Monday, January 25, 2021

பைடன்-ஹாரிஸ்: ஆட்சி அதிகாரமும் அமெரிக்க இந்தியர்களும்

அமெரிக்க அரசியலில் புலப்பெயர்ந்த இந்திய தலைமுறையினரின் பங்களிப்பைப் பற்றின சொல்வனம் இதழில் வெளிவந்துள்ள என் கட்டுரை. 


பைடன்-ஹாரிஸ்: ஆட்சி அதிகாரமும் அமெரிக்க இந்தியர்களும்



அமெரிக்காவில் ஆட்சி மாறிவிட்டது. இனி காட்சிகளும் மாறித்தான் ஆகவேண்டும்.

எதிர்வரும் நான்கு ஆண்டுகள் அமெரிக்க வரலாற்றில் முக்கியமான காலகட்டமாக இருக்கும். ட்ரம்ப் போன்ற ஒரு தடாலடி அரசியல்வாதி ஏற்படுத்தியுள்ள தாக்கத்தினைச் சீர்செய்து எல்லாவற்றையும் தங்கள் ஒழுங்கில் கொண்டுவருவதற்குள் பைடனின் பாதி ஆட்சிக்காலம் செலவாகிவிடும் என கருதுகிறேன். மிச்சமிருக்கும் நாள்களில்தான் அவர் தன் பங்கிற்கு ஏதாவது செய்துவிட வாய்ப்பிருக்கிறது. மிகுந்த சவால் நிறைந்த இந்த வேலைகளை செய்திட திறமையான அனுபவம் வாய்ந்த நிர்வாகிகள், அதிகாரிகள் தேவை என்பதை பைடன் நன்கு உணர்ந்திருக்கிறார்.

அமெரிக்கா போன்ற பல்வேறு இனக்குழுக்கள் கூடி வாழும் ஒரு நாட்டில், காலம்காலமாய் பெரும்பான்மை வெள்ளை இனத்தவர் மட்டுமே நிறைந்திருந்த ஆட்சிக் குழுவில், இம்முறை பரவலாக எல்லா இனக் குழுவினரும் பங்கேற்கும் வகையில் ஆட்களை பைடன் தெரிவு செய்திருப்பது பைடனின் பரந்துபட்ட சமத்துவ பார்வையை உறுதிசெய்கிறது. இந்த முயற்சிக்கு எல்லா தரப்பிலிருந்து ஆதரவும், பாராட்டுக்களும் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முன் எப்போதும் இல்லாத வகையில் பைடன் அரசின் நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் தகுதிகூடிய முக்கிய பொறுப்புகளில் கணிசமாக அமர்த்தப்பட்டிருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் துடிப்பான இளைய வயதினர், தங்கள் துறைகளில் அனுபவம் வாய்ந்தவர்கள், உயர்கல்வி கற்றவர்கள்.

இந்தியர்கள் என்றால் மருத்துவம், கணிணி சார்ந்த துறைகளில் மட்டுமே கோலோச்சுகிறவர்கள் என்கிற பொதுக்கருத்து இந்த நியமனங்களின் மூலமாக உடைபட்டிருக்கிறது. பைடனின் ஆட்சி அதிகாரத்தில், துணை அதிபரில் துவங்கி நிர்வாகத்தின் அனைத்து மட்டங்களிலும் பரவலாக இந்திய முகங்கள் தென்பட ஆரம்பித்திருப்பது நம்பிக்கை தரும் நல்ல மாற்றம். இத்தனைக்கும் அமெரிக்க மக்கள் தொகையில் இந்திய வம்சாவளியினர் வெறும் ஒரு சதவிகிதத்தினர்தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

அந்த வகையில் இந்த கட்டுரையில் பைடனின் அரசில் இடம்பெற்றிருக்கும் இந்திய முகங்களைப் பற்றிய தகவல்களை தொகுத்திருக்கிறேன்.

