Wednesday, June 20, 2018

கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு

ஹையா! ஸ்கூல் முடிஞ்சிருச்சு! இனி காலையில எழுந்திருக்க வேண்டாம். நல்லா தூங்கலாம்மா. உனக்கும் வேலைகள் மிச்சம். நோ ஹோம்ஒர்க்! படிக்கவே வேண்டாம். ஜாலி ஜாலி! நேற்று தேர்வு எழுதி முடித்து விட்ட வந்த கையோடு இனி தேவையில்லை என்று தலையைச் சுற்றி கத்தை கத்தையாக பேப்பர்களை எறிந்து விட்டு சுத்தம் செய்த திருப்தியோடு நண்பர்களுடன் விளையாட ஓடி விட்டான். கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கோடை விடுமுறையில் ... இனி எல்லாம் இன்ப மயம் தான் 🙂

ஒவ்வொரு வருடமும் பள்ளி முடியும் வரை இவன் பத்திரமாக சென்று வரவேண்டுமே என்று மனமெல்லாம் திக் திக் திக். இந்த வருடமும் பள்ளி ஆரம்பித்த ஓரிரு மாதங்களில் ஓட்டப்பந்தயத்தில் ஓடுகிறேன் பேர்வழி என்று காலை முறித்துக் கொள்ளாத குறை மட்டும் தான். டாக்டரும் இனி ஒரு மாதத்திற்கு ஒடவோ விளையாடவோ கூடாது என்று தடை செய்ததில் பல விளையாட்டுப் போட்டிகளையும் இழக்க வேண்டியிருந்தது. ஆரம்பத்தில் இயற்பியல் பாடத்தில் தடுமாறி திடீரென இரண்டாவது செமஸ்டரில் அப்பாடத்தின் மேல் அப்படியொரு ஈர்ப்பு! கல்லூரியில் இயற்பியல் எடுக்கலாம் என்றிருக்கிறேன் என்று சொல்லி ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு பிடித்திருக்கிறது! என் மகனா நீ! எனக்குப் பிடிக்காத பாடமாயிற்றே! அவ்வப்போது கணினி சம்பந்த பாடங்களில் சந்தேகங்களை கேட்டுக் கொண்டு நல்ல பிள்ளை போல் பள்ளிக்குச் சென்று வந்து கொண்டிருந்தான். பள்ளி விடுமுறை அளிக்கவில்லை என்றால் கவலையே இல்லை. இவனே எதையாவது சாக்கு போக்கு சொல்லி லீவெடுத்துக் கொண்டு... தோதாக அலர்ஜி, காய்ச்சல், சைனஸ் படுத்த வேறு வழியில்லாமல் நாங்களும் வீட்டிலேயே இரு என்று சொல்ல... ஜாலி தான். காலை அவனாகவே அலாரம் வைத்து எழுந்தது இந்த வருடத்தின் முதல் சாதனை என்றால் வழக்கமாக பள்ளியில் இருந்து உங்கள் மகன் பத்து நாட்கள் வரை விடுமுறை எடுத்து விட்டான். இனியும் எடுத்தால் தேர்வு எழுத முடியாது என பள்ளித் தலைமையாசிரியரிடமிருந்து வரும் மிரட்டல் கடிதம் வராமல் இருந்தது மெடிக்கல் மிரக்கிள் தான்!

இந்த ஒரு வருடத்தில் மட்டும் நான்கு முறை பள்ளியில் குண்டு இருக்கிறது, துப்பாக்கி இருக்கிறது என்று பீதியை கிளப்பி...அப்பப்பா!

