Sunday, January 10, 2021

நவ திருப்பதிகள்

பெருமாள் தலங்களில் மார்கழி மாதத்தில் பகல்பத்து ராப்பத்து உற்சவம் கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும். நவ திருப்பகளின்  சிறப்பே பெருமாள், தாயார்களின்  அழகிய திருநாமங்களும், அலங்காரங்களும், பூஜைகளும், சுத்தமான கோவில்களும் தான். இத்தலங்களுக்குச் சென்று வருவதால் புதிய கோவில்களின் அறிமுகம் மட்டுமன்றி நகர எல்லைக்கு அப்பாற்ப்பட்ட அழகிய கிராமங்களையும் காண்பதும் சுகம். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும் பெருமாள் அலங்காரங்களும் என்று திவ்யமாக இருக்கும் இப்பொழுது. ஒன்பது பெருமாள்களும் கொள்ளை அழகு!

சொல்வனம் இதழில் வெளிவந்த என்னுடைய "நவ திருப்பதிகள்" பற்றின கட்டுரை.

நவ திருப்பதிகள்


மனிதர்களின் வாழ்க்கையையும் சமூக வாழ்வையும் ஒழுங்குமுறைக்கு உட்படுத்துவதே ஆன்மீகம். ஆன்மீக வரலாற்றில் வைணவ சம்பிரதாயமும், பன்னிரு ஆழ்வார்களும், அவர்களது பாசுரங்களும் சிறப்பிடம் பெற்றுள்ளன. இந்து சமயத்தின் உட்பிரிவுகளுள் ஒன்றான வைணவம், சரணாகதி தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு பெருமாளை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயமாகும். இறைவனை வணங்குவதே அவரை அடையும் எளிதான வழி ஆதலால் கோவில்களில் மக்கள் அவரை ஆராதனை செய்து அவர் பாதம் அடைய அருள் வேண்டிக் கூடுகிறார்கள். பாரதமெங்கும் பெருமாள் தலங்கள் பல இருந்தாலும் பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் இடம்பெற்றுள்ள திருத்தலங்கள் திவ்ய தேசம் என்றும் இத்திவ்ய தேசங்களைப் பற்றின பாடல்கள் மங்களாசாசனம் என்றும் அழைக்கப்படுகிறன. புகழ்பெற்ற 108 திவ்ய தேசங்களில் 105 தலங்கள் இந்தியாவிலும், ஒன்று நேபாளிலும் உள்ளன. இவற்றைத் தவிர மற்ற இரண்டு தலங்கள் வானுலகிலும் உள்ளன என்பது ஐதீகம். இத்திருத்தலங்களில் பகவான் நின்ற, அமர்ந்த, சயன திருக்கோலங்களில் அருள்பாலிக்கிறார்.

தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணிக் கரையோரம் அமைந்துள்ள ஒன்பது பெருமாள் திருத்தலங்கள் நவ திருப்பதி என்று அழைக்கப்படுகிறன. இத்தலங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நவக்கிரகத்துக்கு உரியவையாக, பெருமாளே நவக்கிரகங்களாக வழிபடப்படுகிறார். ஒவ்வொரு தலத்துக்கும் புராண கதைகளும், தல விருட்சமும், தல தீர்த்தமும், தல பெருமைகளும் இருக்கிறது. நவ திருப்பதி கோவில்கள் அனைத்தும் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளன.

