Saturday, February 18, 2017

இரண்டாம் உலகம்

பரப்பளவில் இந்தியாவை விட பல மடங்கு பெரிய நாடான அமெரிக்காவைப் பற்றிப் படித்ததும் கேட்டதும் தான் உண்டு. அதன் பூகோள அமைப்பு, உணவு, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் மற்றும் தட்பவெப்ப நிலைகள் என பல்வேறு அம்சங்கள் நிச்சயம் நம்மை வியக்க வைக்கும். அதுவும் இங்குள்ள ஐம்பது மாநிலங்கள் ஒவ்வொன்றும் தன்னகத்தே ஒளித்து வைத்திருக்கும் செயற்கை, இயற்கைச் செல்வங்கள் எவரையும் அதிசயத்தில் ஆழ்த்தும்.

கனடாவில் இருந்து அமெரிக்கா வருகிறவர்களே இந்த வித்தியாசங்களைப் பார்த்து வாய் பிளக்கும் போது இந்தியாவில் இருந்து வந்த என் போன்றவர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.
Statue of Liberty
வடகிழக்கில் ‘ஜோ’ வென்ற இரைச்சலுடன் காண்பவர் மனதை கொள்ளை கொள்ளும் அழகிய நயாகரா நீர்வீழ்ச்சி, அடர்ந்த காடுகள், மலைகள், ஆறுகள், குளங்கள், குறுகிய, அகலமான, நெரிசலான தெருக்கள், ஓங்கி உயர்ந்த பளபளக்கும் கட்டடங்கள், சாலைகளில் மஞ்சள் நிற வாடகைக் கார்கள், பரபரப்பான நகரத்தின் நடுவே இயற்கை எழிலுடன் அமைதி தவழும் பூங்காக்கள், வித விதமாய் பல்வேறு மொழிகளைப் பேசும் மக்கள், ஹாலிவுட் நட்சத்திரங்களே நேரில் வந்து விட்டதைப் போல் ஆடையணிந்து நகர்வலம் வரும் மனிதர்கள், உயர்ந்து நிற்கும் சுதந்திர தேவியின் சிலை, ஒரே நாளில் ஏழையை செல்வந்தனாகவும், செல்வந்தனை ஏழையாக்கும் தந்திரங்கள் செய்யும் வால்ஸ்ட்ரீட் , அமெரிக்க மண்ணில் அமைந்த முதல் இந்தியக் கோவில் என வடகிழக்கு மாநிலத்தில் நியூயார்க் என்றால்,

இந்தியர்கள் மட்டும்தான் இங்கு வாழ்கிறார்களோ என்று நினைக்க வைக்கும் ஓக் ட்ரீ சாலையில் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று இந்தியாவின் அனைத்துப்பகுதி மக்களுக்காகவே திறந்திருக்கும் நகை, துணி, பலசரக்குக் கடைகள், விதவிதமான உணவகங்கள் , இனிப்புக் கடைகள், பீடா சாப்பிட்டுத் துப்பிய கறையுடன் ரயில் நிலையங்கள் என நியூஜெர்சி மாநிலமும்,

நீலக்கடலின் பின்னணியில் நகரங்களுக்கே உரிய பிரம்மாண்ட அழகுடன் ஜொலிக்கும் கட்டிடங்கள், நீயா நானா என்று போட்டி போட்டுக் கொண்டு டோனட், ஐஸ்கிரீம், கேக் கடைகள், நகர்வலத்தில் பழமையையும், வரலாற்றையும் சுமந்து நிற்கும் கட்டிடங்கள், நகரின் நடுவில் பச்சைப் பசேலென பூங்காக்களும் என மாசசூசெட்ஸ் மாநிலமும்,

