Wednesday, March 28, 2018

இனியொரு விதி செய்வோம்.!

அமெரிக்க அரசு அக்டோபர் மாதத்தை குடும்ப வன்முறை விழிப்புணர்வு (Domestic Violence Awareness) மாதமாக அனுசரிக்கிறது. இது தொடர்பில் நிறைய கருத்தரங்கங்கள், விவாத நிகழ்ச்சிகள் நாடெங்கும் நடத்தப்படுகின்றன. நான்கில் ஒரு பெண் உடல், உளவியல் ரீதியான வன்முறைக்கு ஆளாகிறார் என்றும் இத்தகைய வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பதாகவும் அரசின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.



தன்னுடைய துணையை அல்லது குடும்ப உறுப்பினர்களை அடிப்பது, அச்சுறுத்துவது, பாலியல் ரீதியாக சித்திரவதை செய்வது, உளவியல் ரீதியாகத் துன்புறுத்துவது, திருமணப் பந்தத்தை முறித்து விடுவதாக பயமுறுத்துவது, குடும்பத்தை நிர்கதியாய் விட்டுவிட்டு வெளியேறி விடுவேன் என்றோ, குடும்ப உறுப்பினர்களை வீட்டை விட்டு விரட்டி விடுவேன் என்றோ பயமுறுத்துவது என பல்வேறு முகங்களைக் கொண்டதுதான் குடும்ப வன்முறை.

படித்தவர், பாமரர், ஆண், பெண், இனம், மொழி, மதம், நாடு என எல்லாவற்றிற்கும் பொதுவாக இருக்கும் ஒரே விஷயம் இந்தக் குடும்ப வன்முறை என்பது கசப்பான உண்மை. இதனால் பாதிப்புக்கு உள்ளாகிறவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் எதிர்கொள்ளும் துயரங்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதில் அரசாங்கம் இப்போது தான் முனைப்பு காட்டத் துவங்கி இருக்கிறது. தற்போது நடைமுறையில் இருக்கும் நடவடிக்கைகளோ, தண்டனைகளோ நிச்சயம் போதாது தான். ஆனாலும் ஏதோ ஒரு வகையில் தீர்வுகள் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது என்பது மெலிதான ஆறுதல்.

பெரும்பாலும் வீட்டிலிருக்கும் ஆண் உறுப்பினரால்தான் இத்தகைய வன்முறை சக குடும்ப உறுப்பினர்களின் மீது நிகழ்த்தப்படுகிறது. இதில் பெண்களும், குழந்தைகளுமே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அரிதாக சில ஆண்களுக்கும் இந்த அவலம் ஏற்படுவதுண்டு.



சுமூகமாய், சந்தோஷமாய்த் துவங்கும் கணவன் மனைவி உறவில், மிகையான சுயநல எதிர்பார்ப்புகளே பிரச்சினைகளின் ஆரம்பப் புள்ளியாக இருக்கிறது. தன்னுடைய எதிர்பார்ப்புகளை எல்லோரும் ஏற்றுக் கொண்டு அதன் படி மற்றவர்கள் நடக்க வேண்டும் என நிர்பந்திக்கும் சூழலில்தான் குடும்ப அமைதி கெட்டு உரசல்கள் ஆரம்பமாகின்றன. பரஸ்பரப் புரிதலும், அனுசரனையும் உள்ள குடும்பங்களில் இத்தகைய சூழல் உருவாவதே இல்லை. அவர்கள் தங்களுக்குள் விவாதித்து விட்டுக்கொடுத்து நிம்மதியாய் வாழ்கின்றனர்.

என்னதான் படித்திருந்தாலும், பொருளாதாரத்தில் தற்சார்பு உடையவர்களாக இருந்தாலும் குடும்பம் என்கிற அமைப்பில் சிக்கியிருக்கிறோம், அதிலிருந்து மீளமுடியாது என்கிற மனசிக்கலில் மாட்டிய பெண்கள், இது தான் என் தலையெழுத்து என்று இரவில் தலையணையில் முகம் புதைத்து அழும் கதைகள் ஏராளம். வெளியில் சொன்னால் அவமானம், தன்னுடய எதிர்காலம், சமூகத்தில் தன் குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகுமோ என்கிற பதற்றத்தில் அடிகளையும், அவமானங்களையும் தங்களுக்குள் புதைத்துக் கொண்டு புழுங்க ஆரம்பிக்கும் பெண்கள் கடுமையான மன உளைச்சலுக்கும், மனச்சிதைவுக்கும் ஆளாகின்றனர்.

