அந்த நாளும் வந்தே விட்டது. படபடக்க கிளம்பி விட்டோம். வீட்டிலிருந்து 45நிமிடங்கள் கார் பயணம். கிறிஸ்துமஸ் விளக்கொளியில் 'Salt Lake City' ஜொலித்துக் கொண்டிருந்தது. பிரம்மாண்ட ஹோட்டல். தத்தம் மனைவியருடன் ஜோடியாக கைகோர்த்துக் கொண்டு அலுவலக நண்பர்கள். மொத்தமே நான்கு பெண்கள் தான் அந்த அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தோம். 76 ஆண்கள்! ஒரு பெரிய மாநாட்டு அறையில் ஏற்பாடு செய்திருந்தார்கள். விடுதியின் உள்ளே தனியொரு உலகம்! இதுவரை படங்களில் மட்டுமே பார்த்திருந்த காட்சி அது. வட்டவட்ட மேஜைகள். உயர்ரக நாற்காலிகள்.ஒவ்வொரு மேஜையும் கிறிஸ்துமஸ் அலங்காரங்களுடன். ஜொலிக்கும் பெரிய சாண்ட்லியர் அலங்கார விளக்கு நடுஹாலில். சுற்றுச்சுவரில் மங்கலான விளக்குகள். எங்கள் குழுவினர் ஒரு மேசையில் அமருமாறு ஏற்பாடு செய்திருந்தார்கள். கணவரை குழுவினருக்கு அறிமுகப்படுத்தினேன். அவர்களும் தங்கள் மனைவியரை அறிமுகப்படுத்தினார்கள்.
ஏதோ ஆஸ்கார் விழாவிற்குச் செல்வது போல் உடைகளும், தலையலங்காரமும், நகப்பூச்சுகளும்! எப்படித்தான் மணக்க மணக்க ஓப்பனைகளுடன் ஹாலிவுட் ரேஞ்சில் அழகாக்கிக் கொள்கிறார்களோ! மலைப்பாக இருந்தது. ஆண்கள் அனைவரும் டை, டக்ஸ் (Tuxedo) அணிந்திருந்தார்கள். மனைவிகளுக்காக இருக்கையைப் பின்னிழுத்து அமர வைத்து பிறகு தான் ஆண்களும் அமர்கிறார்கள். பெண்களும் அதற்காகவே காத்திருக்கிறார்கள். ம்ம்ம்...நம் ஆட்களுக்கு இது தெரியாது. ஆணோ, பெண்ணோ இடம் கிடைத்தால் 'டபக்'கென்று உட்கார்ந்து விடுவது தானே நம் மரபு
அந்த உணவுமேஜையில் அழகான அத்தனை கண்ணாடி, பீங்கான் சாமான்கள்! மேஜைக்கு நடுவே அழகிய குடுவைப் பூச்சாடி. ஆளுக்கு இரண்டு கண்ணாடி கோப்பைகள். பீங்கான் கப் & சாஸர். எவர்சில்வரில் செய்த கனமான ஒரு கத்தி. மூன்று முள்கரண்டிகள். இரண்டு ஸ்பூன்கள். ஒரு முள்கரண்டியைப் பார்த்தாலே எனக்கெல்லாம் தலை கிறுகிறுக்கும். எதற்காக வெவ்வேறு அளவுகளில் கரண்டிகளும், முள்கரண்டிகளும்? தலை வெடித்துச் சிதறி விடும் போல இருந்தது. துணி ஒன்று அழகாக மடித்து வைக்கப்பட்டு இருந்தது. இத்தனை எதுக்கு வச்சிருக்காங்களோ? சாப்பிடவேண்டும் என்ற நினைப்பே பயமாகவும் இருந்தது. சிறிது நேரத்தில் உணவைப் பரிமாறுபவர்கள் கோப்பைகளில் மதுவை ஊற்றிக்கொண்டே வந்தார்கள். எனக்கு எதுக்கப்பா இதெல்லாம் என்று நினைத்தாலும் ஒன்றும் சொல்லவில்லை. ஈஷ்வருக்கு ஜாலி ஜாலி! இன்னொரு கோப்பையில் தண்ணீரை ரொப்பினார்கள். அப்பாடா என்றிருந்தது! கூடவே மெனு கார்டு ஒன்றையும் கொடுத்துவிட்டு நகர்ந்தார்கள். மதுவைக் கண்டவுடன் அனைவர் முகங்களிலும் மகிழ்ச்சி! இருக்காதா பின்ன?
