புதுமண்டபம் என்றதும் உடனே நினைவிற்கு வருவது மின்னொளியில் ஜொலிக்கும் கடைகளும் மக்கள் வெள்ளமும் தான்! சிறுவயதில் ஸ்லோகம், கோலப்புத்தகங்கள் முதல் கோனார் தமிழ் உரை வரை வாங்க அங்குள்ள கடைகளுக்கு அம்மாவுடன் செல்வது வாடிக்கை. கிழக்குச் சித்திரை வீதி வழியாக உள்ளே நுழைகையில் வெளிச்சுற்றில் இடப்பக்கத்தில் புத்தகக்கடைகள்! அந்தச் சிறு கடைகளில் அத்தனை புத்தகங்களை அழகாக அடுக்கி கேட்கும் புத்தகங்களை அவர்கள் எடுத்துக் கொடுக்கும் பொழுது எப்படி இத்தனைப் புத்தங்கங்களை நினைவில் வைத்திருக்கிறார்கள் என்று ஆச்சரியப்பட்டதுண்டு. வலப்பக்கத்தில் பித்தளை, இரும்பு, தாமிர பாத்திரக்கடைகள். பெரும்பாலும் மதுரையைச்சுற்றியுள்ள ஊர்களில் இருந்து மக்கள் குடும்பங்களுடன் வந்து சீர் பாத்திரங்களை வாங்கிச் செல்வார்கள். அதுவும் சுபமுகூர்த்த நாட்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். விதவிதமான வடிவங்களில் பாத்திரங்களை வேடிக்கைப் பார்ப்பதும் நன்றாகத் தான் இருக்கும்.
இடப்பக்க உள்சுற்றுக்கடைகளில் நூல், பூஜைக்குத் தேவையான மங்கலப் பொருட்கள் முதல் பெண்களின் அலங்கார பொருட்கள் வரை கிடைக்கும். எதிர்வரிசையில் "தடதட" வென ஒலியெழுப்பும் தையல் எந்திரங்களின் ஓசை. அங்கு தான் திருவிழா, பரதநாட்டியம், கோவில் திரைச்சீலைகள் என்று வண்ணமயமான துணிகளைத் தைத்துக் கொண்டிருப்பார்கள். தைத்து முடித்த துணிகளைப் பின்னால் இருக்கும் சிலைகளின் மேல் போட்டு வைத்திருப்பார்கள்! சிலைகளுக்கும் அழகாக துணிகளைத் தைத்து தங்கள் கைத்திறமையைக் காட்டியிருக்கும் தையற்கலைஞர்கள் அனைவரும் ஆண்களே!
நடுவில் வசந்த மண்டபம் வருடத்தில் இருநாட்கள் மட்டுமே அம்மையப்பனுக்காக திறக்கப்பட்டிருக்கும். ஒரு முறை அதைக் காணும் வாய்ப்பும் எங்களுக்கு கிட்டியது. இப்பொழுது யாருக்காக முழுநேரமும் திறந்து வைத்திருக்கிறார்கள்😠😠😠
கடைசிவரை சென்றால் எழுகடல் தெருவில் போய் முடியும் புதுமண்டபம். அங்கே பெரிய நந்தீஸ்வரர் கிழக்கு கோபுரத்தை நோக்கி அமர்ந்தவண்ணம் இருப்பது அழகு. அவரது கொம்புகளின் வழியே அம்மனின் திருக்கல்யாண கோல சிற்பம் பார்க்க பரவசம்.
வாசலில் பழங்கள்,பூக்கள், தட்டுமுட்டுச்சாமான்களை விற்பவர்களும் இருப்பார்கள். காலையில் சென்றால் ஒருவித அழகுடன் இருக்கும் அதே புதுமண்டபம் மாலையில் வண்ண விளக்குகளுடன் ஜொலித்துக் கொண்டிருக்கும்.