ஸ்ரீவைகுண்டம் – சூரிய ஸ்தலம்

வரகுணமங்கை (நத்தம்) – சந்திரன் ஸ்தலம்

திருக்கோளூர் – செவ்வாய் ஸ்தலம்

திருப்புளியங்குடி – புதன் ஸ்தலம்

ஆழ்வார்திருநகரி – குரு ஸ்தலம்

தென்திருப்பேரை – சுக்ரன் ஸ்தலம்

பெருங்குளம் – சனி ஸ்தலம்

இரட்டைத் திருப்பதி (தேவர்பிரான்) – ராகு ஸ்தலம்

இரட்டைத் திருப்பதி (அரவிந்த லோசனர்) – கேது ஸ்தலம்

விடுமுறையில் ஊருக்குச் சென்றிருந்த பொழுது குடும்பத்துடன் இத்தலங்களுக்கு சென்று வரும் நல்ல வாய்ப்பும் கிடைத்தது. அதிகாலையில் மதுரையிலிருந்து புறப்பட்டு காலை ஒன்பது மணிக்கு ஸ்ரீவைகுண்டம் வந்து சேர்ந்தோம். சேறும் சகதியுமாக, குப்பைகளுடன் தாமிரபரணி ஆற்றைக் காண வருத்தமாக இருந்தது. பாலத்தில் இருந்தே கோவில் கோபுரம் தெரிய, பெருமாளைச் சேவிக்க மனமும் உற்சாகம் கொண்டது.

ஸ்ரீவைகுண்டநாதன் பெருமாள் கோவில் (ஸ்ரீவைகுண்டம்)

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் தாமிரபரணி ஆற்றின் வடகரையில் நவதிருப்பதிகளில் முதலாவதும், நவக்கிரக ஸ்தலங்களில் சூரிய ஸ்தலமாகவும், நம்மாழ்வாரும் மணவாள மாமுனிகளும் மங்களாசாசனம் செய்த கள்ளபிரான் திருக்கோவில் அமைந்துள்ளது. கையில் தண்டத்துடனும் ஆதிசேஷனைக் குடையாகவும் நின்ற கோலத்தில் வைகுண்டநாதன் இங்கு காட்சியளிக்கிறார். பிரகாரத்தில் வைகுண்டவல்லித் தாயாருக்கும் சோரநாத நாயகிக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன.

உற்சவர் : கள்ளபிரான்

தாயார்: ஸ்ரீசோரநாத நாயகி

ஒன்பது நிலைகள் கொண்ட ராஜ கோபுரம் வண்ணமயமாக அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் வரவேற்க, பிரகாரங்களில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட சிலைகள் கண்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. கருடர், மணவாள மாமுனிகள், யோக நரசிம்மர் சன்னதிகளும் உண்டு. நீண்ட பிரகாரங்களும், யாளி, யானை, சிங்கமுக சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்ட கற்தூண்களுடன் மண்டபங்களும், சுவற்றில் ஆதிசேஷனைக் குடையாகக் கொண்டு தேவியருடன் காட்சி தரும் பெருமாள், மூவுலகமும் தன்னுள் அடக்கம் என்பதை உணர்த்தும் ஓங்கி உலகளந்த பெருமாள் சுவர் சிற்பங்களும் இக்கோவிலை மேலும் மெருகூட்டுகிறன. திருவேங்கடமுடையான் மண்டபத்தில் சுக்ரீவனை அன்பாக அரவணைத்து நிற்கும் ராமர், அருகில் சீதா தேவி, அனுமன், அங்கதனுடன் லட்சுமணர், அகோர வீரபத்திரர் சிலைகள் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன.


தாருடுத்துத் தூசு தலைக்கணியும் பேதையில
னேருடுத்த சிந்தை நிலையறி அயன் – போருடுத்த
பாவைகுந்தம் பண்டொசித்தான் பச்சைத்துழாய் நாடுஞ்
சீவைகுந்தம் பாடும் தெளிந்து
– ஸ்ரீவைகுண்டம் அந்தாதி

அதிகக் கூட்டம் இல்லாத காலை நேரம். அமைதியான, நன்றாகப் பராமரிக்கப்பட்டிருந்த கோவில். மதுரையில் பெரிய கோவில்களுடன் ஒப்பிடுகையில் ஸ்ரீவைகுண்டநாதன் பெருமாள் கோவில் சிறியதுதான். கோவிலினுள்ளே இருந்த அழகிய சிற்ப வேலைப்பாடுகள் மனதைக் கொள்ளை கொண்டன. விமான கோபுரங்கள் பளிச்சென்று வண்ணக் கலவையுடன் வித்தியாசமாகத் தெரிந்தன. கோவில் கிணற்றில் நீர் இருந்தது மிகப்பெரும் ஆறுதல். பக்தர்களுக்காக குடிநீர்க் குழாய்கள் ஆங்காங்கே அமைத்திருந்தார்கள். கோடையிலும், கூட்டமான நாள்களிலும் உபயோகமாக இருக்கும். கோவிலைச் சுற்றிக் காண்பித்து சிற்பங்களின் அருமை பெருமைகளை எடுத்துரைக்க யாரவது உதவி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். அறிந்திராத தகவல்களைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பைத் தவற விட்டேனோ என்று இன்று நினைக்கத் தோன்றுகிறது. ஸ்ரீவைகுண்டநாதனின் பெருமைகளை உரைத்துக் கொண்டே தீபாராதனை செய்தது மிகச் சிறப்பு. மனம் நிறைவாக அடுத்த தலத்திற்குப் பயணமானோம்.