வறட்சியுடன் மலைகளும், அழகிய பசிபிக் கடலோர நகரங்களும், ஆயிரக்கணக்கான வருடங்களாக ஓங்கி உயர்ந்து வளர்ந்து வரும் மரங்களைக் கொண்ட காடுகளும், காய்கறி, பழத்தோட்டங்களும், குழந்தைகள் கண்டு களிக்க டிஸ்னிலேண்டும் , ஹாலிவுட் நடிகநடிகையர்கள் வலம் வரும் இடங்களும், மனதைப் பறிக்கும் பசிபிக் கடற்கரையும், கடலோரப் பாலங்களும், கடல் வாழ் உயிரினங்களும் என தென்மேற்கில் கலிபோர்னியா மாநிலமும்,
California
இலையுதிர்காலத்தில் இயற்கைத் தேவன் தீட்டிய வண்ண ஓவியமாகவும், பனிக்காலத்தில் வெண்பட்டு உடுத்திய தேவதையாகவும் கண்ணைக் கவரும் மலைகள் கொண்ட வெர்மான்ட் மாநிலமும்,

உலகையே ஆட்டிப் படைக்கும் ஜனாதிபதியின் மாளிகை, பல உள்நாட்டு வெளிநாட்டு விவகாரங்களில் தலையிட்டு முஷ்டி தூக்கி முடிவெடுக்கும் அமெரிக்கப் பாராளுமன்றம், வரலாற்றைப் பறைச்சாற்றும் நினைவுச் சின்னங்கள், போரில் இறந்த வீரர்களின் கல்லறைகள், நூலகம் என்று பலவித கட்டிடங்கள் , மழைக்காலத்தில் செர்ரி மரங்களில் அரும்பும் பூக்களின் கொள்ளை அழகுடன் வாஷிங்டன் நகரம் என்றால்,

அட்லான்டிக் கடலோர அழகு கொஞ்சும் மாநிலங்களும், வெள்ளை மணல் கொண்ட பீச்சுகளும், விதவிதமான பனைமரங்களும், பணக்காரர்களின் சொகுசு பங்களாக்களும், பண்ணைத்தோட்டங்களில் பூத்துக் குலுங்கும் ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரித் தோட்டங்களும், சதுப்புநிலக் காடுகளும், அதனுள் வாழும் விலங்கினங்களும், பணியிலிருந்து ஓய்வெடுத்து ஒதுங்கியவர்களும், ‘விர்விர்’ என்று சூறாவளியாகப் பறக்கும் கார், பைக் ரேஸ்களும், குழந்தைகளுடன் குதூகலிக்க டிஸ்னி உலகமும் என்று ப்ளோரிடா மாநிலம் தென்கிழக்கில்,

பத்தாயிரம் ஏரிகளைக் கொண்டு பாதி வருடம் குளிரும், பனியுமாக மின்னெசோட்டா மாநிலமும்,
Minnesotta
அமெரிக்காவில் கார் என்றவுடன் நினைவுக்கு வருவதும் கிரேட் லேக்ஸ் என்று கடல் மாதிரி விரிந்த ஏரிகளும் கொண்ட மிச்சிகன் மாநிலமும்,

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நின்ற மிட் ராம்னி பிறந்த ஊரும், மார்மன் என்ற கிறிஸ்துவப் பிரிவினர் வாழும் அமைதியான பல இயற்கைப் பொக்கிஷங்களைத் தன்னகத்தே கொண்ட மலைகளும், ஏரிகளும், இந்நாட்டிலே மிகப் பெரிய ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கோவிலையும் கொண்ட யூட்டா மாநிலமும்,

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் குஷிப்படுத்தும் பல விதமான கேளிக்கைகள், விருந்துகள் , கொண்டாட்டங்கள், உலகில் பெயர்பெற்ற கட்டிடங்களைச் செயற்கையாக உருவாக்கி வண்ண விளக்குகளின் ஜொலிப்பில் பார்ப்பவரைக் கொள்ளை கொள்ளும்- இரவினில் ஆட்டம், பகலினில் தூக்கம் போடும் விடிவெள்ளி நகரமும், பொறியியலில் சாதனை என்று போற்றிக் கொள்ளும் விதத்தில் அமைந்த அணைக்கட்டும் என நிவெடா மாநிலமும்,

உலகின் அதிசயங்களுள் ஒன்றான பள்ளத்தாக்குகள் – பல்லாயிரக்கணக்கான வருட இயற்கையின் திருவிளையாடல்களையும், பல விதமான சப்பாத்திக்கள்ளி மரங்களையும் கொண்டு அரிசோனா மாநிலமும்,
Grand Canyon
பச்சைப்பசேலென விளைநிலங்களும், மலைகளும் , ஆறு, ஏறி, குளங்களும், பனிப்பாளங்களுடன் கூடிய மலைகளும், குறைந்த அளவில் மக்கள் தொகை கொண்டு வடமேற்கில் மொன்டானா மாநிலமும்,