வரிசையாக தேர்வுகள் வரும் போகும். இவன் மட்டும் எப்பொழுதும் போல்.எனக்கென்ன மனக்கவலை என்றிருப்பான். நடுநடுவே நீயும் நானுமா? கண்ணா நீயும் நானுமா ரேஞ்சில் அப்பாவுக்கும் மகனுக்கும் நடக்கும் 'கௌரவ' யுத்தத்தில் மறக்காமல் எனக்கு அளிக்கவிருந்த பண்டரிபாய் வேடத்திலிருந்து நான் தப்பித்துக் கொள்ள மிகுந்த பிரயத்தனப்பட்டு எப்படியோ பிழைத்துக் கொண்டது என் அதிர்ஷ்டம்! பள்ளியிலிருந்து இசைநிகழ்ச்சிக்காக மாசச்சூசெட்ஸ் , பெனிசில்வேனியா மாநிலங்களுக்குச் சென்று வரும் வரை... பத்திரமாக வந்து சேர வேண்டுமே என்ற வேண்டுதல் தான். சென்ற இரு இடங்களிலும் மாணவர்களின் இசை நிகழ்ச்சி முடிந்த பிறகு 'தீம் பார்க்'கிற்கும் அழைத்துச் சென்றார்கள். மாசச்சூசெட்ஸ்லிருந்து வரும் பொழுது தீம் பார்க்கில் கீழே விழுந்ததில் காயத்துடன் வந்தான். பெனிசில்வேனியா போகிறானே நாமும் நான்கு நாட்கள் எங்காவது போகலாம் என்று நினைத்தால் எங்கேயும் போயிடாதேம்மா. ஒரு வேளை எமெர்ஜென்சியிலருந்து உனக்கு ஃபோன் வந்தாலும் வரலாமென்று...வேடிக்கையாக எதைப் பேசுவது என்று இல்லை? அவ்வளவு தான்! தூக்கமும் போய் அவன் வீடு வந்து சேரும் வரை...பத்திரமாக வந்து சேர வேண்டுமே என்ற நினைவு தான். குறுஞ்செய்தி அனுப்பினால் பதில் வராது. அதற்காக ஒரு நாள் காத்திருக்க வேண்டும். பொறுப்பே இல்லை உன் பையனுக்கு என்று என்னிடம் 'தையா தக்கா' என்று கணவர் வேறு என்னைக் கோபித்துக் கொள்ள... வழக்கம் போல் ஞே!

ஊர் வந்து சேர்ந்தவன் வரும் பொழுதே காய்ச்சல், சளி, இருமல் இத்யாதிகளையும் கூடவே அழைத்து வந்திருந்தான். அவனுக்குச் சேவகம் பண்ணியே களைத்துப் போனேன்! அப்படி இப்படி என்று ஒரு வாரத்திற்கு டபாய்த்ததில் பள்ளி முடிய இரண்டு நாட்களே இருந்தது. தேர்வு அட்டவணை வந்து வகுப்பில் ரெவ்யூ வேறு ஆரம்பித்து விட்டது. இவனால் போக முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு. ஒரு வாரத்தில் கடைசி நிமிட பாடங்களை அடித்தேன் பிடித்தேன் என்று சொல்லிக் கொடுப்பார்கள். இவனும் இரவு விழித்திருந்து முடிக்க வேண்டிய வேலைகளை முடித்தாலும் பள்ளி இறுதி நாளில் இவன் தவற விட்ட வகுப்புத்தேர்வுகள் , வீட்டுப்பாடங்கள் ஏழு காத்திருந்தது. வியாழன் இரவு உறங்கச் செல்லுமுன் தூங்காமல் இன்னும் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று பார்த்தால்... தலை மேல் கையை வைத்துக் கொண்டு 'உஸ்ஸு புஸ்ஸு'வென்று பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தான். அம்மா எனக்கு கொஞ்சம் சுடுதண்ணியில தேன் கலந்து கொடுக்கிறியா? ஆஹா! ஏதோ பிரச்னை போல! கொடுத்து விட்டு நானும் அவனருகில் அமர்ந்து என்னாடா பிரச்னை?

நாளைக்கு எனக்கு டெஸ்ட், குயிஸ்னு ஏழு இருக்கும்மா. குரலில் ஒரு நடுக்கம்.

படிச்சியா இல்லியா?

இன்னும் இருக்கு. இந்த பிஸிக்ஸ் பாடம் மட்டும் எதுவும் புரியல. டெஸ்ட்ல எல்லாருமே குறைச்சு வாங்கியிருக்காங்க. கிளாஸ் ஆவெரேஜே 70 தானாம்!

ஓஒ! ஏன் டீச்சர்ட்ட உன் சந்தேகங்களை கேட்டிருக்க வேண்டியது தானே?

இன்னைக்குத்தான் எல்லா பவர்பாயிண்ட்டும் பார்த்தேன். ஒன்னும் புரியல. நேத்து வரை மத்த பாடங்களுக்கான வேலைகளை முடிச்சேன். இப்ப என்ன பண்றதுன்னு தெரியலை .