திருவரகுணமங்கை திருக்கோவில் (வரகுணமங்கை)

ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள நத்தம் கிராமத்தில் நவ திருப்பதிகளில் இரண்டாவதும் சந்திர ஸ்தலமுமான விஜயாசன பெருமாள் திருக்கோயில் உள்ளது. ஐந்து நிலைகளைக் கொண்ட கோபுரம். பனை மரங்கள் சூழக், கிராமத்து இயற்கை எழிலுடன் அழகான, அமைதியான, பழமையான சிறிய கோவில். ஸ்ரீவைகுண்டம் திவ்யதேசத்தில் ஆதிசேஷன் நின்ற பெருமானுக்கு குடைபிடித்தார். இங்கே அமர்ந்த பெருமானுக்கு குடையாக இருக்கிறார். தாயார்களுக்குத் தனிச் சன்னிதி இல்லை.

உற்சவர்: எம் இடர் கடிவான்

தாயார் : வரகுணவல்லி, வரகுணமங்கை



புளிங்குடிக் கிடந்து வரகுண மங்கை
இருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தை அகங்கழியாதே
என்னை ஆள்வாய் எனக்கருளி
நளிர்ந்த சீருலகம் மூன்றுடன் வியப்ப
நாங்கள் கூத்தாடி நின்றார்ப்ப
பளிங்கு நீர் முகிலின் பவளம்போல்
கனிவாய் சிவப்ப நீ காணவாராயே
– நம்மாழ்வார் திருவாய்மொழி 9-2-4

குக்கிராமத்தில் நந்தவனம் சூழ கோசாலையுடன் அமைத்திருந்த கோவிலில் அந்தக் காலை வேளையில் பெருமாளைத் தரிசிக்க நாங்கள் மட்டுமே இருந்தோம். சிறிய பிரகாரங்கள் சுத்தமாக இருந்தன. ஓங்கி உயர்ந்த பனை மரங்களின் நடுவிலிருந்த குளம் வற்றியிருந்தது சொல்லாமல் சொல்லிற்று பொய்த்திருந்த மழைக்காலத்தை!. அங்கிருந்து புளியங்குடி நோக்கிப் பயணமானோம்.

திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவில்

மற்றொரு நவ திருப்பதியான தென்திருப்பேரையில் இருந்து ஆழ்வார்த்திருநகரி செல்லும் சாலையில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் நவ திருப்பதிகளில் மூன்றாவதும் செவ்வாய் தலமாகவும் திருக்கோளூர் கோவில் அமைந்துள்ளது. மூலவர் வைத்தமாநிதி பெருமாள் புஜங்க சயன கோலத்தில் இங்கு காட்சியளிக்கிறார். தாயார் கோளூர்வல்லி நாச்சியார், குமுதவல்லி நாச்சியார். அழகிய சுற்றுப் பிரகாரங்களும், சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கற்தூண்களும் நிறைந்த மண்டபங்களும் இக்கோவிலின் சிறப்பு. மிகவும் நன்றாக பராமரிக்கப்பட்ட மற்றுமொரு நவ திருப்பதி கோவில்.

