Saturday, November 26, 2022

தேவிப்பட்டினம்

திருப்புல்லாணி பெருமாள் கோவில் தரிசனம் முடித்ததும் நவபாஷண நவக்கிரக கோவில் இருக்கும் தேவிப்பட்டினத்திற்குச் சென்றோம். தூறலும் நின்று போக, சூரியபகவான் வெளியே தலைகாட்ட வருணபகவானின் அருளுக்கு காத்திருந்தது போல கருமேகங்களுடன் வானம் உலா வந்துகொண்டிருந்தது. கடலோரம் அமைந்துள்ள இத்தலத்தில் ஸ்ரீராமன், சிவனையும் நவக்கிரகங்களையும் வழிபட்டதாக ஐதீகம். பரிகாரம் , பித்ருக்கடன்களைச் செய்ய அதிகளவில் மக்கள் இங்கு வருகிறார்கள். 2011ல் வந்திருந்த பொழுது நல்ல கூட்டம். தண்ணீரில் இறங்கி நவக்கிரகங்களுக்குப் பூஜைகள் செய்து கொண்டிருந்தார்கள். இந்த முறை கூட்டம் இல்லை. 

கோவில் அருகே வண்டியை நிறுத்திய ஒருவர், " நேர்த்திக்கடன் செய்ய உதவுவதாக ஏமாற்றுபவர்கள் இங்கு அதிகம். போலிகளிடம் ஏமாற வேண்டாம்" என்று எச்சரிக்கை செய்தார். ஒலிபெருக்கியிலும் அதே வசனத்தைத் தொடர்ந்து ஓட விட்டிருந்தார்கள். பரவாயில்லையே என்று தோன்றியது! அத்தனை ஏமாற்றுக்காரர்கள் இருக்கிறார்கள் போல! வைத்தீஸ்வரன் கோவில் அருகே இப்படித்தான் நாடி ஜோதிடம் பார்க்கலாம் என்று புற்றீசல் போல ஒரு கூட்டம் வரும். அதில் எத்தனை பேர் உண்மையானவர்கள் என்று தெரியாது. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை மக்களின் நம்பிக்கையை, அறியாமையை ஏமாற்றும் வித்தகர்கள் எல்லா துறைகளிலும் இருக்கத்தான் செய்வார்கள். நாம் தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.

தேவிப்பட்டினம் அழகிய சிறு கிராமம். கோவில் எதிரே பரந்து விரிந்த அமைதியான கடல். மண்டபத்தில் பரிகார பூஜைகள் செய்ய தயராகிக் கொண்டிருந்தனர். சலனமில்லாத ஆழமான கடல் ஏதோ ஒன்றைக் கற்றுக் கொடுத்தது. அமைதியாக சிறிதுநேரம் அதை ரசித்து விட்டு ராமேஸ்வரத்திற்குப் பயணம் செய்தோம்.  

காணொளி இங்கே:மதுரை-ராமநாதபுரம்


No comments:

Post a Comment

தென்கொரியப் பயணம் - சியோல் அனுபவங்கள்

சொல்வனம் இதழ்-350, 14-செப்-2025ல் வெளியான பயணக்கட்டுரைத் தொடர்,  தென்கொரியப் பயணம் – சியோல் அனுபவங்கள் நான் பிறந்து வளர்ந்தது தூங்கா நகரத்தி...