மாநாடு நாள் நெருங்க, நெருங்க ரகு திருக்கொண்டா தலைமையில் கார்த்திக் திருக்கொண்டா மற்றும் DC மெட்ரோ குடும்பங்கள் பலவும் மாநாட்டிற்கான நிகழ்ச்சிகள், அழைப்பிதழ்கள், நினைவுப்பரிசு என பல நாட்கள் இணையம், ஃபோன் மூலம் கடுமையாகத் திட்டமிட்டு ஒரு வழியாக பள்ளி ஒன்றில் நானூற்று ஐம்பது பேர் வரை பங்கு கொள்ள வசதியாக இடத்தையும் முடிவு செய்தார்கள்.
மெட்ரோ ஏரியாவில் இருந்தவர்கள் பலரும் தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு அழைப்பு விடுத்து அவர்களுடன் வந்து தங்கி இருக்குமாறு அந்த பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார்கள். ஃபேஸ்புக் மூலமாக அழைப்பிதழும், தங்கள் வருகையை தெரியப்படுத்த வேண்டிய கடைசி நாளும் வடஅமெரிக்கா வாழ் சௌராஷ்டிரா மக்களுக்கு தெரியப்படுத்தியும் ஆயிற்று.
நாம் தான் மண்ணின் மணம் மறந்தவர்கள் இல்லையே? தினமும் அதே pinned post பார்த்தாலும் கடைசி நாள் வரை காத்திருந்து பதில் சொன்னவர்களும், பார்த்தவுடன் வருகிறோம் என்று சொன்னவர்களும், கடைசி நிமிடத்தில் வர விரும்பினவர்களும் என ஒரு வழியாக பெரியவர்கள், குழந்தைகள் என்று நானூற்று இருபத்தைந்து பேர் வரை வந்து விட்டதாகவும் தெரிய வர, அத்துடன் அழைப்பதை நிறுத்திக் கொண்டார்கள் :)
நண்பர் சீனிவாசனும் அவர்களுடன் வந்து தங்குமாறு அன்புடன் அழைத்திருந்தார். கார்த்திக் ஒப்லா மேரிலாண்டில் இருந்தது கூடுதல் போனஸ்! ஆக அவர்களையும் பார்த்த மாதிரி ஆயிற்று, அமெரிக்காவில் இருக்கும் பிற சௌராஷ்டிரா உடன்பிறப்புக்களையும் பார்த்த மாதிரி ஆகி விடும் என்று இரு நாட்கள் முன்பே கிளம்பி கார்த்திக் வீட்டிற்குச் சென்று விட்டோம்.
ஒரு நாள் முழுவதும் கால் வலிக்க ஒன்பது மைல் நடந்து தலைநகரைச் சுற்றோ சுற்று என்று சுற்றி, வளைத்து வளைத்துப் படங்கள் எடுத்துக் கொண்டும், ஆசை தீர வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களைப் பார்த்ததும் என இனிமையாக கழிந்தது.
அடுத்த நாள் வெளியே எங்கும் வர மாட்டேன். நேற்று நடந்த நடையில் களைப்பாகி விட்டேன் என்று மகன் கொடி தூக்கிப் போராட்டம் செய்யாத குறையாக சொல்லவும் அன்றைய நாள் வீட்டிலேயே குழந்தைகள் விளையாட, நாங்களும் நிதானமாக பொழுதை களித்தோம். மாலையில் குழந்தைகள் கோல்ஃப் விளையாடப் போக, நியூஜெர்சியிலிருந்து சதீஷின் குடும்பமும் வந்து சேர, கலகலவென்று மதுரை நண்பர்கள், உறவினர்கள் என்று பேசி இனிதே அன்றைய பொழுதும் போனது.
