Tuesday, June 26, 2012

ஒளியும்,ஒலியும்- 2

80 களின் ஆரம்பத்தில் கருப்பு,வெள்ளை தொலைகாட்சிப் பெட்டி அங்கொன்று இங்கொன்றுமாய் வர ஆரம்பித்தது. டிவி இருந்தால் படிப்பு கெட்டு விடும் என்று எங்கள் வீட்டில் அதை ஆரம்பத்தில் வாங்கவில்லை. நாங்கள் இருக்கும் தெருவில் பக்கத்து வீட்டிலும் முக்கு வீட்டிலும் கருப்பு வெள்ளை டிவி வாங்கினார்கள். தெருவே அதை ஆச்சரியத்துடன் பார்த்தது. கீழவாசல் அருகில் பல டிவி கடைகள் திறக்கப்பட்டன. டிவியை விட ஆன்டெனாக்கள் பார்ப்பதற்கு மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வழியாக பக்கத்து வீட்டில் டிவி செட் செய்தவுடன், மழலைப் பட்டாளங்களும் பெரியவர்களும் அந்த வீட்டில் கூடி விட்டனர். சிறிலங்காவிலிருந்து வரும் ரூபவாகினி என்று நினைக்கிறேன் அந்த சேனலும், டெல்லி தூர்தர்ஷனும் மட்டும் தெரியும். 'ஆயுபுவான்' என்று வணக்கத்துடன் நிகழ்ச்சிகள் ஆரம்பிப்பார்கள். நிறைய தமிழ் படங்கள் போடுவார்கள். காற்றுக்கு ஆன்டெனா ஆடி திசை மாறி விட்டால் பெரும் பிரச்சினை தான். ஒருவர் டிவி பக்கத்திலும், ஒருவர் ஆன்டெனா திசை திருப்புவதிலும் ஒருவர் இவர்களுக்கு நடுவில் நின்று கொண்டு உரத்த குரலில், அந்தப் பக்கம் திருப்பு, இந்தப் பக்கம் திருப்பு என்று எந்த பக்கம் என்று கடைசி வரை சொல்லாமல் டிவியில் படம் தெரியும் வரை படாதபாடு படுத்தி விட்டு ஒரு வழியாக படம் பார்த்து முடிப்போம்.








கலர் டிவி வந்த பிறகு கருப்பு வெள்ளை டிவிக்களின் மவுசு குறைந்து விலையும் குறைந்தது. பலர் கருப்பு வெள்ளை டிவி வாங்கினார்கள். கலர் டிவியில் படங்கள், செய்திகள் பார்ப்பது மிகவும் நன்றாக இருந்தது. அழகழகான டிவி விளம்பரங்கள் வர ஆரம்பித்தது. ஒனிடா டிவி ஐஸ்வர்யா ராய் உலக அழகியாவதற்கு முன் வந்த டிவி விளம்பரங்கள் எல்லாம் மிகவும் பிரபலம்.

டிவி வந்த சில வருடங்களில் வீடியோ டெக் என்று வீடியோ காசெட்ஸ் போட்டு படம் பார்க்கும் வசதியும் வந்தது. கீழ வாசலில் பல கடைகளில் டிவி, வீடியோ டெக் , காசெட்ஸ் வாடகைக்கு கிடைக்கும். டவுன் ஹால் ரோடிலும் புற்றீசல் போல நிறைய கடைகள் வந்தது. கலர் டிவியும் பிரபலமாகிவிட்டது. ஆசை யாரை விட்டது. நாங்களும் அப்பாவை நச்சரித்து கலர் டிவி, வீடியோ டெக் இரண்டு நாட்களுக்கு வாடகைக்கு எடுத்தோம். ஆட்டோவில் அது வந்து சேர்ந்தவுடன் வீட்டில் உள் ரூமில் அதை வைத்து விட்டு பாட்டி, மாமாக்கள், மாமிக்கள், பெரியப்பா, பெரியம்மா மற்றும் அவர்களுடைய குழந்தைகள் என்று குடும்பமே ஒன்றாக உட்கார்ந்து கொண்டு கடமையாக பல படங்களை பார்த்து முடித்தோம். நடுநடுவில் அம்மா மட்டும் எழுந்து எல்லோருக்கும் காபி, டீ, நொறுக்கு தீனிகள் கொடுத்துக் கொண்டிருந்தார். பெரியவர்கள் எல்லோரும் ஒரு இரவு முழுவதும் பார்த்து விட்டு,காலை உணவு முடித்து அவரவர் வீட்டுக்குச் சென்று விட்டனர். குழந்தைகள் எல்லோரும் மீண்டும் டிவி முன் கடமையாக உட்கார்ந்து கொண்டு அடுத்த ரவுண்டு படங்களை பார்க்க ஆரம்பித்து விட்டோம். இதைத் தவிர, ஜன்னல், கதவு பக்கத்திலிருந்து தெருவில் இருப்பவர்களும் பார்த்து கொண்டிருந்தனர். திருடர் பயம் அவ்வளவாக இல்லாத காலம்.



1987 இல் ஒரு வழியாக அப்பா, அம்மாவை சமாதானம் செய்து நன்றாக படிப்போம் என்ற வாக்குறுதிக்குப் பின்னர் கலர் டிவி வாங்கி விட்டோம். சென்னை, டெல்லி தூர்தர்ஷன்கள் பல நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்பிக் கொண்டிருந்தது. ஹிந்தி புரியா விட்டாலும் 'புனியாத்'  சீரியலை விடாமல் பார்த்தது, ஒளியும் ஒலியும், தமிழ் நாடகங்கள் , ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7.30 மணி முதல் ஒளிபரப்பாகும் ஹிந்தி பாடல்களில்(ரங்கோலி) இருந்து, Spiderman, Alice in Wonderland, மகாபாரதம், ராமாயணம் , மதியம் ஒரு மணிக்கு ஒளிபரப்பாகும் மாநில மொழி திரைப்படங்களையும் ஒன்று விடாமல் பார்த்தது வரை நன்றாக நினைவில் இருக்கிறது. இளமையான துடிப்பான ஷாருக்கான் வந்த சீரியலும் பத்து மணிக்கு மேல் ஒளிப்பரப்பாகும் கங்கையில் rafting , காசி, இமயமலை ட்ரெக்கிங், நேபாள், என்று நாம் போக முடியாத இடங்களில்(அந்த காலத்தில்) எடுத்த நிகழ்ச்சிகளை குடும்பத்தோடு கண்டு கழித்திருக்கிறோம்.

பிரணாய் ராயின் உலகச் செய்திகளும் நன்கு வரவேற்கப்பட்டது. அவருடைய தேர்தல் அலசல் அந்த காலத்தில் அவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. கிரிக்கெட் வீட்டுக்குளே வந்து அனைவரையும் பைத்தியமாக்கியது. உலக கிரிக்கெட் தொடரில் கபில்தேவ் கோப்பையை பிடித்துக் கொண்டு முத்தமிட்டதை வீட்டிலிருந்தும், தெருக்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்டுகளித்தார்கள். ரவி சாஸ்திரி, கவாஸ்கர், திலிப் வெங்க்சர்கார், ஸ்ரீகாந்த், வாசிம் அக்ரம், இம்ரான் கான், விவியன் ரிச்சர்ட், லாரா என்று எல்லோரையும் டிவி வழியே பார்த்து மகிழ்ந்தார்கள். இதைத் தவிர, டென்னிஸ், ஆஸ்கார் என்று பல உலக நிகழ்ச்சிகளையும் பார்க்க முடிந்தது. நிறைய க்ரைம் தொடர்களும் வந்தது. சித்தார்த்த பாஸுவின் வினாடி வினா நிகழ்ச்சி மிகவும் அருமையாக இருக்கும். அதற்கு பிறகு, அதைப் போல் பல நிகழ்ச்சிகள் வந்து போயின. அடிக்கடி சேனலை மாற்றும் அவசியம் அப்போதெல்லாம் இருக்கவில்லை! இது வரை தரமான விதத்தில் தான் எல்லா டிவி நிகழ்ச்சிகளும் இருந்தன. ஆனால், இப்போது கையில் ரிமோட்டை வைத்துக்கொண்டு நிமிடத்திற்கு ஒரு முறை மாற்றும் வகையில் விளம்பரங்களும், நிகழ்ச்சிகளும், சேனல்களும் வந்து விட்டன.

பல செய்தி வாசிப்பாளர்கள் தங்கள் உச்சரிப்பாலும், கவர்ச்சியினாலும் மக்களிடையே நல்ல ஆதரவை பெற்றார்கள். சென்னை தொலைக்காட்சியில் ஷோபனா ரவி தன்னுடைய ஏற்ற இறக்க குரலினாலும், இடுங்கிய கண்களினால் பார்க்கும் மயக்க பார்வையாலும் மிகவும் பிரபலமானார். இவரைத் தவிர ,சந்தியா ராஜகோபால், பாத்திமா பாபு இன்னும் பலர்.



ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மா சுவையாக சமைத்த கறி உணவு சாப்பிட்டுக் கொண்டே , மகாபாரதம்/ ராமாயணம் பார்த்தது அநேகமாக எல்லோர் வீட்டிலும் நடந்த ஒரு நிகழ்ச்சி தான். தெருவில் அந்த சமயத்தில் ஒரு ஈ காக்கா கூட இருக்காது. ஜன நடமாட்டம் குறைந்த இந்த சமயத்தில் அடிக்கடி திருட்டும், வழிப்பறி கொள்ளையும் நடக்க ஆரம்பித்தது.

முதன் முதலில் வந்த டிவிக்கள் எல்லாம் கனம் அதிகமாகவும், இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டவையாகவும் இருந்தன. இப்போதெல்லாம் LCD TV , HDTV , 3D TV எனப் பல பரிமாணங்களாகி விட்டிருக்கிறது. சுவரிலே மாட்டி விட்டு இடத்தை சேமிக்கும் வசதியும் வந்து விட்டது.



