Friday, November 18, 2022

உத்தரகோச மங்கை திருக்கோவில்



மதுரையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் வழியில் உள்ளது உத்தரகோச மங்கை திருக்கோவில். இந்தக் கோவிலைப் பற்றி படித்தவுடன் ஊருக்குச் செல்லும் பொழுது கண்டிப்பாக அங்கு சென்று வரவேண்டும் என்று நினைத்திருந்தேன். இந்த முறை அதற்கான சந்தர்ப்பமும் வாய்த்தது. அதிகாலையில் ஐந்து மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி விட்டோம். நெரிசல் இல்லாத நெடுஞ்சாலைப் பயணம். முன்பை விட இப்பொழுது மதுரையைச் சுற்றி அதிகளவில் பைபாஸ் சாலைகள்! இந்த முறை வருணபகவானின் கருணையால் வறண்ட மதுரையும் பசுமையுடன் இருந்ததைப் பார்க்க அழகு.

மாரியம்மன் தெப்பக்குளம் தாண்டியதும் விரகனூர் வரை விரவியிருந்த நகரம் இப்பொழுது அதையும் தாண்டி வளர்ந்திருக்கிறது. கிராமங்களின் சுவடுகள் மறைந்து சிறுசிறு நகரங்களாக மாறிவிட்டிருக்கிறது. விரகனூர் பகுதிகளில் அதிகளவில் இருந்த செங்கற்சூளைகள் குறைந்து விட்டது போல் தோன்றியது. பள்ளிகளும் கல்லூரிகளும், மதுரைக்கே உரிய காபிக்கடைகளும் குறைவில்லாமல் இருக்கிறது. நாங்களும் ஓரிடத்தில் வண்டியை நிறுத்தி காபி குடித்தோம். அந்த அதிகாலை வேளையிலும் மணக்க மணக்க நெருக்கித் தொடுத்த மல்லிகைப்பூ விற்றுக் கொண்டிருந்தவரிடம் பூக்களை வாங்கிச் சூடிக்கொண்டேன். மதுரை மல்லிக்கே உரிய மணம் ! ம்ம்ம்ம்ம் 💗

வானம் மழை மூட்டமாய் இருந்தாலும் தூரத்தில் தலையை நீட்டும் சூரியபகவான். விடியல் கொள்ளை அழகு. வழியெங்கும் கருவேல மரங்களுக்கு குறைச்சல் இல்லை. ஆங்காங்கே மூட்டம் போட்டு செங்கற்களால் மூடி இந்த மரத்தினை எரித்து கரியாக்குகிறார்கள் . "கறுப்புத்தங்கம்" என்று ஒருகாலத்தில் மிகவும் பிரபலமாக இருந்ததாக வண்டியோட்டியவர் கூறினார். வயல்வெளிகளில் நெல் பயிரிட்டிருந்தார்கள். தண்ணீருக்கும் குறைவில்லை போல பசுமை கண்களை நிறைத்தது. சிவகங்கை, திருப்புவனம், பரமக்குடி தாண்டி ராமநாதபுரம் செல்வதற்கு முன்பாக ஒரு சாலை பிரிந்து செல்கிறது. பிரிந்து செல்லும் சாலையில் ஊருக்கு அருகே செல்கையில் அழகான கோவில் கோபுரம் தெரிகிறது. கோவிலின் முன்பு பரந்த வெற்று நிலம். சுற்றிலும் கடைகள். கோவிலின் இடப்பக்கத்தில் தேரை நிறுத்தி வைத்திருந்தார்கள்.

பழமையான கோவில் என்பதை உள்ளே சென்றவுடன் உணர முடியும். இரண்டு கோபுரங்கள் உள்ளது. ஏழு நிலைகள் கொண்ட ராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைய வேண்டும். இரண்டாவது மொட்டைக்கோபுரமாக காட்சியளிக்கிறது. இராமநாதபுரம் சமஸ்தானத்திற்குரிய திருக்கோயில். சேதுபதி மகாராஜா குடும்பத்தினரின் சிலைகள் கோவில் மண்டபங்களில் உள்ளது. விநாயகர் , பலிபீடம், கொடிமரம், நந்தியை வணங்கி உள்ளே சென்றால் மூலவர் மங்களேசுவரர் காட்சி தருகிறார். சமஸ்தானம் இன்றும் கோயில் நிர்வாகத்தைக் கவனித்து வருகிறது என்றார் அங்கிருந்த அய்யர். காலை நைவேத்ய பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தது. கோவிலில் எங்களைத் தவிர அப்பொழுது வேறு யாரும் இல்லை. சுற்றுப் பிரகாரம் ராமேஸ்வரத்தின் பிரகாரத்தை நினைவூட்டியது. அக்னிதீர்த்தத்தின் எதிரே நடராஜருக்குத் தனி சந்நிதி. மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் நடராஜருக்குச் செய்யப்படும் அபிஷேகம் மிகவும் பிரபலம். சஹஸ்ரலிங்க சந்நிதியும் உள்ளது.

"மூலவர் மங்களநாதர். உத்தரம்னா உபதேசம். கோசம்னா ரகசியம். மங்கை, பார்வதி. பார்வதி தேவிக்கு இறைவன் வேதங்களின் ரகசியங்களை உபதேசித்த தலம்ங்கறதால உத்தரகோசமங்கைன்னு இந்த ஊருக்குப் பேர். ஒரு காலத்தில் கடல் இக்கோவில் வரை இருந்திருக்கிறது. திருவிளையாடற் புராணத்தில் வரும் வலைவீசின படலம் இங்கு அரங்கேறியதாக ஐதீகம். அம்பாள் மங்களேசுவரி. இங்குள்ள இரத்தின சபாபதி மிகவும் பிரபலம். வருடத்தில் ஒரு நாளைத் தவிர மற்ற நாட்களில் உடல் முழுவதும் சந்தனம் பூசி காட்சி தரும் மரகத நடராஜரை ஆருத்ரா தரிசனத்தின் போது மட்டும் அலங்காரங்களுடன் பார்க்கலாம் என்பதால் கூட்டம் அலைமோதும். அங்கே இருப்பது அக்னி தீர்த்தம்." என்று பூஜைகள் செய்து கோவிலைச் சுற்றிக் காண்பித்தார் அய்யர். மக்களின் ஆதரவால் கோவில் கட்டுமானப்பணிகள் நடப்பதாகவும் கூறினார்.

பழமையான அமைதியான கோவில்கள் தரும் மனநிறைவை வார்த்தைகளில் விவரிக்க இயலாது. அனுபவித்தே அறிய வேண்டிய அனுபவம் அது. இன்னும் சில மணிநேரங்கள் அங்கு செலவிட ஆசை தான். ஆனால் அருகிலிருக்கும் திவ்யதேசத்திற்குச் செல்ல வேண்டும். சிவனை மனதார வணங்கி விடைபெற்று வந்தோம்.

ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி 
தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி 
நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி 
மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி 
சீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி





No comments:

Post a Comment

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...