கமலாதேவி ஹாரிஸ், அரசியல் மற்றும் பொதுவாழ்வில் ஆரம்பம் முதலே தன்னை ஒரு கறுப்பின பெண்ணாக அடையாளப்படுத்திக் கொண்டாலும் கூட, தமிழை தாய்மொழியாக கொண்ட ஒரு பெண் அமெரிக்க துணை அதிபராவது இந்திய வம்சாவளியினர் பலருக்கும் பெருமைதான். அடுத்து வரும் பத்தாண்டுகளில் அமெரிக்க அரசியல் நீரோட்டத்தினை நெறிப்படுத்தும் மையப் புள்ளியாக, மாபெரும் சக்தியாக கமலா இருப்பார்.

தற்போது அமெரிக்க செனட்டில் ஆளுக்கு ஐம்பது உறுப்பினர்களுடன் இரு கட்சியினரும் சம பலத்துடன் இருக்கின்ற்னர். பைடன் அரசின் எந்தவொரு மசோதாவும் நிறைவேற வேண்டுமென்றால் குறைந்தது அறுபது உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும். எனவே பைடன் அரசு இந்த அறுபது உறுப்பினர் ஒப்புதல் என்பதை முதலில் திருத்திட விரும்புகிறது. இதற்கு குடியரசுக் கட்சியின் மூத்த அரசியல்வாதியான மிட்ச் மெக்கநெல் பெரும் தடையாக இருக்கிறார். இந்த தடையை முறியடிக்க ஹாரிஸ் தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஐம்பத்தியோராவது வாக்காக தனது வாக்கினை செலுத்தி சட்டத் திருத்த மசோதாவை வெற்றிகரமாக நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் பின்னர் வரும் நாட்களில் பைடன் அரசு கொண்டு வரும் மற்ற அனைத்து மசோதாக்களிலும் ஹாரிஸ் இத்தகைய நிலைப்பாட்டையே கையாளுவார். கூடுதலாக தனது அரசியல் அனுபவ ஆற்றலால் குடியரசுக் கட்சியின் சில உறுப்பினர்களின் ஆதரவோடு அரசின் அனைத்து மசோதாக்களை எளிதாக செனட்டின் ஒப்புதலைப் பெற வைக்கும் முக்கிய பணியினை கமலா வெற்றிகரமாக செய்து முடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


நீரா டேண்டன், வெள்ளை மாளிகையின் மேலாண்மை மற்றும் நிதிநிலை திட்ட அலுவலக இயக்குனராக பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். அரசின் பல்வேறு துறைகளின் தேவைகளை அறிந்து, அதன் அடிப்படையில் நடுவண் அரசின் வரவுசெலவுத் திட்டங்களை உருவாக்குவதோடு, அதன் செயல்பாடுகளை மேற்பார்வையிடும் முக்கியமான பொறுப்பு இது. பைடனோடு அன்றாடம் நேரடியான தொடர்பில் இயங்கும் இந்த மிக முக்கியமான பொறுப்பில் நியமிக்கப்பட்டிருக்கும் ஐம்பது வயதான நீரா, யேல் பல்கலைகழகத்தில் சட்டம் பயின்றவர். கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர்களின் பிரச்சாரக் குழுவில் தொடர்ந்து இடம் பெற்ற முக்கியஸ்தர். “ஒபாமாகேர்” மருத்துவக் காப்பீட்டு சட்டவடிவாக்கத்தில் முக்கிய பங்காற்றியவர். தொடர்ச்சியாக பொது சுகாதாரம், சுகாதார சீர்திருத்தம், புதிய எரிசக்திக் கொள்கைகள் போன்றவற்றில் தீவிரமாக இயங்கி வருபவர். முற்போக்காளர். தாராளவாத கொள்கைகளை ஆதரிப்பவர்.

வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களுக்காக அரசு வழங்கி வரும் உணவு கூப்பன் மற்றும் தங்குமிட வசதிகளைத் தன் சிறு வயதில் பெற்று வளர்ந்தவர் என்கிற வகையில், அத் திட்டங்களுக்கான தனது ஆதரவினை அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருவதை குடியரசுக் கட்சியினர் இன்றுவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதனால் இவருடைய நியமனத்திற்கு செனட் ஒப்புதல் பெறுவதில் குடியரசுக் கட்சியினரால் தடைகள் இருக்குமென எதிர்பார்க்கப் படுகிறது. ஒரு வேளை செனட் ஒப்புதல் கிடைத்துவிட்டால் இந்தப் பதவியில் நியமிக்கப்படும் முதல் தெற்காசியர், இந்திய-அமெரிக்கர் என்கிற பெருமையும் நீராவைச் சேரும்.