கிட்டத்தட்ட அழுதே விட்டான். நான் பார்த்தாலும் எனக்கு ஒன்றும் விளங்கப் போவதில்லை. . ஹ்ம்ம்.... பாவம் உடம்பும் படுத்திக்கொண்டிருக்கிறது. இவ்வளவு அப்செட்டாக வேறு இருக்கிறானே என் செல்ல சுப்பிரமணி!

ஒன்னு செய், முதல்ல உன் டீச்சருக்கு ஒரு ஈமெயில் அனுப்பு. சொல்லும் பொழுது மணி இரவு 10.30.

அனுப்பி? இரண்டு நாள் என்ன பண்ணினேன்னு கேட்டா?

முதல்ல மெயில் அனுப்புடா.

என்னன்னு ?

சுகமில்லாததால ஒரு வாரம் நான் ஸ்கூலுக்கு வரலை. அப்ப நடத்திய பாடங்களைப் புரிந்து கொள்ள சிரமமாக இருக்கிறது. நாளை நடக்கவிருக்கும் எனக்கான டெஸ்ட்ஐ அடுத்த வாரம் வைத்துக் கொள்ள முடியுமான்னு கேட்கச் சொன்னா... பாதி தான் கேட்டு மெயில் அனுப்பியிருந்தான். சரி, மத்த பாடங்களைப் படி. நீ முடிக்கிற வரைக்கும் நானும் இங்கேயே உட்கார்ந்திருக்கேன் என்று சொல்லிவிட்டு தூக்கத்துடனும் கவலையுடனும் அவனருகிலேயே அமர்ந்திருந்தேன்.

எனக்குப் பயமா இருக்கும்மா. நான் இந்த டெஸ்ட்ல நல்ல மார்க் வாங்கலைன்னா?

அதுக்கு என்ன பண்ண முடியும். முடிஞ்சவரைக்கும் படி. ஆல்வேஸ் கிவ் யுவர் பெஸ்ட்னு சொன்னாலும் கவலையாகவே இருந்தான்.

இந்த டெஸ்ட் எவ்வளவு முக்கியம் என்று எங்களுக்கும் தெரியும். எனக்கும் கவலையாகி அவன் ஆசிரியருக்கு நானும் தனி மடல் எழுதி இந்த டெஸ்ட் மதிப்பெண்கள் அவனுக்கு மிகவும் முக்கியம். அடுத்த வருட பாடத்தேர்விற்கு இதைத்தான் நம்பி இருக்கிறான். எனக்கும் இந்த பாடங்களில் அவனுக்கு உதவ முடியவில்லை. நாளை அவன் சந்தேகங்களை தீர்த்து வேறு நாளில் டெஸ்ட் வைத்து அவனுக்கு உதவுங்கள் என்று மெயிலைத் தட்டி விடும் பொழுது இரவு 11 மணி.

இன்னும் தூங்காம என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க? கேட்டுக் கொண்டே வந்த கணவரும் அமைதியாக இருப்பவனைப் பார்த்து நான் வேண்டுமானால் பவர்பாயிண்ட் பார்த்து முடிந்தால் சொல்லிக் கொடுக்கிறேன் என்றவரையும்... அவன் இருக்கும் நிலைமையில் விட்டேத்தியாக எதையாவது சொல்லப் போய் புது பூதம் கிளம்பி விட்டால்... வேண்டாம். நான் அவன் டீச்சருக்கு மெயில் போட்டிருக்கிறேன். பார்க்கலாம்.

அப்ப சரி! சீக்கிரம் படிச்சு முடிச்சிட்டு தூங்குங்க.

அவன் வேலைகளை முடித்து தூங்கச் செல்கையில் மணி 12.30.

என்னம்மா இன்னும் பதில் வரலை?

அனுப்பினதே லேட்டு. உன் டீச்சர் தூங்கியிருப்பாங்க. இதுல உனக்கு பதில் வேற போடணுமா?

எனக்கும் குழப்பமாகவே இருந்தது. முருகா! நாளை நன்கு விடிய வேண்டுமே.

வெள்ளிக்கிழமையென்றால் துள்ளலாக பள்ளிக்குச் செல்பவன். முதல்முறையாக சோகத்தை அப்பிக் கொண்டு செல்கிறானே அதுவும் வகுப்புகள் முடியும் இறுதி நாளில் என்று ஒரே வருத்தம். உன் டீச்சர் டைம் கொடுப்பார். கவலைப்படாதே!

