Saturday, July 21, 2012

வார விடுமுறை தினங்கள்

இன்று காலையிலிருந்தே சோம்பேறித்தனமான நாளாகப் போய்க் கொண்டிருக்கிறது. டிவியில் P .சுசீலாவின் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது என்னுடைய சிறு வயது வார விடுமுறை நாட்களைப் பற்றிய ஞாபகங்கள் வர , இந்தப் பதிவு. எப்படி ஆரம்பித்தாலும் அது சாப்பாட்டில் கொண்டு தான் முடிகிறது. அப்படி ஒரு சாப்பாட்டுப்ரியை நான்.

அந்த நினைவிலேயே வாழைக்காய் பஜ்ஜி போட்டேன். கருப்பட்டியும் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் சிறிது நேரத்தில் கருப்பட்டி ஆப்பமும் ரெடி. சாப்பிட்டுக் கொண்டே இந்த பதிவு.
நான் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் காலங்களில் சனிக்கிழமைகளில் பொதுவாக அரை நேரப் பள்ளிக்கூடம் இருக்கும். சாயங்கால வேளைகளில் இரண்டு மூன்று தெருக்கள் தள்ளி வள்ளுவர் ஸ்டால் என்று முறுக்கு, பக்கோடா, காராச்சேவு, காராபூந்தி, நெய்க்கடலை, மசாலாக்கடலை என்று பல தினுசு நொறுக்குத் தீனிகளையும் சிறுசிறு கண்ணாடி ஜாடிகளுக்குள் போட்டு வைத்திருப்பார். எங்கள் எல்லோருக்கும் என்ன என்ன வேண்டும் என்று கேட்டுக் கொண்டு யாராவது ஒருவர் போய் வாங்கி வருவோம். அவர் அழகாக பேப்பரில் கோன் மாதிரி பண்ணி கை நிறைய கேட்ட ஐட்டங்களைப் போட்டு தருவார். அவர் கடைக்கு எதிரிலே வாய் பேச முடியாத ஒருவர் இதே மாதிரி ஒரு கடை வைத்திருந்தார்.அவரிடம் எப்போதாவது வாங்குவது உண்டு. அவர் கடை பலகாரங்களின் சுவை வேறு மாதிரி இருக்கும். சில நேரங்களில் வீட்டு முக்கில் இருக்கும் பொரிகடலை கடையிலிருந்து ஆளுக்கு ஒரு வறுத்த கடலை, பொட்டுக் கடலை பொரி, பொட்டுக் கடலை கலந்த ஒரு பொட்டலம் என்று வாங்கி வந்து சாப்பிடுவதும் உண்டு.

ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் ஒரு வயதான பெண்மணி அப்பம், அப்பம் என்று கருப்பட்டி ஊற்றி செய்த இட்லியில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய தேங்காய் சில்லுபோட்ட இனிப்பு பலகாரம் விற்றுக் கொண்டு வருவார். அவ்வளவு சாஃப்டாக வாயில் வைத்தால் கரையும் அந்த பலகாரம். இப்பொழுதெல்லாம் இவர்கள் வருகிறார்களா, மக்களும் இவற்றை எல்லாம் சாப்பிடுகிறார்களா என்ன? மதிய நேரம் வருவதற்குள் இன்னொருவர் ஆட்டு ரத்தப் பொரியல் சுடச்சுட விற்றுக் கொண்டு வருவார். கருவேப்பிலை வாசனையுடன் கொஞ்சமே சாப்பிட்டாலும் மிகவும் ருசியாக இருக்கும்😍