டாக்டர் விவேக் மூர்த்தி, அமெரிக்காவின் சர்ஜன் ஜெனரலாக பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். இவர் கடந்த ஒபாமா ஆட்சியிலும் இதே பதவியை வகித்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. அமெரிக்காவின் மருத்துவர் என அறியப்படும் இந்த பதவியானது, ஒட்டுமொத்த அமெரிக்காவின் பொது சுகாதாரத்தையும் ஆரோக்கியத்தையும் நிர்வகித்து நெறிப்படுத்தும் தலைமைப் பதவியாகும். கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட விவேக் மூர்த்தி தன் இளமைக்காலம் துவங்கி மருத்துவ சுகாதாரத் துறையில் பல்வேறு மட்டங்களில் தீவிரமாக இயங்கி வருபவர். எய்ட்ஸ் விழிப்புணர்வு, போதைப்பழக்கத்தினை நாள்பட்ட நோயாக அங்கீகரிக்க வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டது, ஓபியாய்ட் தொற்றுநோய் பரவலைத் தடுக்க இரண்டு மில்லியனுக்கும் அதிகமான சுகாதார பாதுகாப்பு நிபுணர்களை ஒரணியில் திரட்டியது, தடுப்பூசிகளின் அவசியத்தை வலியுறுத்தும் செயல்பாடுகள், மனநலம் மற்றும் உடல் நலம் பற்றிய விழிப்புணர்வு இயங்கங்களை முன்னெடுத்தது என பலவகையிலும் சுகாதாரத்துறையில் தீவிரமாக இயங்கி வருபவர்.

அமெரிக்காவில் வாகன விபத்தில் உயிரிழப்பவர்களை விட அதிகளவில் போதைப்பொருளை உட்கொண்டு இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். அனுமதி பெற்ற வலி நிவாரணிகளுக்கு அடிமையானவர்கள், சட்ட விரோதமான போதைப் பொருட்களை உட்கொள்பவர்களுக்காக டாக்டர் மூர்த்தி எடுத்துக் கொண்ட முன்னெடுப்பு பலரின் கவனத்திற்கும் உள்ளானது. மிகுந்த பாராட்டையும் பெற்றது. தற்போது பைடன் அரசின் முதல் முக்கியத் திட்டமான கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் குழுவின் தலைவராகவும் விவேக் மூர்த்தி நியமிக்கப்பட்டு தன் வேலைகளைத் துவங்கியிருக்கிறார்.