பெண்ணுக்கு நிகழ்த்தப்படும் அநீதி அந்தப் பெண்ணோடு முடிவதில்லை. அது தொடர்ந்து வரும் தலைமுறைகளையே பாதிக்கும் என்பதை நம்மில் எத்தனை பேர் புரிந்து கொண்டிருக்கிறோம்? இது புரியாத ஆண்களோ தன் துணையை அடக்கி விட்டோம் என்ற மதர்ப்பில், அவளைத் தொடர்ந்து கட்டுக்குள் வைத்துக் கொள்வதே தன் ஆண்மைக்கு அழகு என்கிற மனவிகாரத்தை நியாயப்படுத்திக் கொள்ள வேண்டி மேலும் மேலும் அடக்குமுறையைத் தீவிரமாக்குகிறான்.

இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு புறம் தாங்கள் வன்முறைக்கு ஆளாகிறோம் என்பதே பல பெண்களுக்கும் தெரிவதில்லை. மனைவி என்பவள் கணவனின் உடமை என்றும், அதனால் தன்னை அடிக்கவோ, துன்புறுத்தவோ கணவனுக்கு எல்லா வகையிலும் உரிமை இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் பேதைப் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் அனுபவிக்கும் உடல் மற்றும் உளவியல் சித்திரவதைகள் பெரும்பாலும் வெளியில் தெரியவருவதே இல்லை.

படிக்காத பெண்கள் கூட சமயங்களில் சட்டென முடிவெடுத்து விடுகிறார்கள். படித்த பெண்கள் தான் சமூகத்தில் தங்களுக்கு இருக்கும் அந்தஸ்திற்கு(?) பங்கம் வந்து விடுமோ என்று பயந்து இக்கொடுமையை அனுபவிக்கிறார்கள். இவர்களுக்குத் தேவையான விழிப்புணர்வையும், சமூக ஆதரவையும் பெற்றுத் தரும் இடத்தில்தான் அரசின் பங்கு முக்கியமானதாகிறது.

எனக்குத் தெரிந்து இங்கே ஒரு கல்லூரி பேராசிரியர் நன்கு படித்தவர். பொதுவெளியில் பண்பானவர் என பெயரெடுத்தவர். ஆனால் வீட்டில் தன் மனைவியை கொடுமை செய்வது அவருக்கு வாடிக்கை. அதுவும் அவர்களின் குழந்தைகள் முன்னிலையில். ஒரு கட்டத்தில் வெறுத்துப் போன அந்தப் பெண் தற்கொலைக்கு யோசிக்கும் அளவுக்கு போய்விட்டார். தன் குழந்தைகளை நினைத்து அந்த முடிவை கைவிட்டாலும் தொடர் சித்திரவதைகள் அவரை நிம்மதியாக வாழ விடவில்லை.

இந்தியாவில் இருந்த அவரின் பெற்றோர்களோ உதவ முடியாத கையறுநிலையில் இருந்தனர். ஒரு கட்டத்தில் நிலைமை எல்லை மீறிப் போகவே சில நல்ல நண்பர்களின் உதவியால், இன்று தனியாகி, பெருஞ்சோகத்துடன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார். அவரின் மூத்த மகன் கல்லூரி படிப்பைத் தொடர முடியாமல் மன அழுத்தத்திற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறான். ஒரு தனி மனிதரின் வக்கிரச் செயல்பாட்டினால் ஒரு குடும்பம் சிதறி மீளவியலாச் சிக்கலில் தவிக்கிறது.

இந்தியாவிலிருந்து பெருங்கனவுகளுடன் இங்கு வரும் பெண்களில் பலரும் பலவிதங்களில் பாதிக்கப்பட்டு வெளியில் சொல்ல முடியாதவர்களாய் நாட்களை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். சில சைக்கோ கணவர்களிடம் சிக்கிய பெண்களின் நிலைமை இன்னும் பரிதாபம். நல்ல நண்பர்களோ, தட்டிக் கேட்க சுற்றமும் இல்லாத பெண்கள், இக்கயவர்களால் நன்றாகவே ஏமாற்றப்படுகிறார்கள். அதையெல்லாம் தனியாக எழுத வேண்டும். அத்தனை துயரக்கதைகள் இருக்கின்றன.

இந்தியர்களை விடுங்கள். பல அமெரிக்கப் பெண்களின் நிலைமையும் சொல்லிக் கொள்வதைப் போல இல்லை என்பதுதான் ஆச்சரியமான வருத்தம். எனக்கு நன்கு தெரிந்தவர். குடும்ப வன்முறையினால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டவர். விவாகரத்து வாங்கி பத்து வருடங்கள் ஆகிறது. இன்றும் தான் பழைய வலிகள் தந்த படபடப்பில் இருந்து மீளவே முடியவில்லை என்பார். அது பற்றிப் பேச ஆரம்பித்தாலே கண்ணீர் விட ஆரம்பித்துவிடுவார்.

