மேலமாசி வீதி, டவுன்ஹால் ரோடு, திண்டுக்கல் ரோடு, நேதாஜி ரோடு, அம்மன் சன்னதி, வெங்கலக்கடைத் தெருவில் ராஜ் மஹால், SRB சில்க்ஸ், கோ-ஆப்டெக்ஸ் துணிக்கடைகளின் வாசலில் பாவம் போல குழந்தைகளை வைத்துக் கொண்டு வெளியில் வரும் ஒவ்வொரு பெண்ணின் முகத்தைப் பார்த்து இன்னும் இவ மட்டும் என்ன பண்ணிக்கிட்டிருக்கா என்று ஒருவித சலிப்புடன் சில ஆண்களும், இதாண்டா சாக்கு என்று சிலரும், சேலை மட்டும் வாங்கினால் போதுமா தோடு, ஹேர் கிளிப், பொட்டு என்று அம்மன் கோவிலுக்கும், புது மண்டபத்துக்கும் முண்டியடிக்க கிளம்பும் பெண்களும்- அப்போது அவர்கள் முகத்தில் இருக்கும் பரவசம் இருக்கே!!! அடடா!!
மனைவி மனம் நோகாமல் இருக்க, அவளுக்குப் பிடித்தச் சேலைகளை வாங்க தவமாய் தவம் கிடப்பார்கள் தலைதீபாவளி கொண்டாடும் கணவன்மார்கள். சிலர் மனைவிக்குப் பிடித்தாலும் பட்ஜெட் இடிக்குதே என்று கையைப் பிசைந்து கொண்டு வேறு ஏதாவது பார்றா என்று கெஞ்சிக் கொண்டிருப்பார்கள். இப்படி சிரிப்பும் முறைப்புமாய் ஒரு பக்கம்.
கூட்டங்கூட்டமாக கைகளில் லத்தியுடன் ஆண், பெண் போலீஸ்காரர்களும், கூட்டத்தைக் கண்காணிப்பவர்களும் ஏம்ப்பா 7234 ஆட்டோ அங்க நிக்காதே, முன்னாடி போப்பா, சார் இன்னோவா காரைக் கொண்டு போய் அந்த பக்கம் நிறுத்துங்க என்று வண்டிக்கேற்ப, ஆளுக்கேற்ப அசரீரி மாதிரி குரல் கொடுத்து கதிகலங்க வைத்துக் கொண்டிருப்பார்கள்.
தீபாவளி நெருங்க நெருங்க நடைபாதைக் கடைகள் கூட்டமும், பேசியபடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டே தெருவை அடைத்தவாறு போவோர்களும் என்று பெரிய ஜனத்திரளையே பார்க்கலாம்.
நடுவில் தெரிந்தவர்களைப் பார்த்து விட்டால் போதும் நீ என்ன வாங்கினே என்று நடு ரோட்டிலேயே பரஸ்பரம் குசலம் விசாரித்துக் கொண்டு சிரித்துப் பேசியபடியே போகும் இவர்களைப் பார்த்தால் நமக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்.
புது நகைகள் வாங்கும் மக்கள் கூட்டம் தெற்காவணிமூல வீதிக்கும், நடுவில் தாகத்தைத் தீர்த்துக் கொள்ள இளநீரும் குடித்து விட்டு நகர்ந்து ஒரு வழியாக அப்பாடா இன்றைக்கு இது போதும் என்று முடிவெடுத்து எந்த ஹோட்டலுக்குப் போகலாம் என்று மனோரமா, துர்காபவன், மேலமாசி வீதி ஆரியபவன், முருகன் இட்லிக் கடை, சுப்ரீம், சபரீஷ், காலேஜ் ஹவுஸ், மாடர்ன் ரெஸ்டாரன்ட் என்று எங்கு இருக்கிறார்களோ பக்கத்தில் இருக்கும் ஹோட்டலில் சாப்பிட்டு முடித்து இன்னும் வாங்காத பொருட்களுக்கு இன்னொரு நாள் என்று முடிவெடுத்துக் கொண்டு வீட்டுக்குத் திரும்புவார்கள் ஒரு வழியாக!