உற்சவர்: நிஷோப வித்தன்

தாயார்: குமுதவல்லி நாயகி, கோளூர் வல்லி நாயகி

உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும்வெற் றிலையுமெல்லாம்
கண்ணன், எம்பெருமான் னென்றென் றேகண்கள் நீர்மல்கி
மண்ணினுள் அவன்சீர் வளம்மிக் கவனூர் வினவி
திண்ண மென்னிள மான்புகு மூர்திருக் கோளூரே.
– நம்மாழ்வார், திருவாய்மொழி 6-7-1




கோவிலினுள் நுழையும் பொழுதே நாதஸ்வர இன்னிசை ஒலிக்க, மண்ட பங்களைக் கடந்து புஜங்க சயன கோலத்தில் வைத்தமாநிதி பெருமாளின் தீபாராதனைக் காட்சி மனதிற்கு மிகவும் நிறைவாக இருந்தது. அழகிய சிற்பங்களுடன் சிறு மணடபங்கள். கோவிலைச் சுற்றி வருகையில் கணீர் குரலில் பக்தர் ஒருவர் திவ்ய பிரபந்தம் பாடுவதைக் கேட்க இனிமையாக இருந்தது. வறண்டிருந்த வாய்க்கால், முட்கள் சூழ கருவேல மரங்கள் உறுத்தலாக இருந்தாலும் கோவிலுக்குள் அமைதி குடி கொண்டிருக்கிறது.

காய்சினவேந்தப் பெருமாள் திருக்கோயில் (திருப்புளியங்குடி)

வரகுணமங்கையிலிருந்து ஒரு மைல் தொலைவில் நவ திருப்பதிகளில் நான்காவதும் புதன் தலமுமான இக்கோவில் அமைந்துள்ளது. மூலவர் பூமிபாலகர் திருமால் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்ட நிலையில் காட்சி தருகிறார். சயனப் பெருமாளின் திருப்பாத தரிசனத்தை மூலவர் சன்னதியைச் சுற்றி வரும்போது உள்ள சிறிய ஜன்னல் வழியாகத் தரிசிக்கலாம். லக்ஷ்மி தேவியும் பூமாதேவியும் பெரிய திருவுருவங்களாக பெருமாளின் திருப்பாதத்தின் அருகில் அமர்ந்த கோலத்தில் உள்ளனர். இத்தலத்தில் பெருமாள் திருவயிற்றில் இருந்து தாமரைக் கொடி தனியாகக் கிளம்பிச் சென்று சுவற்றில் உள்ள பிரம்மாவின் தாமரை மலருடன் சேர்ந்து கொள்கிறது. கோவிலினுள்ளே கோமாதாவிற்குப் பக்தர்கள் கீரை வழங்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

உற்சவர்: எம் இடர் களைவான்

தாயார் : மலர் மகள் நாச்சியார், நிலா மகள் நாச்சியார், புளிங்குடி நாச்சியார்


காய்சினப் பறவையூர்ந்து பொன்மலையின் மீமிசைக் கார்முகில்போல
மாசினமாலி மாலிமானென்று அங்கு அவர்படக் கனன்று முன்னின்ற
காய்சினவேந்தே! கதிர்முடியானே! கலிவயல் திருப்புளிங்குடியாய்
காய்சின ஆழி சங்கு வாள் வில் தண்டேந்தி எம்மிடர் கடிவானே
-நம்மாழ்வார் திருவாய்மொழி 9-2-6

மிகப்பெரும் ஆலமரத்தின் கீழ் அமைந்திருந்த குளம் நீரின்றி வறண்டு கிடந்ததைக் காண வருத்தமாக இருந்தது. கோவிலைச் சுற்றி பெருங்கட்டடங்கள் இல்லாதது சற்று ஆறுதலாக இருந்தாலும் வறட்சியாக இருந்த நிலமும் சுள்ளென்று அடித்த வெயிலுடன் சேர்ந்து மனதைச் சுட்டது. இக்கோவிலில் சயன கோலத்தில் மூலவரும் தாயாரும் பேருருவங்களாகக் காட்சி தருவது அழகு. அழகிய சிற்பங்களுடனும் சிலைகளுடனும் மண்டபங்கள். பக்தர்கள் கோமாதாக்களுக்கு கீரைக்கட்டு வாங்கிக் கொடுக்கும் வகையில் கோவிலினுள்ளே சுற்றுப் பிரகாரத்தில் மாடுகளையும் கட்டி வைத்திருந்தார்கள். நன்கு பராமரிக்கப்பட்ட மற்றுமொரு கோவில். மனிதர்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதாலோ என்னவோ அமைதியுடன் இருந்தது. திவ்ய தரிசனம் செய்த நிறைவுடன் இரட்டை திருப்பதி நோக்கிப் பயணித்தோம்.

ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில் (ஆழ்வார்த் திருநகரி )

குரு ஸ்தலமும், நவ திருப்பதிகளில் ஐந்தாவதும், நம்மாழ்வார் அவதரித்ததுமாகிய இத்திருத்தலம் தென்திருப்பேரையில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆழ்வார் திருநகரியில் அமைந்துள்ளது. மூலவர் ஆதிநாதன் நின்ற திருக்கோலத்தில் பிராட்டியார்களுடன் காட்சியளிக்கிறார். தாயார் ஆதிநாதவல்லி, குருகூர்வல்லிக்குத் தனித்தனி சன்னிதிகள் உண்டு. ஆதிசேஷனான லட்சுமணனே இங்கே புளியமரமாக எழுந்தருளி இருக்கின்ற காரணத்தினாலும் நம்மாழ்வார் பிறந்து வளர்ந்து குடிகொண்ட திருத்தலம் என்பதாலும் இந்தத் தலத்துக்கு சேஷ ஷேத்திரம் என்ற பெயர் ஏற்பட்டது. குருகூர் என்ற இந்த திவ்யதேசம் நம்மாழ்வாரின் அவதார மகிமையினால் ஆழ்வார் திருநகரி ஆகிவிட்டது. திருவரங்கத்தை பூலோக வைகுண்டம் என்பார்கள். இந்த ஆழ்வார் திருநகரியோ பரமபதத்தின் எல்லை நிலம் என்று சொல்லப்படுகிறது.

கோயிலின் உட்பிரகாரத்தில் ஸ்ரீ நம்மாழ்வாருக்குத் தனி கோயில் உள்ளது. அதனை அடுத்து நாதமுனி சன்னதி, பன்னிரெண்டு ஆழ்வார் சன்னதி, நரசிம்மர் சன்னதி, திருவேங்கடமுடையான் சன்னதிகள் அமைந்துள்ளன. ஆதிநாதர் சன்னதியின் வெளிப்பிரகாரத்தில் கண்ணாடி மண்டபம், கம்பர் அறை அமைந்துள்ளன. கோயில் மதிலுக்கு வெளியே ஸ்ரீபட்சிராஜர் சன்னதியும், ஸ்ரீ கிருஷ்ணர் சன்னதியும், அனுமன் சன்னதியும் உள்ளது.

இக்கோவிலில் உள்ள கல் நாதஸ்வரம் மற்றும் உறங்காப் புளியமரம் மிகவும் விசேஷமானவை. நீண்ட பிராகாரங்கள், அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட பெரிய கோவில்.

உற்சவர்: பொலிந்து நின்ற பிரான்

தாயார்: ஆதிநாத நாயகி, திருக்குருகூர் நாயகி

வைகாசி மாதத்தில் நடைபெறும் கருடசேவைத் திருவிழாவிற்கு நவதிருப்பதிகளிலும் உள்ள ஒன்பது உற்சவப் பெருமாளும் கருட வாகனத்தில் இங்கு எழுந்தருள, நம்மாழ்வாரின் உற்சவர் திருவுருவச் சிலை அன்ன வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டு ஒவ்வொரு நவதிருப்பதி பெருமாளைக் குறித்து அவர் பாடிய பாடல்கள் பாடப்படும் பெருந்திருவிழாவாக இப்பகுதி மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவினைக் காண நாடு முழுவதிலுமிருந்து பக்தர்கள் இங்கு வந்து பெருமாளின் திருவருளைப் பெறுகின்றனர்.

ஓடி யோடிப் பல்பிறப்பும் பிறந்துமற் றோர்தெய்வம்
பாடி யாடிப் பணிந்துபல்படிகால் வழியே றிக்கண்டீர்
கூடி வானவ ரேத்தனின்ற திருக்குரு கூரதனுள்
ஆடு புட்கொடி யாதி மூர்த்திக் கடிமை புகுவதுவே.
– நம்மாழ்வார், திருவாய்மொழி 4-10-7


கோவில் நுழைவாயிலில் திருத்தேர் செப்பணி நடந்து கொண்டிருந்தது. நவ திருப்பதிகளுள் சற்றே பெரிய கோவில். மக்கள் நடமாட்டமும் அதிகம். நம்மாழவார் அவதரித்த தலப் பெருமையும் வைகாசி மாத கருடசேவைத் திருவிழாவும் நடைபெறுவதால் பிரபலமான கோவிலாகவும் இருக்கிறது. உயரமான சுற்றுச் சுவர்களில் கிளிகளும் குடில் கொண்டுள்ளது அழகு.

தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் திருக்கோயில்

நவ திருப்பதிகளில் ஆறாவதும் சுக்கிரன் தலமாகவும் விளங்கும் இத்திருத்தலம் மற்றொரு நவ திருப்பதியான திருக்கோளூரில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. மணவாள மாமுனிகளும் இத்தலத்தைப் பாடியுள்ளார். மூலவர் மகரநெடுங்குழைக்காதர் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். தாயார் குழைக்காதுவல்லி, திருப்பேரை நாச்சியாருக்குத் தனித்தனி சன்னதிகள் உண்டு.

உற்சவர்: நிகரில் முகில் வண்ணன்

நகரமும் நாடும் பிறவும் தேர்வேன்
நாணெனக் கில்லையென் தோழி மீர்காள்!
சிகரம் அணிநெடு மாடம் நீடு
தென்திருப் பேரையில் வீற்றி ருந்த
மகர நெடுங்குழைக் காதன் மாயன்
நூற்றுவ ரையன்று மங்க நூற்ற
நிகரில் முகில்வண்ணன் நேமி யானென்
னெஞ்சம் கவர்ந்தெனை யூழி யானே?
– நம்மாழ்வார் திருவாய்மொழி 7-3-10


கோவில் தேர் கம்பீரமாக நிற்கும் தெரு வழியே கோவிலுக்குச் செல்லும் வீதியில் அக்ராஹாரத்து வீடுகள் பழமையைச் சுமந்தபடி நிற்பது மனதை வசீகரிக்க, சில பல படங்களை க்ளிக் செய்தபடி கோவிலுக்குள் சென்றோம். சிறு நகரம். வெளியூர்க்காரர்கள் என்று தெரிந்தவுடன் அங்கிருந்த பக்தர் ஒருவர் உள்மண்டப முகப்பில் தேர் வடிவில் அமைந்திருந்த புதிர் ஒன்றை வாசித்துக் காண்பித்து பொருளும் சொல்லிவிட்டுப் பாசுரங்கள் பாடியபடி சென்றார். புதிதாய் ஒன்றைக் கற்றுக் கொண்டு நாங்களும் பத்து நாள் திருவிழாவிற்கான வாகனங்களைப் பார்த்துக் கொண்டே அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கும் மகரநெடுங்குழைக்காதரை வணங்கி ஆழ்வார்த் திருநகரி சென்றடைந்தோம்.

பெருங்குளம் பெருமாள் கோவில் (திருக்குளந்தை)

நவ திருப்பதிகளில் ஏழாவதும் சனி பகவானுக்குரிய தலமாகவும் அறியப்படும் திருக்குளந்தை வேங்கடவானன் திருக்கோயில் திருப்புளியங்குடியில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் பெருங்குளம் ஏரிக்கரையில் அமைந்துள்ளது. இத்திருத்தலத்தில் மூலவர் ஸ்ரீநிவாசன் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். சிற்பவேலைப்பாடுகளுடன் அழகிய கற்தூண்களைக் கொண்ட மண்டபங்கள் மனத்தைக் கவரும் வகையில் இருக்கிறது.

உற்சவர்: மாயக்கூத்தன்

தாயார்: அலமேலுமங்கைத் தாயார், குளந்தைவல்லித்தாயார்

கூடச்சென் றேனினி என்கொ டுக்கேன்? கோல்வளை நெஞ்சத் தொடக்க மெல்லாம் பாடற் றொழிய இழந்து வைகல் பல்வளை யார்முன் பரிச ழிந்தேன் மாடக் கொடிமதிள் தென்கு ளந்தை வண்குட பால்நின்ற மாயக் கூத்தன் ஆடல் பறவை உயர்த்த வெல்போர் ஆழி வலவி னை யாதரித்தே. -நம்மாழ்வார் திருவாய்மொழி 8-2-4