நீதிமன்ற உத்தரவின் படி தன் மகளை கணவரின் வீட்டில் கொண்டு விட்டுத் திரும்பக் கூட்டிவரும் நிகழ்வுகளின் போது எந்த நேரத்திலும் தன் உயிருக்கு அச்சுறுத்தலும், பயமும் இருப்பதாக கூறுவார். இது போதாதென, அப்பாவின் பேச்சைக் கேட்டுக் கொண்டு மகளும் இவருக்கு உளவியல் ரீதியாய் பிரச்சினை தர, குழந்தையை மனநல மருத்துவரிடம் அழைத்துப் போய் ஆலோசனைகளும், மருந்து மாத்திரைகள் என சிகிச்சை செய்ய வேண்டிய அவலம். சின்னஞ்சிறு வயதில் பள்ளியில், விளையாடும் இடங்களில், மற்ற குழந்தைகளுடன் என்று எங்கும் பிரச்னைகள். எப்படி எதிர்கொள்வது எனத் தடுமாறி நிற்கிறார் என் அமெரிக்கத் தோழி.



இப்படி பல பெண்கள் வெளியில் சிரித்துக் கொண்டும் உள்ளுக்குள் அழுது கொண்டும் ஒவ்வொரு நாளையும் குழந்தைக்காக வாழ்கிறேன் என்று நடைப்பிணமாக வாழ்கிறார்கள். கணவர் அடித்துத் துன்புறுத்துகிறார் என்றால் சாட்சி இருக்கிறதா என்று அதிகாரிகள் கேட்கிறார்கள். அவளின் மனப் போராட்டத்திற்கு எதை சாட்சியாகக் கேட்பார்களோ?

அரசின் தற்போதைய அணுகுமுறைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு சங்கடங்களைத் தந்து மனப்போராட்டத்தை அதிகரிக்கிறது. பெண்கள் பலரும் அனுபவிக்கும் இத்தகைய கொடுமைகளை ஆண்கள் சிலரும் அனுபவித்தாலும் பெரிய அளவில் பாதிக்கபடுவது அதிகம் பெண்களும், குழந்தைகளுமே.

இன்று பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தன்னார்வ உதவும் மையங்கள் பல உள்ளன. முடிந்த வரையில் அந்த மையங்களும் அவர்களை நாடி வரும் பெண்களுக்கு உதவுகிறார்கள். இருந்தும் பலரும் தங்கள் பிரச்னைகளை வெளிப்படையாகப் பேச முன் வருவதில்லை. குடும்ப வன்முறை எல்லை மீறும் போது பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்னைகள் விஸ்வரூபம் எடுத்து விடுகிறது. முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியவைகளை வளர்ந்த பிறகு வேரோடு அறுத்து எறிந்து வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட ஒரு சிலருக்குத் தான் மன வலிமையையும் பண வலிமையையும் இருக்கிறது.

பெண்ணைத் தன்னுடைய உடைமையாக, போகப் பொருளாக மட்டுமே பார்க்காமல், தன் சக தோழியாய் தன் வாழ்வின் பாகமாய்ப் புரிந்து, தன் இணையை மதித்து செயல்படும் ஆண்கள் உள்ள குடும்பங்களில் இணக்கமும் அன்பும் இயல்பாய்த் தழைத்தோங்கி நிற்கிறது.



ஆண்களோ, பெண்களோ அவர்களுக்குள் சகிப்புத்தன்மையையும், அடுத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் பண்பையும் சிறு வயதில் இருந்தே வளர்த்தெடுக்க வேண்டியது அவசியம். இதெல்லாம் ஒரே நாளில் வருவதில்லை. இந்த இடத்தில்தான் ஒரு தாயின் பங்கு , ஒரு குடும்பத்தின் பங்கு மகத்தானதாகிறது.

இப்படி வளர்க்கப்படும் குழந்தைகளே நாளைய குடும்ப அமைப்பின் வேர்களாக விளங்குவார்கள். நல்ல குடும்ப அமைப்பில் மனித நேயம் இயல்பானதாக இருக்கும். இத்தகைய இயல்புகளை வளர்த்தெடுக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகிறது.

குடும்ப வன்முறையற்ற எதிர்காலத்திற்கு நம்மால் ஆன அத்தனையும் செய்திட இக்கணத்தில் உறுதியேற்போம்.



அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது

– லதா

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...