Friday, August 21, 2015

வெள்ளிவிழா கொண்டாட்டம் - 1

கல்லூரிப்பருவம் பெரும்பாலோனோர் வாழ்விலும் ஒரு வசந்த காலம்! ஆம், அது ஒரு கனாக்காலம் என்று இருபத்தைந்து வருடங்கள் கழிந்த பின்னரும் களிப்புற வைக்கும் காலம். எதைப்பற்றின கவலையுமின்றி நண்பர்களுடன் பேசி துள்ளித் திரிந்த நாட்கள் மீண்டும் வருமா? அசை போட்டு பார்க்கும் மனம் சொல்லாமல் சொல்லும் ஆயிரமாயிரம் இனிய நினைவுகளை!

மற்றவர்களுக்கு எப்படியோ, எனக்கு கல்லூரிப் படிப்பு என்பது ஒரு கனவோ என்ற குடும்ப பின்னணி! பத்தாம் வகுப்புடன் என்னுடன் பள்ளியில் பயின்ற பல பெண்களுக்கும் திருமண வாழ்க்கை! நல்ல வேளை, என் பெற்றோர்கள் அந்த தவற்றைச் செய்யவில்லை. கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து படிக்க ஊக்கமளித்து கல்லூரி வரை அழைத்தும் வந்து விட்டார்கள்! ஆனாலும், அவர்கள் சொன்ன கல்லூரிக்கும், படிப்பிற்கும் தான் தலையாட்ட வேண்டியிருந்தது. அதுவும் எனக்குச் சாதாகமாக அமைந்தது என் அதிர்ஷ்டமே!

என்ன, வீட்டை விட்டு சிறிது காலம் ஹாஸ்டல் வாழ்க்கை வாழ வேண்டும், தனித்து என் வாழ்க்கையை நானே தீர்மானிக்க வேண்டும் என்பது அன்றைய என் இள வயது அவா. அது நடக்கவில்லை. அப்போதைய பெற்றோர்களின் பயம் போலும்! உணர்ந்து நானும் மதுரையில் இருக்கும் கல்லூரியில் படிப்பது என்ற என் முடிவையும் மாற்றிக் கொண்டேன். வேறு வழியில்லையே! 'ஆஊ' என்றால் கல்யாணம் பண்ணி வைத்து விடுவேன் என்ற மிரட்டல் வேறு.

ப்ளஸ் டூ தேர்வுகள் முடிந்து மருத்துவம், பொறியியல், விவசாயத்துறை நுழைவுத்தேர்வுகளுக்குத் தயாராக மெஜுரா கல்லூரி நடத்திய தாம்ப்ராஸ் கோச்சிங் வகுப்புக்களுக்கும் சென்று ஒரு வழியாக தேர்வும் எழுதியாயிற்று.

அம்மாவுடன் முதன் முதலில் தியாகராஜர் பொறியியல் கல்லூரிக்கு விண்ணப்ப படிவம் வாங்க சென்ற நாளில் விஸ்தாரணமான கல்லூரியின் அமைப்பும், ஆண், பெண் இணைந்து படிக்கும் சூழ்நிலையும், ஓங்கி வளர்ந்து நின்ற ஆலமரங்களும், பஸ் ஸ்டாப்பிலிருந்து நடந்து செல்லும் வழியெங்கும் கூடவே வந்த பச்சைப்பசேல் விளைநிலங்களும் நான் கண்டிராதவை. இவ்வளவு தூரம் தினமும் நடக்கணுமோ? என்னுள் எழுந்த கேள்வியுடன் ம்ம்ம்...நன்றாகத் தான் இருக்கும் என எனக்கு நானே நினைத்துக் கொண்ட வேளையில் கல்லூரியில் சேருவதற்கு முன்பே என்னை எதிர் கொண்ட சீனியர் மாணவர்கள் கேட்ட கேள்விகள் கொஞ்சம் பயமுறுத்தின. என்னை விட என் அம்மாவிற்குத் தான் பயமாகிப் போனது. படப்படப்புடன் அறிவுரைகளும் ஆரம்பமாகியது.