வீடியோவும் காசெட்டிலிருந்து DVD ஆகி விட்டது. காரில் போகும் போது படங்களை பார்த்துக் கொண்டே செல்ல முடிகிறது. குழந்தைகள் கையில் வைத்துக் கொண்டுப் பார்த்துக் கொண்டே போக முடிகிறது. செல்போனிலும் பார்க்க முடிகிறது!

மதுரை போன்ற இடங்களில் பொழுதுபோக்குவதற்கு வேறு வழியில்லாததால் இன்றும் டிவிக்களின் ஆதிக்கம் குறையவில்லை.

Monday, June 25, 2012

பள்ளிப் பட்டமளிப்பு விழா!

சென்ற வாரம் சனிக்கிழமை அன்று என் மகளின் பள்ளிப் பட்டமளிப்பு விழா நடந்தது. வாழ்க்கையில் முதன் முதலில் நான் கண்டுகளித்த ஒன்று. காலை பத்து மணிக்கு விழா ஆரம்பமாகியது. மாணவ, மாணவியர்கள் 8.30 முதல் வரத் தொடங்கினார்கள். பெற்றோர்களும் நல்ல இருக்கையில் தங்கள் குழந்தைச்செல்வங்கள் வாங்கவிருக்கும் பட்டத்தினை அருகிலிருந்து பார்க்கும் வகையில் தங்கள் குடும்பத்தினருக்காகவும், நண்பர்களுக்காகவும் இடம் போட்டு வைத்திருந்தனர். முதல் வரிசை முழுவதும் உடல் ஊனமுற்றவர்களுக்காகவும், வயதான பெரியவர்களுக்காகவும் ஒதுக்கப்பட்டிருந்தன. மேடையில் அன்றைய சிறப்பு பேச்சாளர்களும், பள்ளி தலைமையாசிரியர் மற்றும் விழாவுக்கு அழைக்கப்பட்ட சிறப்பு விருந்தினர்களும் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டிருந்தன. பள்ளியில் வேலைப்பார்த்தவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தனியாக இருக்கைகள்.

விழா பள்ளிக்கு அருகிலிருக்கும் ஒரு கல்லூரியின் பெரிய விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. 2500 முதல் 3000 பேர் அமரும் வகையில் இருக்கைகள் இருந்தன. அரங்கத்தின் நடுவில் அனைவரும் பார்க்கும் வகையில் மாணவ, மாணவியருக்கான இருக்கைகள் போடப்பட்டிருந்தன. அரங்கம் முழுவதும் நீலநிறம் மற்றும் வெள்ளை நிற பலூன்களால், பள்ளியின் அடையாள நிறத்தால் கண்கவரும் விதத்ததில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நானும், என் மகளும் காலை 8.30 மணிக்கே ஆஜரானோம். அப்போதே கார் நிறுத்துமிடத்தில் அவ்வளவு கூட்டம். சிறப்பு பேருந்துகள் அங்கிருந்து விழா நடக்கும் இடத்திற்கு விடப்பட்டிருந்தது. பட்டமளிப்பு உடையணிந்த மாணவர்களும், பெற்றோர்களும் சாரை சாரையாக சென்று கொண்டிருந்தார்கள். சீருடையணிந்த போலீஸ், அவர்களுடைய கார்களும், அவசர சிகிச்சை வண்டிகளும் அரங்கத்தின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.  மாணவ, மாணவியர்கள் உள்ளே செல்லும் வழியும் மற்றவர்களுக்கான வழிகளும் திறக்கப்பட பெரியவர்கள் அனைவரும் அரங்கத்தினுள் நுழைந்து நல்ல இடத்தில் அமர்ந்து கொண்டோம். நான் என் கணவருக்கும், என் மகனுக்கும் இருக்கைகள் போட்டுக் கொண்டு உட்கார்ந்து கொண்டேன். சிறிது நேரத்தில் மகளின் தோழிகளின் பெற்றோர்களும் வந்து சேர, அவர்களும் அமர்ந்து கொண்டு அவர்களின் பெற்றோர்களுக்காக அருகினில் இருக்கைகளை கைப்பை போட்டுக் கொண்டு உட்கார்ந்து விட்டோம்.

மாணவ, மாணவியர் குழு ஒன்று அழகாக இன்னிசை வாசித்துக் கொண்டிருந்தார்கள். கூட்டமும் அதிகமாகிக் கொண்டிருந்தது. சிலர் கையில் பூங்கொத்துடன் வந்து கொண்டிருந்தார்கள். 9.30 மணியளவில் ஒரு குழு மேடையில் பாடத் துவங்கியது. எல்லாமே, எங்குமே ஆனந்தமயம். அங்கிருந்த அனைவருமே ஒரே மகிழ்ச்சி வெள்ளத்தில் இருந்தார்கள். பார்பதற்கு மிகவும் அருமையாக இருந்தது. மகிழ்ச்சியாக இருக்கும் ஒருவரைப் பார்த்தால் நமக்கும் அது தொற்றுக் கொள்ளும். அப்படித்தான் இருந்தது அந்தச்  சூழ்நிலை. நானும் கணவருக்குப் போன் போட்டு எங்கிருக்கிறார் என்று தெரிந்து கொண்டு விரைவில் விழா ஆரம்பித்து விடும் என்று சொல்லிவிட்டு நான் இருக்கும் இடத்தையும் தெரியப்படுத்தினேன். அவரும் 9.55 க்கு 'டாண்'  என்று வந்து சேர்ந்தார். பிறகு மேடைக்கு அருகில் போட்டோ எடுக்க வசதியாக இருக்கும் என்று சென்று விட்டார்.

சரியாக பத்து மணிக்கு இசை வாத்தியங்கள் முழங்க, மாணவ, மாணவியர் இரு வரிசைகளில் அழகாக அணிவகுத்து வர, அரங்கமே எழுந்து நின்று கைதட்டி அவர்களை ஆரவாரத்துடன் வரவேற்றது. மாணவிகள் அனைவரும் வெள்ளை கவுனும், தொப்பியும் அணிந்திருக்க, மாணவர்கள் அனைவரும் நீலநிற கவுனும், தொப்பியும் அணிந்திருந்து வந்து அவரவர் இருக்கையில் அமர்ந்தார்கள். அனைவரும் அழகான செந்நிற செம்பருத்திப் பூவை கவுனில் அணிந்திருந்தார்கள். அன்று 482 பேர் பட்டம் பெற்றார்கள். பள்ளியில் முதல் 5% மதிப்பெண்கள் பெற்றவர்களை முன்வரிசையில் அமர்த்தி கௌரவித்தார்கள். மிகவும் பெருமையாக இருந்தது என் மகளையும் அவள் தோழிகளையும் அங்கே பார்ப்பதற்கு. ஒரு வழியாக அனைவரும் வந்த பிறகு தலைமைஆசிரியர் அனைவரையும் வரவேற்று மாணவர்களை உட்காருமாறு கேட்டுக் கொண்டார். அந்த வருடத்தின் மாணவர்களின் சாதனையைப்  பெருமையுடன் கூறினார். தேசியகீதத்தை அந்த பள்ளியில் பயின்ற அகாடமி அவார்ட் வின்னர் தன் காந்தக்குரலால் பாடி நிகழ்ச்சிகளை  ஆரம்பித்தார்.  அன்றைய சிறப்பு விருந்தினர்-அந்தப் பள்ளியில் படித்து ஆசிரியராக வேலை பார்த்தவர், தன் அனுபவங்களையும், மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டிய வாழ்க்கையைப் பற்றியும் நகைச்சுவைப்பட அருமையாக பேசினார்.

பள்ளிப்படிப்பிற்குப் பிறகு நாட்டுக்காக ராணுவத்தில் சேரவிருக்கும் மாணவ, மாணவிகளும் கௌரவிக்கப்பாட்டர்கள்.

மாணவ, மாணவியர்களின் பெயர்கள் அழைக்கப்பட ஒவ்வொருவரும் அவர்களுடைய டிப்ளமோவை வாங்கிக் கொண்டு தலைமை ஆசிரியர், சிறப்பு விருந்தினர், வகுப்பு ஆசிரியர்களிடம் கைக்குலுக்கி விட்டு, மேடையிலிருந்து இறங்கிக் கொள்ள, அங்கேயே ஒருவர் அவர்களை அந்த பட்டமளிப்பு ஆடையில் டிப்ளமோவுடன் ஒரு புகைப்படம் க்ளிக் செய்து கொண்டிருந்தார். பெற்றோர்களும், தங்களிடமிருந்த ஐ-போனில், ஐ-பேடில், காமெராவில் புகைப்படம் எடுத்து தள்ளிக் கொண்டிருந்தார்கள். தங்கள் குழந்தைகளின் பெயரைக் கேட்டவுடன் உணர்ச்சிப் பொங்க விசிலடித்தும், கூக்குரல் கொடுத்தும் ரகளை செய்தார்கள். சிலர் அரங்கம் அதிர மணி அடித்தும் ஹார்ன் ஒலி எழுப்பியும் ஆர்பாட்டம் செய்தார்கள். விழா நடுவில் மாணவ, மாணவியர்களும், கடற்கரைப்பந்து( beach ball ) ஆடியும் கலகலப்பாக்க அனைவரும் பட்டத்தை வாங்கிய பின் தலைமை ஆசிரியர் வாழ்த்த, மாணவர்களும் தங்கள் தொப்பியை தூக்கிப் போட,  அரங்கம் கலையத் தொடங்கியது.

 அரங்கத்திற்கு வெளியே அனைவரும் தத்தம் நண்பர்களுடன் படங்கள் எடுத்துக் கொண்டு விடைபெற்றோம். பல மாணவ, மாணவியர்களின் வீட்டில் விருந்துகளும், விழாக்களுமாய் அன்றைய பொழுது இனிதே கழிந்தது.