புதுமண்டபத்தில் 124 தூண்கள் அழகிய வேலைப்பாடுகளுடன் இருக்கிறதென்று கேள்விப்பட்டேன். ஆனால் இதுநாள் வரையிலும் அதனைப் பார்க்க கொடுத்து வைக்கவில்லை. அங்கிருந்த கடைகள் உள்ளிருந்த தூண்களை முழுவதுமாய் மறைத்து விட்டிருந்தது. பொறுப்பில்லாதவர்களால் பல தூண்களும் சேதமடைந்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து அங்கிருந்த கடைகளை அப்புறப்படுத்தி அருகிலேயே ஒரு இடத்தில் மாற்றி விட்டிருக்கிறார்கள். ஆனால் பழைய கடைகளின் வியாபாரமோ உற்சாகமோ இன்றி சோபித்துப் போய்க் கிடக்கிறது புதுக்கட்டடம்!
சரி கடைகளை அப்புறப்படுத்தி விட்டார்கள். இனி புதுமண்டபத்தின் அழகைக் காணலாம் என மிகவும் ஆவலுடன் இந்த வருடம் அங்கே சென்றால் பலத்த ஏமாற்றம்😔 மொத்தமாக மூடிவிட்டிருக்கிறார்கள். முன்புறம் கூட்டி குப்பையில்லாமல் கொஞ்சம் பார்க்கும் படி இருக்கிறது. அழுக்குப்படிந்து குப்பைகள் சூழ, மழை நீர் தேங்கி கொசுக்களை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது. முடை நாற்றம் வேறு. பார்க்கவே வருத்தமாக இருந்தது.
திருமலை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட அரிய கலைப்பொக்கிஷங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் துளியும் நமக்கு இல்லை. முறையாகப் பராமரித்து வரும் தலைமுறையினருக்கு நம் முன்னோர்களின் பெருமைமிகு ஆட்சி, அரசியல், கலைத்திறன்களை சொல்ல வழியேதும் செய்யாமல் பொய்ப் பிரச்சாரங்களில் மூளைச்சலவை செய்து கொண்டிருக்கிறார்கள். நம் இனத்தின் மேல் நமக்கே வெறுப்பு வரும் வகையில் அரசியல் நாடகம் அரங்கேறிவருவது தான் வேதனை.
இன்று மாலுக்குச் செல்லும் கூட்டம் அறியுமோ புதுமண்டபம் மதுரையின் பழமையான வணிகவளாகம் என்று! நான் கொண்டாடிய ஒவ்வொன்றும் இன்று சிறிது சிறிதாக சிதைந்து கொண்டிருக்கிறது😔
பழமையைத் தன்னுள்ளே கொண்ட மதுரை அருமையான கோவில்களின் நகரம். புதுமண்டபத்தின் வரலாற்றை மக்கள் அறிந்து கொள்ள மாநகராட்சி மனது வைக்க வேண்டும். கோவில் வருமானத்தில் இந்து அறநிலையத்துறை மனச்சாட்சியுடன் நடந்தால் அம்மன் கோவில் மற்றும் அதனைச் சார்ந்த கோவில்கள், புதுமண்டப சிற்பங்களையும் சிலைகளையும் பாதுகாத்து மக்கள் கண்டு செல்ல வழி செய்யலாம்.
அம்மன் கோவிலில் தீப்பற்றி எரிந்த இடத்தையே வருடங்கள் கடந்தும் இன்னும் ஒன்றும் செய்யாமல் இருட்டடிப்பு செய்வதாக உள்ளூர் மக்கள் வேதனையில் கொந்தளிக்கிறார்கள். கோவில் கோபுரங்கள் பொலிவிழந்து புனரமைக்கப்படாமல் கோவில் வருவாயைக் குறி வைத்தே ஆட்சி நடத்துபவர்களிடமிருந்து என்று விமோச்சனம் கிடைக்குமோ?
அவளுக்கே வெளிச்சம்!
கடைகளுடன் இருந்த நேரத்துப் புகைப்படங்களும், சமீபத்தில் எடுத்த புகைப்படங்களும் இங்கே
No comments:
Post a Comment