Monday, July 1, 2013

கும்பகோணம் - ஆலங்குடி, தாராசுரம்

மதிய உணவை முடித்து கொஞ்ச நேரம் இளைப்பாறிய பிறகு, ஆலங்குடி கோவிலுக்குச் சென்றோம். குருபகவான் கோவிலுக்கு கூட்டத்திற்கு பஞ்சமா, அதுவும் குருப்பெயர்ச்சி நடக்க போகிற நேரத்தில்? பரிகார ஸ்தலம் வேறு! நல்ல கூட்டம். புது வருடத்தை முன்னிட்டு சுவாமி, அம்மன் அலங்காரம் எல்லாம் மிகவும் அழகாக இருந்தது. நாங்கள் போன எல்லா கோவில்களிலும் அலங்காரங்கள் எல்லாம் ரொம்பவே சூப்பராக இருந்தது. கோவிலுக்கும் மாலைநேர கூட்டம் வர ஆரம்பித்து விட்டது. அர்ச்சகர்கள் அர்ச்சனைத் தட்டுக்களுடன் படு பிசியாக இருந்தார்கள்!நாங்களும் சுவாமி தரிசனம் முடித்து குளத்தையும் வேடிக்கைப் பார்த்து விட்டு வெளியில் வந்தோம்.

தள்ளு வண்டியில் சரக்சரக் என்று சுடுமணலில் கடலை வறுப்பதை பார்த்தவுடன் சாப்பிட வேண்டும் என்ற ஆசையில் ஆளுக்கு ஒரு பொட்டலம் வாங்கிக் கொண்டு கார் நிறுத்தியிருந்த இடத்திற்கு நடந்து போகையில் திண்ணை வைத்த வீட்டைப் பார்த்தவுடன் வா கொஞ்ச நேரம் இங்கு உட்கார்ந்து போகலாம் என்று என் மகளுடன் சிறிது நேரம் அங்கு உட்கார்ந்து திண்ணை வீடுகள் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். ஒட்டுவீடு, வேப்பமர நிழல், நன்றாக வாசல் மொழுகி கோலமிட்டு அந்த இடமே குளுகுளுவென்றிருந்தது. வீட்டுக்குள்ளும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். திண்ணை வைத்த வீடுகள் அரிதாகி வரும் இக்காலத்தில் அங்கு உட்கார்ந்திருந்தது நன்றாக இருந்தது. அங்கு குடியிருப்பவர்கள் நல்ல மனமுடையவர்கள் போல. வீட்டின் முன் வளர்ந்திருந்த வேப்பமரத்தை வெட்டி எறியாமல் அதனைச் சுற்றி நிழலுக்காக கொஞ்சம் எக்ஸ்டென்ஷன்  போட்டிருந்தார்கள். இன்னும் மரங்களை மதிக்கிற மனிதர்கள் இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டே காருக்குள் ஏறினோம்.


வழியில் அபய வரதராஜ பெருமாள் கோவிலைப் பார்த்தவுடன் அங்கும் சென்று விடலாம், ஒரு பெருமாள் கோவிலுக்கு கூட போகவில்லை என்று நினைத்துக் கொண்டு உள்ளே போனோம். மிகப் பழைய கோவில். பராமரிப்பு இன்னும் நிறைய வேண்டும் போல. ஆனால், அழகான கோவில். பெருமாள் கோவில்கள் என்றாலே கன்னங்கரிய பெருமாளும், அழகிய தாயாரும், கருடாழ்வாரும், அனுமனும் என்று அந்த கோவிலிலும் இருந்தது. அர்ச்சகரும் பெருமாளின் பாதம் ஆரம்பித்து பெருமாள் பெருமையை சொல்லிக் கொண்டே தீபாராதனை காட்டி பூஜை செய்தது மகவும் திருப்தியாக இருந்தது. துளசி, பச்சைக்கற்பூரம் போட்ட தீர்த்தம், சிறிது பூ, குங்குமம் என்று அவர் கொடுத்ததை வாங்கி கொண்டு அந்த சின்ன கோவிலை வலம் வந்தோம். அதற்குள் ஒரு சிறு நந்தவனம். கூட்டம் இல்லாததால் அமைதியாக இருந்தது. அர்ச்சகரும் பொறுமையாக பூஜை செய்கிறார்.