நான் பள்ளிப்படிப்பு முடித்த பொழுது அடுத்து கல்லூரி நுழைவுத் தேர்வுக்கு என்னை தயார் செய்யும் வகையில் அந்த தேர்வுக்கு படிக்க ஆரம்பித்து விட்டேன்.  இங்கோ, பள்ளிப்படிப்பு முடிக்கும் பொழுது அவர்கள் எந்த கல்லூரியில் சேர்ந்து என்ன படிக்கப் போகிறார்கள் படிக்கவில்லை என்றால் எங்கு வேலைக்குப் போகப் போகிறார்கள் அல்லது சிறிது காலம் இடைவெளி விட்டு படிக்கப் போகிறார்களா என்று ஒரு தெளிந்த நிலையில் இருக்கிறார்கள்!

ம்ம்ம்ம்....




Wednesday, June 20, 2012

ஒலியும், ஒளியும் - 1

மதுரையில் எனக்குத் தெரிந்து 80 -களில் தொலைக்காட்சிப் பெட்டி வரும் வரை வாழ்க்கை வேறு மாதிரி இருந்தது. சாயங்கால வேளைகளில் வீட்டில் விளக்கேற்றி விட்டு பெரியவர்கள் சிறிது நேரம் வாசலில் உட்கார்ந்து கொண்டு அக்கம் பக்கதவர்களுடன் பேசிக்கொண்டிருப்பார்கள். குழந்தைகள் அனைவரும் ஓடியாடி விளையாடிக் கொண்டிருப்பார்கள். தெருவில் வேக வைத்த கடலை, கருப்பு உளுந்து (உடித் - சௌராஷ்டிராவில்), பஞ்சு மிட்டாய், இன்னும் பல நொறுக்குத் தீனி விற்பவர்கள் விற்றுக் கொண்டிருப்பார்கள். மெல்ல பொழுது சாயும் நேரத்தில் குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்ய சென்றவுடன் அம்மாக்களும் வீட்டுக்குள் சென்று விடுவார்கள். வேலை முடிந்து அப்பாக்களும் வரும் நேரம் அது. சில வீடுகளில் அப்பாக்கள் வெளியே செல்லும் நேரமும் கூட! பாட்டிக்கள் மட்டும் யாருடனவாவது பேசிக் கொண்டிருப்பார்கள். வாழ்க்கைச் சக்கரம் மெதுவாக நிதானமாக போய் கொண்டிருந்தது. (இன்னும் கூட மதுரையில் ஒரு சில இடங்களில்!!! )

ஆல் இந்தியா ரேடியோவில் பகல் வேலையில் பல நல்ல நிகழ்ச்சிகளை ஒலி பரப்புவார்கள். மிக நல்ல கருத்துகளையும், புதிர்களையும் நடுநடுவே சொல்வார்கள். இரவுகளில், இனிமையான, அருமையான பாடல்கள் ஒலிப்பரப்பாகும். எல்லா விளக்குகளையும் அணைத்து விட்டு, அந்த அமைதியானச் சூழலில் TMS /AM ராஜா/P .சுசீலா/PBSrinivas/SPB.... பாடிய பழைய பாடல்களை கேட்க ஆனந்தமாக இருக்கும். வணிக விளம்பரம் இல்லாமல், முழுப் பாடல்களையும் கேட்க முடிந்த காலமது! இலங்கை வானொலியும் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளை வழங்கிக் கொண்டிருந்தது. அப்துல் ஹமீது , கே.எஸ். ராஜாவின் காந்தக் குரலால் கவரப்பட்டவர்கள் பலர். பல நிகழ்ச்சிகளையும் நிறைய தகவல்களுடன் கேட்பவர் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் தொகுத்து வழங்கியவர்கள்.

இந்த தலைமுறை தொகுப்பாளர்கள் இவர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் .

எங்கள் வீட்டு வானொலி பெட்டி மிகவும் பெரியதாக இருந்தது. (அநேகமாக எல்லோர் வீட்டிலும் தான்) அதை on பண்ணியவுடன், நிதானமாக(?) ஒரு பல்பு உள்ளே எரியும். அதைத் தொடர்ந்து சிறிய சத்தத்துடன் வேண்டுமென்ற அலை வரிசையில் பாட்டு கேட்கலாம். உள்ளே இருக்கும் vaccum tubes எல்லாம் வெளியே தெரியும். knobs எல்லாம் பெரியதாக இருக்கும். பார்ப்பதற்கே பிரம்மாண்டமாக இருக்கும் அந்த வானொலி பெட்டிகள் எல்லாம் எடையும் அதிகம். மின் இணைப்பில் மட்டுமே வேலை செய்யும். வெளியே ஏதாவது மோட்டார் பைக் சென்றாலோ அல்லது வேறு அதிர்வு ஏற்பட்டாலோ , ரேடியோ கொர்ர் ர் ர் ர் ...... என்று சத்தம் போடும்L

அப்போதெல்லாம் மர்பி ரேடியோ மிகவும் பிரபலம். அந்த விளம்பரத்தில் வாயில் விரலை வைத்து இருக்கும் கொழுகொழு குழந்தை படம் அதை விடவும் பிரபலம்.

காலையில் அம்மா எழுந்து ஸ்கந்த ஷஷ்டி கவசம் , சுப்ரபாதம் போன்ற பாடல்களை டேப் ரெக்கார்டரில் போட்டுக் கேட்டுக் கொண்டே வேலைகளை பார்த்துக் கொண்டிருப்பார். அதற்கென்று ஒரு சிறிய டேப் ரெக்கார்டர் வைத்திருந்தார். நடு நடுவே பாட்டு நிற்கும் பொழுது, கேசட்டை வெளியே எடுத்து ஒரு பேனாவோ , பென்சிலோ வைத்து மெதுவாக அந்த துளையில் வைத்து சுற்றிச் சரி செய்வார்கள். விவரம் தெரியாத குழந்தைகள் டேப் மேக்னடிக் ரீலை முழுவதுமாக உருவி அலம்பல் செய்வதும் உண்டு.
சில சமயங்களில், மேக்னடிக் ரீல் உள்ளே மாட்டிக்கொண்டு 'கிர்' என்ற சத்தத்துடன் நின்று போவதும் உண்டு.

பல (தமிழ்/ஹிந்தி ) சினிமா பாடல் காசெட்டுகள், சுவாமி பாட்டு காசெட்டுகள், ஐயப்பன் சீசனில் யேசுதாஸ், மதுரை சோமுவின் பாடல்கள், கார்த்திகை மாதத்தில் TMS - இன் உள்ளம் உருக வைக்கும் முருகன் பாடல்கள்,சினிமா வசனங்கள் உள்ள காசெட்டுகள், சௌராஷ்டிரா நாடகங்கள் , நாங்கள் பேசி அதை ரெக்கார்ட் செய்த காசெட்டுகள் என்று பலவும் எங்களிடம் இருந்தன. பட்டிக்காடா பட்டணமா , தில்லானா மோகனம்பாள், திருவிளையாடல், திரிசூலம் மற்றும் பல சிரிப்புக் காட்சி வசனங்கள் மனப்பாடம் செய்யும் அளவுக்கு கேட்டிருக்கிறோம். நம் குழந்தைகளுக்கு அந்த டேப் ரெக்கார்டர் எல்லாம் ஏதோ museum ஒன்றில் தான் காட்ட முடியும் இப்பொழுது. !!!

இதற்கு முன் கிராமபோன் இருந்தது. அதைச் சுற்ற சுற்ற , ஊசி முனையை கவனமாக இசைத்தட்டின் மேல் வைத்தால் பாட்டு கேட்கும். ஸ்பீக்கர் மிகவும் பெரியதாகவும், அழகாகவும் இருக்கும். இன்னும் சிலர், அதை வைத்திருக்கிறார்கள். இசைத்தட்டுக்கள் சிறிய மற்றும் பெரிய வடிவங்களில் கிடைக்கும்.

பிறகு கையில் வசதியாக பிடித்துக் கொள்ளும் வகையில் மிகச் சிறிய வானொலி பெட்டி வந்தது. அதை எங்கு வேண்டுமென்றாலும் எடுத்துச் செல்லலாம். மிகவும் வசதியாக இருந்தது. ஆர்வ மிகுதியால் உள்ளே என்ன இருக்கிறது என்று திறந்து பார்த்து விட்டு (அழகாக சிறியதாக இருந்த diode , capacitors ), மூட தெரியாமல் அடி வாங்கிய அனுபவமும் உண்டு. ஒரு நல்ல curious / இன்ஜினியரிங் mind-ஐ யாருமே புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆதங்கம் அப்போதிருந்தே இருந்தது😉

பள்ளி, கல்லூரி நாட்களில் மாணவர்கள் காதோடு காதாக கிரிக்கெட் ஸ்கோர் கேட்கவும் , கமெண்டரி கேட்கவும் வசதியாக இருந்தது. அதுதான், அப்போதைய பேஷன்! பிறகு வாக்மேன் என்று ஒன்று வந்தது.

இன்றோ, தொலை பேசியிலே பாட்டுக் கேட்கும் வசதியும் வந்து விட்டதால், ரேடியோ ஒரு அவசியமற்ற சாதனமாகி விட்டது பலருக்கு. இன்றும் பாட்டுக் கேட்டு கொண்டே வீட்டு வேலைகள் செய்வதிலும் ஒரு சுகம் இருக்கத் தான் செய்கிறதுJ

உலகம் சுருங்குகிறதோ இல்லையோ, வானொலிப்பெட்டி சுருங்கிவிட்டது என்பது தான் உண்மை.







































பல வடிவங்களில் கைக்கு அடக்கமான சைசில் ஒலிப்பெட்டிகள் சுருங்கி விட்டன.

                                                                    


Wednesday, June 13, 2012

பள்ளிக்கூடம் திறந்தாச்சு !