கல்லூரி இது தான் என்று தெரிந்த நாளிலிருந்து கல்லூரிக் கனவுகள்! அட்மிஷன் நாளன்று அப்பா, அம்மாவுடன் நானும் அக்காவும் படப்படப்புடன் பிரின்சிபால் அறை வாசலில் காத்திருந்த நேரங்களில் பல வித எண்ண ஓட்டம். நம்மை குழப்புவதற்கென்றே ஒரு கூட்டம் தான் இருக்குமே! பன்னிரெண்டாம் வகுப்பில் படித்த பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்பார்கள் என்று வேறு சொல்லி விட்டதால் பயம் கூடி விட்டது. பெயரை சொல்லிக் கூப்பிட்டவுடன் உடல் சில்லிட அறைக்குள் நுழைந்தால் பெரிய மேஜையின் முன் அன்றைய முதல்வர் டாக்டர்.மரியலூயிஸ். அவருடன் பேராசிரியர் S.R. பாலகிருஷ்ணன் என்று நினைக்கிறேன். a/c அறையில் குளிரா, நடுக்கமா...தெரியவில்லை. நடுங்கிக் கொண்டே அவர் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொன்னேனா? என் குரல் எனக்கே கேட்கவில்லை!

மார்க்சீட், நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் , இன்ன பிற படிவங்களை வாங்கிக் கொண்டு எதிலோ கையெழுத்திட்டவாறே வெல்கம் டு TCE என்று அவர் சிரித்துக் கொண்டே சொன்னவுடன், தப்பிச்சோம்டா சாமி என்று பாய்ந்து வெளியேறினேன். அடுத்து அக்காவின் அட்மிஷனும் முடிந்தது. அப்பா, அம்மாவிற்கு ஒரே ஆனந்தம்! ஆம், தன் பெண்கள் கல்லூரிக்கு அதுவும் இன்ஜினியரிங் கல்லூரிக்குச் செல்ல போகும் பெருமை அவர்களிடத்தில்! நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அம்மாவின் அறிவுரைகள். பத்திரமா போயிட்டு வரணும். யாரிடமும் வம்பு வளர்த்துக்க கூடாது. நீங்கள் இருவரும் சேர்ந்தே இருக்க வேண்டும். தனியாக எங்கும் செல்லக் கூடாது. ஐயோ, அம்மா...என்று நான் சொல்லும் வரை தொடர்ந்த அந்த அறிவுரைகளை இன்று என் மகளுக்குச் சொல்லும் பொழுது தான் என் அம்மாவின் பயமும், அக்கறையும் புரிகிறது!

வந்தே விட்டது அந்நாளும்! கல்லூரிக்குச் செல்லும் முதல் நாள். நான் சொன்னதெல்லாம் ஞாபகமிருக்குல்ல? கேட்ட அம்மாவிற்கு தலையை ஆட்டி பதிலளித்துக் கொண்டே சீக்கிரமாகவே எழுந்திருந்து, சுவாமி கும்பிட்டு, அப்பா அம்மாவிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு நானும் அக்காவும் நேரத்திற்கு மிஷன் ஆஸ்பத்திரி பஸ் ஸ்டாப்பில் கல்லூரி பஸ்சிற்காக காத்திருந்தோம். கண் முன்னே கூட்டமாக வந்த 14A பஸ் திகிலாக, இனி வருடம் முழுவதும் கல்லூரி பஸ் தான் என்று அன்றே தீர்மானிக்க வைத்தது!

அப்படி ஆரம்பித்த பயணம் இன்று இருபத்தைந்து வருடங்களைக் கடந்து விட்டிருக்கிறது! இதோ ராஜனிடமிருந்து அழைப்பிதழ். மீண்டும் கல்லூரி நினைவுகளில் மூழ்க வேண்டும். காலம் மாறி விட்டது. கடந்து வந்த பாதைகள் மாறி விட்டது. அதனால் என்ன? எனக்கென்று சில நேரம், எனக்கென்று ஓரிரு நாட்கள்...அசை போட என்றும் பசுமையாய் என் நினைவுகள் என்னுடனே பயணிக்க, நானும் தீர்மானித்து விட்டேன், கல்லூரி வெள்ளி விழா கொண்டாட்டத்திற்குச் செல்வதென...
No comments:

Post a Comment