ம்ம்ம்... இன்னும் பதில் வரலைம்மா.

நேரா அவர்கிட்ட போய் பேசிப்பாரு. அவர் புரிஞ்சிப்பார். கவலைப்படாதே. மத்த டெஸ்டலாம் நல்லா பண்ணு. நானும் அவருக்குப் ஃபோன் பண்றேன்.

அனுப்பி விட்டு எனக்கும் வேலை எதுவும் ஓடவில்லை. அடிக்கடி மெயில் வந்திருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தேன். இந்நேரம் அந்த வகுப்பு முடிந்திருக்க வேண்டுமே?

என்னடா? என்னாச்சு?

அடுத்த வாரம் தான் டெஸ்ட். நான் மிஸ் பண்ணின பாடங்களை திங்கட்கிழமை எடுக்கிறேன்னு சொல்லிட்டார். செவ்வாய்க்கிழமை டெஸ்ட். ஐ ஆம் ஓகே நௌ. தேங்க்ஸ் மாம்.

ஸ்ஸ்ஸ்ஸ்...அப்பாடா...

பள்ளியிலிருந்து அழைத்து வரும் பொழுது ஒரு கையை பிடித்துக் கொண்டு நன்றி சொல்கிறேன் பேர்வழி என்று... நேத்து ரொம்ப பயந்துட்டேன் தெரியும்மாம்மா?

பயந்து என்ன பண்ண? அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிக்கணும். பயந்தா யோசிக்க முடியாது. தலையில கைய வச்சிக்கிட்டு புலம்ப தான் முடியும். எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு இருக்கு. மறந்துடாத!

ம்ம்ம்... தேங்க்ஸ்ம்மா.

கைய விடுடா. வண்டிய ஓட்டணும்.

மீண்டும் அவன் முகத்தில் சிரிப்பை பார்த்த பின்பு தான்...

பெத்த மனம் பித்துன்னு சும்மாவா சொன்னாங்க?

வீட்டிற்கு வந்த பிறகு தான் அவன் ஆசிரியரிடமிருந்து வந்த பதிலைப் பார்த்தேன். கவலைப்பட வேண்டாம். சுப்பிரமணியுடன் பேசி விட்டேன். டெஸ்ட் அடுத்த வாரம் தான். அதற்குள் அவன் தவற விட்ட பாடங்களை விளக்கி விடுகிறேன். ஹேவ் எ நைஸ் வீக்கெண்ட். அப்பாடா! நிலைமையைப் புரிந்து கொண்டு என்ன அழகாக ஆறுதலாக எழுதியிருக்கிறார். வாழ்க வளமுடன்!

நானும் நன்றி சொல்லி பதில் அனுப்பி விட்டு நிம்மதியானேன்!

எப்படியோ இந்த வருடத்தை ஒட்டியாகி விட்டது. அடுத்த வருடத்தை நினைத்தால் தான்...

டேய்! காலேஜ் போய் பார்த்துட்டு வரணும்.

ஆமாப்பா! போகணும்.

எப்ப?

இப்ப தான லீவு விட்டிருக்கு. இனிமே தான்.

அந்த 'இனிமே' எப்பங்கறது அவனைப் படைச்ச ஆண்டவனுக்கே வெளிச்சம்!

எப்படி இருக்கிறான் பாரு உன் பிள்ளை? கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா?

😞

எனக்கென்ன மனக்கவலை...என் தாய்க்கன்றோ தினம் தினம் என் கவலைன்னு... தூங்கிக்கிட்டு இருக்கு சுப்பிரமணி! இவன் ஒவ்வொரு வருஷமும் படிச்சு முடிக்கிறதுக்குள்ள... நானும் எத்தனை போஸ்ட் தான் போடறது?

ஹம்ம்ம்ம்ம்....

Hooray, hooray, it's a holi-holiday
What a world of fun for everyone, holi-holiday
Hooray, hooray, it's a holi-holiday
Sing a summer song, skip along, holi-holiday
It's a holi-holiday... ன்னு அவனோட சேர்ந்து பாட வேண்டியது தான்🙂

No comments:

Post a Comment

'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...