இந்த மாதம் குழந்தைகளுக்கு கொண்டாட்டம் . பெற்றவர்களுக்கு, செலவுகள் அதிகமான திண்டாட்டம். ஆம், பள்ளிகள் திறந்ததினால் நண்பர்களையும், புது வகுப்பு ஆசிரியர்களையும் பார்க்கப் போகும் ஆவல், குழந்தைகளுக்கு. வகுப்பு கட்டணம் , புத்தகம், நோட்டுக்கள் இத்யாதி செலவுகள் என்று பெற்றோரின் பர்சை பதம் பார்ப்பதால் பெற்றவர்களுக்கு கவலை அளிக்கும் மாதம்.

அந்த வகுப்புக்குரிய புத்தகங்கள், தேவையான நோட்டுக்கள், பேனா, பென்சில், காம்பஸ் பாக்ஸ், அழி ரப்பர் என்று ஒரு பெரிய லிஸ்ட் போட்டுக்கொண்டு அரசமரம் முக்கிலிருக்கும் மணீஸ் ஸ்டோருக்கு அம்மாவுடன் நான், அக்கா, தங்கை மற்றும் தம்பிகள் போய் விடுவோம். அதற்கு பக்கத்திலிருக்கும் சாந்தி ஸ்டோர்சில் அவ்வளவாக கூட்டம் இருக்காது. 

முதலில் புத்தகங்கள் வாங்குவோம். எனக்கு எப்பொழுதும் புது புத்தகத்தை முகர்ந்து பார்ப்பது பிடிக்கும். அந்த ப்ரெஷ் இங்க் வாசனை நன்றாக இருக்கும். பிறகு நோட்டுக்கள், வண்ண வண்ண அட்டைகளுடன். பிரவுன்ஷீட் பேப்பர் ரோல், எல்லா நோட்டுக்களுக்கும் அட்டை போடுவதற்கு. மறக்காமல், லேபல் (பறவைகள், மலர்கள் மற்றும் பல வடிவங்களில்) , பேனா (இங்க் அல்லது பால்பாயிண்ட் ), இங்க் பாட்டில், ஸ்கெட்ச் பேனாக்கள், கேமல் காம்பஸ் பாக்ஸ் , வாசனையுள்ள அழிரப்பர் , பென்சில்கள் என்று எங்கள் எல்லோருக்கும் வாங்கிக்கொண்டு, ஜெம்ஸ்/ true nice பிஸ்கட் என்று கொறிக்க ஏதாவது ஒன்றையும் வாங்கிக்கொண்டு பெரிய தொகையை கட்டி விட்டு சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு வீட்டுக்கு வந்து சேர்வோம். சில சமயங்களில், கடைப் பையனே வீட்டுக்கு கொண்டு வந்து விடுவார்.

அப்பா வந்தவுடன், நோட்டுக்களுக்கு அட்டை போட பிரவுன் ஷீட் , லேபல் , பேனா, கோந்து/ சாதம் சகிதம் உட்கார்ந்து விடுவோம். இதெல்லாம் , குடும்பமாக செய்வதால் ஒரு குதூகலம் எப்போதும் இருக்கும். என் நோட்டுக்கு தான் முதலில் அட்டை போட வேண்டும் , இல்லை என்னுடையது தான் என்று எல்லோரும் சண்டை போட்டுகொண்டிருக்கும் பொழுது, போடவா வேண்டாமா என்ற அப்பாவின் மிரட்டலுக்கு பயந்து , அமைதியாக அவரவர் நோட்டுக்கள் வரும் வரை காத்திருப்போம். நோட்டை பிரவுன் ஷீட் மேல் வைத்து, அழகாக மடித்து, முனைகளை வெட்டி உள்ளே செருகி விட, சில நிமிடத்தில் பளிச்சென்று, நோட்டுக்கள் அழகாகிவிடும். பிறகு, எங்களுக்கு பிடித்த லேபல்களுடன், காத்திருப்போம். ஒவ்வொருவருடைய நோட்டிலும் லேபல்கள் ஒட்டி, சிறிது காய்ந்த பிறகு , பெயர், வகுப்பு, பாடம் எல்லாம் எழுதி முடித்த பிறகு , அந்த வருடம் வாங்கிய புதிய புத்தகப் பையில் எல்லாவற்றையும் நேர்த்தியாக அடுக்கி, ஒரு முறை தோளில் போட்டு அழகு பார்த்த திருப்தியுடன் அதை ஓரத்தில் வைத்து விடுவோம்.

புத்தகங்களை அம்மா பைண்டிங் பண்ண கொடுத்து விடுவார். அந்த பைண்டிங் பிரஸ் போக எனக்கு மிகவும் பிடிக்கும்.  அங்கு இருக்கும் வினோதமான மெசினும் இங்க் வாசனையும் ... ஒவ்வொரு பக்கமாக அவர்கள் அந்த மெசினில் வைத்து லாவகமாக வெளியே எடுத்துப் போட மறுபக்கம் பைண்டிங் வேலையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கும். அவர்களுக்கு பணம் கட்டிவிட்டு புத்தகத்தின் மேலிருக்கும் optical illusion அட்டையை பர்ர்த்துக் கொண்டே வீடு வரும் வரை சுற்ற விட்டு வழியில் தெரிந்த நண்பர்களிடமும் காண்பித்து விட்டு புத்தகப் பையில் வைத்து அடுத்த நாள் பள்ளிக்குச் சென்று எல்லோரிடமும் காண்பிக்க வேண்டும் என்ற சுகமான நினைவுடன் அந்த நாள் இனிதே முடியும்.

இன்றும் கூட என் குழந்தைகளுக்குப் பள்ளி திறப்பதற்கு முன் தேவையானவைகளை வாங்க கடைகளுக்கு போகும் பொழுது  அதே குதூகலத்துடன் நானும் என் மகளும் செல்கிறோம்!

மதுரை சித்திரைத் திருவிழா



மதுரையில் எல்லா மாதங்களுமே விசேஷ மாதங்கள் தான். ஒவ்வொன்றையும் என் சிறு வயதில் குடும்பத்துடன் அனுபவித்த நாட்களை அசை போட்டு கொண்டிருக்கிறேன்.

சித்திரை - மதுரையே திருவிழா கோலம் கண்டிருக்கும் நேரமிது. மீனாக்ஷி அம்மன் ஒவ்வொரு இரவும் ( திருவிழா முடியும் வரை ) ஒரு அலங்காரத்தில் பவனி வருவது என்ன? அதை குடும்பத்தோடு மக்கள் கூட்டம் கூட்டமாக பார்க்க போவதென்ன? கலர் மிட்டாய்(வாயெல்லாம் சிவக்கும் ஜவ்வு மிட்டாய்) , வித விதமான பலூன்கள் (ஆப்பிள் பலூன், ஆரஞ்சு பலூன்), வாட்ச் மிட்டாய்( அந்த பொம்மை கையை மடித்து எழுப்பும் ஜல் ஜல் ஒலி என்ன) , மாங்கா, வெள்ளரிக்காய், இளநீர் (மீது காரபொடி தடவி விற்பார்கள், ம்ம்ம்ம், தேங்காய் கொப்பரையில் எண்ணெயில் வறுத்த கடுகை போட்டு கரண்டியால் பொடி செய்து நறுக்கிய மாங்கையைப் போட்டுத் தருவார்கள். என் அக்காவிற்கு மிகவும் பிடித்தது :) ) இன்னும் என்னென்னவோ தின்பண்டங்கள் விற்பவர்கள் என்று சொல்லி கொண்டே போகலாம்.

மீனாக்ஷி அம்மன் திருக்கல்யாணமும் அன்று இரவு பூப்பல்லக்கும், அடுத்த நாள் தேரோட்டமும் இன்றும் பசுமையாய் என் நினைவில் உள்ளது. சித்திரைத்  திருவிழாவிற்கு முதல் நாளிலிருந்தே ஹனுமான், கருடன் இன்னும் பல வேஷம் போட்டு தண்ணீரைப் பீய்ச்சிக்  கொண்டே குழந்தைகள் புடை சூழ கோமாளிகள் வருவதென்ன, அழகர் ஆற்றில் இறங்கும் நாளன்று அதிகாலையிலேயே எல்லோரும் எழுந்து குளித்து விட்டு புதுத்துணி உடுத்தி, சீவி சிங்காரித்து கொண்டு வீட்டில் பித்தளை சொம்பை நன்கு 'பளபள'வென விளக்கி, நாமம் போட்டு துளசி அல்லது பூ மாலை கட்டி, சொம்பு நிறைய நாட்டுசக்கரை மற்றும் பொடித்த ஏலக்காய் போட்டு வாழை இலையால் மூடி, சூடம் தீப்பெட்டி எடுத்து கொண்டு வைகைக்கு ஓடுவதென்ன ??

பெருமாளைப் பார்த்தவுடன் அவசர அவசரமாக சூடம் கொளுத்தி காற்றில் அணையாமல் கோவிந்தா, கோவிந்தா கோஷத்தோடு சேவிப்பதென்ன, சர்க்கரையை அங்கு உள்ளவர்களுக்கு கொஞ்சம் கொடுத்து விட்டு அவர்கள் சர்க்கரையும் கொஞ்சம் வாங்கிக் கொண்டு சிநேக புன்னகையுடனும், பெருமாளைப் பார்த்த திருப்தியுடனும், ஓசியாக கிடைக்கும் விசிறி , தொன்னை வெண் பொங்கல், சக்கரைப் பொங்கல் வாங்கி அங்கேயே ஒரு பந்தலில் உட்கார்ந்து சாபிடுவது என்ன, சிறிது இளைப்பாறி விட்டு ஸ்டேட் ஐஸ்கிரீம் சாப்பிட்டு விட்டு ஆட்டோ/ரிக்க்ஷா பிடித்து வீட்டுக்கு திரும்பி சுற்றம் அனைவருக்கும் சர்க்கரை கொடுத்து விட்டு அன்று இரவு நடக்கும் தசாவதார அலங்காரத்தை எங்கு போய் பார்க்கலாம் என்று யோசித்து அதற்கும் நடையை கட்டுவதென்ன .. இதெல்லாம் கனவாகி விட்டது இப்போது எனக்கு.