மண்டபங்கள், சுற்றுப் பிரகாரங்களுடன் அழகாகப் பராமரிக்கப்பட்ட கோவிலினுள்ளே அமைதியும் குடி கொண்டிருக்கிறது. வேப்ப மரங்களும், பனை மரங்களும் சூழ்ந்த தடாகம் வற்றியிருக்க நீரிருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று நினைத்துக் கொண்டேன். பூனைகள் பல நடமாடிக் கொண்டிருந்தன. மனிதர்களைக் கண்டு அஞ்சியதாகத் தெரியவில்லை. கோவிலினுள்ளே துளசி மாலைகள் விற்றுக் கொண்டிருந்தாள் ஒரு பெண்மணி. எண்ணெய் விளக்கொளியில் கருவறைப் பெருமாள் அழகாக ஜொலித்துக் கொண்டிருந்தார். வேங்கடவனின் திவ்ய தரிசனத்துடன் மகரநெடுங்குழைக்காதன் கோவிலுக்குச் செல்ல தென்திருப்பேரை நோக்கிப் பயணித்தோம்.

திருத்தொலைவில்லிமங்கலம் தேவர்பிரான் திருக்கோவில் (இரட்டைத் திருப்பதி )

நம்மாழ்வாரால் பாடல் பெற்ற ராகு அம்சம் கொண்ட இத்திருத்தலம் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது. இரட்டைத் திருப்பதியில் தெற்கு திருக்கோயில். மூலவர் ஸ்ரீநிவாஸன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். தாயார்களுக்குச் தனிச் சன்னதி இல்லை. தென்னை மரங்களுடன் அமைதியான சூழல் அமையப் பெற்ற சிறிய கோவில்.

உற்சவர்: தேவர்பிரான்

தாயார்: அலமேலுமங்கை தாயார், பத்மாவதி தாயார்

கரைகொள் பைம்பொழில் தண்ப ணைத்தொலை
வில்லி மங்கலம் கொண்டுபுக்கு
உரைகொ ளின்மொழி யாளை நீருமக்
காசை யின்றி அகற்றினீர்
திரைகொள் பௌவத்து சேர்ந்த தும்திசை
ஞாலம் தாவி யளந்ததும்
நிரைகள் மேய்த்தது மேபி தற்றி
நெடுங்கண் ணீர்மல்க நிற்குமே.
– நம்மாழ்வார் திருவாய்மொழி 6-5-3


நவ திருப்பதிகளிலேயே மிகவும் சிறிய கோவிலாக எனக்குத் தோன்றியது இக்கோவில்தான். பெருமாளின் சங்கு சக்கரம் திருநாமம் தாங்கிய கோவில் முகப்பு. ஒரு மணிக்குள் நடையைச் சாத்திவிடுவதால் அவசர அவசரமாகக் கோவிலுக்குள் செல்லும் பக்தர்களைக் காண முடிந்தது. குப்பைகள் இல்லாத இடங்கள் மனதிற்குத் தரும் அமைதியையும் உணர்ந்து கொண்டே, பராமரிக்கப்படாத தார் சாலைகள், கருவேல மரங்கள் சூழ்ந்த வறண்ட வாய்க்கால் வழியே திருக்குளந்தை சென்றடைந்தோம்.

திருத்தொலைவில்லிமங்கலம் அரவிந்த லோசனர் திருக்கோவில் (இரட்டைத் திருப்பதி)

கேது ஸ்தலமான இத்திருத்தலம் கால்வாய்க் கரையோரம் பெருங்குளத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மூலவர் அரவிந்த லோசனன் வீற்றிருக்கும் திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். இக்கோவில்கள் மதுரை டிவிஎஸ் நிறுவத்தினரால் பராமரிக்கப்படுவதாக பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உற்சவர்: செந்தாமரைக் கண்ணன்

தாயார்: கருந்தடங்கண்ணி


கோவிலினுள்ளே புற்களை மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள், சுற்றுப் பிரகாரத்தில் தென்னை மரங்கள் பெருங்கோபுரங்கள் இல்லாத மிகச்சிறிய கோவில் இது. இங்கு ஓரளவு மக்கள் கூட்டம் இருந்தது. செல்லும் வழியில் வற்றிப்போயிருந்த கால்வாய் , வறண்ட மணல், சுடும் வெயில் இருந்தாலும் கோவிலுக்கு வந்திருந்தவர்கள் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி. அதற்கு அருகிலேயே தேவர்பிரான் கோவிலும்.