மறுநாள் அதிகாலையில் ஒவ்வொரு குடும்பமாய் மாநாடு செல்லத் தயாராக, ஏதோ கல்யாணத்திற்குச் செல்வது போல் பட்டுப் புடவை சரசரக்க, மதுரை மல்லி மணமணக்க, தங்க,வைர நகை அலங்காரங்களுடன் வீட்டை விட்டு கிளம்பும் போது காலை 8.30. வெயிலும் போக்குவரத்து நெரிசலும் மதுரையை நினைவுறுத்த ஒரு மணி நேர சாலைப் பயணத்தில் வெர்ஜினியா மாநிலம் வந்து சேர்ந்தோம்.
மாநாடு நடந்த இடத்தின் வாசலிலேயே சிவா, சுப்பிரமணியன், ரமேஷ்பாபு அவர்கள் தத்தம் கேமராக்களுடன் வரும் குடும்பங்களை கிளிக்கிக் கொண்டிருக்க, குழந்தைகள் பன்னீர் தெளித்து, சந்தனம், குங்குமம், கற்கண்டு உபசரித்து விழாவிற்கு வருபவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தார்கள். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும் சிரித்த முகத்துடன் வரவேற்று ரிஷப்ஷன் மேஜைக்குச் செல்லுமாறு சொல்ல, அங்கு மேல்நிலைப் பள்ளி , கல்லூரி மாணவ மாணவிகள் ஒவ்வொரு குடும்பத்தின் அடையாள எண்ணைக் கூறியவுடன் முன்பே தயாரித்து வைத்திருந்த பெயர்கள் எழுதிய பேட்ஜ், மாநாட்டிற்கு வருபவர்களின் விவரங்களுடன் குடும்ப படங்கள், சௌராஷ்டிரா சமையல் குறிப்புகள், பாட்டி அம்மாக்கள் பயன்படுத்திய பேச்சு வழக்குகள் ,பழமொழிகள் ஆகியவற்றை தொகுத்து ஒரு புத்தகமாக வந்திருந்தவர்கள் குடும்பத்திற்கு கொடுத்தார்கள்.
உள்ளே சென்றால் மிக்ஷிகனில் இருந்து ஒரு பஸ்சில் வந்திருந்தவர்களில் நண்பர்கள் பலரும் இருக்க, பள்ளித்தோழி ஆஷாவுடன் பேசி அக்கால நினைவுகளை பகிர்ந்து கொண்டதும், மதுரை, சேலம், திருச்சி, கும்பகோணம் என்று பல ஊர்களில் இருந்து வந்திருந்த மக்களை ஒரே இடத்தில் பார்த்துப் பேசியதும் மகிழ்ச்சியான அனுபவம்.
உங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேன். ஆ! ஃ பேஸ்புக்கில் தான் என்று சிலருடனும், உங்கள் மகன் அருமையாக புல்லாங்குழல் வாசிக்கிறான் என்று அவனிடம் சிலரும், நீங்கள் அருமையாக படங்கள் எடுக்கிறீர்கள் என்று கணவரிடமும், நீங்கள் TCE ஆ, நானும் தான் எந்த வருஷம், ஓ! என் தம்பி செட், எனக்கு ஜூனியர், நீங்கள் எனக்கு சீனியர் என்று ஒரு மினி TCE alumini கூட்டத்துடனும் பேசிக் கொண்டிருந்ததில் மதுரைக்கே சென்ற உணர்வு.
சிறிது நேரத்தில் கூட்டம் அதிகரிக்க, பெரியவர்களை கொண்டு விளக்கேற்றி , சிறு குழந்தைகள் கடவுள் வாழ்த்து பாடி முடிக்க, ரகு திருக்கொண்டாவின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பித்தது. முதல் நிகழ்ச்சியாக, குடும்பங்கள் அறிமுகம் செய்து கொள்ள, நேரமின்மை காரணமாக ஐம்பது குடும்பங்கள் மட்டுமே தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள முடிந்தது. ஃப்ளோரிடாவிலிருந்து வந்திருந்த திருமதி.சாந்தி அவர்கள் அந்த காலத்தில் சௌராஷ்டிரா பெண்கள் கட்டும் முறைப்படி சேலை அணிந்திருந்தது பலருக்கும் பிடித்திருந்தது :)
அடுத்த நிகழ்ச்சியாக பல வருடங்களுக்கு முன் அமெரிக்கா வந்து கடுமையாக உழைத்து எப்படி குழந்தைகளை வளர்த்து ஆளாக்கித் திருமணமும் முடித்து அவர்களும் தங்கள் குழந்தைகளுடன் இன்றும் தாய்மொழியை மறக்காமல் இருக்கிறார்கள், அயல்நாட்டில் குழந்தைகளை வளர்க்கும் பொழுது எதிர் கொள்ளும் பிரச்னைகள், அதிலிருந்து மீள்வது எப்படி என்று சுவையான தகவல்களுடன் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள்.