அழகர் திரும்பி மலை ஏறும்போது பொதுவாக எங்கள் இனத்தவர்கள் (சௌரஷ்ட்ரா)அழகர் கோவில் போகும் பஸ் பிடித்து , புளியோதரை, தயிர் சாதம், ஸ்வீட் சேமியா/பன் ஹல்வா, சுண்டல், கடலை, காரசேவு, முறுக்கு, அதிரசம் , இன்ன பிற நொறுக்கு தீனிகளை எடுத்து கொண்டு, புதூர்/மூன்று மாவடியில் இறங்கி , கலெக்டர் பங்களா பக்கம் நிழல் இருக்கும் இடத்தில பெட்ஷீட் விரித்து மற்ற நண்பர்கள்/ உறவினர்களுக்காக காத்திருந்து அவர்கள் வந்தவுடன் சாப்பிடுவதென்ன!

அன்று முழுவதுமே அங்கேயே உண்டு இளைப்பாறி வாடிய முகத்துடன் திரும்பியதெல்லாம் ...

மீண்டும் அந்த காலத்துக்குப் போக துடிக்கும் மனது.. மிஸ்ஸிங் மதுரை வெரி மச்😑

கொலம்பஸ், கொலம்பஸ் விட்டாச்சு லீவு...

பள்ளியில் படிக்கும் பொழுது அந்த கடைசி நாள் பரீட்சை முடிந்தவுடன் மனதில் பிறக்கும் சந்தோஷத்திற்கு அளவே இருக்காது. வீட்டிற்கு வந்தவுடன் புத்தகப் பையை ஓரமாக வைத்து விட்டு, நன்றாக சாப்பிட்டுத் தூங்கினால் சில சமயங்களில் அடுத்த நாள் மதியம் தான் எந்திரிப்போம்.(நான், என் அக்கா, தங்கை , தம்பிகளும் தான் ). லீவு விட்டவுடன், எங்கே யார் யார் வீட்டுக்கு எப்போது போகப்போகிறோம் என்று பிளான் போட ஆரம்பித்து விடுவோம்.

முதலில் பாட்டி வீட்டுக்கு ஒரு நாள் விசிட். நன்றாக மட்டன் கறிக் குழம்பு, சுக்கா வறுவல்/ பிரியாணி சாப்பிட்டு விட்டு பக்கத்திலிருக்கும் தியேட்டர்ல் ஒரு மதிய ஷோ பார்த்து விட்டு, இடைவேளையில் ஐஸ் கிரீம், முறுக்கு, கடலை மிட்டாய் என நொறுக்கி விட்டு, வீட்டுக்கு வந்து சூடாக காபி சாப்பிட சுகமாக இருக்கும். பாட்டி வீடு தென்னோலைகார தெருவில் இருந்தது. ஞாயிற்று கிழமைகளில் தெருவில் ஒரு ஈ, காக்கா கூட இருக்காது. அங்கு ரிக்க்ஷா வாடகைக்கு விடுபவர் வீட்டு முன் நின்று கொன்றுகொண்டிருக்கும் ரிக்க்ஷாவில் ஏறி கொஞ்ச நேரம் ரிக்க்ஷா ஓட்டுவதும், பெல் அடித்தவுடன் வாடகைக்கு விடுபவர் எங்களை விரட்டி அடிப்பதும் என்று கொஞ்சம் (??) கலாட்டா செய்ததும் சுகம். முதலில் மூன்று சக்கர வண்டி பழகிய புதிதில், அதை வாடகைக்கு எடுத்துத் தெருவை சுற்றி சுற்றி வந்ததும், நேரமாகி விட்டதே , திரும்பக் கொண்டு போய் கொடுக்கணுமே என்று வேக வேகமாக போனதும் இன்றும் நினைவில்.

மாலை நேரத்தில் சூடான போளியல், சக்கரை வடை (மிகவும் பிரபலமானது) நெய் வழிய , வாயெல்லாம் எண்ணெய் பிசுக்குடன் சாப்பிட்டதும் அலாதி சுகம். பிறகு பாட்டியோ, பெரியம்மோவோ மல்லிகை பூவுடன் kattiya மனோரஞ்சிதம் (கெலா பூல்) /பிச்சிப் பூ/முல்லை பூ/ கனகாம்பரம் வாங்கி வருவார்கள். முகம் கழுவி , பூச்சூடி , இரவு உணவுக்கு ரெடி ஆகி விடுவோம். இரவு புளியோதரை(அம்பட் பாத் ), சுண்டல்(கச்சனோ ) , பன் ஹல்வா/சேமியா சாப்பிட்டுவிட்டு, ஒரு தூக்கு சட்டியில் அப்பாவுக்கும், பாட்டிக்கும் எடுத்து கொண்டு, ரிக்க்ஷாவில் ஏறி மீண்டும் க்ருஷ்ணாபுரத்திற்க்கு(அங்கு தான் எங்கள் வீடு ஆரம்பத்தில் இருந்தது) பயணம்.

 எட்டாம் வகுப்பில் படித்து கொண்டிருக்கும் பொழுது, பெரிய மாமா S.S.காலனியில் வீடு வாங்கி போயிருந்தார். அங்கு போவதென்றால், ஆரப்பாளையம்/அரசரடி பஸ் பிடித்து போக வேண்டும். அப்போதெல்லாம் எங்கு சென்றாலும் பஸ் பயணம் , மிகவும் அனுபவித்துச் சென்றோம். நாங்கள் போகும் பொழுது சில சமயம் பாட்டியும், பெரியம்மா குடும்பமும் (அவருக்கு 5 பெண்கள், அவர்கள் எங்களுக்கு எல்லாம் மூத்தவர்கள், 2 பையன்கள் ), இன்னொரு பெரியம்மா, அவர் பெண்( கொஞ்சம் சீனியர்), இரண்டாவது மாமா (அவருக்கு 1 பெண், 2 பையன்கள்) என்று ஒரு பெரிய குரூப் செல்வோம். மாமியும், நாங்கள் வருவதை முன் கூட்டியே தெரிந்து, நன்றாக சமைத்து வைத்திருப்பார். போனவுடன் ரஸ்னா போட்டு குடித்து விட்டு, சிறிது அரட்டை. பெரிய மாமாவிற்கு நான்கு பெண்கள். சில சமயம், பெரியவர்கள் தாயம் ஆட ஆரம்பித்து விடுவார்கள். வீடு இரண்டுபட்டு போகும். நாங்கள் சுற்றி நின்றுகொண்டு கத்தி ஆர்ப்பாட்டம் செய்வோம்.(அப்போதுதான் டிவி கிடையாதே). காசு வைத்து விளையாடுவார்கள். என் பெரிய மாமா எங்களை சத்தம் போடாதீர்கள் என்று சொன்னாலும் அந்த கடைசி நிமிட ஒன்னு போட்டு யார் ஜெயிக்க போகிறார்கள் என்பதை நகம் கடித்து கொண்டே பார்த்ததும், கத்தியதும் சுகம் சுகம் சுகம். அங்கேயே நாங்கள் ஒரு வாரம் வரை தங்கி இருந்து பக்கத்திலிருக்கும் குரு, வெள்ளைகண்ணு , மிட்லேன்ட் , நடராஜ் தியேட்டர்க ளில், நல்ல படங்கள் ஓடினால் பார்த்து விட்டு மீண்டும் க்ருஷ்ணாபுரத்திற்க்கு பயணம்.

இப்போது மாமாவின் குடும்பங்கள் எங்கள் வீட்டில் :) பெரியவர்கள் வந்து விட்டுப் போய் விடுவார்கள். என் அம்மா மிகவும் அருமையாக சமைப்பார். லீவ் என்றால், அரிசி மாவில் செய்யும் கொழக்கட்டை( தொவ்ளோ), பூரி, நான்-வெஜ் ஐட்டம், கருவாட்டு குழம்பு என்று வெட்டுவோம். அவர்கள் எங்கள் வீட்டில் இருக்கும் பொழுது, பக்கத்திலிருக்கும் அலங்கார், சிந்தாமணி, அபிராமி தியேட்டர்களில் ஓடும் படங்களை பார்ப்போம்.

இப்போது இரண்டாவது மாமா வீட்டுக்கு விஜயம். அவர் அண்ணா நகரில், இருந்தபோது, நன்றாக சாப்பிட்டு விட்டு, சினி/மினி/சுகப்ரியா தியேட்டர்க்கு விஜயம்.
பெரியம்மா வீட்டுக்கு போனால் சாப்பாடு முடிந்தவுடன், மீனாக்ஷி, மது, (இன்னும் பல தியேட்டர்கள் , பெயர்கள் நினைவில்லை) ஏதாவது ஒன்றில், படம் பார்த்து விட்டு வீடு திரும்புவோம்.

பார்த்த படத்தை கூட நான்கு,ஐந்து முறை பார்த்திருக்கிறோம்(மூன்றாம் பிறை, தங்க மகன் இன்னும் பல படங்கள்).
ஆக மொத்தம், விடுமுறை சீசனில் வந்த படங்களை பார்த்து விடுவோம். வேறு பொழுதுபோக்கு என்ன மதுரையில் அப்போது ??

இது தவிர, பாட்டியுடன் அழகர் கோவில் விசிட் (அங்கு தங்கி குரங்குகளுடன் விளையாடியதை மறக்கவே முடியாது, அது ஒரு தனிக் கதை) , யானைமலை விசிட் (அங்கும் தங்கி, ஆற்றில் குளித்து, தாமரை பூவை பறித்து விளையாடி இருக்கிறோம்), திருப்பரங்குன்றம், எப்போதாவது பழனி, குற்றாலம், திருப்பதி ட்ரிப்ஸ்..

