காலையில் மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி சித்திரை வீதிகளில் நடந்து செல்கையில் சில சோம்பேறி நாய்கள் ஊருக்கேற்றபடி எனக்கென்ன என்று தூங்கிக் கொண்டிருக்கும் காட்சியைப் பார்க்கலாம். சோம்பல் முறித்துக் கொண்டும் மக்களோடு மக்களாக குரைக்காமல் நடந்து செல்லும் சில நாய்களையும் கண்டோம். காஃபி, பலகாரக் கடைகளில் அங்கிருப்பவர்களின் முகத்தைப் பார்த்தபடி பரிதாபமாக நிற்கிறது.
அப்படி ஒரு நாயைப் பார்த்தோம். ஏதாவது பிஸ்கட் வாங்கிப் போடலாம் என்று கடைக்காரரிடம் கேட்க அவரும் ஒரு பாக்கெட்டைத் தந்தார். எடுத்துப் போட்டால் முகர்ந்து பார்த்து விட்டு இது எனக்குப் பிடிக்காது என்று சொல்லாமல் தள்ளி நின்றது😒 சாலையோரக் கடைகளை வைத்திருந்தவர்கள்,"வாடா வந்து சாப்பிடு." என்று குழந்தையிடம் பேசுவது போல பேசியதும் "எல்லாம் சாப்பிடுவான். கொஞ்ச நேரம் ஆகட்டும்." என்று எங்களிடமும் கூற ஆச்சரியமாக இருந்தது.
"என்ன சாப்பிடுவான்?" என்று கேட்க, பால் வேண்ணா வாங்கிக்கொடுங்க" என கூற, ஈஷ்வரும் பால் வாங்கிக் கொண்டு வந்தார். அதுவோ 'சுடச்சுட' இருந்தது. அதற்குள் ஒரு பெண்மணி, "இந்தப் பாத்திரத்துல தான் நாங்க தண்ணி வைப்போம் இதுல ஊத்திடுங்க." என்று சொட்டை விழுந்த அலுமினிய சட்டியைக் கொடுத்தார். பாலை ஊற்றியவுடன் அவரே சிறிது நேரம் ஆற்றி அங்கு வைத்து விட்டார். சமீபத்தில் குட்டிப் போட்ட நாய் ஒன்று வேகமாக வந்து ரொட்டிகளைத் தின்று பால் குடிக்க சென்றது. இன்னும் ஆறவில்லை போல. காத்திருந்தது. "இது குட்டிங்க எல்லாம் அந்த குப்பைதொட்டிக்குப் பின்னால தான் இருக்கு." அந்த நாயும் நிமிடத்திற்கொருமுறை குப்பைத்தொட்டிப் பக்கம் பார்த்துக் கொண்டே இருந்தது. அம்மா அல்லவா?
அங்கிருந்தவர்கள் நேரத்துக்கு இந்த நாய்களுக்கு ரொட்டிகளையும் பாலையும் கொடுத்து வளர்த்து வருகிறார்கள் என்று தெரிந்து கொண்டோம். அவர்களே சிறு கடைகளை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்கள். ஆனாலும் ஒரு ஜீவன் பசியோடு அலைவதைப் பொறுக்காமல் உதவுகிறார்கள் என்பதைக் கேட்க ஆறுதலாக இருந்தது.
அடுத்த நாள் அம்மன் சன்னதி அருகே படங்களை எடுத்துக் கொண்டிருந்தோம். கழுத்தில் காலருடன் பார்க்க வீட்டில் வளர்க்கும் நாய் போல நன்றாக இருந்தது. அதற்கும் ரொட்டி வாங்கிப் போட்டோம். ஒன்றிரண்டைத் தின்று விட்டு ஈஷ்வரைத் தொடர்ந்து புதுமண்டம் வந்தது. அங்கிருந்து நாங்கள் தெற்குச் சித்திரை வீதி செல்ல, அதுவும் எங்களைத் தொடர்ந்து பின்னாடியே வந்தது. மேற்குச் சித்திரை வீதிக்குத் திரும்பியவுடன் சுற்று முற்றும் பார்த்து விட்டு வந்த வழியே போய் விட்டது.
இட்லி, பன் என்று ஏதாவது சாப்பிட வாங்கி கொடுத்திருக்கலாமோ என்று பிறகு தான் தோன்றியது. அதற்குள் அவன் போய்விட்டிருந்தான்.
இந்த முறை தான் தெருவில் கத்திக் கொண்டு மூர்க்கமாகத் தொடரும் நாய்களைப் பார்க்கவில்லை. ஆனாலும் நாய்களைக் கண்டால் பயம் தான். இவர்களின் எண்ணிக்கையை குறைக்க வழியில்லையா? பாவம் இந்த வாயில்லா ஜீவன்கள்!
No comments:
Post a Comment