இயற்கை எழில் கொஞ்சும் மரங்கள், விலங்கினங்கள் , இயற்கைச் சுடுநீர் ஊற்றுகள், பூமியில் கொந்தளித்துக் கொண்டிருக்கும் லாவா எரிமலைகள் என்று வடமேற்கில் வயோமிங் மாநிலமும்,

என ஒவ்வொரு மாநிலமும் குளிர், கடுங்குளிர், பனிமழை, சூறாவளி, மழை, காட்டுத்தீ, வறட்சி என தட்பவெப்ப நிலையிலிருந்தும், உண்ணும் உணவிலிருந்தும், கேட்கும் இசையிலிருந்தும், பேச்சு வழக்குகளிலிருந்தும், பலவிதமான குடிமக்களுடனும் வேறுபட்டு நின்றாலும் ஒவ்வொருக்குள்ளும் நிறைந்திருக்கும் அமெரிக்கன் என்கிற பெருமித உணர்வே இந்த நாட்டை இன்னும் மேலானதாக, பெருமையுடைய நாடாக நிமிர்ந்து நிற்க வைத்திருக்கிறது என நினைக்கிறேன்.!
Maduraiஆயிரம் இருந்தாலும் என் தாய்நாட்டிற்கு அப்புறம்தான் எதுவும் என்பதில் எனக்கு எப்போதும் இரண்டாம் கருத்து இல்லை. அந்த வகையில் தனக்குள்ளே பன்முகத் தன்மையுடைய ஐம்பது மாநிலங்களையும் தன்னுள்ளே வைத்திருக்கும் அமெரிக்கா என்னுடைய இரண்டாம் உலகம்.

Wednesday, February 8, 2017

இக்கரைக்கு அக்கரை பச்சை!

http://ithutamil.comல் வெளிவந்த என் முதல் கட்டுரை (ஆகஸ்ட் 2013)
இக்கரைக்கு அக்கரை பச்சை!
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற மேலை நாடுகளின் மீது நம்மில் பலருக்கும் ஏதோவொரு இனம் புரியாத மோகம் இருக்கும். அல்லது அது மாதிரி நாம் வளர்க்கப்பட்டிருக்கிறோம். மேலை நாடுகள் என்றாலே, அங்கே தேனும் பாலும் ஓடுவதைப் போலொரு மாயத்தோற்றத்தை நமது கல்விமுறையும், சமூகக் கருத்தியலும் நமக்குள் உருவாக்கி விட்டிருக்கிறது. அதிலும் இந்த நாடுகளில் வேலை கிடைத்து, நாம் அங்கே போகப்போகிறோம் என்றவுடன் வாழ்க்கையில் ஏதோ பெரிதாய் சாதித்ததைப் போன்று ஓர் உணர்வு ஏற்படுவதை தவிர்க்க இயலாது. இது மேல்படிப்புக்காக செல்லும் மாணவர்களுக்கும் பொருந்தும்.

இப்படிக் கனவுகளோடு வருகிறவர்கள் எதிர்கொள்ளும் ஆரம்பக்கால அவஸ்தைகள் பற்றி பலருக்கும் தெரிவதில்லை. என்ன தான் போகப்போகிற ஊரை/நாட்டைப் பற்றி விவரங்கள் தெரிந்திருந்தாலும் கூட, வந்து இறங்கியவுடன் ஒரு அந்நிய உணர்வும், வெறுமையும் சூழ்ந்து கொள்வதை தவிர்க்க முடியாது. இதனால் ஏற்படும் பதற்றமும், பாதுகாப்பில்லாத உணர்வும் வார்த்தையால் விவரிக்க முடியாத அவஸ்தை. அதிலும் வரும் ஊரில் தெரிந்தவர்கள் என யாரும் இல்லையென்றால் கேட்கவே வேண்டாம். தனியாக வருபவர்கள் தங்குமிடத்தை முடிவு செய்வதற்குள் தாவு தீர்ந்து விடும். சுயமாய் சமையல் செய்யத் தெரிந்தவர்கள் பிழைத்தார்கள். சமைக்கத் தெரியாதவர் பாடு திண்டாட்டம் தான்.

