Monday, January 4, 2021

The Queen's Gambit

"The Queen's Gambit", ஒரு புதினத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட தொலைக்காட்சித் தொடர். ஏதோ நிஜ வாழ்க்கையில் நடந்த கதை போல் சுவாரசியமாகவும் அருமையாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். 


அமெரிக்காவில் கால்பந்தாட்டம், கூடைப்பந்து, பேஸ்பால், கோல்ஃப், நீச்சல் போன்ற விளையாட்டுக்கள் அதிக கவனம் பெற்றவை. அறிவை உபயோகித்து விளையாடியும் கவனம் பெறாத, ஆண்கள் மட்டுமே பங்கேற்று கோலோச்சிக் கொண்டிருந்த ஒரு விளையாட்டு செஸ். இன்றுவரையிலும் கூட மற்ற விளையாட்டுகள் அளவிற்கு முக்கியத்துவம் பெறாத ஒன்று. அப்படியான விளையாட்டில் ஈர்க்கப்பட்ட அனாதைச் சிறுமி ஒருத்தி தன்னை விட பல வயது மூத்தவர்களுடன் விளையாடி படிப்படியாக முன்னேறி ரஷ்யாவின் முன்னணி வீரரை வெற்றிக் கொள்வதில் முடிகிறது இத்தொடர்.

அனாதை இல்லத்தில் தனியாக அமர்ந்து விளையாடிக் கொண்டிருக்கும் உதவியாளரிடமிருந்து செஸ் கற்றுக் கொள்கிறாள் சிறுமி. அவள் ஆர்வத்தையும் திறமையையும் வெளிக்கொணர உதவுகிறார்கள் இல்லத்தின் உதவியாளரும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியரும். நடுவில் அப்பெண்ணை ஒரு குடும்பம் தத்தெடுக்கிறது. அவளின் ஆர்வம் முழுவதும் செஸ். நடுநடுவே புகை, மது, மருந்துகள் என்று போட்டுக் கொள்ளவும்

செஸ் விளையாடும் ஆர்வம் இருந்தாலும் போட்டியில் பங்கெடுத்துக் கொள்ளும் வசதியில்லாதவருக்கு உதவுகிறார் அப்பெண்ணுக்கு செஸ் விளையாட்டைக் கற்றுத்தந்தவர். விளையாட்டுப் போட்டியின் விதிமுறைகளைக் கூட அறிந்திராதவர் போட்டிகளில் தன்னை அலட்சியப்படுத்தியவர்களை வென்று மாநில, தேசிய அளவில் முன்னேறுகிறார். அவர் விளையாட்டில் முன்னேற அவரிடம் தோற்ற நண்பர்களும் உதவுகிறார்கள்.

கதைக்களம் 1950களில் தொடங்கி 67 வரை பயணிக்கிறது. வீடுகள், வண்டிகள், கடைகள், நடை, உடை பாவனைகள், தொலைக்காட்சி, பத்திரிக்கைகள் என்று ஒவ்வொன்றின் வாயிலாக அந்த காலத்துக் காட்சிகளை கவனத்துடன் கண்முன் நிறுத்தியுள்ளார்கள். அனாவசிய செண்டிமெண்ட் காட்சிகள் எல்லாம் இல்லை. நடித்தவர்கள் அனைவரும் தங்கள் பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து மிகைப்படுத்தமால் அழகாக நடித்திருக்கிறார்கள்.

என்ன தான் ஒரு பெண் தன் திறமையினால் முன்னேறினாலும் அவளுடைய உடைக்கும் அலங்காரத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து சிறுமைப்படுத்துவதில் தான் ஊடகங்களுக்கு அதிக ஆர்வம் அன்றிலிருந்து இன்று வரைக்கும்.

விளையாட்டை அறிந்திராதவர்களும் பார்த்துக் களிக்கும் வகையில் இத்தொடரை எடுத்திருப்பதில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
நெட்ஃப்ளிக்ஸ்ல் காணலாம்.


2 comments:

  1. அருமையான விமர்சனம். இந்த தொடரை நான் தற்காலிகமாக பார்க்க நேர்ந்தது. நேர்த்தியான மிகையில்லா நடிப்பு மற்றும் சிறப்பான தொகுப்பு அதற்கேற்ற இசை.

    மிகவும் ரசித்து பார்த்தேன்.

    Selena என்ற மற்றொரு தொடரையும் பாருங்கள். அது இரு உண்மை கதை. மிகவும் ரம்மியமான முறையில் திரையாக பட்டு இருக்கின்றது .

    ReplyDelete
    Replies
    1. நன்றி விசு. Selena தொடர் பார்க்க வேண்டிய பட்டியலில் இன்னும் காத்திருக்கிறது. பரிந்துரைத்ததற்கு நன்றி.

      Delete

சிகரம் தொட்டவர்களின் கதை

2011ம் ஆண்டில் மலையேற்ற வீரர்கள் கான்ராட் ஆங்கர், ஜிம்மி சின், ரெனன் ஆஸ்டர்க் மூவரும் கர்வால் இமயமலைப் பகுதியில் 22,000 அடி உயரமுள்ள மவுண்ட...