நிறுவன மேலாளர் அந்த வருடத்திய லாபத்திற்காக கடினமாக உழைத்த அனைவருக்கும் பாராட்டுத் தெரிவித்து விட்டு(நமக்கு நாமே!) விடுமுறை வாழ்த்துக்களையும் சொல்லி இரவு உணவை 'என்ஜாய்' என்று மதுக்கோப்பையை உயர்த்த, அனைவரும் அவரவர் கோப்பையை உயர்த்தி 'ச்சியர்ஸ்' சொல்லி முதல் சிப். சியர்ஸ் சொல்லிய பிறகு உடனே ஒரு சிப் குடிக்கணுமாம். இந்த குடிகாரன் பாஷை அறியாத பெண்ணாயிற்றே! 'டொக்' என்று மேஜையில் வைத்து விட்டேன். என் அலுவலக நண்பர்களுக்கு என்னைப்பற்றித் தெரியும். அதனால் அவர்களும் கண்டு கொள்ளவில்லை. அவர்கள் மனைவிகளுக்குத்தான்... அது என் கவலை இல்லை என்று தண்ணீர் குடித்துக் கொண்டே மெனு அட்டையைப் பார்த்தால்... கடவுளே! இது என்ன புது சோதனை?
அப்பொழுது அமெரிக்க உணவின் பரிச்சயமும் அவ்வளவாக கிடையாது. ஒன்றிரெண்டு தெரிந்த பெயர்கள் ஏதாவது தென்படுகிறதா என்று தேடி எதையாவது சொல்லித்தொலைப்போம். வீட்டுக்குப் போய் ரசம் சோறு சாப்பிட்டா தான் தூக்கம் வரப்போகுது. என்னடா சோதனை என்று சிக்கன் பாஸ்தா ஐட்டம் சொல்லியாயிற்று. சாலட் பக்கம் ஒதுங்கினது கூட கிடையாது. ஐயோ! இந்த இலை, தழைகளையெல்லாம் முள்கரண்டியில சாப்பிடணுமேன்னு நினைக்கிறப்பவே சாப்பிடும் ஆசையே போய்விட்டது. நல்லா பிசைஞ்சு சாப்பிடுறதுல இருக்கிற சுகம் தெரியாம இப்படி ஒட்டாம என்னத்த சாப்பிட்டு. என்ன சூப் வேண்டும்? கேட்டாள் நேர்த்தியான ஒப்பனையுடன் வளைய வந்துகொண்டிருந்த பணிப்பெண். ஆஹா! அது வேறயா? இப்பொழுது பார்ட்டிகளுக்குச் சென்றால் 'மடமட'வென்று எனக்கு வேண்டியதைக் கேட்க தெரியும். ஆனால் அப்பொழுது? ஏதேதோ பெயர் சொன்னாள். நானும் எங்கேயோ கேட்ட பெயராக இருக்கிறது என்று ஒரு சூப் சொல்லிவிட்டேன். ஈஷ்வரும் அப்படியே.
விமான பணிப்பெண்கள் போலவே இங்கும் 'சிக்'கென்றிருந்த இளம்பெண்களும், ஆண்களும் சக்கரமாய் சுழன்று சுழன்று மேஜைகளில் பரிமாறுவதும் பிளாஸ்டிக் சிரிப்புடன் வலம்வருவதுமாய். அவர்களை மேற்பார்வையிட இருவர் என்று விருந்தினர்களை குறைவில்லாமல் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
முதலில் சிறு தட்டில் சாலட் வந்தது. முள்கரண்டி விஷப்பரீட்சை ஆரம்பமாயிற்று. எதுவும் பறந்து பக்கத்து தட்டுக்குப் போகாம இருக்கணுமேன்னு எல்லா கடவுளையும் வேண்டிட்டு பேருக்கு சூப், சாலட் சாப்பிட்டு முடிக்கையில் பெரிய தட்டில் ஆவி பறக்க வந்திறங்கியது பாஸ்தா. சாப்பிடுவதை விட அழகாக தட்டில் வைத்திருப்பதைப் பார்க்க பிடித்தது. அப்பொழுதெல்லாம் ஸ்மார்ட்ஃபோன்கள் கிடையாது. இல்லையென்றால் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் நடந்திருக்கும். அப்பொழுது தான் கவனித்தேன். என் அருகில் அமர்ந்திருந்தவரின் தட்டில் பெரிய கறித்துண்டு. அவரிடம் மீடியம் , ரேர் என்று அந்தப் பெண்மணி கேட்கும் பொழுதே என்னடா என்று யோசித்தேன். பாதி வெந்திருந்த கறியை கத்தியை வைத்து துண்டுகள் போட லேசாக ரத்தம் எட்டிப்பார்க்க, அய்யோ! என்று நான் ஈஷ்வரைப் பார்க்க 'எமோஷன குறை எமோஷன குறை' என்று பார்வையால் சொல்ல ...எப்படா வெளியில் ஓடலாம் என்றிருந்தது. கடைசியில் சாக்லேட் டெஸெர்ட். அப்பொழுது பிடிக்கவில்லை. இப்பொழுது கொடுத்தால் அப்படியே சாப்பிடுவேன் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் பரிசு ஒன்று கொடுத்து விட்டு திரையரங்கில் சந்திப்போம் என்று விடைபெற்று கிளம்பினோம்.