அமெரிக்கா / கனடா என எங்குப் போனாலும் SSN என்ற அடையாள அட்டையை வாங்கப்போனால், பாஸ்போர்ட்டில் இருக்கும் பெயர் சரியில்லை, இது சரியில்லை, அது சரியில்லை என்று சில நேரங்களில் நம்பெயரை நினைத்து நாமே வருத்தப்பட வேண்டிய அனுபவமெல்லாம் கூட கிடைக்கும். நமக்கு தெரிந்ததெல்லாம் குடும்பப்பெயரின் முதலெழுத்து, அப்பா பெயரின் முதலெழுத்து. பிறகு வேண்டாத தெய்வங்களை எல்லாம் வேண்டி நமக்கு வைத்த பெயர். இங்கு வந்தால் முதல்பெயர், கடைசி பெயர் என்ன என்று கேட்டு குழப்புகிற குழப்பலில் சொந்த பெயரே உருமாறி விடும். என்ன செய்வது இந்த அடையாள அட்டை கிடைத்தவுடன் தான் வேலையில் சேரமுடியும்.

இத்தனையும் சமாளித்து முதல்நாள் பயந்து பயந்து மழையில் நனைந்த கோழிக்குஞ்சு போல், அலுவலகம் போய் பரஸ்பர அறிமுக சடங்குகள் எல்லாம் முடிந்த உடன் நம்மை ஓரிடத்தில் உட்கார வைத்து கத்தை கத்தையாய் படிவங்களைக் கொடுத்து படித்துப் பார்த்து கையொப்பமிட்டு கொண்டு வாருங்கள் எனச் சொல்லும் போது, அதில்என்ன இருக்கிறது என்பதை புரிந்து கொள்வதற்குள் கிறுகிறுத்துப் போய்விடும். நம் சம்பளத்திலிருந்து எவ்வளவு பணத்தை ஓய்வூதியத்திற்கு, மருத்துவக் காப்பீட்டிற்கு, அவசர மருத்துவ விடுப்பு, அது இது எது என்று பாதி புரிந்தும் புரியாமலும் அதை முடித்துக் கொடுக்க வேண்டும். இப்போது வரும் பலரும்இந்த விஷயங்களில் கில்லாடியாக இருக்கிறார்கள்.

வேலை இடங்களில் நம்மை, நம் வேலைத்திறனை அவர்களுக்குப் பிடிக்க வேண்டும், நமக்கும் அந்தச் சூழ்நிலை பிடிக்க வேண்டும். இந்த சமன்பாடு சரியாக அமையாவிட்டால் கிடைத்த வேலையும்போய், விசாவும்போய்விடும். வேறு இடத்தில்வேலை கிடைக்கும்வரை சூழ்நிலைக் கைதியின் நிலைதான். குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு, வேலையிலும் நம்மை நிரூபித்துக்கொள்ள வேண்டிய அந்த நாட்கள் போராட்டமானவை. இம்மாதிரி தருணங்களில் தான் ஏண்டா வந்தோம் என்கிற நினைப்பு வந்து கொல்லும்.

உள்ளூர் மக்களின் கலாச்சாரம், அவர்களுடைய வாழ்க்கைமுறை, மற்றவர்களிடம் பழகும்விதம், சாப்பிடும்முறை, பேச்சுவழக்கம் என எல்லாமே நமக்கு அந்நியம்தான். அதிலும் அவர்களின் சாப்பாடு பற்றித் தெரிந்து அதைப் பழகிக் கொள்வதற்குள் போதும் போதுமென்றாகி விடும். அடுத்தது மொழிப்பிரச்சினை. நமக்கு பரிச்சயமான ஆங்கிலம்தான், ஆனாலும் அதைப்புரிந்து கொள்ள கொஞ்சம் நாளாகும். அதிலும் இங்கே ஊருக்கு ஒரு பேச்சு வழக்கு(slang) எனப் பேசியே உயிரை வாங்குவார்கள்.