நடுவில் இளைப்பாறிக் கொள்ள தேநீரும், காபியும் என்று சிறிது நேரம் ஒரு மினி கூட்டம் அங்கு சேர்ந்து கொண்டு உங்களை நான் எங்கேயோ பார்த்திருக்கிறேன், நீங்கள்..
இருபது வருஷத்துக்கு முன்னே பார்த்தது ரொம்பவே மாறீட்டீங்க என சுவாரசியமான பேச்சுக்கள் தொடர ...மீண்டும் கலகலப்பு :)
பெண்களுக்காக ஒரு நிகழ்ச்சி- குழந்தை வளர்ப்பு, வேலைக்குச் செல்வது பற்றியும் உரையாடல்கள் தொடர்ந்தது. பலரும் குழந்தைகள் பள்ளிக்குச் சென்றவுடன் தங்கள் வேலையைத் தொடர்ந்தது அதில் வந்த பிரச்னைகளை கையாண்டது பற்றி பேசினார்கள். பலருக்கும் உபயோகமாக இருந்திருக்கலாம்.
மேல்நிலைப்பள்ளி, கல்லூரி வயது குழந்தைகள் தங்களுக்குள் பேசி சுபர்ணா தயாரித்திருந்த கேள்விகளுக்கு அவர்கள் அளித்திருந்த பதிலைக் கொண்டு ஒரு panel discussion அருமையாக இருந்தது. அதில் அவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டது வளரும் குழந்தைகளுக்கு உபயோகமாக இருக்கும்.
மனதை நெருடிய ஒரு விஷயம் - குழந்தைகள் பலரும் தங்களை ஹிந்துக்கள் என்று சொல்ல விருப்பப்படவில்லை என்பதாக இருந்தது. கண்டிப்பாக குழந்தைகளிடம் பெற்றோர்கள் மனம் விட்டுப் பேச வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறோம் என்பதை சுட்டிக் காட்டியது. மிகவும் வருத்தமான விஷயமும் கூட!
சௌராஷ்டிரா வார்த்தை விளையாட்டு அனைவரும் மகிழும் வண்ணம் நல்ல பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக இருந்தது. மக்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். தமிழ் வார்த்தைகள் பயன்படுத்தி தாய்மொழியில் பல வார்த்தைகளை மறந்து விட்டதை நினைத்து வெட்கமாகவும், சோகமாகவும் இருந்தது.
அசோக் காம்பியராக தன் ஜோக்குகளால் மக்கள் சோர்ந்து விடாமல் நிகழ்ச்சிகளை கொண்டு சென்றது பாராட்டுக்குரியது !
அதற்குள் மதிய நேரமும் நெருங்கி விட அனைவரையும் சாப்பிடும் இடத்திற்குப் போகுமாறு கேட்டுக் கொண்டார்கள். அங்கே சைவ, அசைவ உணவுகள் அவரவரே எடுத்துக் கொள்ளும் வகையில் மிக அற்புதமாக பிரித்து வைத்து எந்த வித நெரிசலும் இல்லாதவாறு பார்த்துக் கொண்டது பாராட்டுக்குரியது! இதன் பின்னால் பலரின் கடும் உழைப்பை பார்க்க முடிந்தது.