முதன்முதலாக பார்த்த ஸ்டார்வார்ஸ் படம். அப்படத்தில் பெரிய நடிகர் பட்டாளாமே இருந்தது. ஹாலிவுட் படங்கள் பார்க்க ஆரம்பித்திருந்த நேரம். அதன் ஆங்கிலத்திற்கும் பழகிக் கொண்டிருந்தேன். ஒருவழியாக படத்தையும் பார்த்து விட்டு வீடு வந்து சேர்ந்தோம்.
வழி முழுவதும் ஆடம்பர பார்ட்டி, ஒப்பனைப் பெண்கள், கிண்ணங்களின் ஒலி, சிரிப்பும் பேச்சுக்களுமாய் எப்படியெல்லாம் கொண்டாடுகிறார்கள் என்ற மலைப்புடன் அமெரிக்காவில் முதல் கிறிஸ்துமஸ் அலுவலக கொண்டாட்டம் முடிந்து வீடு வந்து சேர்ந்தோம். அதற்குப் பிறகு அலுவலக நண்பர்கள் என்ற நெருங்கிய வட்டம் உருவாகி, உணவுகளும் பழகி, கலகலப்பாக கொண்டாட்டங்கள் இனிதே அரங்கேறிக் கொண்டிருந்தது. இந்த வருடம் தான் அவரவர் வீட்டிலிருந்து உணவுகளைச் சாப்பிட்டுக் கொண்டே ஜூம்ல் கொண்டாடும் நிலைமை.
நினைவுகளை மட்டும் சுமந்து கொண்டு உருண்டோடிச் செல்கிறது காலம்!
ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் ஆல் தி வே...
எங்களையும் விருந்திற்கு அழைத்து போனது போன்ற ஒரு உணர்வை தந்த பதிவு.
ReplyDelete//அந்த உணவுமேஜையில் அழகான அத்தனை கண்ணாடி, பீங்கான் சாமான்கள்! மேஜைக்கு நடுவே அழகிய குடுவைப் பூச்சாடி. //
பொதுவாக விழா முடிக்கையில் அந்த அலகுய்ய குடுவை மற்றும் பீங்கானை யாரவது எடுத்து கொள்ளுங்கள் என்று சொல்வார்களே.
மற்றும்..
//ரேர் என்று அந்தப் பெண்மணி கேட்கும் பொழுதே என்னடா என்று யோசித்தேன். பாதி வெந்திருந்த கறியை கத்தியை வைத்து துண்டுகள் போட லேசாக ரத்தம் எட்டிப்பார்க்க, அய்யோ//
அதே நிலைமை தான் இங்கேயும் எனக்கும் நடந்தது. ஆனால் பாருங்கள் என் இல்லத்தை சார்ந்த என் இரண்டு மகள்களும் அப்படி தான் விரும்புகின்றார்கள். இந்தியாவில் வளர்ந்த நமக்கு தான் பழக்கம் இல்லை.
ஜிங்கிள் ஆள் தி வே. மெரி கிறிஸ்துமஸ்
மிக்க நன்றி விசு. கிறிஸ்துமஸ் பரிசாக அலுவலகத்திலிருந்து கொடுத்தது மட்டும் தான். அந்த குடுவைகள் எல்லாம் ஹோட்டலைச் சார்ந்தது :)
Delete