரமணிய பார்த்ததுக்கப்புறம் அவனோட அரட்டல் உருட்டல் மிரட்டலுக்குப் பயப்படற மாதிரி ஆகி வாழ்க்கை ஒரு வட்டம்னு தெரிந்து போச்சுடா மாதவா!
ஹ்ம்ம்...
விட்டுச் சென்ற
நினைவுகளில்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்
அப்பா!
விட்டுச் சென்ற
நினைவுகளில்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்
அப்பா!
No comments:
Post a Comment