Friday, November 18, 2022

திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப் பெருமாள் கோவில்


உத்தரகோசை மங்கை கோவிலில் இருந்து வெளியே வரும் பொழுது மழை தூற ஆரம்பித்து விட்டது. அங்கிருந்து திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப் பெருமாள் கோவிலுக்குச் செல்வதாக திட்டம். 2011ல் ராமேஸ்வரத்திற்கு குழந்தைகள், நண்பர் முருகன்-செல்வி குடும்பத்துடன் சென்றிருந்த பொழுது அவசரஅவசரமாக இரவில் நடையைச் சாத்துமுன் ஓடிச்சென்று தீபஒளியில் திவ்யமாக காட்சியளித்த பெருமாளைப் பார்த்ததும் பெருமாள் கோவில்களில் கிடைக்கும் மணமுள்ள 'காரசார' புளியோதரை பிரசாதம் சாப்பிட்டதும் மட்டுமே நினைவில் இருந்தது. கோவில் கோபுரம், பிரகாரங்கள், தாயார் சந்நிதி எல்லாம் எப்படி இருந்தது என்று கூட நினைவில் இல்லை. அதனால் இந்த திவ்யதேசத்திற்கு மீண்டும் சென்று வர தீர்மானித்தோம்.

தூறல் வருவதும் போவதுமாய் கண்ணாமூச்சி ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தது. 15 நிமிடத்திற்குள் திருப்புல்லாணி வந்து சேர்ந்தோம். காலை நேரப்பயணத்தின் குளுமையும் தூறலும் வசீகரன் இல்லாத வானமும் சமீப மழையில் பசுமைப் போர்த்திய ராமநாதபுரமும் கொள்ளை அழகு! 108 திவ்யதேசத்தில் 44வது திவ்யதேசம் இத்திருக்கோவில். புரட்டாசி மாதத்தில் சென்றிருந்தாலும் வார நாள் அதுவும் அதிகாலை என்பதால் கூட்டம் அதிகமில்லை. வாசலில் துளசி மாலையையும் தாமரைப்பூவையும் வாங்கிக் கொண்டு கோவிலுக்குள் சென்றோம். அங்கும் காலை நேர நைவேத்ய பூஜை நடந்து கொண்டிருந்தது. மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் இருப்பதைப் போலவே இங்கும் பெருமாள் நின்ற, அமர்ந்த, சயன கோலங்களில் காட்சியளிக்கிறார்.

அமர்ந்த கோலத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் மூலவர் ஆதிஜெகந்நாதப் பெருமாள். உற்சவர் கல்யாண ஜெகந்நாத பெருமாள். தாயார் சந்நிதியில் பேரழகுடன் பத்மாசனித் தாயார். உற்சவர் கல்யாணவல்லித் தாயார். என்ன அழகான அலங்காரம்! பெருமாள் கோவில்களில் கரிய பெருமாளுக்கும் தாயாருக்கும் என்றுமே அலங்காரம் திவ்யமாக இருக்கும். இங்கும் கண்கொள்ளா காட்சியாக இருந்தது. அனந்த சயன கோலத்தில் தர்ப்ப சயன ராமர். இலங்கையிலிருந்து சீதா தேவியை அழைத்து வர கடல் அரசனிடம் சரணடைந்து ராமர் வேண்டி வணங்கிய சரணாகதி தலம். நின்ற கோலத்தில் பட்டாபிராமர். இலங்கையிலிருந்து ஸ்ரீராமன் திரும்பிய போது மீண்டும் இங்கு வந்து பக்தர்களின் வேண்டுதலின்படி பட்டாபிஷேகம் செய்து கொண்டதால் பட்டாபிஷேக ராமர். சந்தான கோபால கிருஷ்ணர் சந்நிதியில் தசரதர் குழந்தை வரம் வேண்டி பெருமாளை வணங்கி யாகம் செய்ததால் புத்திரபாக்கியம் வேண்டி பலரும் இக்கோவிலுக்குச் செல்கிறார்கள். இக்கோவிலின் தல விருட்சம் அரசமரம். மரத்தடியில் நாகப் பிரதிஷ்டை செய்து வழிபட்டால் புத்திரப்பேறு உண்டாகும் என்பது ஐதீகம். மரக்கிளைகளில் பக்தர்கள் கட்டிய சிறு தொட்டில்களும் மரத்தைச் சுற்றி நிறைய நாகர் சிலைகளும் இருந்தது. நீர் நிரம்பிய மிகப்பெரிய தெப்பக்குளம்.

அதிகாலையில் சென்றதால் அனைத்து சந்நிதிகளிலும் நடந்த பூஜைகளை திவ்யமாக பார்க்க முடிந்தது. இக்கோவிலின் சுவையான பாயசம் 9.30 மணிக்கு மேல் தான் கிடைக்கும் என்று சொல்லிவிட்டார்கள்😑

இனிமையான திருப்தியான தரிசனம் கிடைத்த திருப்தியுடன் தேவிப்பட்டினத்திற்குச் சென்றோம்.

படங்கள்: திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப் பெருமாள் கோவில்


No comments:

Post a Comment

AIM for Seva வெள்ளிவிழா ஆண்டு

"Education is the key to the development of a society." பூஜ்யஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் சத்திய வாக்கு! ஒரு சமுதாயம் உயர...