கணினித்துறை உச்சத்தில் இருந்த போது, இந்தியாவில் இருந்து அலை அலையாய் வேலைக்காக வந்தவர்கள் எதிர்கொள்ளும் மொழிப் பிரச்சினைகளை சமாளிக்க பயிற்சி வகுப்புகள் நடத்திய காலமெல்லாம் உண்டு. Slang என்றால் என்ன? சக அலுவலர்களோடு எப்படிப் பேசுவது, பழகுவது என்பதில் துவங்கி, எப்படி உடை உடுத்த வேண்டும், அடுத்தவரை உறுத்தாத வண்ணம் வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொடுத்தனர். இத்தனைக்குப் பிறகும் இந்த வெள்ளைக்காரர்கள் பேசுவதைப் புரிந்து கொள்ள சில காலங்கள் பிடித்தது.

ஆணோ, பெண்ணோ அறிமுகப்படலத்தின் போது அவசியம் ஒரு ‘firm handshake’ கொடுக்கவேண்டும். அப்போது தான் அவர்களுக்கு நம்முடைய வேலை மீதும், நம் மீதும் நம்பிக்கை வளரும் என்று சொல்ல, பெண்கள் என்றால் ஓகே, அதே ஆண்கள் என்றால் ஆரம்பத்தில் ஒரு தடுமாற்றம்இருந்தது. போகப்போக அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா என்ற ரேஞ்சுக்குப் பழகிவிடும்.

இந்தியாவிலிருந்து பார்ப்பவர்களுக்கு, மேலை நாட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு என்ன கவலை, காரில் போய் காரில் வருகிறார்கள் என்று மிக எளிதாக சொல்ல முடிகிறது. வேலை செய்யும் நேரம் வேண்டுமானால் இந்தியாவில் உள்ள நெருக்கடியைப் போல் இல்லாமல் இருக்கலாம். ஆனால், எந்நேரமும் ஒருவித அச்சுறுத்தல் மனதை நெருடிக்கொண்டே இருக்கும்.

இன்றைய பொருளாதார சூழ்நிலையில் மேலை நாட்டுக்காரனுக்கு வேலை இல்லாமல், வேறு நாட்டவருக்கு வேலை இருக்கும் பட்சத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கும்நிலை தான். பல இடங்களில் அடிதடி, துப்பாக்கி சூடு என்று அவ்வப்போது நடந்து மனதை கலங்க வைக்கும். பொதுவாக, இந்தியர்கள் பெரும்பாலும் கணினி, மருத்துவம், பொறியியல் துறையில் இருப்பதால் நேரிடையாக மேலை நாட்டுக்காரர்களால் எதிர்ப்பை தெரிவிக்க முடியவில்லை. ஆனால் அவர்கள் ஆழ்மனதில் என்றுமே அவர்கள் வேலையை இங்கு வந்தும், கால்சென்டர் மூலமாகவும் எடுத்துக் கொண்டோம் என்ற வெறுப்பு பலரிடமும் இருக்கிறது.

அதே போல், வெள்ளை நிறத்தவர்களைத் தவிர வேறு எவரையும் ஏற்றுக் கொள்ளதவர்கள் மத்தியில் வேலை பார்க்கும் துர்பாக்கியம் ஏற்பட்டு அதனால் பல இன்னல்களுக்கு ஆளாபவர்களும் மிக்க மன வருத்தத்துடன்தான் இருக்கிறார்கள். என்ன செய்ய, ஊரில் குடும்பத்தைக் காப்பற்ற வேண்டுமே!

இந்தியர்களுக்கு வீடு கொடுக்கவும் சிலர் தயங்குவார்கள் – எப்போது பார்த்தாலும் மசாலா சேர்த்து சமைப்பது, வீட்டை சரியாக பராமரிக்கத் தெரியாது, நாகரீகம் குறைவு என்றெல்லாம். ஆனால், எதையும் நேரிடையாக சொல்ல மாட்டார்கள்.