அப்போதெல்லாம் கூட்டம் இப்போது போல் இருக்காது. எங்கு சென்றாலும் பஸ்/குதிரை வண்டி/ ரிக்க்ஷாவில் பயணம்.எல்லாம் முடியும் போது, லீவும் முடிய ஆரம்பித்து விடும். அப்போதெல்லாம் லீவில், முடிந்து போன எக்ஸாம் கேள்வித்தாளிலிருந்து எல்லா கேள்விகளுக்கும், பதில் எழுதிக் கொண்டு போக வேண்டும். அந்த வேலையை ஆரம்பித்து விடுவோம். அழகாக எழுத்துப்பிழை இல்லாமல், அடித்து திருத்தாமல் எழுத மிகவும் பிடிக்கும். மற்றும் கிட்டிபுல்லு, பம்பரம், ஸ்கிப்பிங், கலர் கலர் வாட் கலர் என்று வீட்டுக்கு வீடு அந்த கலர் தேடி ஓடி விளையாடியதும், தீப்பெட்டி சைசில் படங்களை வைத்து சிங்கி பொட்டி விளையாடியதும், வெயிலில் அலைந்தால் கருப்பாகி விடுவாய் என்று அம்மா பயமுறுத்திய போதும் வெளியில் சுற்றியதும், தேன் மிட்டாய், கமர்கட் வாங்கி சாப்பிட்டதும், நடுவில், PROMOTED என்று பிரிண்ட் செய்யப்பட்ட போஸ்ட் கார்டு பார்த்தவுடன் இன்னும் குஷியாகி, எப்போது ஸ்கூல் திறக்கும் என்று எதிர்பார்க்க ஆரம்பித்ததுமாய் கோடை விடுமுறை முற்று பெறும் :)


ரயில் பயணங்களில் - 2

அந்தச் செய்தி...... 😞😞😞😞😞

காலை நேரத்தில் ரயில் தண்டவாளம் அருகே ஒதுங்க சென்ற ஒருவர் சந்தேகத்திற்கிடமாக ஒரு பொருளை தண்டவாளத்தில் பார்த்து, சரியான நேரத்தில் போலீசுக்கு தகவல் சொல்லி, அவர்களும் விரைந்து(!!!) வந்து, bomb ஒன்றை உறுதிப்படுத்தியதால், அந்த வழியாகப் போகும் அனைத்து ரயில்களும்( நான்கு ரயில்கள் என்று நினைக்கிறேன்) நிறுத்தப்பட்டன. குண்டு வைத்த நிலையிலிருந்து சிறிது உருண்டு போனதால் அன்று வெடிக்கவில்லை :) விஷயம் தெரிந்ததும் முதலில் எந்தவித அசம்பாவிதம் நடக்க விடாமல் தடுத்த அந்த முகம் தெரியாத மனிதருக்கும், கடவுளுக்கும் மனதிலே நன்றி சொல்லிக் கொண்டேன். அப்போது bomb வைத்து தண்டவாளம் தகர்ப்பது தீவிரவாதிகளால் அடிக்கடி நடந்து கொண்டிருந்தத காலம் (இன்று, இன்னும் பல இடங்களில் நடந்து கொண்டிருக்கும் கொடுமை !!!). அதற்கு சில வாரங்களுக்கு முன்பு தான் மதுரைப் பக்கத்தில் தண்டவாளம் தகர்க்கப்பட்டு கோர விபத்து நடந்து இருந்தன. பல உயிர்களும் , பல சேதாரங்களும் அன்று நிகழ்ந்தன. அப்பப்பா, எவ்வளவு கொடூரத்திலிருந்து தப்பித்திருக்கிறோம். இன்று நினைத்தாலும் 'பகீர்' என்று இருக்கிறது! ஆரம்பத்தில், யாரோ ஒருவர் 'ஏதோ குண்டு வச்சுட்டு போயிருக்காங்க, சரியா வேலை செய்யமால் போய் விட்டதால் நாமெல்லாம் தப்பித்தோம்' என்று

போகிற வாக்கில் சொல்லிக் கொண்டே போக , எல்லோர் முகமும் பீதியில்😔 அனைவரும் ஒரு வித சோகத்துடனும் இன்று நம் தலை தப்பித்து விட்டது என்ற நிம்மதியுடனும் பயணத்தைத் தொடர்ந்தோம். படங்களிலும், தினசரி செய்திகளிலும் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த நிகழ்ச்சிகளை நேரில் அனுபவிக்கும் போது தான், அதன் கொடுமையும், வலியும் புரிகிறது! அன்று தப்பித்தது எங்கள் அதிர்ஷ்டம் தான். இல்லை என்றால், இன்று இதை உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்க நான் உயிரோடு இருந்திருக்க மாட்டேன் 😓

பிறகு, பழனி மலை தாண்டி, (மனதிற்குள்ளேயே பழனி மலை முருகனுக்கு நன்றி சொல்லிக் கொண்டேன் ) கோயம்புத்தூர் சேர்ந்தவுடன் தான் அப்பாடா என்று இருந்தது. போன மச்சான் திரும்பி வந்தான் என்ற மாதிரி, போன உயிரும் அப்போதுதான் திரும்பி வந்தது. அதற்குள், நிவி கனடா வந்து சேர்ந்து விட்டோமா என்று கேட்டு மனதை லேசாக்கினாள்☺ அதற்கு அடுத்த இரு வாரங்களில் மீண்டும் சென்னைக்குச் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டு, நானும் என் கணவரும் புறப்பட மனதில் மிகுந்த பயத்துடன் ரயிலில் ஏறி அமர்ந்தோம். ஒரு போலீஸ் அதிகாரி கையில் ஒரு அட்டைபெட்டியை எடுத்துக் கொண்டு எங்கள் பக்கத்து இருக்கையில் உட்கார்ந்து பேசிக் கொண்டே வந்தார். என் கணவர் எங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை அவரிடம் சொல்லும் போது அவர் சிரித்துக் கொண்டே , இந்த பெட்டியில் இருப்பது என்ன தெரியுமா என்று கேட்டார் ?????? நாங்கள் விழித்துக் கொண்டே என்ன என்று கேட்ட பொழுது, அந்த bomb , செயலிழக்கச் செய்து சென்னையில் உள்ள ஆய்வு நிலையத்திற்கு எடுத்துச் செல்வதாகவும், பயப்பட வேண்டியதில்லை என்றும் அவர் பாட்டுக்குச் சொல்லிவிட்டு தூங்கச் சென்று விட்டார். ஆனால், எனக்கு தான் தூக்கம் போய்விட்டது. இப்போதும் , நான் ரயிலில் தூங்குவதற்கு மிகவும் சிரமப்படுவேன் :(

ஒரு வழியாக விசா, விமானப் பயணச் சீட்டு கிடைத்து கனடா புறப்படும் அந்த நாளும் வந்தது. அதுவரை கனவாகவே இருந்த நாட்டிற்கு போகப் போகிறோம் என்ற ஆசை ஒரு பக்கம், அங்கு போய் எப்படி குப்பை கொட்டப் போகிறோம் என்ற பயம் ஒரு பக்கம். அம்மா, அப்பா, அக்கா, தங்கை, தம்பிகளை விட்டு முதன் முதலில் பிரிந்து வேறு நாடு, வேறு கண்டத்திற்குப் போகிறோம் என்ற நினைப்பும், அழுகையும், தனியாக குழந்தையை எப்படி வளர்க்கப் போகிறோமோ என்ற புதிருடனும் வழியனுப்ப வந்த எல்லோரையும் பார்த்து கண்ணீரில் நனைந்த கன்னங்களுடன் விடை பெற்றுச் சென்றதையும், அந்த ரயில்வே பிளாட்பாரம் நினைவுறுத்திக் கொண்டே இருக்கும்.

குழந்தைகளுடன் USA லிருந்து மதுரை போகும் போது தம்பியுடனும், அப்பாவுடனும் ரயில் பிரயாணம். நேர மாற்றத்தினாலும்  இயல்பாகவே ரயிலில் தூங்கப் பயப்படுவதினாலும் இப்பொழுதெல்லாம் கண்ணயர்வதில்லை. என் தம்பி நல்ல டிபன் வாங்கிக் கொண்டு வந்திடுவான். குழந்தைகளும் நன்றாக சாப்பிட்டு விட்டு பேசிக் கொண்டோ, விளையாடிக் கொண்டோ, தூங்கிக்கொண்டோ மதுரை வந்து சேர்வது சுகமான பயணமாகிவிட்டது. சூடாக பால் வாங்கிச் சாப்பிட்டு விட்டு, குழந்தைகளுக்கும் டம்ளரில் ஆத்திக் கொடுக்க , மதுரைப் பயணம் ஆரம்பித்து விடும். நடந்த நிகழ்ச்சிகளை பேசிக் கொண்டே ஆடும் ரயிலில் மதுரை எப்படா வரும் என்று மூடிய ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டே வருவேன். எப்படா பொழுது விடியும் என்று காத்திருக்கும் நேரத்தில், 'சார் சூடான காப்பே.. டீ என்ற குரல்  விடிந்து விட்டதையும், சிறிது நேரத்தில், திருச்சி, பழங்கள் விற்கும் கொடை ரோடு, திண்டுக்கல் திராட்சை தோட்டம், வாழை, தென்னை, நெல்லு என்று கண் குளிர சோழவந்தான், பாத்திமா கல்லூரி, மெஜுரா கோட்ஸ் மில், வைகை பாலம், கடைசியில் மதுரை ஜங்ஷன் என்ற அறிவிப்பு பலகையையும் பார்த்தவுடன் மனதில் தோன்றும் மகிழ்ச்சியை விவரிக்கவே முடியாது.