இப்படி கோவில்களுக்கும் திருவிழாக்களுக்கும் ஹோட்டல்களுக்கும் கடைகளுக்கும், மக்களுக்கும் பஞ்சமில்லாத மதுரையில் தீபாவளி முன் தினம் இருக்கும் பரப்பரப்பு இன்னுமொரு மகுடம். அநேகமாக எல்லா ஊர்களிலும் அப்படித் தான் இருக்கணும். ஆனால், மதுரை தான் நமக்கு ஸ்பெஷல் ஆயிற்றே, அந்த நாளை நினைத்துப் பார்க்கையில் இரட்டிப்பு மகிழ்ச்சி.
முன்பு விளக்குத்தூணிலிருந்து தெற்குமாசி வீதி வரை நடுரோட்டில் கடை பரப்பியது இன்று கீழவாசல், அரசமரம் என்று விரிந்திருக்கிறது. மழையில் பூத்த காளான்களாய் பட்டாசுக் கடைகள், செருப்பு, பாய், பிளாஸ்டிக் குடங்கள், சோப்பு டப்பாக்கள், ஸ்டிக்கர் பொட்டுக்கள், இத்யாதிகள் என்று அக்காவ் மூணு பத்து நாலு பத்து என்று நேரத்திற்கும் ஆளுக்கும் தகுந்த மாதிரி வியாபாரம் செய்யும் வியாபாரிகள்,
விளக்குத்தூணைத் தாண்டி விட்டால் பிளாட்பார துணிக்கடைகள் வாயில் வந்த பெயரைச் சொல்லி அம்மா இங்க வாங்க, இங்க வாங்க இருநூறுபா சேலை நூறு நூறு, அய்யா பனியன், அண்ணே கைலி, அக்கா லேடீஸ் கர்ச்சீப் என்று மாறி மாறி குரல்கள் , மக்கள் கூட்டம் அலைஅலையாய் பேரம் பேசிக் கொண்டு கடைசி நிமிட ஷாப்பிங் முடித்துக் கொண்டிருக்கும்.
சிலர் வெறுமனே கூட்டத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு, சிலர் கையில் இளநீர், திகர்தண்டாவை குடிப்பது போல் பெண்களை நோட்டமிட்டுக் கொண்டு, கூட்டத்தில் இடித்துக் கொண்டே சிலர், பெண்கள் கழுத்தைச் சேலையால் மூடிக் கொண்டு நகைகளை திருடர்களிடமிருந்து காத்துக் கொண்டு நொடிக்கொருதரம் பணப்பை பத்திரமாக இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டும் போகும் கூட்டத்தை பெரியம்மா, பாட்டி வீட்டிலிருந்து பலமுறை கண்டதுண்டு.
கைகளில் துணிகள் வாங்கிய கட்டைப்பை, மஞ்சள் பை, பட்டாசுகள் என்று மனம் நிறைய மகிழ்ச்சியுடன் போகும் பலரையும் காண முடியும்.
விளக்குத்தூண், சின்னக்கடை ஏரியாக்களில் ணங்க ணங்க ணங்க ணங்கன்று நடுராத்திரியிலும் கொத்துப் பரோட்டோ சத்தமும், சால்னா வாசனையும், குஸ்கா, பிரியாணி என்று ராபியா மட்டன் ஸ்டால், அம்சவல்லி, சிம்மக்கல் கோனார் கடை என்று அனைத்து அசைவ ஹோட்டல்களிலும் கூட்டம் அலைமோதும். தூங்கா நகரம் !!!
நடுநடுவில் குருத்து, மாங்காய், பழங்கள் விற்கும் வண்டிகளும் அதை வாங்க அண்ணே எனக்கு ஒண்ணு , எனக்கு ரெண்டு என்று நீண்டிருக்கும் கைகளில் இருந்து பணத்தை வாங்கிக் கொண்டு பிசியாக வியாபாரம் செய்யும் வியாபாரிகள்!
இந்தக் கூட்டத்திலும் பேரம் பேசி வாங்கி விட்டோம் என்று பிளாஸ்டிக் குடங்களையும், டபராக்களையும் அள்ளிக் கொண்டுப் போகும் பெண்கள் பட்டாளம்.
தெற்கு மாசி வீதிக் கடைகளில் ஜொலிக்க ஜொலிக்க விளக்குகள், இனம் மதம் பாராமல் சுறுசுறு பிசினெஸ்! அந்தக் கூட்டத்தில் போய் விட்டு வர தனித் திறமையே வேண்டும்!