பிறகு தாராசுரம் போவோம் அங்கு அழகான சிவன் கோவில் இருக்கிறது
என்று என் தம்பியும் சொல்ல, கேள்விப்பட்டதில்லையே அப்படி என்ன ஸ்பெஷல் அந்த கோவிலில் என்று நான் கேட்க, நீ பார்த்தால் உனக்குப் புரியும் என்று சொன்னதும் ரொம்பவும் ஆர்வமாகி விட்டது எனக்கு. சாலைகள் எல்லாம் நன்றாக இருந்தது. வழிகாட்டிகளும் நன்றாகவே வைத்திருக்கிறார்கள். இந்த பஸ்நிலையத்தில் தான் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் சில காட்சிகள் எடுத்திருந்தார்கள், கும்பகோணம் கலைக் கல்லூரியில் விக்ரம் படம் ஒன்றும் எடுத்தார்கள் என்று சொல்லிக் கொண்டே வர, தாராசுரமும் வந்து விட்டது. கொஞ்சம் நெரிசலான நகர்.
தாராசுரம்

நேர்த்தியாக பராமரிக்கப்பட்ட புல்வெளிகள். வண்டிகளை நிறுத்த வசதியாக இடங்கள் என்று பார்க்கும் போதே தெரிந்து விடுகிறது, இந்த கோவில் தொல்லியல் துறையின் கீழிருக்கிறது என்று. மாலை நேரம் நல்ல கூட்டம் இருந்தது. கோவில் வெளிச்சுற்று சுவர்களைப் பார்த்தவுடனேயே தஞ்சாவூர் கோவில் ஞாபகம் வந்தது.

தாராசுரம்
 கோவில் சுற்றுச் சுவற்றில் ஒரே அளவில் சிறுசிறு நந்தி சிலைகள். சில உடைந்த நிலையில். உள்ளே நுழைந்தவுடன் வரவேற்கும் ரத மண்டபம் மட்டுமே போதும் சோழ அரசர்களின் கலை ஆர்வத்தையும், கலைஞர்களின் வித்தையையும் பறைசாற்றும். தேரின் குதிரைகள், சக்கரங்கள் சிதிலமடைந்து அதை ஒட்டி சரி செய்திருக்கிறார்கள். கோவிலின் பெரும்பாலான சிலைகள் சேதமடைந்து அதை கவனத்துடன் சேர்த்து அதன் கலைஅழகை முடிந்தவரையில் பராமரித்திருக்கிறார்கள். சிலைகளை பார்க்கும் போதே சேதங்கள் நன்கு தெரிகிறது. குழந்தைகள் குதிரை, யானை சிலைகள் மேல் அமர்ந்து விளையாடி கொண்டிருந்ததைப் பார்க்க சந்தோஷமாக இருந்தது. பெரிய நாயகி அம்மனும், ஐராவதேஸ்வரரும் அருள்பாலிக்கிறார்கள்.

நீண்ட மண்டபகங்கள், பெரிய விமானங்கள் என்று தஞ்சாவூர் கோவில் அளவு இல்லை என்றாலும் மீண்டும் மீண்டும் அந்த கோவிலையே நினைவுறுத்தியது. பிரகாரங்களை சுற்றி வரும் பொழுது மூக்குடைந்து, கையுடைந்து இருந்த சிலைகளை பார்க்க வருத்தமாக இருந்தது. சே எப்படி எல்லாம் கலைப் பொக்கிஷங்களை உடைத்து வைத்திருக்கிறார்கள் மூடர்கள் என்று நாங்கள் பேசிக் கொண்டே போகும் பொழுது சௌராஷ்டிராவில் ஒருவர் இதெல்லாம் படையெடுப்பில் இப்படி ஆகி விட்டது என்று போகிற போக்கில் சொல்லிக் கொண்டே போனார்! வெளியில் உடைந்த நிலையில் மதில்கள், பெரிய அகழி போன்று கோவிலைச் சுற்றி. மாலை சூரியன் மறையும் நேரத்தில் அந்தக் கோவில் கோபுரங்கள் தகதக வென்று ஜொலிப்பதை பார்த்துக் கொண்டே கோவிலை விட்டுப் போக மனமில்லாமல் வெளியில் வந்தோம்.

தாராசுரம்
கண்குளிர தரிசனத்தை முடித்து விட்டு கும்பேஸ்வரர் கோவிலுக்குத் திரும்பினோம். மாலை நேரம். கூட்டம் வர ஆரம்பித்திருந்தது. காலணிகள் பாதுகாக்கும் இடம் என்ற இடத்தில் இலவசம் என்று போட்டிருந்த பலகை எனக்கென்ன என்று சிரித்துக் கொண்டிருந்தது. ஒரு பெண்மணி செருப்புகளுக்கு டோக்கன் கொடுத்துக் கொண்டே வர, நாங்களும் எங்கள் டோக்கனை வாங்கிக் கொண்டு கோவிலுக்குள் போனோம். பார்த்த முகங்கள் எல்லாம் சௌராஷ்டிரா மக்கள் என்று சொல்லி விடலாம். நிறைய சௌராஷ்டிரா மக்கள் கும்பகோணத்தில் இருக்கிறார்கள்!