அங்கு நண்பர்களுடன் படத்தை எடுத்துக் கொண்டும், இணையம் வழியாக பலமுறை பார்த்தும், பேசியிருந்தும் நேரில் பார்த்து...அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே ரேஞ்சில் பலரும் புளங்காகிதமாக பேசிக் கொண்டிருக்க நேரம் சென்றதே தெரியவில்லை.
மீண்டும் மதிய நேர நிகழ்ச்சிகள். சுதர்சன் PHL (Palkar Helpline ) என்று உலகில் பல பகுதிகளில் வாழும் சௌராஷ்டிரா மக்களின் முழு ஆதரவுடனும், முக்கியமாக அமெரிக்காவில் உள்ளவர்களின் பங்களிப்பு எவ்வாறு கடைநிலை சௌராஷ்டிரா மக்களுக்கு உதவியாக இருக்கிறது, அதன் தொண்டுகள், பயன்பெற்றவர்கள் என்று சிறு தொகுப்பாக பேசியதும், மதுரையில் சௌராஷ்டிரா டிரஸ்ட் சொத்துக்கள் அழியும் நிலையில் இருப்பதும் அதைக் காப்பது பற்றி திரு.சிவப்பிரசாத் அவர்கள் பேசிய உரைகள் மிகவும் கவனிக்கத்தக்கதாக இருந்தது.
DC மெட்ரோ அன்பர்களின் நாடகம் ஒன்று அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியது.
நடுவில் தேநீரும், சமோசாவும் என்று சிறிது நேரம் மீண்டும் மக்களுடன் பேசிக்கொண்டு, பெண்கள் மாலை நேர மேக்கப், உடைகள் அணிந்து கொண்டு வலம் வர ...
கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்தது. முதலில் TMS அய்யா அவர்களின் பேரன் பாட்டு பாட, பெண்குழந்தைகளின் அழகிய நடனம் , அதைத் தொடர்ந்து மகேஷ் அவர்கள் என் கணவரை கேட்டுக் கொள்ள, அவரும் ஹார்மோனிக்காவில் ஒரு அழகிய தமிழ் பாடலை இசைக்க, முடிவில் ஒரு அழகான நடனத்துடன் இனிதே நிகழ்ச்சிகள் நடந்தது.
நிகழ்ச்சியின்இறுதியாக நன்றியுரை முடிந்தவுடன் இட்லி, வெண்பொங்கல், பூரி, காரட் ஹல்வா, வடை , சன்னா மசாலா, சாம்பார், சட்னிகளுடன் இரவு உணவும் தயாராக இருக்க மக்கள் கூட்டம் மெதுவாக நகர...
சாப்பாடு முடிந்தவுடன் அனைவரிடமும் விடை பெற்று மக்கள் கூட்டம் கலைய, கலையரங்கு மற்றும் சாப்பிட்ட இடங்களை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் சுத்தம் செய்ய ...அடுத்த முறை மிக்ஷிகனில் சந்திப்போம் என்றுஅனைவரும் புறப்பட ...
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நாள் முழுவதும் தாய் மொழியில் பேசி, கேட்க ஒரு நிறைவான நாளை அளித்த பலரின் நேரமும் உழைப்பும் பங்களிப்பும் மிகவும் பாராட்டுக்குரியது.
மீண்டும் ஒரு மணி நேரப் பயணத்திற்கு நாங்கள் ஆயத்தமாக வெளியில் வந்த பொழுது தான் பகலில் இடியுடன் மழை பெய்திருப்பதும் இரவிலும் மழை எங்களைத் தொடர்ந்ததுமாய் வீடு வந்து சேர்ந்து இரவு இரண்டு மணி வரை வாய் ஓயாமல் பேசி சிரித்து மகிழ்ந்ததுமாய் அந்த நாள் ஒரு ஆனந்தமான நாள்!
படங்கள் : மகேஷ் சுட்டி , சிவா சொட்டல்லு , விஷ்வேஷ் ஒப்லா