Thursday, April 22, 2021

உலக பூமி தினம்

நாம் வளரும் பொழுது விடுமுறை, பண்டிகை நாட்கள் தவிர வேறு எதையும் அறிந்ததில்லை. ஏன் பிறந்த நாள் கூட வருடா வருடம் அது பாட்டுக்கு வந்து சென்று கொண்டிருக்கும். பெற்றோர்களின் திருமண நாட்கள் கூட கொண்டாட்டங்கள் ஏதுமின்றி கடந்து போகும். இப்பொழுதோ ஏதாவது ஒரு நாளை சொல்லி கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். நடுநடுவில் மானே தேனே பொன்மானே மாதிரி பல்வேறு விழிப்புணர்வு நாட்களும் அவசியமாகியுள்ளது. சமூக வலைத்தளங்கள் வாயிலாக செய்திகளைக் கொண்டு சேர்க்கவும் எளிதாகிறது.

சதா சர்வ காலமும் கைப்பேசியை நோண்டிக் கொண்டிருக்கும் சமூகத்தினரிடையே இயற்கையைப் பற்றின விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கால கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.

தொழிற்சாலைகள் வெளியிடும் மாசுக்கள் காற்றிலும் நீரிலும் கலந்து உருவாக்கும் அபாயங்களை உணர்த்த 1970ல் செனட்டர் கேய்லார்ட் நெல்சன் என்பவரால் ஏப்ரல் 22ந்தேதி "Earth Day"அறிமுகப்படுத்தப்பட்டது. அதுவரையில் காற்றில் நச்சுப் புகைகளையும், நீரில் நச்சுக்கழிவுகளையும் தொழிற்சாலைகள் வெளியிடுவதில் எந்த பிரச்னையும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க எந்த வழிமுறைகளும் இருக்கவில்லை. யாரும் எதிர்த்துக் கேள்விகள் கேட்கவும் முடியவில்லை.


1960களில் அளவுக்கதிகமான பூச்சிக்கொல்லிகளினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் அபாயங்களை வெளிக்கொணர்ந்தவர் ரேச்சல் கார்ஸன். கலிஃபோர்னியா மாநிலத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தால் கடலில் வாழும் உயிரினங்களுக்கும், ஓஹையோவில் ஆற்றில் கொட்டப்பட்ட தொழிற்சாலைக் கழிவுகளால் ஏற்படும் அபாயங்கள் குறித்தான விழிப்புணர்வினால் EPA எனப்படும் Environmental Protection Agency 1970ல் உருவாக்கபட்டது. அதிபர் நிக்ஸன் காலத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்தின் சட்ட திட்டங்கள் வரையறுக்கப்பட்டிருக்கிறது. வாகனங்கள் வெளியிடும் புகையைக் கட்டுப்படுத்துவதில் இருந்து தொழிற்சாலைகள் வெளியிடும் மாசு அளவை நிர்ணயிப்பது வரை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு இந்நிறுவனத்திற்கு உண்டு.

மண்மாதாவை வழிபடும் கலாச்சாரத்தில் பிறந்த நமக்கு பூமியைக் காத்திடும் பொறுப்புகள் இருக்கிறது.

பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டால் தேனீக்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து இயற்கையாக நடைபெற வேண்டிய மகரந்தச்சேர்க்கையின்றி தாவரங்கள் வளர்வதில் ஏற்பட்டுள்ள பின்னடைவைப் போக்க, தேனீக்களின் என்ணிக்கையைப் பெருக்கும் வகையில் பூச்செடிகளை வளர்க்கலாம். பல வருடங்கள் ஆகியும் மக்கிப் போகாத நெகிழிப் பொருட்களின் பயன்பாட்டைக் குறைத்தல், இயன்ற வரையில் அதிக நச்சுக்கள் கலந்த வீட்டு உபயோகப் பொருட்களுக்குப் பதிலாக இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தல், மரங்கள், செடிகள் நடுதல், பள்ளிகளில் குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஆவண செய்தல் ... என்று நீள்கிறது இன்றைய நாளின் "International Earth Day" பட்டியல்.

நியூயார்க் மாநிலத்தில் kodak பட நிறுவனம் அதிகளவில் மாசு வெளியிட்டதற்கு வரிகள் ஏராளமாக கட்டியது. உலகப்புகழ் பெற்ற GE நிறுவனம் ஆற்றில் கொட்டிய கழிவுகளை அவர்களே வெளியில் எடுக்க நிர்பந்திக்கப்பட்டார்கள். பல வருடங்கள் ஆயிற்று ஆற்று நீரைச் சுத்தப்படுத்த. மிஷிகன் மாநிலத்திலும் நிறம் மாறிய குடிநீர் பெரும் போராட்டங்களைத் தூண்டியது. ஒவ்வொரு மாநிலத்திலும் EPAன் பங்கு அதிகமாகிக் கொண்டே வருகிறது.

தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனமும் அதிக மாசுக்களை வெளியிட்டதில் அதையே காரணம் காட்டி இழுத்து மூட வைத்தார்கள். அமெரிக்காவிலோ ஆலைகளை மூடவில்லை. மாசுக்களைக் கட்டுப்படுத்தும் விதிகளை மீறாமல் பார்த்துக் கொண்டார்கள். தண்டனையாக EPA விதித்த வரிகளைக் கட்டினார்கள். அதனால் வேலையிழப்பும் இல்லை. தொழிற்சாலைகள் உருவாக்கிய பொருட்களுக்காக அயல்நாட்டை அண்டிப்பிழைக்கவும் இல்லை. 

தொழிற்சாலைகளால் காற்று, நீர்நிலைகளில் ஏற்பட்டிருக்கும் மாசுக்கள் உயிரினங்களை, சுற்றுச்சூழலை எவ்வாறு பாதிக்கிறது என்பதை கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்நாள். வரும் சந்ததியினர் சுத்தமான காற்றைச் சுவாசிக்கவும், சுகாதாரமான நீரைக் குடிக்கவும், ஆரோக்கியமான வாழ்க்கையை வாழவும் அரசும், மக்களும் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் ஏராளம். பணம் மட்டுமே நம்மைக் காத்து விடாது என்று கொரோனாவும் கற்றுக் கொடுத்திருப்பதை மறந்தால் பூமித்தாயின் கோரத்தாண்டவத்திற்கு மேலும் பலியாக நேரிடும்.

ஐம்பூதங்களின் அருளின்றி வாழ்க்கை இல்லை. அதனைக் காத்திடவும், அழகான இப்பூமியில் உயிரினங்கள் மகிழ்ந்து வாழவும் "உலக பூமி தினம்" கொண்டாடுவோம். நம் சந்ததியினர் குறைவின்றி வாழ வழிவகுப்போம்.

"பூமி நமது தாய். அந்த தாய்க்கு என்னவெல்லாம் நேரிடுகிறதோ அதுவே அவளுடைய பிள்ளைகளான நமக்கும் நாளை நேரிடும். ஏனென்றால், பூமி மனிதனுக்குச் சொந்தமானது அல்ல. மனிதன் தான் பூமிக்குச் சொந்தமானவன்."
-நம்மாழ்வார்.

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...