வனிதா குப்தா, அமெரிக்காவின் இணை அட்டர்னி ஜெனரல் பதவிக்கு நியமிக்கப்படும் முதல் பெண்மணி என்கிற பெருமை 46 வயதான வனிதாவை சேர்கிறது. அமெரிக்காவின் மரியாதைக்குரிய சிவில் வழக்கறிஞர்களில் வனிதா முக்கியமானவர். கடந்த ஒபாமா அரசில் குடியியல் உரிமைகள் பிரிவின் தலைமை வழக்கறிஞராக செயல்பட்டவர். அந்த காலகட்டத்தில் அரசியலமைப்பு கண்காணிப்பு , குற்றவியல் நீதித்துறை சீர்திருத்தங்கள், உடல் ஊனமுற்றோருக்கான இயலாமை உரிமைகளை மேம்படுத்துதல், தன் பாலின ஈர்ப்பாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல், அனைவருக்குமான வாக்களிக்கும் உரிமையை உறுதிசெய்தல், இனவெறி, மதவெறி தொடர்பான குற்றச்செயல்களை தடுத்தல் என பல்வேறு துறைகளில் வனிதாவின் செயல்பாடுகள் கவனம் பெற்றது. இணை அட்டர்னி ஜெனரல் பதவி என்பது சிவில், நீதி,கூட்டாட்சி மற்றும் உள்ளூர் சட்ட அமலாக்கம் மற்றும் பொது பாதுகாப்பு விஷயங்கள் தொடர்பான கொள்கைகளில் அட்டர்னி ஜெனரல் மற்றும் துணை அட்டர்னி ஜெனரலுக்கு ஆலோசனை வழங்கும் முக்கிய பொறுப்பாகும். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே இந்த பதவிக்கு வனிதா நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாலா அடிகா, கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். அமெரிக்க அதிபரின் மனைவியும், முதல் பெண்மணியுமான டாக்டர். ஜில் பைடனின் கொள்கை இயக்குனராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் மூத்த ஆலோசகராகவும் செயல்படுவார். பைடன் – ஹாரிஸ் தேர்தல் பிரச்சாரத்தின் மூத்த கொள்கை ஆலோசகராகவும், உயர் கல்வி மற்றும் இராணுவ குடும்பத்தினருக்கான பைடன் அறக்கட்டளையின் இயக்குனராகவும் மாலா பணியாற்றியிருக்கிறார். ஒபாமா நிர்வாகத்தில் கல்வி மற்றும் கலாச்சார பணியகத்தில் கல்வித் திட்டங்களுக்கான துணை செயலாளராகவும், உலகளாவிய மகளிர் பிரச்சினைகள் தொடர்பான வெளியுறவுத் துறையில் பணியாளராகவும், தேசிய பாதுகாப்பு உழியர்களின் மனித உரிமைகளுக்கான இயக்குனர் என பல்வேறு நிர்வாக பணிகளில் பணியாற்றிய நீண்ட அனுபவம் உள்ளவர்.

அஸ்ரா ஜீயா, சிவில் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான உதவி செயலராக பரிந்துரைக்கப்பட்டுள்ளார். வெளியுறவுத் துறையில் மிக நீண்டகால அனுபவம் பெற்றவர். ஃப்ரெஞ்ச், அரபு, ஸ்பானிஷ் மொழிகளைப் பேசும் திறமைகொண்ட ஜீயா, பிரான்சின் மிக உயர்ந்த குடிமகன், ஜனாதிபதி தர வரிசை விருது மற்றும் 15 உயர், செயல் திறன் விருதுகளை பெற்றுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கரீமா வர்மா, இந்தியாவில் பிறந்த இவர் ஜில் பைடனுக்கான டிஜிடல் இயக்குனராக நியமிக்கப்பட்டிருக்கிறார். பாரமவுண்ட் பிக்ச்சர்ஸ், வால்ட் டிஸ்னி, ஏபிசி நெட்வொர்க், ஹாரிசன் மீடியா போன்ற பெரு நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். பைடன் – ஹாரிஸ் தேர்தல் பிரச்சாரக்குழுவின் திட்டமிடல் மற்றும் உள்ளடக்கத் தயாரிப்புக் குழுவில் முக்கிய இடம் பெற்றிருந்தவர். சிறுபான்மையினர், தன் பாலின ஈர்ப்பாளர்கள் உரிமைகளுக்காக தொடர்ச்சியாக குரல் கொடுப்பவர்.

சப்ரினா சிங், தகவல் தொழில்நுட்பத்தில் நிபுணர்.வெள்ளை மாளிகையின் துணை பத்திரிக்கை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மிக முக்கியமான ஒரு அரசியல் குடும்ப பின்புலத்தை உடையவர். அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களுக்கான குடியுரிமை மற்றும் அங்கீகாரங்களுக்காக போராடி அந்த உரிமைகளைப் பெற்றுத் தந்தவர் சப்ரினாவின் தாத்தாவான ஜே.ஜே.சிங் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது தாத்தா இந்தியா லீக் ஆஃப் அமெரிக்காவின் தலைவராக இருந்தார். 1940களில் இந்தியர்கள் குழுவுடன் இணைந்து அமெரிக்காவில் இனரீதியான பாகுபாடு கொள்கைகளுக்கு எதிரான பிரச்சாரத்தைத் தொடங்கினார். அமெரிக்க குடியுரிமைக்கான உரிமைக்காக போராடியது மட்டுமல்லாமல், 1946ஆம் ஆண்டில் ஜனாதிபதி ஹாரி ட்ரூமன் கையெழுத்திட்ட “லூஸ்-செல்லர்” வரலாற்றுச் சட்டத்தை வகுப்பதில் முக்கிய பங்கும் வகித்தார். அது இந்தியர்களுக்கான குடியுரிமை விதிகளை தளர்த்தியது.