குளிர் அதுவும் எலும்பில் ஊடுருவும் அளவு கடுங்குளிர் பிரதேசத்தில் வேலை கிடைத்துச்சென்றால், வெயிலை மட்டும் பார்த்துப் பழகியிருந்த நம் உடம்பையும், மனதையும் அதற்கேற்றவாறு தயார்படுத்திக் கொள்வது தான் அடுத்த பிரச்சினை. குளிருக்கான பிரத்யேக உடைகளை உடுத்திப் பழகுவதில் நிறையவே தடுமாற்றங்கள் இருக்கும். அதிலும் குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்கள் தினசரி எதிர்கொள்ளும் தடுமாற்றங்கள் சொல்லி மாளாது.

குடும்பம், குழந்தைகளுடன் இங்கு வருபவர்கள் முதலில் டாக்டரைத் தான் பார்க்க ஆரம்பிப்பார்கள். நம்மூரைப் போல நினைத்த நேரத்தில் டாக்டரைப் பார்க்க முடியாது. குழந்தைக்கு மிகவும் முடியாமல் இருந்தால் அன்றே பார்க்கலாம். இல்லையேல் அவர் என்றைக்கு நேரம் தருகிறாரோ அன்று தான்பார்க்க முடியும். உடனடி நிவாரணம் வேண்டுமென்றால் அவசரகால சிகிச்சைக்குத் தான் அழைத்துச் செல்ல வேண்டும். அது ஒரு கொடுமையான அனுபவமாக இருக்கும். நல்ல தரமான மருத்துவக்காப்பீடு இல்லையென்றால் நம்பர்ஸ் காலி.

சொந்த ஊரில் குழந்தைக்கு முடியவில்லை என்றால் நம் அம்மா, அப்பா, மாமனார், மாமியார் என ஆளாளுக்கு போட்டி போட்டு பார்த்த போது தெரியாத அவர்களின் அருமை, இரவு பகலாய் தனியே உட்கார்ந்திருக்கும் போதுதான் தெரியும். அதிலும் என்னைப்போல சுற்றங்கள் சூழ வாழ்ந்து பழகியவர்களுக்கு வீட்டு நினைப்பு வாட்ட, திரும்பிப்போய் விடலாமா என்றெல்லாம் நினைக்க வைக்கும்.
சிறு குழந்தைகளுடன் இங்கு வரும் பெண்கள் வேலைக்குப் போகும் நேரத்தில் தன் குழந்தையை எங்கு, யாரை நம்பி விட்டுச்செல்வது என்பதில் துவங்கி, நல்ல காப்பகத்தைக் கண்டுபிடித்து அங்கே கொண்டு விடும்போது, நம்குழந்தை மொழி புரியாமல் மலங்க மலங்க விழிக்கும் கொடுமையை பார்ப்பதைப்போல வேறு தண்டனை எதுவுமில்லை. ஒரு கட்டத்தில் தாயும் சேயும் இனி இது தான் நம் வாழ்க்கை என்கிற சமரசத்திற்கு வரும்வரை அனுபவிக்கும் மன அழுத்தங்களை வார்த்தையால் சொல்ல முடியாது. என் அனுபவத்தில் மட்டுமல்ல, நான் பார்த்த வரை நம்முடைய பெண்கள் இதையெல்லாம் மன உறுதியோடு லாவகமாக கையாண்டு விடுகிறார்கள்.
ஒரு சிலர் கைக்குழந்தையை இங்கே தனியாக வளர்க்க முடியாமலும், செலவுகளை கட்டுப்படுத்த நினைத்தும் இந்தியாவிலேயே வளர்க்க விட்டு விட்டு வந்து மன உளைச்சலோடு வாழ்கின்றனர். ஒரு கட்டத்தில் இங்கே வரும் அந்தக் குழந்தைகள் பெற்ற தாய் தந்தையரை ‘மிரள மிரள’ பார்க்கும் கொடுமையெல்லாம் நடக்கிறது. தாத்தா, பாட்டி, மாமாக்கள், பெரியம்மா, பெரியப்பா, சித்தி, என்று ஒரு பெரிய பாசக்கார கூட்டத்தில் வளர்ந்து விட்டு, இங்கு வரும் குழந்தைகள் அவர்களை நினைத்து ஏங்குவதும், அதை நினைத்துப் பெற்றவர்கள் குற்ற உணர்வில் வருந்துவதும் முடிவில்லாத தொடர்கதை.