பெரும்பாலான சௌராஷ்டிரா வீடுகளில் ஞாயிற்றுக்கிழமை மணக்க மணக்க கறிக்குழம்பு சாப்பாடு தான். நன்றாக சாப்பிட்டு விட்டு உண்ட மயக்கம் தொண்டனுக்குச் சொந்தம் என்கிற மாதிரி ஒரு குட்டித் தூக்கம் போட்டு விட்டு மாலையானதும் MLA ரேடியோ கடையின் உபயத்தால் பல டிஎம்எஸ் , பிபிஎஸ், பி.சுசீலா பாடிய பல பாடல்களைக் கேட்டிருக்கிறோம். எங்கள் தெருவில் நடிகர் திலகம் ரசிகர் மன்றமும் டிஎம்எஸ் ரசிகர் மன்றமும் புன்னகை அரசி கே.ஆர்.விஜயா ரசிகர் மன்றங்களும் இருந்ததால் இவர்கள் நடித்த பாடல்களைப் போட்டு தெருவில் அனைவரும் வாசலில் உட்கார்ந்து அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த காலம். இந்த தொல்லைக்காட்சிப் பெட்டி வந்தவுடன் அந்த ஆனந்த வாழ்க்கை போய்த் தான் விட்டது. வந்த நாள் முதல் இந்த நாள் வரை, ஓராயிரம் பார்வையிலே, அத்தான்... என்னத்தான், அத்தைமடி மெத்தையடி , உள்ளத்தில் நல்ல உள்ளம் என்று பல நெஞ்சில் நின்ற பாடல்களைப் போடுவார்கள். சில சமயங்களில், சுமதி, நீ எப்படிம்மா இருக்கே என்று சிவாஜி கணேசன் உள்ளம் உருகி பேசிய திரிசூலம், என் மூக்கு, என் நாக்கு, என் ராசாத்தி என்று சிவாஜி டப்பாங்குத்து ஆடிய பட்டிக்காடா பட்டணமா, கேள்விகளை நான் கேட்கவா அல்லது என்று திருவிளையாடல், நாரதா சக்தி பெரிதா, செல்வம் பெரிதா என்று சரஸ்வதி சபதம் என்று பல படங்களின் வசனங்களையும் கேட்டு பொழுதை போக்கியிருக்கிறோம்.அந்த காலங்களில் வந்த படங்களிலிருந்து புதிய பாடல்களையும் போடுவார்கள். மைக் மோகன் நடித்த பாடல்கள் அப்போது மிகவும் பிரபலம். அதெல்லாம் ஒரு காலம்!
இதெல்லாம் கேட்டுக் கொண்டே அந்த நேரத்தில் கிடைக்கும் நொறுக்குத் தீனிகளை சாப்பிட , ஆனந்தம், ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்😊😊

மதிய நேரத்தில், பஞ்சு மிட்டாய், பஞ்சு மிட்டாய் என்று ஒரு பெரிய வண்டியில், பெடலை மிதிக்க சுற்றுகிற அந்த பெரிய கொப்பரை மாதிரி பாத்திரத்தில் சக்கரையைக் கொட்ட , ரோஸ் கலர் பஞ்சு வர ஆரம்பிக்க, ஒரு குச்சியில் சுற்ற , சுற்ற, பஃப் என்று அழகாக உருமாறும் அந்த மிட்டாய். அதை அமுக்கினால் சிறு உருண்டை ஆகி விடும். இனிப்போ இனிப்பு. அவ்வளவு இனிப்பு. 😋
சில மாலைகளில், தெருவில் வரும் உடித் என்கிற வேகவைத்த கருப்பு உளுந்து விற்றுக் கொண்டு அதன் மேல் தூவிய பொரிக்கடலை, மிளகாய் சேர்த்து பொடித்த பவுடர் , பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் துண்டுகள் அவர் வைத்துக் கொடுக்கும் பேப்பரில் சாப்பிட..ம்ம்ம்.என் பாட்டிக்காக அடிக்கடி வாங்குவதால் நாங்கள் அவருடைய ரெகுலர் கஸ்டமர்கள். உளுந்து ஓரத்தில் வைக்கும் மிளகாயை கடித்தவுடன் ஏற்படும் சுர்ர்ர் காரம் உச்சி மண்டையைத் தொட, தண்ணீரைத் தேடி ஓடியதும்....
சில தெருக்கள் தள்ளி கருப்பட்டியை கோதுமை மாவில் கலந்து அச்சில் ஊத்தி ரொட்டியாக விற்பவரிடமிருந்து வாங்கி வந்து அதையும் சாப்பிட்டிருக்கிறோம்.

