'அமரன்' திரைப்படம் தீபாவளிக்கு அமெரிக்காவிலும் திரையிடப்பட்டு பெரும்பான்மை மக்கள் கண்டுகளித்த சில படங்களில் அதுவும் நல்ல இடத்தைப் பிடித்து விட்டது. நண்பர்களுடன் சேர்ந்து நானும் சென்று பார்த்தேன்.
'பயோபிக்' என்பதால் கதையில் சொதப்பல் இல்லை. என்ன அதிசயம்! ராணுவ காட்சிகளை மிகத் தத்ரூபமாக எடுத்திருந்தார்கள். 'காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்திற்குப் பிறகு கண்கலங்க வைத்த படம்.
'மேஜர் முகுந்த் வரதராஜன்', ஒரு நல்ல மகன், காதலன், கணவன், மிக முக்கியமாக, படைத்தலைவன். தன் குழுவில் இருப்பவர்களின் உயிருக்காக எந்த எல்லை வரைக்கும் சென்ற மகத்தான மனிதன்! முப்பது வயது வரை மட்டுமே வாழ்ந்தாலும் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்த அற்புத மனிதன்.
உயிருக்கு உத்தரவாதமற்ற நாட்டுப்பணியில் சேர நம்மில் எத்தனை பேருக்குப் பிடிக்கும்? மனசு வரும்? அதுவும், சாதாரண அரசு சம்பளத்தில்! சுயநலம் பிடித்தவர்கள் நாம். வெகு சிலருக்கே, தன்னையும் தன் குடும்பத்தையும் மீறி, தான் பிறந்த நாட்டிற்காக உயிரையும் கொடுக்கும் துணிவு இருக்கும். அது 'மேஜர் முகுந்த் வரதராஜனின்' வாழ்க்கையைப் பார்க்கும் போது எத்தனை கடினமான மனதையும் அசைத்து விடுகிறது.
முப்பது வயது மகனை இழந்த பெற்றோர்களின் வலி, கணவனுடன் முழுதாக வாழ்ந்த சில அரிய கணங்களைத் தவிர, அவன் நினைவிலே வாழ்ந்த அவனின் மனைவியின் ஆறாத வலி, தந்தைக்கு என்ன ஆனதே என்று தெரியாத ஒரு மகளின் பெரும்வலி. அது தான் இன்று பலரையும் அழ வைத்திருக்கிறது.
ஒரு நல்ல மகனாக, காதலனாக, கணவனாக, தன் படையினரைக் காக்க, எதிரிகளைத் தைரியத்துடன் எதிர்கொள்ளும் படைத்தலைவனாக, தன் தேசத்தைக் காக்க, தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 'மேஜர் முகுந்த் வரதராஜன்' ரியல் ஹீரோ! ராயல் சல்யூட்!
சிவகார்த்திகேயனின் படங்களிலேயே முத்தாய்ப்பாக அவருக்குக் கிடைத்த வாய்ப்பை மிக அருமையாகப் பயன்படுத்தி, நன்றாக நடித்து, தன்னை நிரூபித்திருந்தார். சாய் பல்லவி, ஆஸ்கார் விருதுக்குத் தகுதியானவராகத் தன்னை நிரூபித்து விட்டார். அருமையான நடிப்பு!
முகுந்தின் அம்மாவாக நடித்திருந்தவரின் கேலி வசனங்களுக்குப் பின்னால் இருக்கும் வலி, படைவீரர்களின் அம்மாக்களுக்கே உரித்த வலி. என்ன அதிசயம்! கமல் தயாரிப்பு, ரகுமானை/அனிருத்தை இசை அமைக்கக் கேட்காமல், ஜிவிபிரகாஷிடம் கேட்டிருக்கிறது. காது சவ்வு கிழியாமல் படத்தோடு ஒன்றிப் போன இசையை அளித்த ஜிவிபிரகாஷிற்கு ஒரு சபாஷ்! படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமிக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்.
தான் செய்த பாவங்களுக்கு ஏதாவது ஒருவிதத்தில் பரிகாரம் தேடிக்கொள்வது மனித இயல்பு. அப்படித்தான் கமலுக்கும் இந்தச் சந்தர்ப்பம். மற்றவர்களுக்கும்.
வட இந்தியர்கள் அளவிற்குத் தமிழ்நாட்டில் ராணுவத்தினைப் பற்றிய அறிவும் ஈடுபாடும் சற்றே குறைவாக இருந்தாலும் ஒரு திரைப்படமாகத் தமிழில் அழகான படத்தைக் கொடுத்திருப்பது இது தான் முதல் தடவை என்று நினைக்கிறேன். ஹிந்தியில் ஏராளமான படங்கள் வந்துகொண்டிருக்கிறது.
நம்மிடையே 'முகுந்த் வரதராஜன்கள்' வாழ்ந்து வருவது நமக்குப் பெருமை. இந்தியர்கள் என்ற உணர்வு இருக்கும் அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும். நெஞ்சைத் தொடும்.
ஜெய் ஹிந்த்!
ஜெய் பஜ்ரங்பலி!