Saturday, May 3, 2014

சித்திரைத் திருவிழா

மதுரையில் கொடியேற்றத்துடன் சித்திரைத் திருவிழா ஆரம்பமாகி தினம் ஒரு வாகனத்தில் அன்னையும், சுந்தரேஸ்வரரும் வீதிகளில் உலா வரத் தொடங்கி விட்டார்கள். மீனாக்ஷி கல்யாணம் அன்று இரவு பூப்பல்லக்கு மறுநாள் காலை நகரில் தேர் உலா என்று 'கலகல'ப்பிற்கும் குறைவிருக்காது!

மக்களுக்கும் திருவிழா, விருந்து என்று நாட்கள் ஓடிப் போவதே தெரியாது. விடுமுறையில் இருக்கும் குழந்தைகளுக்கும் நித்தம் சுவாமியை பார்ப்பது, தனக்குப் பிடித்த மிட்டாய்களை வாங்கித்தின்பது என குதூகலமாக பொழுதும் போய் விடும் .

இத்தோடு முடிந்ததா திருவிழா?

அங்கயற்கண்ணியின் திருமணத்திற்காக அழகர் மலையிலிருந்து புறப்படும் பெருமாள் மதுரை வரும்வழியில் அவரை எதிர்கொள்ளும் மக்களுக்கும் அருள் புரிந்து விட்டு அடுத்த நாள் அதிகாலையில் வைகை ஆற்றில் குதிரை வாகனத்தில் இறங்கும் அழகைக் காண மதுரை சுத்துப்பட்டு கிராமத்தில் இருந்து வண்டி கட்டிக்கொண்டு திரண்டு வரும் மக்கள் கூட்டத்தை பார்க்க வேண்டுமே!

அன்று எங்கள் வீட்டில் காலையில் இருந்தே ஒரே தடபுடலாக இருக்கும். நன்கு துலக்கி பட்டை நாமம் போட்ட ஒரு சொம்பில் நாட்டுச்சக்கரை, ஏலக்காய் பொடித்துப் போட்டு வாழை இலையால் மூடி கதம்ப பூக்களால் அலங்கரித்து தங்கக்குதிரை வாகனத்தில் வரும் கள்ளழகரை பார்ப்பதற்கு எல்லோரும் காத்திருப்போம்.

தெருவில் போகும் கோமாளிகளையும், அனுமன், கருடன் வேஷத்தில் ஆடிக் கொண்டே காசு வாங்கிச் செல்லும் கூட்டங்களையும் பார்த்துக் கொண்டு மேம்பாலம் அருகில் மக்களை இறக்கி விட்டுச் செல்லும் ரிக்க்ஷா, ஆட்டோக்களையும் கடந்து மூங்கில் கடைகளையும் தாண்டி தூரத்தில் தெரியும் அழகரை பார்த்துக் கொண்டே அவரை நோக்கி கூட்டத்துடன் கூட்டமாக ஓடியது ஒரு காலம்!

ஒரு மண்டபத்துக்கருகில் அழகருக்காக காத்திருந்து அவரைப் பார்த்ததும் சொம்பின் மேல் சூடம் வைத்து கும்பிட்டு விட்டு வந்தமர்ந்த பிறகும் கேட்கும் கோவிந்தா கோஷம்...ம்ம்ம். தீபாராதனை காட்டிய பிறகு சர்க்கரையை அங்கிருப்பவர்களுக்கும் கொடுத்து விட்டு உண்டியலிலும் தாரளமாக காணிக்கை போடுவார்கள்.


இந்த வருடம் அழகர் என்ன பட்டு(வெண் பட்டு, பச்சைப் பட்டு) உடுத்திக் கொண்டு வருவார் என்று ஆருடம் பார்ப்பவர்களும் ஆர்வமாக காத்திருப்பார்கள். ஜொலிக்கும் குதிரை வாகனமும், அழகான பெருமாளும், பெரிய நாமம் போட்ட விசிறிகளும், ஆற்றில் கூட்டமும், குளிர்நீரால் பெருமாளை வரவேற்கும் கோமாளிகளின் கூட்டமும் சொல்லாமல் சொல்லி விடும் அழகர் இருக்கும் இடத்தை. போலீஸ்காரர்களும் கூட்டத்தை கண்காணித்துக் கொண்டே அழுகின்ற குழந்தைகளைப் பற்றி அறிவிப்பதும் என்று திருவிழாக் கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர சிரமப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.

கோமாளிகளும் குதிரை வாகனத்தில் எழுந்தருளியுள்ள பெருமாளைச் சுற்றி நின்று கொண்டு தண்ணீரால் பீய்ச்சி அவரை வரவேற்பார்கள். அவர்கள் ஜல்ஜல் என்று சலங்கையை கட்டி சந்தனம் பூசி மலர்மாலைகளை போட்டுக் கொண்டு கையில் சுருட்டு மாதிரி ஒரு பெரிய தீவட்டியை வைத்திருப்பார்கள்... அவர்களைச் சுற்றி குழந்தைகள் பட்டாளாம் என்று அந்த இடத்தைப் பார்க்கவே 'கலகல'வென்றிருக்கும்.