ஆயிஷா ஷா, காஷ்மீரில் பிறந்து லூயிஸியானாவில் வளர்ந்த ஆயிஷா சமூக வலைத்தள தகவல் தொடர்புத் துறை வல்லுனர். “இனி வரும் நாட்களில் அரசு மக்களுடன் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் தொடர்பு கொள்வது மிக முக்கியமானது” என அதிபர் பைடன் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். பைடனின் இந்த திட்டத்தை நிறைவேற்ற அமைக்கப்பட்டுள்ள குழுவினர் வெள்ளை மாளிகையில் இருந்து இயங்குவர். வெள்ளை மாளிகையை அமெரிக்க மக்களுடன் புதுமையான மேம்படுத்தப்பட்ட வழிகளில் இணைக்கும் தகவல் தொடர்பு பரிமாற்றத் திட்டங்களை இந்தக் குழு உருவாக்கும். “தொற்றுநோய்ப் பரவலைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்கள், ஊடகங்களின் பங்கு அதிகரித்துள்ளது. தற்போதைய வாழ்க்கையின் பெரும்பகுதி ஆன்லைனில் இருப்பதால் இந்த நிர்வாகத்தின் டிஜிட்டல் முயற்சிகள் அனைத்தையும் உள்ளடக்கியதாகவும் விரிவாகவும் இருப்பது மிகவும் முக்கியமானது” என துணை அதிபர் ஹாரிஸ் இக்குழுவின் நிபுணத்துவத்தையும் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார். இந்த குழுவின் சேர்ந்தகை நிர்வாகி (“Partnerships Manager”) ஆயிஷா.

சமீரா ஃபசிலி, தேசிய பொருளாதார கவுன்சிலின் துணை இயக்குனராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் உள்நாட்டு மற்றும் சர்வதேச பொருளாதார நடவடிக்கைகள், நிதி அணுகல், சமூக கட்டமைப்பு போன்ற துறைகளில் அனுபவம் வாய்ந்தவர். கடந்த ஒபாமா அரசில் தேசிய பொருளாதார கவுன்சிலின் மூத்த கொள்கை ஆலோசகராகவும், கருவூலத்துறையின் மூத்த ஆலோசகராகவும் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். காஷ்மீரை பூர்வீகமாக கொண்டவர். சட்டம் பயின்றவர். “ஸ்டாண்ட் வித் காஷ்மிர்” இயக்கத்தின் உறுப்பினராகவும் உள்ளார். சமீபத்தில் இந்திய அரசு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை கடுமையாக எதிர்த்தவர்.

பரத் ராமமூர்த்தி, தேசிய பொருளாதார கவுன்சிலில் நிதி சீர்திருத்தம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பிற்கான துணை இயக்குனராக பரத் நியமிக்கப்பட்டிருக்கிறார். சமீபத்தில் இவர் இணை ஆசிரியராக இருந்து எழுதிய ”A True New Deal” எனும் கட்டுரை கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுப்பதைக் குறித்த பார்வை அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார மீட்சியை இந்தக் கட்டுரை பேசுகிறது. இதை அடிப்படையாகக் கொண்டே பைடன் அரசின் அணுகுமுறையும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. “பைடன்-ஹாரிஸ் நிர்வாகத்தில் தேசிய பொருளாதார கவுன்சிலின் துணை இயக்குநராக இணைந்ததில் தான் பெருமைப்படுவதாகவும் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கும், வலுவான சிறந்த பொருளாதாரத்தை உருவாக்குவதற்கும் நிறைய செய்யவேண்டியிருக்கிறது. இந்த அணியுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.” என ராமமூர்த்தி சமீபத்தில் ட்வீட் செய்திருந்தார்.

