Wednesday, November 2, 2022

பாடவா உன் பாடலை ...

"பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை
ஏனென்று நான் சொல்லலாகுமா
ஏனென்று நான் சொல்ல வேண்டுமா ..." 
என டிக்டாக்கில் தந்தையும் மகனும் பாடி மனதைக் கவர்ந்தனர். அதைத் தொடர்ந்து பல பாடல்கள்.  தனியாகவும் பலருடனும் அபி (அபிஷேக் வெங்கட்) என்ற இளைஞன் சிரித்த முகத்துடன் பாடி பலரையும் கவர்ந்திருக்கிறான் என்று அந்த ஐடியைப் பின்பற்றுபவர்களையும் அவர்களின் பின்னூட்டங்களையும் பார்த்தால் தெரிந்தது. இந்த வயதில் இத்தனை இசை ஞானமா! ? அனாயாசமாக கர்னாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி, தமிழ், மலையாளம், ஹிந்தி, பெங்காலி திரைப்பட பாடல்கள், மேற்கத்திய இசை என்று கலந்து கட்டி ரசிகர்களைத் தன் வசம் ஈர்த்தவரைப் பார்த்தால்  மேலைநாட்டவர் போல் தோற்றம். வட இந்தியரோ என்றும்  நினைக்கத் தோன்றும். அதுவும் அவர் தந்தையுடன் பாடியதால் பெயரை வைத்து  தென்னிந்தியர் என்று தெரிந்தது. தமிழ் உச்சரிப்புகள் எல்லாம் தெள்ளத்தெளிவாக! ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. சமூக ஊடகங்களில் அவரை நானும்  பின்தொடர, 73 ராகங்களைப் பாடியதன் மூலம் மிகவும் பிரபலமாகி விட்டார். 

"AIM for Seva" அமைப்பிற்காக இந்த வருடம் அமெரிக்காவில் நிகழ்ச்சிகளை வழங்க உள்ளார் என்றவுடன் ஆனந்தமாக இருந்தது. நேரடியாகவே அவர் பாடுவதைக் கேட்கும் சந்தர்ப்பத்தை விட்டு விடக் கூடாது என்று விடுமுறை முடிந்து ஊரில் இருந்து வந்த அடுத்த நாளே என்றாலும் தூக்கமும் கண்களைத் தழுவினாலும் கிளம்பி சென்று விட்டோம் நானும் ஈஷ்வரும்!

அபியின் அறிமுகப்படலம் முடிந்ததும் ஓடி வந்து மேடையில் எற, ரசிகர்களின் ஏகோபித்த ஆரவாரம் ! வணக்கம் தெரிவித்து விட்டு விநாயகர் துதியில் ஆரம்பித்த நொடியில் கூட்டம் அவர் குரலுக்கு அடிமையானது. அவருடன் சேர்ந்து பலரும் பாட, அபிக்கும் உற்சாகம். ஆல்பனி சிறிய ஊர் என்றாலும் ஏகப்பட்ட கர்நாடக சங்கீத ஆசிரியர்களும், பாடகர்களும் மாணவர்களும் உள்ளனர். அனைவருக்கும் குஷி. அவருடைய இசைக்குழுவினர் இல்லாமல் முன்னேற்பாடாக இசைக்கோர்வையுடன் தயாராக வந்திருந்தார். அமெரிக்காவில் இன்னும் கொரோனா கெடுபிடியால் விசா பிரச்னை தொடருகிறது போல 😐 அரங்கில் தமிழ் மக்கள் கூட்டம் அதிகம் என்று நினைக்கிறேன். தமிழில் பாட வா என கேட்டவுடன் பலத்த கரகோஷம்.

ஒவ்வொரு பாடலைப் பாடும் பொழுது அதனுடன் தொடர்புடைய அவருடைய அனுபவங்களைச் சுவையாக பகிர்ந்து கொண்ட விதம் அழகு! பெற்றோர், குறிப்பாக அவருடைய தந்தை அவருடைய இசைத்திறமையைச் செப்பனிட்டு வளர்த்து இருக்கிறார் என்பதை மறவாமல் குறிப்பிட்டதும் தன்னுடைய குருக்களுக்கு மிகவும் கடமைப்பட்டிருப்பதாக நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