ஆர்யபவானில் லட்டு, பால்கோவா, முந்திரி இனிப்புகள், சோன்பப்டி என்று அதை வாங்க தள்ளுமுள்ளு கூட்டம். இந்தக் கூட்டம் எல்லாம் இப்போது டெல்லிவாலாவிலும், வளையக்காரத்தெரு முக்கில் இருக்கும் கடையிலும்! (பால்கோவா, சமோசா...நன்றாக இருக்கிறது ) ஆர்யபவன் கடை மூடி விட்டார்கள் என்று கேள்விப்பட்டேன். இப்பொழுது கிருஷ்ணா, அடையார் ஆனந்த பவனிலும் கூட்டம்!
இப்படியே நடுநிசியைத் தாண்டி அதிகாலை வரை நடக்கும் இந்த வியாபாரம் மழையினால் அடிக்கடி பாதிப்படைந்தது உண்டு. ஆனாலும் குடை பிடித்துக் கொண்டும், மலையில் நனைந்து கொண்டும் ஜோரான வியாபாரம் அதுபாட்டுக்கு நடக்கும்.
பஸ், ரயில்வே நிலையங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். தீபாவளிக்கு ஊருக்கு வருபவர்கள் கூட்டம் வேறு அலைக்களிக்கும். இப்போது எங்கு பார்த்தாலும் கார், பைக், ஆட்டோ என்று எங்கும் நெரிசல் நெரிசல் நெரிசல். சமயங்களில் மூச்சு விடக் கூட திணறுகிற மாதிரிக் கூட்டம்!
மேம்பாலத்தைத் தாண்டினால் அது ஒரு தனி உலகம். ஏகத்துக்கும் அண்ணாநகர், KK நகரிலும் கடைகள், ஹோட்டல்கள் , மால் என்று கலகலக்கிறது!
எப்படியோ விடிந்ததும் தலைக்கு எண்ணெய் வைத்துக் குளித்து, சாமி கும்பிட்டு, புதுத்துணி உடுத்தி, பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கி, பட்டாசு சத்தத்துடன் பலகாரங்கள் சாப்பிட்டு கோவில்களுக்கும், உறவு மற்றும் சொந்தகளைப் பார்க்கவும் என்று கிளம்பும் ஒரு கூட்டம்,
இல்லை இன்றும் தொல்லைக்காட்சி முன் தான் தவம் கிடப்பேன் என்று அடம் பிடிக்கும் ஒரு கூட்டம்,
இன்று என் தலைவர் படம் ரிலீசாகிறது , முதல் ஷோ பார்க்க வேண்டும் என்று அநியாயத்திற்கு காசு போட்டு, பாலாபிஷேகம், சூடம், மாலை என்று தெரியாத ஒருவருக்குப் படையல் செய்து தலைவர் காசு வாங்கி நடித்தப் படத்தை காசு கொடுத்துப் பார்த்து உணர்ச்சிவசப்படுவதில் மக்களை அடித்துக் கொள்ளவே முடியாது.
அடுத்தவர் வீட்டுச் சுவற்றில் வெங்காய வெடி, தெருவில் தௌசண்ட் வாலா வெடிப்பேன் என்று பொடிப்பையன்கள் கூட்டம் ஆனந்தமாக கொண்டாடும் தினம் தான் இந்த தீபாவளி தினம்!
வயதிற்கேற்ற மாதிரி சீனி வெடி, லட்சுமி வெடி, வெங்காய வெடி, சரம், ராக்கெட் என்று ஊதுவத்தியை எடுத்துக் கொண்டு பக்கத்தில் போய் பயந்து பயந்து வெடி வைக்க,
சிறு குழந்தைகள் பொட்டுப் பட்டாசு, சுத்தியல் சகிதம் வலம் வர, அம்மா மடியில் உட்கார்ந்து பாம்பு பட்டாசு பார்த்துக் கண்கள் விரிய, சங்குச்சக்கரம், புஸ்வாணம், கம்பி மத்தாப்பு என்று இரவு வரை நீடிக்கும் இந்த நாள் ஒரு இனிய நாள். 'டபடப' வென்று சுற்றும் சங்குச்சக்கரம் 'படார்' என்று எதிர்பாராமல் வெடிக்கும் போது பயத்துடன் ஒதுங்கியும், மேலே போ மேலே போ என்று தான் சொல்லியதால் தான் புஸ்வாணம் மேலே போயிற்று என்று கைகொட்டிச் சிரித்தும் குழந்தைகளும் பெரியவர்களும் கொண்டாடும் ஒரு அழகிய தினம்!
காலங்கள் மாறினாலும் நினைவுகள் மாறாத இனிய நாள்!
அனைவருக்கும் என் இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்!