வினய் ரெட்டி, இனி இவர்தான் பைடனின் அனைத்து உரைகளையும் எழுதுகிறவராக இருப்பார். Director of speechwriting. பைடன் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் வினய் ரெட்டியின் மேற்பார்வையில் தயாரிக்கப்படும். இவர் ஏற்கனவே பைடனுடன் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். சட்டம் பயின்றவர். முந்தைய ஒபாமா அரசில் பல்வேறு துறைகளில் உரைகளை தயாரிக்கும் வேலைகளில் ஈடுபட்ட அனுபவம் உள்ளவர்.

கௌதம் ராகவன், கடந்த பத்து ஆண்டுகளில் வெள்ளை மாளிகை மற்றும் அமெரிக்க பாராளுமன்றமான “கேப்பிடல் ஹில்லில்” பல்வேறு முக்கிய பதவிகளில் பணியாற்றிய கௌதம், இனி ஜனாதிபதி பணியாளர் அலுவலகத்தின் துணை இயக்குநராக பணியாற்றுவார். இவர் சமீபத்தில் பைடனின் நியமனங்களின் குழுவின் துணைத் தலைவராகவும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தை பின்புலமாகக் கொண்ட அமெரிக்க மக்கள் பிரதிநிதியான பிரமிளா ஜெயபாலிடம் தலைமை பணியாளராகவும் பணியாற்றியவர். நேரடியாகவும், இணைந்தும் கௌதம் ராகவன் எழுதிய பல்வேறு கட்டுரைகள், வெளியீடுகள் முக்கியத்துவம் பெற்றவை.

வேதந்த் படேல், குஜராத்தை பூர்வீகமாகக் கொண்டவர். வெள்ளை மாளிகையில் உதவி பத்திரிக்கை செயலராக நியமிக்கப் பட்டிருக்கிறார். பைடனின் பிரச்சாரத்தில் பத்திரிக்கை தொடர்பாளராக பணியாற்றியவர். தற்போது பைடன் அரசின் பதவியேற்பு நிகழ்ச்சியின் மூத்த செய்தி தொடர்பாளராகவும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. பத்திரிக்கை தொடர்பு துறையில் நீண்ட அனுபவம் உள்ளவர்.

சோனியா அகர்வால், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் சிவில் எஞ்சினியரிங் பட்டதாரியான சோனியா ஆற்றல் மற்றும் பருவநிலை மாறுபாடுகள் துறை வல்லுனர். தன்னுடைய நிறுவனம் வாயிலாக புதிய எரிசக்தி கொள்கைகளை உருவாக்கியவர். இவரை அதிபர் பைடன் தனது பருவநிலை மாற்றங்கள் மற்றும் அதை மேம்படுத்தும் திட்டங்களுக்கான ஆலோசகராக நியமித்திருக்கிறார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அது தொடர்பான செயல்பாடுகளில் பைடன் அரசு முன்னுரிமையும், தனிக்கவனமும் செலுத்த இருப்பதால் சோனியா அகர்வாலின் பங்களிப்பு இந்தப் பணியில் மிக முக்கியமானதாக எதிர்பார்க்கப்படுகிறது.

விதுர் ஷர்மா, கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான அரசின் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கப் போகும் இரண்டாவது இந்திய முகம் ஷர்மா. கோவிட்19 பரிசோதனை மற்றும் அதன் எதிர்வினைகள் தொடர்பான கொள்கைகளை வகுக்கும் ஆலோசகராக நியமிக்கப் பட்டிருக்கிறார். இவர் ஏற்கனவே முந்தைய ஒபாமா அரசில் ஒபாமாகேர் திட்டத்தில் பங்களித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தருண் சாப்ரா, முதல் தலைமுறை அமெரிக்க இந்தியரான தருண், தொழில்நுட்பம் மற்றும் தேசிய பாதுகாப்புத்துறையின் மூத்த இயக்குனராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் ஏற்கனவே பைடனுடன் இதே துறையில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.

