திருவண்ணாமலையில் காலை உணவை முடித்துக் கொண்டு பாண்டிச்சேரி நோக்கிப் பயணமானோம். மீண்டும் அதே குண்டு குழி ரோடுகளின் வழியே சென்றாலும், காலை நேரப் பயணம் என்றுமே ஆனந்தம் தான்...சில இடங்களில் சாலைகளின் இருபுறமும் பெரிய பெரிய புளியமரங்கள் அடர்த்தியாக நிழலுடன். அந்த இடம் மட்டும் ஏதோ சில்லென்று இருப்பது போல் ஒரு உணர்வு.
மேய்ச்சலுக்கு ஆடு,மாடுகளுடன் செல்பவர்கள், மாட்டு வண்டிகள், மக்களை சுமந்து சாய்ந்து ஊர்ந்து செல்லும் வாகனங்கள், நடந்து பள்ளிக்கு செல்லும் சிறுவர்கள், அரசு அளித்த மிதிவண்டிகளில் செல்பவர்கள், அதிவேக பைக்கில் கல்லூரி செல்லும் கட்டிளங்காளைகள், நான்கு சக்கர வாகனங்களில் ஊருக்குள் செல்பவர்கள், ஊரை விட்டு செல்பவர்கள், கட்சி கொடிகளை பறக்க விட்டுக் கொண்டு சாலை விதிகளை 'கவனத்துடன்' மீறிக் கொண்டு செல்லும் அரசியல்வாதிகளின் கார்கள், கிடைக்கிற கேப்பில் வளைந்து நெளிந்து செல்லும் ஆட்டோகாரர்கள், எருமைகளை அடைத்துக் கொண்டு மாநிலம் விட்டு மாநிலம் போகும் லாரிகள், புழுதி பறக்க ஆற்று மணலை எடுத்துக் கொண்டு யாரை பற்றியும் கவலை படாமல் போகும் லாரிகள் என்று பொறுமையில்லாத பலதரப்பட்ட வாகனங்களுடன் உயிரை கையில் பிடித்துக் கொண்டு திண்டிவனம் சாலையில் பயணம்.
வழியில் ஓரிடத்தில் எல்லை/காவல் தெய்வம் அமர்ந்திருக்க அவரைச் சுற்றி சிறு சிறு தெய்வங்களும். சமீபத்தில் யாரோ பொங்கல் படைத்து வழிபட்டிருந்தார்கள். மிகவும் வண்ணமயமாக இருந்தது அந்த கோவில்.
திண்டிவனம் வந்து சேரும் பொழுது நல்ல வெயில், கூட்டமும் அதிகமாகி விட்டது. ஒரு வழியாக பாண்டிச்சேரி ஹைவேஸ் தொட்டவுடன் சடுதியில் எல்லா கூட்டமும் தொலைந்ததைப் போல் ஒரு பிரமை! ஹைவேஸ் வந்தவுடன் ஆங்காங்கே தெரிந்த பசுமை கண்ணுக்கு குளிர்ச்சி. வாழை, தென்னை, நெற்பரப்புடன் நடுநடுவே அடர்த்தியாக மூங்கில் மரங்கள்! நகரம் நெருங்க,நெருங்க குச்சி மச்சி வீடுகள் பல வண்ணங்களில்!!! பல வீடுகளிலும் தவறாமால் திருஷ்டி பொம்மைகள் படம் அனைவரும் பார்க்கும் வண்ணம்:) சில சமயங்களில் திருஷ்டிக்கே திருஷ்டியா என்று வியக்கவும் வைத்தது! பாண்டிச்சேரி நுழைவாயில் முன்பே பஞ்சவடிக்கு போவதாக திட்டம்.