நவ திருப்பதி தலங்கள் அனைத்தும் அழகாகப் பராமரிக்கப்பட்டு சுத்தமாக தெய்வீகமாக இருக்கிறன. புறநகர்ப்பகுதிகளில் அமைந்துள்ளதால் நெரிசல் இல்லாத தெய்வ தரிசனமும் இயற்கைச் சூழலும் மனதிற்கு அமைதியையும் நிம்மதியையும் தருகின்றன. கோவில் பட்டர்கள் தீபாராதனையுடன் தலப் பெருமைகளையும் எடுத்துரைப்பது சிறப்பு. அக்ரஹார வீடுகள் இன்றும் பழமையைப் பறைச்சாற்றிக் கொண்டிருப்பது அழகு. ஒன்பது திருத்தலங்களில் எழுந்தருளியுள்ள பெருமாள், தாயாரின் நாமங்கள் கேட்பதற்கும் இனிமையாக, பூஜைகளும், அலங்காரங்களும் மனதைக் கொள்ளை கொள்ளும் என்பதில் ஐயமில்லை. ஒரே நாளில் நவ திருப்பதி கோவில்களைத் தரிசனம் செய்ய முடிகிறது. இக்கோவில்களில் பக்தர்களுக்கு நெருக்கடியோ, பணத்தைப் பறிப்பதோ இல்லாதது ஆசுவாசமாக இருந்தது. பழமையைச் சுமந்து கொண்டு இருப்பதாலோ என்னவோ மனதிற்கு மிகவும் நெருக்கமாக உணர முடிந்தது. கோபுரங்களின் பளீர் வண்ணங்கள்தான் ஏன் என்ற கேள்வியை எழுப்பியது. பக்தர்களுக்கு உதவும் வகையில் அனைத்துத் தலங்களிலும் நவ திருப்பதி கோவில்களுக்குச் செல்லும் வரைபடமும், கோவில் நடைத் திறப்பு நேரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. மதுரையிலிருந்து நாங்கள் வண்டியில் சென்றதால் கோவில்களுக்குச் செல்லும் பேருந்துகளைப் பற்றிய தகவல்கள் தெரியவில்லை. அதிகாலை முதல் மாலை நேரத்திற்குள் நவ தலங்களுக்கும் சென்று வர முடியும். நிதானமாகச் சென்று வர, இரண்டு நாள்கள் போதும். அருகில் திருச்செந்தூர் முருகனையும் தரிசித்து விட்டு வரலாம்.

இம்மாதத்தில் பாசுரங்கள் ஒலிக்க, இத்திருத்தலங்களில் விஷேச பூஜைகள் விமரிசையாக நடப்பதையும் திருமாலின் அழகையும் காணக் கண்கோடி வேண்டும். வைகாசி மாத திருவிழாவினைப் பற்றி உள்ளூர்க்காரர் ஒருவர் மிகப் பெருமையுடன் சொல்லும் பொழுது கொடுத்து வைத்தவர்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன்
சேவடி செவ்வித்திருக்காப்பு…

இவ்வுலகில் அன்பும் அறமும் தழைத்தோங்க அவனின் அழகிய திருநாமங்களை உரக்கச் சொல்லி அவன் பாதம் சரணடைவோம்.

படங்களுக்கு இங்கே சொடுக்கவும்: 

ஸ்ரீவைகுண்டநாதன் பெருமாள் கோவில்

திருவரகுணமங்கை திருக்கோவில்

காய்சினவேந்தப் பெருமாள் திருக்கோயில்

பெருங்குளம் பெருமாள் கோவில்

அரவிந்தலோசனர் திருக்கோவில்

தேவர்பிரான் திருக்கோவில்

ஸ்ரீவைத்தமாநிதி பெருமாள் கோவில்

மகரநெடுங்குழைக்காதன் கோவில் (தென்திருப்பேரை)

ஆழ்வார் திருநகரி பெருமாள் கோவில்




No comments:

Post a Comment

'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...