இந்தியாவில் காலை நேரத்து வாழ்க்கையை வேடிக்கை பார்ப்பது மிகவும் ஆனந்தமாக இருக்கும். நாய்கள் அப்போது தான் விழித்தெழுந்து , காலை முன்னோக்கி வைத்து சோம்பல் முறிப்பதையும், ஆடு, மாடு, கோழிகள் இரை தேட செல்வதையும், வீட்டு வாசலில் பெண்கள் சாணி தெளித்துக் கோலமிடுவதையும்!!!! (கிராமங்களில் ), சோம்பேறித்தனமான ஆண்கள் வேப்பங்குச்சியையோ, கையினிலாலோ பல் தேய்த்துக் கொண்டிருப்பதையும், பம்ப் செட்டுகளில் குளித்துக் கொண்டிருப்பதையும்,
சொம்பில் தண்ணீர் தூக்கிக் கொண்டு போவதையும், நகரம் நெருங்க,நெருங்க ரயில்வே கிராசிங்கில், சைக்கிள், பைக், வேன், பஸ், கார், ஆட்டோ, வியாபாரம் செய்பவர்கள் என்று பலவிதமான மனிதர்களும் ரயில் போகும் வரை காத்திருப்பதையும், அந்த காலை வெயிலில் வேர்க்க விறுவிறுக்க நடமாடும் மனிதர்களையும் பார்த்துக் கொண்டே மதுரை போய்ச் சேர்வது சுகம் தானே ???



முன்பெல்லாம் குடிசை வீடுகள் ரயில் பாதையை ஒட்டி நிறைய இருக்கும். இப்போது காரை வீடுகள் அதிகம் கலர் கலராக தென்படுகிறது !அதே மாதிரி, முன்பு குடிசையுனுள் எண்ணெய் விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும். இப்போதெல்லாம் குண்டு பல்புகளோ, டியூப் லைட்டுக்களையோ பார்க்க முடிகிறது. நல்ல முன்னேற்றம் தான்!

மதுரை ஒன்றாம் நம்பர் பிளாட்பார்மில் சென்னை-மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருக்கிறது என்ற அறிவிப்பைக் கேட்டு, எங்களை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் குடும்பத்தைப் பார்த்தவுடன், வேக வேகமாக கையை ஆட்டி விட்டு, ரயில் நின்றவுடன் தாவிக் குதித்து ஓடும் போது இருக்கும் சுகமே சுகம். குழந்தைகளும் ஐங்கேர் அம்பா(பாட்டி), மாமா.. என்று கத்திக் கொண்டே அவர்களிடம் ஓடுவார்கள்! 
அவர்களும், குழந்தைகள் நன்கு வளர்ந்து விட்டார்கள் , நீ கொஞ்சம் பூசினாப் போல இருக்கே (குண்டாகிவிட்டதை ,என் மனம் புண்படாதவாறு!!) என்று பேச ஆரம்பித்து போர்ட்டரைப் பிடித்து, சாமான்களை வண்டியில் ஏற்றி, விடு ஜூட் ஒரு நல்ல ரெஸ்டாரெண்டுக்கு!!!!

என்னுடன் பயணித்த அனைவருக்கும் மிகவும் நன்றி !!!!!!

ரயில் பயணங்களில் --1

எனக்கு நினைவு தெரிந்த நாளில் முதன் முதலாக ரயிலில் ஏறியது என் பாட்டியின் காசியாத்திரை/ டெல்லி வழியனுப்பு தினத்தில் தான். அந்த சிறிய, உயர்ந்த படியில் யாரோ தூக்கி விட, கால் தடுக்கி விழுந்தால் ரயிலுக்கு அடியில் போய்விடுவோம் என்ற பயத்துடனே வேகமாக உள்ளே தாவ, கண்கள் விரிய compartment ஐ நோட்டம் விட்டு விட்டு சிக்னல் விழுந்தாச்சு எல்லோரும் இறங்குங்கள் என்றவுடன் மிகவும் கவனமாக இறங்கியதும் நன்றாக நினைவில் இருக்கிறது.

பிறகு குடும்பத்துடன் சென்னை, திருப்பதி செல்வதற்காக வைகை எக்ஸ்பிரஸ்சில் பயணம் செய்ததும் யார் ஜன்னல் பக்கத்தில் உட்காருவது என்ற சண்டை முடிந்து ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துச் சென்றதும், வண்டியிலேயே பாப்பின்ஸ், ஜெம்ஸ் ( இங்கிருக்கும் m & m போன்று இருக்கும்), biscuits , chocolates வாங்கிச் சாப்பிட்டதும், வைகை, மதுரா கோட்ஸ் , பாத்திமா காலேஜ் தாண்டியதும் காலை உணவை முடித்து கொண்டு பச்சை பசேலென வாழை, தென்னை, கரும்பு வயல்களை சோழவந்தானில் இருந்து திராட்சை தோட்டம் வரும் திண்டுக்கல் வரை ரசித்ததும், கொடைரோட்டில் பழங்கள் வாங்கியதும், ரயில் முன்னே செல்ல செல்ல வீடுகள், மரங்கள் , ஆடு , மாடுகள் பின்னோக்கி செல்வதும் சிறியதாக மறைந்து போவதும் பாலத்தின் மேல் போகும் பொழுது எழுப்பும் ஒரு 'கட கட தட தட' திகிலூட்டும் சத்தமும், காவேரி ஆற்றின் மேல் செல்லும் பொழுது ரயில் விழுந்து விட்டால் என்ன ஆகிவிடுமோ என்ற பயமும் கீழே கரை புரண்டு ஓடும் காவிரியின் அழகும் (நம்புங்கள், ஒரு காலத்தில் இருகரை தொட்டு காவிரியில் தண்ணீர் இருந்தது!!!), அங்கிருந்து தெரியும் உச்சி மலை கோட்டையைப் பார்த்து கன்னத்தில் போட்டு கொள்வதும், ஒரு சிலர் தூரத்தில் ஸ்ரீரங்கம் கோபுரம் தெரிகிறது என்றவுடன் பார்க்காமலே அந்தப் பக்கம் திரும்பி மீண்டும் கன்னத்தில் போட்டுக்  கொண்டதும், சென்னையில் இறங்கியவுடன் பிரமிப்புடன் ரயில் நிலையத்தை பார்த்துக் கொண்டே வெளியில் வந்ததும், டாக்ஸி பிடித்துக் கொண்டு ஹோட்டலுக்குப் போனதும், ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்ததும் நன்கு நினைவில் உள்ளது.

கொஞ்சம் வளர்ந்த பிறகு ஒரு நாள்  திருச்சியில் இருக்கும் மாமா வீட்டிற்கு கோடை விடுமுறைக்காக என் அக்கா, தங்கை, தம்பிகள் , பெரியம்மா பெண், மாமா மகள்கள் (நான்கு பேர்) ஆக 10  குழந்தைகள், என் பெரிய மாமாவுடன் குதூகலமாக கிளம்பினோம். அவர் ரயில்வேயில் வேலை பார்த்ததால் ரயில் நிலையத்தில் வேலை பார்ப்பவர்கள் அவருக்கு வணக்கம் வைத்ததைப் பெருமையாக பார்த்துக் கொண்டே a/c கோச்சில் உட்கார்ந்து கதைப் பேசிக் கொண்டே போனதும், எங்களுடன் பயணம் செய்த மேல் நாட்டுக்காரர்களை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே மெதுவாக பயந்து கொண்டே சிரித்ததும், இறங்கும் போது அவர்கள் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு விடை பெறுவதை பார்த்து அதிர்ந்து போனதும், (!!!!) மாமாவும் இது அவர்கள் ஊர் பழக்கம் என்ற போதும் புரிந்தும் புரியாமலும் 'ங்கே' என்று விழித்துக் கொண்டே இறங்கியதும் இன்றும் நினைவில்.

இதைப் போல் பல பிரயாணங்கள். ஒவ்வொன்றிலும் ஒரு பாடம். அப்போதெல்லாம் கையில் வைத்து கொண்டு விளையாடும் வீடியோ கேம் எதுவும் இல்லாததினால் வேடிக்கை பார்த்துக்கொண்டே போவதும் பக்கதிலிருப்பவர்களுடன் ரயில் சிநேகம் கொள்வதும், அவர்களுடைய குழந்தைகளுடன் விளையாடுவதும், அவர்களுடன் பகிர்ந்து உண்ணுவதும் கனவாகி போய் விட்டது இந்த காலத்தில் :(

இப்போதெல்லாம் ரயிலில் ஏறும் போதே  யாருடனும் வெட்டி பேச்சு பேசாதீர்கள், பிஸ்கட் கொடுத்தால் கண்டிப்பாக வாங்க கூடாது என்று பயமுறுத்தியே ஏற்றி விடுகிறார்கள். இதைக் கண்டால் பயம், அதைக் கண்டால் பயம் என்று ' தெனாலி பட' கமல் மாதிரி ஆகி விட்டது ரயில் பயணம். குழந்தைகளும் ஏறியவுடன் கேம்பாய் (Gameboy) / DS ஒன்றை வைத்து கொண்டு விளையாட ஆரம்பித்து விடுகிறார்கள். அப்படியே அவர்கள் யாருடனாவது பேச ஆரம்பித்து விட்டால் நமக்கு பக் பக் என்றிருக்கிறது.!!!!