சில மாலைகளில், ஒருவர் இரண்டு அலுமினியத் தூக்குகளில் முறுக்கு அதிரசம், ரவா உருண்டை, கமர்கட் வைத்துக் கொண்டு எங்கள் வீட்டுக்கு எதிரில் வந்து நின்று கொண்டு வெகு அழகாக குழந்தைகளை கவரும் வகையில் கூவி கூவி விற்பார். எப்பாடா வருவார் என்று காத்துக் கொண்டிருக்கும் எங்களைப் போன்ற குழந்தைகளுக்கு அவரைப் பார்த்தாலே ஜாலி ஜாலி தான்.

சைக்கிளில் பலகை ரொட்டி மைதா மாவினால் செய்த பல வகை ரொட்டித் துண்டுகள் என்று விதவிதமான இனிப்புகளை ஒருவர் விற்றுக் கொண்டு வருவார்.
இவர் போக, மெதுவாக ஒரு தள்ளு வண்டியில் அடுப்பில் எண்ணைக் கொதிக்க, இன்னொரு அடுப்பில் தோசைக் கல்லுடன் பங்கராபான் பைரி , நளறு பைரி, போளியல், சுஜ்ஜியாப்பம் என்று கீரை வடை, தேங்காய் அரிசி மாவினால் செய்த பதார்த்தங்களைச் சுடச்சுட விற்றுக் கொண்டே ஒரு குடும்பம் வரும். அவ்வளவு ருசியாக இருக்கும்.

இரவு நேரத்தில் வேகவைத்த கடலை வண்டி ஒன்று வரும். எங்கள் அனைவருக்கும் பிடித்த ஒன்று . வேகிற கடலை வாசனையும், பெட்ரோமாக்ஸ் விளக்கின் வாசனையும் ......சுடச்சுட வறுத்த கடலை வண்டியும் வரும். அவர் சுடு மண்ணில் சரக் சரக் என்று கடலையை வறுப்பது வேடிக்கை பார்க்கவே அவ்வளவு நன்றாக இருக்கும். அவரிடம் இருக்கும் அந்த சின்ன படியில் நிறைய எடுத்து ஒரு விரலால் மேலே இருக்கும் கடலைகளைத் தள்ளி விட, கோன் மாதிரி மடித்த காகிதத்தில் போட்டு பெரிய பொட்டலமாக கொடுப்பார். உள்ளே கொஞ்சம் கடலை தான் இருக்கும்:(
இவருக்குப் பிறகு மூடிய வண்டியில் வரும் அந்த இனிப்பான பட்டர்பன், தேங்காய் துருவல் நடுவில் வைத்த பன் என்று விதவிதமான கேக் வகைகளைக் கொண்டு மணியடித்துக் கொண்டே வருபவரிடமும் நொறுக்குதீனிகள் வாங்கிச் சாப்பிட்டிருக்கிறோம்.

குல்பி ஐஸ் கூட லேட்டாகத்தான் வரும். எவ்வளவு சாப்பிட்டாலும் உடம்பு வெயிட் போடாத காலம். கடைசியில் டின், டின் மிட்டாய் வண்டி வரும். இனிப்புடன் கழிந்த தினங்கள்!

நினைத்தாலே இனிக்கும். இவ்வளவு தின்பண்டங்கள் கிடைத்த காலம்! இப்பொழுதும் கிடைக்கலாம். மற்ற ஊர்களில் எப்படியோ மதுரையில்
இன்றும் தொடருகிறது. இவ்வளவும் சாப்பிட்டாலும் ஸ்லிம்மாக இருந்த நான்! இதையெல்லாம் நினைத்தாலே இப்பொழுதெல்லாம் எடை கூடி விடுகிறது.

No comments:

Post a Comment

அமேசிங் பிரிட்டன் -8- சௌத்போர்ட்- பிரிஸ்டல்- பாத் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 316ல் வெளிவந்துள்ள பயணக்கட்டுரைத் தொடரின் எட்டாம் பாகம்.  சௌத்போர்ட்- பிரிஸ்டல்- பாத் பயணக்குறிப்புகள்   பயணங்களில் நம்மை அறிய...