Tuesday, August 25, 2026

ஓணம் பண்டிகை


"ஓணம்" என்றதும் சுருள் முடி சேச்சிகள் மலர்கள் சூடிய கூந்தலை அலை பாய விட்டு, தங்க நிற பார்டர் வைத்த சீலைகளை நேர்த்தியாக உடுத்தி, எடுப்பான சிகப்பு, மெரூன் வண்ணத்தில் சட்டைகள் அணிந்து பூக்கோலம் இடுவது போல கற்பனை செய்து கொண்டால் நீங்களும் என் இனமே. ஓணம் என்றால் கேரள இந்துக்கள் கொண்டாடும் ஒரு பண்டிகை என்றளவில்அறிமுகமாகி, கல்லூரியில் படிக்கும் பொழுது கூடுதல் தகவல்,  இணையம், சமூக வலைதளங்களின் வரவிற்குப் பின் தான் ஓணம் பற்றின முழுத்தகவலையும் தெரிந்து கொள்ள கொண்டாட்டம் களைகட்ட தொடங்கிற்று. அதுவும் மாநிலம் விட்டு மாநிலம் வந்து குடியேறியவர்களின் அருகாமையில் கொண்டாட்டங்கள் பிரபலமானதன் வரிசையில் ஓணமும் சேர்ந்து கொண்டது. 

கேரளத்தின் மிகப்பெரிய ஆண்டு விழாக்களில் ஒன்றான ஓணம் பத்து நாட்கள் மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது.  இந்நாளில் மகாபலி தனது மக்களைப் பார்க்க ஆண்டுக்கு ஒருமுறை பூமிக்கு வருகிறார் என்பது ஐதீகம். அவரை வரவேற்க மக்கள் தத்தம் வீட்டு வாசல்களில் பூக்கோலம் இடுகிறார்கள்.

அசுர குலத்தைச் சேர்ந்த ஒரு வலிமைமிக்க மன்னனாகப் புராணங்களில் குறிப்பிடப்படுபவர் மகாபலி(மாவேலி). அவர் ஒரு நல்ல மன்னனாக நீதி, நேர்மையுடன் ஆட்சிபுரியும் காலத்தில் மக்கள் குறைவின்றி வளமுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து வந்தனர். அதனால் மகாபலி தனது குடிமக்களின் அன்பைப் பெற்றிருந்தார். அவரது ஆட்சிக்காலத்தை நினைவுறுத்தும் வகையில் ஓணம் கொண்டாடப்படுகிறது.

கேரளத்தின் புகழ்பெற்ற பாரம்பரிய நம்பிக்கையாக இருந்தாலும் ஒரு கோயில் விழாவாக மட்டும் கருதப்படுவதில்லை. சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து கேரள மக்கள் கொண்டாடும் பண்பாட்டு விழாவாக அது வளர்ந்துள்ளது. அதனால் இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம் உள்ளிட்ட பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மலையாளிகளும் ஓணத்தில் பங்கேற்கின்றனர். 

ஓணக் கொண்டாட்டத்தின் பாரம்பரிய பத்து நாட்கள் அத்தம், சித்திரை, சோதி, விசாகம், அனிழம், திருக்கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் ஆகும். இதில் அத்தம் முதல் நாள். திருவோணம் பத்தாவது நாளும் மிக முக்கியமான நாளுமாகும். 

இப்பண்டிகையின் மற்றுமொரு சிறப்பு, அனைவருடனும் பகிர்ந்து உண்ணும் ஓணசத்யா என்னும் வாழை இலையில் பரிமாறப்படும் பாரம்பரிய கேரள சைவ விருந்து. அப்படி ஒன்று சனிக்கிழமை அன்று கோவிலில் ஓணம் கொண்டாடிய மலையாளிகள் மூலம் கிடைத்தது. உணவைப் பரிமாறும் விதத்தில் கூட ஒரு ஒழுங்குமுறை இருப்பதும் எந்த வரிசையில் உண்ண  வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்கள். 

கேரளாவின் பிரபலமான படகுப்போட்டியும் இக்காலத்தில் தான் நடக்கிறது. இவையனைத்தையும் மிக நன்றாக நேஷனல் ஜியோகிராபிக் காணொளியாக எடுத்திருந்தது. இதற்கு முன்பும் பகிர்ந்திருக்கிறேன். The Festival of Abundance! | India's Mega Festivals | National Geographic  

"இனி எண்ட ஸ்டேட் கேரளம். எண்ட பண்டிகை ஓணம்" என்று கிளம்பிட்டீங்களா?😍😍😍

No comments:

Post a Comment

ஓணம் பண்டிகை

"ஓணம்" என்றதும் சுருள் முடி சேச்சிகள் மலர்கள் சூடிய கூந்தலை அலை பாய விட்டு, தங்க நிற பார்டர் வைத்த சீலைகளை நேர்த்தியாக உடுத்தி, எட...