குழந்தைகள் வளர்ந்து பள்ளிக்கு போகும்போது அடுத்த டென்ஷன். இந்தியாவில் பிறந்து வளர்ந்த குழந்தைகளுக்கு, பள்ளியில் உள்ள மற்ற குழந்தைகள்மாதிரி பேசமுடியவிலேயே என்ற ஆதங்கத்தில் இருக்கும். இந்த மாதிரி பிரச்சினை உள்ள ஆங்கிலம் தாய்மொழி அல்லாத குழந்தைகளுக்குத் தனியாக ஆங்கில வகுப்புகள் உண்டு. அதனால், ஆரமபத்தில் தடுமாறும் நம் குழந்தைகள் பிறகு இந்த ஊர் குழந்தைகள் மாதிரி பேச ஆரம்பித்து ஒரு கட்டத்தில் நம்ம ஊர் ஆனந்தை, அனான்ட் என்று சொல்லும் பொழுது கேட்க நமக்கும் கொஞ்ச கஷ்டமாகத் தானிருக்கிறது! என்னசெய்ய?

சில வீடுகளில் குழந்தைகள் அப்பா, அம்மாவிற்கு ஒன்றும் தெரியவில்லை என்று அதிகப்பிரசங்கித்தனம் பண்ணி பெற்றோரை மனவருத்தத்தில் ஆழ்த்துவதும் உண்டு! பல குழந்தைகள் அப்பா, அம்மா சொல்படி நடந்து நன்கு படிக்கவும் செய்கிறார்கள். ஒரு வயதிற்குப் பிறகு, டேட்டிங்பிரச்சினை., அதை எதிர்கொள்ள முடியாத பெற்றோர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். ஊரில் நினைத்த உடன் பைக் பின்னாடி உட்கார்ந்தோமா, இல்லையென்றால் ஆட்டோவில் ஏறினோமா, நினைத்த இடத்திற்கு போனோமா என்றிருந்து விட்டு, இங்கு வந்த பின் நம்முடைய போக்குவரத்துகளை நாமே தான் கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கும். ஊரில் இருந்தவரை கை தட்டினால் ஆட்டோ, குரல் கொடுத்தால் பக்கத்து வீட்டு அக்கா என்று கூடிக்குழுமி இருந்துவிட்டு, இங்கே ஒரு அவசரத்திற்குக்கூட யாரையும் அண்டமுடியாத நிலை தரும் தனிமைப்படுத்தபட்ட உணர்வு கொடுமையானது. எனவே கார் ஓட்டுனர் உரிமம் பெறுவது அவசியமாகி விடுகிறது. அதிலும் பெரிய பெரிய வண்டிகளை சாலையில் எதிர்கொள்ள வேண்டிய பதைபதைப்பில் தேர்வில் சொதப்பி பல முறை கார் ஓட்டுனர் உரிமை தேர்வு எழுத வேண்டிவரும்.

இப்படிப் பல கட்டங்களைத் தாண்டி, கடவுளின் ஆசியால் பிரச்சினைகள் இன்றி வேலையில் செட்டிலாகி, வீடும் வாங்கி, இனி இங்கேயே இருந்துவிடலாம் என தீர்மானித்து க்ரீன்கார்டு விண்ணப்பித்து அது கைக்கு வந்து சேரும்வரை அடுத்த கட்டப் போராட்டம் தொடரும். சிலருக்கு இந்தக் காலக் கட்டத்தில் விசா கூட முடிந்துவிடும்.

இத்தனை நாள் கஷ்டப்பட்டு சம்பாதித்தவைகளை எல்லாம் போட்டதை போட்டபடி, நண்பர்களைப் பார்த்துக் கொள்ளுமாறு சொல்லி விட்டு நாட்டை விட்டுப் போகவேண்டிய சூழலும் வரும். அது மகா கொடுமை. க்ரீன்கார்டு வந்துவிட்டால் போதும், குழந்தைகள் கல்லூரி சேர்வது முதல், மனைவி/கணவன் வேலை வரை பல பிரச்னைகளும் முடிந்துவிடும்.