சுவாமி எழுந்தருளும் மண்டபங்களில் அனைவருக்கும் சூடாக தொன்னையில் சர்க்கரைப் பொங்கலோ வெண்பொங்கலோ கொடுத்துக் கொண்டிருப்பார்கள். இதையெல்லாம் சாப்பிட்டு விட்டு நாமம் போட்ட ஓசி விசிறியையும் வாங்கிக் கொண்டு வரும் வழியில் பால் ஐஸ் வாங்கி வெயிலில் உருகி ஓடுவதற்குள் கையில் வழிவதையும் சேர்த்து சாப்பிட்டுக் கொண்டே (!) வர, இளநீரைப் பார்த்ததும் மீண்டும் அப்பாவை பார்க்க, இது வேண்டுமா திகர்தெண்டா வேண்டுமா என்று கேட்டு ஏதாவது ஒன்றை குடித்து விட்டு மறக்காமால் ஆப்பிள் பலூனையும் வாங்கி கொண்டு வீடு வந்து சேர, தெருவில் குழந்தைகள் கையில் திருவிழாவில் வாங்கின ஏதாவது ஒரு பொருள் இருக்கும் :)

அந்த வெயிலிலும் மக்கள் கூட்டத்தில் மதுரையே கலகலக்கும்!

முன்பெல்லாம் கள்ளழகரைப் பார்த்தவுடன் சூடம் ஏற்றிய நாமம் போட்ட சர்க்கரை சொம்புகள் தான் தெரியும். இப்போது என்னவென்றால் கைப்பேசிகளும், படம் பிடிக்கும் கேமராக்களும் தான் பெருமாளைச் சுற்றி! மக்கள் கைகளைத் தூக்கி கோவிந்தா சொல்கிறார்களோ இல்லையோ, கைப்பேசியை வைத்துக் கொண்டு படமெடுப்பதில் தான் மிக்க ஆர்வம் இருப்பதாக தெரிகிறது!

பாட்டியுடன் வண்டியூர் போய் இரவு முழுவதும் நடக்கும் தசாவதார நிகழ்ச்சிகளையும் விடிய விடிய பார்த்து விட்டு வந்திருக்கிறோம்.

மாமா ஒருவர் அண்ணா நகர் போன பிறகு அவர் இருந்த குடியிருப்பில் இருக்கும் பந்தலில் சுவாமி வர, அவரும் சொந்தங்களை அழைத்து விருந்து வைத்து சொந்தங்களுடன் சுவாமி பார்ப்பது என்று குதூகலமான நாட்கள்...!

கள்ளழகர் ஊர் திரும்பும் நாளன்று பிரத்யேமாக மிஷன் ஆஸ்பத்திரியில் இருந்து பஸ் விடுவார்கள். மக்கள் குடும்பங்களுடன் புளியோதரை, இட்லி, தயிர் சாதம், சுண்டல், முறுக்கு இத்யாதிகள் எடுத்துக் கொண்டு பாண்டியன் ஹோட்டல் முதல் கலெக்டர் பங்களா, மும்மாவடி வரை பல பந்தல்களிலும், நிழல்களிலும் அமர்ந்து கள்ளழகரை சேவித்து வழியனுப்பியும் வைக்க திருவிழா இனிதே முடியும்.

வேகவைத்த கடலை, ஆள்வள்ளிக்கிழங்கு, உளுந்து, தாடிக்கிழங்கு (பனங்கிழங்கு), முறுக்கு, அதிரசம், ஐஸ், பஞ்சு மிட்டாய், சர்பத் என்று உடல் எடை பற்றிய எந்த வித கவலையும் இல்லாமல் எதை தின்றாலும் செரிந்த வயது அது.

ம்ம்ம்ம். ஞாபகம் வருதே , ஞாபகம் வருதே ...

எதிர்சேவை செய்து வரவேற்றது போய்

ஆற்றில் இறங்கி வணங்கியது போய்

வண்டியூரில் கண்டுகளித்த தசாவதார தரிசனமும் போய்

கணினி வழியே பார்க்கும் நிலைமை இன்று.

மக்களின் உள்ளத்தில் உவகை தரும் சித்திரைத் திருவிழா மதுரை மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம்!2 comments:

  1. Swarnalatha அருமயான தொகுப்பு!!! எப்படி ஒவ்வொரு இளம்கால பதிவுகளை மறக்காமல் ஞயாபகம் வைத்து எழுதுவது ஒரு கலை!!! அற்புதம்!!

    ReplyDelete
  2. நன்றி, திரு.Desikamani Kannan!

    ReplyDelete