சார் 'காபி, டீ, காபி, டீ' என்று தொண்டை கிழிய சிலர் கத்திக் கொண்டே ஒரு பாத்திரத்தில் சூடான டீயையோ , காபியையோ எடுத்துக் கொண்டு பிளாஸ்டிக் டம்பளருடன் ஜன்னலுக்கு ஜன்னல் குரல் கொடுத்துக் கொண்டே வியாபாரம் செய்வார்கள். எல்லா பிளாட்பார்மிலும் ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் , தமிழிலும் அறிவிப்புகள் வந்து கொண்டே இருக்கும். கேட்பதற்கு வித்தியாசமாக இருக்கும். சிவப்பு சட்டையில் போர்ட்டர்கள் பெட்டிகளைச் சுமந்த வண்ணம் ஓடிக் கொண்டிருப்பார்கள் அல்லது பெரிய பெரிய சூட்கேசுகளை வைத்திருப்பவர்களிடம் விவாதித்துக் கொண்டிருப்பார்கள்!!!.

தள்ளு வண்டியில், பழங்கள், பிஸ்கட்டுகள் , வார இதழ்கள், தினசரி பேப்பர்கள், தண்ணீர் பாட்டில்கள் வைத்து வியாபாரம் செய்து கொண்டிருப்பார்கள். குடும்பங்களை வழியனுப்ப வந்த உறவினர்கள் கூட்டம் ஒரு பக்கம், ஊருக்கு வந்தவர்களை அழைத்துச் செல்ல வந்த கூட்டம் என்று பல கூட்டங்களையும், அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி, சோகம் என்று பல உணர்ச்சிகளையும் அந்த நேரத்தில் காணலாம். பார்த்துப் போம்மா/போப்பா , போனவுடன் போன் பண்ணு என்று சிலர் அன்பு கட்டளைகள் இட்டுக் கொண்டிருப்பதையும் காணலாம். சில இளங்காளைகள் அழகான தாவணி, சுடிதார் அணிந்த இளம்பெண்களை ஏக்கத்துடன் பார்துக்கொண்டிருப்பார்கள் :( சும்மா, டைம் பாசுக்கு தான்.

என் மகளுடன் சென்ற முதலாவது ரயில் பயணம் மிகவும் என்னை கலங்கடித்த ஒன்று. கனடாவில் வேலை கிடைத்தவுடன் கோயம்புத்தூர் சென்று விசா அப்ளை செய்வதற்காக மூன்று வயது குழந்தையுடன் அவளுக்கு வேண்டிய பால், பழங்களை எடுத்துக் கொண்டு ஆரவாரமாக ஆரம்பித்த பயணம். முதல் நாளிலிருந்தே நாளை கனடா விசா வாங்க ரயிலில் போகிறோம் என்று அவளிடமும் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கிய பயணம். ரயிலில் ஏறியவுடன், என் தம்பியின் நண்பனின் அம்மா, அப்பாவுடன் பேச்சு துணையோடு நன்றாகவே ஆரம்பித்தது அந்த ரயில் பயணம். நிவி மிரட்சியுடன் ரயிலில் உட்கார்ந்து கொண்டு, தாத்தா, பாட்டி என்று அவர்களுடனும் பேசிக் கொண்டு, வெளியில் வேடிக்கை பார்த்து கொண்டே வந்து கொண்டிருந்தாள். ரயில் மெல்ல நகரவும் விரலை சூப்பிக் கொண்டே அரை தூக்கத்துடன் என் மடியில் படுத்திருந்தாள். ரயில் மதுராகோட்ஸ் தாண்டி பாத்திமா கல்லூரியிலிருந்து சிறிது தொலைவில் நின்று விட்டது. உடனேஎல்லோருக்கும் தோன்றும் 'இந்தியன் ரயில்வே என்றாலே இப்படித்தான்' என்ற எண்ணம் வந்ததை மறுப்பதற்கு இல்லை. ஆண்கள் (?? பெண்கள் இறங்கிப் பார்த்ததில்லை) எல்லோரும் இறங்கி என்ன ஏதுவென்று பார்க்க கிளம்பி விட்டார்கள். ஆனால், அவர்கள் சொன்ன செய்தி தான் மிகவும் கலங்கடித்த ஒன்று..........அது..

இவர்கள் எங்கே, என்ன ஆனார்கள் ????

நான் எழுதுவதெல்லாம் 30 , 35 ஆண்டுகளுக்கு முன் மதுரையில் அரசமரம் ஏரியாவில் இருந்த காலங்களில் என் நினைவில் இருந்து...

நான் சிறுமியாக இருக்கும் பொழுது குழந்தைகள் பள்ளிக்குச்  செல்லும் முன் அதாவது, 8 மணிக்குள் ரோசாப் பூ /பெங்களூர் பூ என்று கலர் கலராக கூடையில் வைத்து விற்றுக் கொண்டு வருவார்கள். அவ்வளவு அழகாக இருக்கும். அப்போதே 50 பைசா , ஒரு ரூபாய் என்று பெங்களூர் பூ (dahlia flowers ) இருக்கும். 10 பைசா , 25 பைசாவிற்கு ரோசாப்  பூ கிடைக்கும். (!!)அவர்கள் இன்னமும் வருகிறார்களா?

ஒரு பெரிய கூடையில் பானையில் கட்டித் தயிர் , சின்ன பாத்திரத்தில் வெண்ணை எடுத்துக் கொண்டு தயிர் விற்கிறவர் வருவார். கட்டித் தயிரை அழகாக வெட்டி எடுத்துத் தருவார். ஒசியாக சிறிது வெண்ணையும் கொடுப்பார். யம் யம் யம் யம் .....

மதிய நேரத்தில் நன்கு காய்ச்சிய நெய் விற்பவர் வருவார். ( இவர் அடிக்கடி வரமாட்டார், மாதத்திற்கொருமுறை தான் வருவார் ) . அவரிடம் நெய் வாங்கினால் மட்டி போன்ற நெய் சிறிது கையில் ஊற்றுவார். அவ்வளவு சுவையாக இருக்கும்!

சிறிய தையல் மெசினை தலையில் வைத்து கொண்டு 'தையல் தையல்' என்று கூவிக் கொண்டே வருபவர்கள் இன்னும் வருகிறார்களா? சிறிது நேரத்தில் தைத்து கொடுப்பார்கள்!!!! அந்த சிறிய மெசினுக்குள் தைக்க வேண்டிய அத்தனையையும் வைத்திருப்பார்!!!!. வேலை நடுவில் பீடியையும் குடித்து சாப்பிட எதாவது கொடுத்தால் வாங்கியும் கொள்வார். எங்கள் வீட்டு வாசலில் உட்கார்ந்து கொண்டு அவர் தைப்பதை வேடிக்கை பார்க்க நன்றாக இருக்கும். எல்லாமே புதிராக இருந்த காலமது!

'கத்தி, அருவாமனை சாணை பிடிக்கிறவர்கள்' ஒரு மெசினை தோளில் மாட்டிக் கொண்டு ''கத்தி அருவாமனை சாணை பிடிக்கனுமோ சாணை சாணை" என்று கூவியபடியே வருவார்கள். அழகாக கத்தியை அந்த மிஷனில் வைத்து பொறி பறக்க தீட்டி தருவார்கள். இதற்கெல்லாம் குறைந்த கூலி தான் கேட்பார்கள். அந்த பொறி பறப்பதை பார்ப்பதற்கு குழந்தைகள் பட்டாளம் அவரைச்  சுற்றி நின்று கொண்டிருக்கும். வேகமாக பெடலை அழுத்த அழுத்த சக்கரம் போல இருக்கும் மெசின் ஓட ஆரம்பிக்கும். அதன் ஓரத்தில் கத்தியை வைத்து சாணை பிடிக்க , கத்தியும் அடுத்த வெட்டிற்குத்  தயாராகிவிடும் :)

'பாத்திரத்துக்குப்  பே........ர்.... வெட்...றது' என்று ஒருவர் கையில் ஒரு சுத்தியல் மற்றும் ஆணி மாதிரி கூர்மையான ஒன்றை பையில் வைத்து கொண்டு வருவார். முன்பு விஷேங்களுக்குப்  போகும் போது ஏதாவது வீட்டு உபயோகத்திற்கான பாத்திரங்களை பரிசாக கொண்டு செல்வார்கள். இவர்களிடம் ஒரு சீட்டில் பெயர் எழுதி கொடுத்தால் 'நொட்டு, நொட்டென்று' ஒரு கோணத்தில் அந்த ஆணியை வைத்து தட்டி அழகாக எழுதிக் கொடுப்பார்கள். ஆனந்தா மெட்டல் வாசலில் மெஷின் வைத்து விரைவாக அடித்து கொடுக்க ஆரம்பித்த பிறகு மக்களும் அவர்களிடம் போக ஆரம்பித்தார்கள். அன்றே இவர்களின் வரவும் குறைய ஆரம்பித்து விட்டது. நாமும் மறந்து விட்டோம் இவர்களை. அவர்களும் வேறு தொழிலுக்கு மாறி இருப்பார்கள்!!!

இதைத் தவிர கிளி ஜோசியம், பூ, மீன், காய்கறி விற்பவர்கள், பின் காலைப் பொழுதில் போண்டா, வடை, பட்டாணி என்று பெரிய பாத்திரம் நிறைய நொறுக்கு தீனி கொண்டு வருபவர்கள், பஞ்சு மிட்டாய் விற்பவர்கள், வேக வைத்த கடலை விற்பவர்கள், லேட் நைட்டில் வரும் பெரிய கிளாஸ் மூடிய (தோவ்ரின் கேஸு மிட்டாய் ) கண்ணாடியில் பஞ்சு மிட்டாய் விற்பவர்கள் , குல்பி ஐஸ் விற்பவர்கள், பட்டர் பன், கேக் , ஐஸ் கிரீம் கோன் என்று பல தினுசுகளில் இனிப்புகளை ஒரு வண்டியில் வைத்து கொண்டு வருபவர் ..............என லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது.

இவர்களில் ஒரு சிலரை நான் மதுரைக்கு போகும் பொழுது பார்த்திருக்கிறேன். மற்றவர்கள் எல்லாம் என்ன ஆனார்களோ?? காலம் தான் எப்படி மாறி விட்டது!













'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...