தன்னுடைய "73 ராகங்கள்" நிகழ்ச்சியைக் கேட்டு திரு.எஸ்.பி.பி அவர்கள் கைப்பட எழுதிய கடிதத்தில் பாராட்டுக்களுடன் இன்னும் தன்னை மெருகேற்ற அறிவுரைகளையும் அன்பாக தெரிவித்திருந்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். அவரைக் காணும் பாக்கியம் கிடைக்கவில்லை. அதே போல் லதா மங்கேஷ்கர் வீட்டைப் பார்த்தும் நேரில் சந்திக்க முடியாமல் போனது. அவருடைய பாடலைப் பாடப் போகிறேன் என்றவுடன் அந்தப் பாடலாகத் தான் இருக்கும் என்று எதிர்பார்த்தபடி எனக்கு மிகவும் பிடித்த பாடலைப் பாடினார். ஆஹா! இது போதும் எனக்கு இது போதுமே! வேறென்ன வேண்டும் இந்தப் பாட்டு போதுமே என்று மனதிற்குள் பட்டாம்பூச்சி! அதே போல், தனக்கு மிகவும் பிடித்த எஸ்.பி.பி பாடல் என்று பாடியதும் ஆஹா! எனக்கு ஒரே கொண்டாட்டம். என்ன தான் சங்கீதம்னா கிலோ என்ன விலை என்றிருந்தாலும் சதா எதையாவது கேட்டுக் கொண்டே இருக்கும் எனக்கு அபி பாடிய தமிழ் பாடல்கள் சில ஹிந்தி பாடல்கள் எல்லாம் பிரபலமான பாடல்கள் தான் என்றாலும் நேரில் பாடுவதைக் கேட்க சுகமாக இருந்தது. அவருடைய தந்தைக்கு திரு.எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் திரு.டிஎம்.சௌந்தரராஜன் பாடிய பாடல்கள் மிகவும் பிடிக்கும் என்று ஆரம்பித்து துவக்கத்தில் நான் சொன்ன பாடலை "என்னோடு சேர்ந்து பாடுபவர்கள் விருப்பம் தெரிவிக்கலாம்" என்றவுடன் ஈஷ்வரும் வேறு சில நண்பர்களும் பாட நிகழ்ச்சி களைகட்டியது.

ராகங்கள் பெயரைச் சொல்ல அவர் பாடிக் காண்பித்து அதே ராகத்தில் அமைந்திருந்த பாடல்களைப் பாடியது சிறப்பு. தான் பாடியது மட்டுமில்லாமல் அரங்கத்தில் இருந்தவர்களையும் பாட உற்சாகமூட்டினார். சிரித்த முகத்துடன் அவர் நிகழ்ச்சியை வழங்கியதில் ரம்மியமான பொழுதாக இனிதே கரைந்தது  ஞாயிறு மாலை.

"AIM for Seva" சமூக அமைப்பு செய்யும் மகத்தான பணிகளையும் நேரில் அவர்களின் பள்ளிக்குச் சென்று அந்தக் குழந்தைகளுடன் பாடியதையும் அங்கு அவர்களுக்கு அளிக்கப்படும் கல்வியுடன் இசை, விளையாட்டு என்று பல்வேறு திறமைகளை ஊக்குவிக்கும் வகுப்புகளும் வழங்கப்படுவதற்கு நன்கொடைகள் எவ்வளவு உதவுகிறது. அதற்கு தானும் ஒரு விதத்தில் உதவிபுரிவது தன்னுடைய அதிர்ஷ்டம் என்று தொடர்ந்து அமைப்பிற்கு உதவுமாறு வேண்டிக்கொண்டார். பூஜ்யஸ்ரீ தயானந்த சரஸ்வதி ஸ்வாமி அவர்கள் இயற்றிய சில பாடல்களையும் பாடி மகிழ்வூட்டினார்.

உடல்நலம் சுகமில்லாமல் இருந்தாலும் ரசிகர்களை ஏமாற்ற விரும்பாமல் பாடி மகிழ்வித்ததைப் பாராட்டியே ஆக வேண்டும். அமெரிக்காவில் 27 நகரங்களில் இந்த நிகழ்ச்சி நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இன்னும் 10 ஊர்களுக்குப் பயணம் செய்ய வேண்டும் என்றார். அவருக்கு எல்லாம் வல்ல கடவுள் துணை புரியட்டும்.

ஆல்பனி அன்பர் ஒருவரின் மூலமாகத் தான் இந்த நிகழ்ச்சிக்கான வாய்ப்பு கிடைத்தது. அதனாலேயே ஆல்பனி தனக்கு மிகவும் நெருக்கமான நகரம் என்று கூறவும் அரங்கம் அதிர கைத்தட்டல் தான். வீ லவ் யூ அபி 💞💞💞

"The greatest musical instrument given to a human being is the voice."
-தயானந்த சரஸ்வதி

தன் குரலால் பலரையும் மகிழ்விக்கும் அபியின் இசைப்பயணம் மென்மேலும் உயர வாழ்த்துகள்! 





No comments:

Post a Comment

'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...