பெரிய ராஜகோபுரம்! நீண்ட மண்டபகங்கள். நடுநாயகமாக கும்பேஸ்வரர் வீற்றிருக்க, அழகிய மங்களாம்பிக அன்னையின் சன்னிதானமும் பக்கவாட்டில். விநாயகர், முருகன், அறுபத்து மூன்று நாயன்மார்கள், மற்றும் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் இருப்பது போல் பிட்சாடனார், நந்தி, லிங்கங்கள், நவக்கிரகங்கள் என்று ஏராளமான சன்னதிகள். குளமும் அழகாக பெரியதாக இருந்தது. கண்குளிர சுவாமி தரிசனம் முடிந்தது. கரண்ட் இல்லாததால் சில இடங்கள் இருளில் :(

வெளியில் வந்து காலணிகளை இங்கே விட்டு செல்லுங்கள், இலவசம் என்ற பலகையின் கீழ் காசு கொடுத்தால் தான் ஆச்சு என்று ஒரு வழியாக செருப்பை வாங்கிக் கொண்டு இருட்டில் கோவிலை விட்டுத் தெருவிற்கு வந்தோம். சிறு கடைகள் எல்லாம் மெழுகுவர்த்தி உதவியுடன், பெரிய பெரிய ஆள் முழுங்கி ஆலுக்காஸ், சேலைக்கடைகள் எல்லாம் ஜெனரேட்டர் உதவியுடன் ஒளி வெள்ளத்தில்! கும்பகோணம் கொசுக்களின் ஆதிக்கம் வேறு ஆரம்பமாகி விட, தூக்கமும் படுத்த வரும் வழியில் சாரங்கபாணி பெருமாள் கோவிலைப் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொண்டே, ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தோம். சிறிது நேரம் பேசி விட்டு பழங்கள், பால் சாப்பிட்டு விட்டு நானும் என் மகளும் தூங்கி விட, என் தம்பி இரவு சாப்பாடு சாப்பிட கிளம்ப...

அந்த நாள் என் வாழ்நாளில் ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருந்ததை நினைத்து ஆனந்தமாக தூங்கிப் போனேன்.

10 comments:

 1. பலமுறை சென்றதுண்டு... எல்லாம் எங்களின் உறவினர்கள் தான்...

  வாழ்த்துக்கள்... நன்றி...

  ReplyDelete
 2. //பலமுறை சென்றதுண்டு// கொடுத்து வைத்தவர்கள் :)

  நன்றி, தனபாலன்.

  ReplyDelete
 3. Mam, my dad also recently visited this Darasuram temple and shared few pics to me. Here is the link to the album - http://goo.gl/UwPZq

  He described this temple as 'magnificent' one.

  ReplyDelete
  Replies
  1. Thanks for sharing the pictures, Aravind. Good to see your mom. Yes, it's a beautiful temple!!!! Loved it!

   Delete
 4. Nice temple photos. Had been to Alungudi, Darasuram is in pending list.

  ReplyDelete
  Replies
  1. Thanks, Guha Rajan. It's a must see temple!!!

   Have you been to Gangaikonda cholapuram?

   Delete
 5. இந்தக் கோவில் தொடர்பில் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியம் அவர்கள் எழுதிய கட்டுரை ஒன்றினை இணையத்தில் வாசித்திருக்கிறேன்.தாராசுரம் ஒரு கலை பொக்கிஷம். இத்தனைக்கும் அது தஞ்சை பெரிய கோவில் மற்றும் கங்கை கொண்டபுரத்து கோவிலை விடவும் காலத்தால் பிந்தையது. ஏதோ காரணங்களினால் கைவிடப் பட்டு அழியும் நிலையில் இருந்ததை தொல்பொருள் துறையினர் கையிலெடுத்து மறு சீரமைத்திருக்கின்றனர்.

  இந்தக் கோவிலைப் பற்றி இன்னும் நிறைய எழுதலாம்.... :)

  உங்களுடைய தொடர் விறுவிறுப்பாய் போய்க் கொண்டிருக்கிறது.....தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி சரவணன்.

   இணையத்தில் அந்த கட்டுரையை தேடிக் கொண்டிருக்கிறேன்.

   பொழுது சாயும் நேரத்திற்கு இந்த கோவிலுக்குப் போனதால் மண்டபங்களையும், அதிலிருந்த சிற்பங்களையும் பார்ப்பதற்குள் இருட்ட ஆரம்பித்து விட்டது. ஒரு நாள் இதற்கென்றே ஒதுக்கிப் போயிருந்தால் நிதானமாக நன்றாக கோவிலை சுற்றிப் பார்த்திருக்கலாம் :(

   சோழர்களின் மாபெரும் கலைப்பொக்கிஷம்!!!!

   Delete
 6. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க அக்கா. நேரில் சென்று வந்த மாதிரி இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. நன்றி, குமரன்.

   Delete