இந்தக் கட்டத்தில் மனைவி, குழந்தைகள், அப்பா, அம்மா, மாமனார், மாமியார் வருகை என்று வீடு களை கட்டும். கோடை விடுமுறை ஆரம்பித்ததும் ஊருக்குப் போகத் துடிக்கும் மக்கள். அதே நேரம் ஊரிலிருந்து பெற்றோரை அழைத்து ஊரைச் சுற்றிக் காண்பிக்கும் மக்கள், குடும்ப விசேஷங்களில் பங்கு கொள்ள முடியாமல் தவிப்பது என வாழ்க்கை ஒரு வட்டத்திற்குள் ஓடத்துவங்கும்.

பல வீடுகளில், கணவன் மனைவி இருவரும் பரஸ்பரம் புரிந்து கொண்டு வீட்டு வேலைகளையும், வெளி வேலைகளையும் பங்கு போட்டுக் கொள்கிறார்கள். சில வீடுகளில், இந்தியாவில் இருப்பது போலவே, மனைவி வேலை செய்ய, கணவன் எந்தக் கடையில் நல்ல தள்ளுபடி என்று கணினியைக் குடைந்து கொண்டிருப்பார்கள். ஒரு சில இடங்களில் இது தலைக்கீழாகவும் நடப்பது உண்டு.

இப்படியே இன்னும்பல பிரச்சினைகளைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்!

இவ்வளவு கஷ்டங்கள் இருக்கும் போது, ஏன் வெளி நாட்டுக்குச் செல்ல வேண்டும்? உள்ளூரிலேயே சுகமாய் இருந்திருக்கலாமே என்று இன்னேரத்துக்கு நீங்கள் எண்ணலாம். ஒரு சிலரைத் தவிர பெரும்பாலனவர்கள் தவிர்க்க முடியாத ஏதோ ஒரு நிர்ப்பந்தங்களினால் தான் இங்கே வருகிறோம். அரிதாக சில விதிவிலக்குகள் இருக்கலாம். ஊரில் பலரும் நினைப்பதைப் போல இங்கே வந்த எல்லோருக்கும் பணம் கொட்டுவதில்லை. திறமைக்கும், உழைப்புக்கும் ஏற்ற ஊதியம்தான் கிடைக்கிறது. அதிலும் நாம் கொஞ்சம் பின் தங்கினாலும் தூக்கி எறியத் தயங்காத வேலைச்சூழல்.

இங்கே உள்ள வாழ்க்கைத் தரத்தினை எதிர்கொள்ளத் தேவையான அளவு ஊதியம் தான் கிடைக்கிறது. அதைக் கொண்டே தன் குடும்பத்தின் தேவைகளையும் சமாளித்து, ஊரில் இருக்கும் தங்கள் உறவுகளுக்கு உதவிக்கொண்டிருக்கிறார்கள். இதை புரிந்து கொள்ளாத சில உறவுகளும், நட்புவட்டமும், ஏதோ மரத்திலிருந்து பணம் கொட்டுவது போலவும், அதை சுமக்க முடியாமல் நாங்கள் சுமந்து கொண்டிருப்பது போலவும் நினைத்துக் கொள்கின்றனர். அத்தகையவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு நம்மால் உதவ முடியாத போது வீண்பழிச்சொல் தான் கிடைக்கிறது. எங்கள் தரப்பு நியாயங்கள் இவர்களிடம் எடுபடுவதே இல்லை. நம்மீதும், நம்வளர்ச்சியின் மீதும் உண்மையாக பாசமும், அக்கறையும் வைத்திருப்பவர்கள் நம்மை புரிந்து கொள்கின்றனர் என்பதுதான் ஆறுதலான ஒன்று.

அந்நிய நாட்டில் வாழ்க்கை என்பது மக்கள் நினைப்பது போல் பல சுகங்களைத் தந்தாலும் அதைப் பெறுவதற்கு பல விஷயங்களை விட்டுக் கொடுக்கிறார்கள்.

ஆக மொத்தத்தில், எங்கேயும் எப்போதும் இக்கரைக்கு அக்கரை பச்சைதான்!


'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...