சுமோனா குஹா, தெற்காசிய விவகாரங்களுக்கான மூத்த இயக்குனராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இருபது வருடங்களுக்கும் மேலாக தெற்காசிய விவகாரங்களில் கொள்கைகளை வகுக்கும் பணிகளை மேற்கொண்டவர் என்கிற வகையில் இந்த பதவிக்கான பொருத்தமான தேர்வாக சுமோனா குஹா கருதப்படுகிறார். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானுக்கான சிறப்பு பிரதிநிதி அலுவலகத்தில் துணை இயக்குநராகவும், துணை அதிபர் பைடனின் அலுவலகத்தில் தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான சிறப்பு ஆலோசகராகவும், அமெரிக்கா இந்தியா வர்த்தக கவுன்சிலிலும் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.

ஷாந்தி கலத்தில், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப் பட்டிருக்கிறார். தொடர்ச்சியாக மக்களாட்சி தொடர்பான செயல்பாடுகளில் தீவிரமாக இயங்கி வரும் ஷாந்தி இணை ஆசிரியராக எழுதிய “Open Networks, Closed Regimes: The Impact of the Internet on Authoritarian Rule (Carnegie Endowment for International Peace, 2003)” மிகுந்த கவனம் பெற்ற நூல்.

ரீமா ஷா, அதிபர் மற்றும் வெள்ளை மாளிகை தொடர்பான சட்டச்சிக்கல்கள் குறித்த ஆலோசனைகள் வழங்கும் குழுவின் இணை ஆலோசகராக ரீமா நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்தத் துறையில் நியமிக்கப்பட்டிருக்கும் இரண்டாவது இந்திய அமெரிக்கர் ரீமா என்பது குறிப்பிடத்தக்கது.

ரோகித் சோப்ரா, நுகர்வோர் நிதிபாதுகாப்பு குழுமத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டிருக்கிறார். கடந்த காலத்தில் மாணவர்களுக்கான கடன் வழங்கும் நிறுனவங்களின் முறைகேடான நிதி நடைமுறைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியவர் என்பதால் இம்முறை கோவிட் நிவாரணத் திட்ட வடிவமைப்பில், மாணவர்களின் கடன்களுக்கு உரிய நிவாரணம் வழங்கும் பணியில் ரோகித்தின் பங்களிப்பு இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

நேஹா குப்தா, வெள்ளை மாளிகை தொடர்பான சட்ட விவகாரங்களில் ஆலோசனைகள் வழங்கும் துறையின் இணை ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் சமீபத்தில் பைடன்-ஹாரிஸ் நியமனங்களின் குழுவில் இடம்பெற்றிருந்தவர். சட்ட வல்லுனர். இத்துறையில் நியமிக்கப்பட்டிருக்கும் முதல் இந்திய அமெரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி பைடன்-ஹாரிஸ் அரசில் உயர்பதவிகளில் தேர்தெடுக்கப்பட்டிருக்கும்/ நியமிக்கப்பட்டிருக்கும் இந்திய வம்சாவளியினரின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. பிழைப்பிற்காக அமெரிக்கா வந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம் என்கிற நிலையில் இருந்து இந்திய சமூகம் மாறி அடுத்த கட்டமாக இந்த நாட்டின் அரசியல், பொருளாதார உள் கட்டமைப்புகளில் தங்கள் பங்களிப்பினை வழங்க ஆரம்பித்திருப்பது பெருமைப்படத்தக்க ஒன்று.

தற்போது பதவி பெற்றிருப்பவர்கள் அனைவருமே அவரவர் துறை சார்ந்த வல்லுனர்கள். தொடர்ச்சியாக தங்கள் திறமைகளை நிரூபித்து அந்த திறமைகளின் அடிப்படையில் மற்ற எவரையும் விட தாங்கள் சிறந்தவர்கள் என்பதால் மட்டுமே இந்த நியமனங்களைப் பெற்றிருப்பவர்கள் என்பது மனதுக்கு நிறைவானதாகவும், எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை உறுதி செய்வதாகவும் இருக்கிறது.

இன, மொழி, நிற பேதமில்லாமல் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய பைடன் – ஹாரிஸ் கூட்டணியின் இந்த முயற்சி அருமையான துவக்கம். புதிய அமெரிக்காவை நோக்கிய பயணத்தின் முதற்படியாக இது இருக்கும். வரலாறு அவர்களை வாழ்த்தட்டும்.

நாமும் வாழ்த்துவோம்.

No comments:

Post a Comment

'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...