நான்கைந்து வருடங்களுக்கு முன் snowshoeing என்று மூங்கிலில் செய்யப்பட்ட டென்னிஸ் ராக்கெட் போன்றிருக்கும் கட்டையின் மேல் ஷூவை மாட்டிக் கொண்டு பனி(snow)யில் நடந்து போவதைப் பற்றி தெரிந்து கொள்ள அருகில் இருக்கும் Environmental Education Centerக்கு நானும் கணவரும் சென்றிருந்தோம்.
அங்கு பறவைகள், விலங்குகள், பூக்கள் இன்னும் பல சுவையான சுற்றுப்புறத் தகவல்களை இலவசமாக பொது மக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் வாரம் முழுவதும் சொல்லிக் கொடுக்கிறார்கள். நாங்கள் அன்று தான் அங்கு சென்றிருந்தோம். நகர்ப்புறத்திலிருந்து சிறிது தள்ளி பல ஏக்கர்களுக்கு மரம், செடி, கொடி, ஏரிகளுடன் அற்புதமாக இருந்தது. பனிக்காலமாதலால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெள்ளைப்பனி தான்.
அந்த டென்னிஸ் ராக்கெட் போன்றிருக்கும் கட்டையில் ஷூவை மாட்டிக் கொண்டு நடப்பதே ஒரு அனுபவம். விழுந்தால் எழுவதற்குள் போதும்போதுமென்றாகி விடுகிறது. அன்று குளிர் ஓகே தான். ஒரு மைல் வரை நடத்திச் சென்று பனிக்காலத்தில் உணவிற்காக வெளியில் வந்த மான், அணில், முயல், இன்னும் பல விலங்குகளின் கால் தடயங்களை வைத்து எங்களை அழைத்துச் சென்றவர் பல சுவையான தகவல்களை கூறிக் கொண்டே வர, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் கேட்டுக் கொண்டே சென்றோம்.
பனிக்காலத்தில் பறவைகளும், விலங்குகளும் உணவை எப்படி கண்டடைகிறது? கொடும்பனியில் இருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்கிறது என்று பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது.
அந்த சென்ட்டரின் நுழைவாயில் பறவைகளுக்காக பல feederகள் வைத்து நிறைய தீவனங்கள் போட்டிருந்தார்கள். நான் இதுவரை கண்டிராத அழகழகு பறவைகள்! அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள ஜன்னலின் அருகிலேயே அவற்றைப் பற்றின தகவல்களுடன் புத்தகங்கள். அங்கு வேலை செய்வோரும் ஆர்வத்துடன் சொல்லிக் கொடுக்கிறார்கள். குழந்தைகளும் ஆரவாரம் செய்தபடி பார்த்துக் கொண்டிருந்தார்கள். பல பறவைகளைப் பற்றி படித்து தெரிந்திருந்தாலும், நேரில் பார்க்கும் பொழுது ஒரு பரவசம் தான். இங்கு வெளிவரும் Conservationist என்ற பத்திரிகையில் பறவைகளின் படங்களை கண்டு அதிசயித்திருக்கிறேன்!
அப்பொழுதே ஒரு bird feeder வாங்கிவிட வேண்டுமென்று நினைத்தாலும் இரு வருடங்களுக்கு முன்பு தான் வாங்கி வீட்டின் முன் இருக்கும் மரத்தில் தொங்க விட முடிந்தது! பலவகையான விதைகளுடன் கூடிய 20பவுண்ட் பை ஒன்றும் வாங்கியாகி விட்டது.
முதலில் குருவிகள் வருகை தந்தன. வீட்டைச் சுற்றி கூடுகளும் கட்ட ஆரம்பித்தது. பனிக்காலம் முடிந்தவுடன் விடியல் அவர்களின் 'கீச்கீச்' குரலுடன் தான் ஆரம்பம். கோடையில் அதிகாலை நான்கு மணியிலிருந்து ஆரம்பமாகி விடும் இவர்களின் ரவுசு. கணவரும் விதவிதமாக படங்கள் எடுக்க ஆரம்பிக்க, குருவிகளில் இத்தனை வகையா?? இதுவரை எனக்குத் தெரிந்ததெல்லாம் ஒரே ஒரு குருவி இனம் தான். தலையில் ஒரு நிறம், தொண்டையில் ஒரு நிறம், இறகுகளில் பல நிறங்கள், பல பெயர்கள்...படங்களில் இருந்து அது என்ன பறவை என்று தேட ஆரம்பித்து அதனைப் பற்றிய தகவல்களைப் படிக்க ஆரம்பித்தவுடன் சுவாரசியம் கூடி, அவர்களை கண்காணிக்க...நேரமும், நாட்களும் போதவில்லை.
ஆண் குருவி, பெண் குருவி என இனம் கண்டுபிடிப்பதிலும் சிரமம் இல்லை. இணையை கண்டு இரண்டும் சேர்ந்து கூடு கட்டுவதிலிருந்து, இருட்டும் நேரத்தில் ஓடிப் போய் கூட்டுக்குள் தஞ்சம் புகும் வரை பறந்து திரியும் பொழுதில் அதன் 'கீச்கீச்' சங்கீதத்திலும், சேர்ந்து விதைகளை தேடித்தேடி உண்ணுவதிலும், விதையை உண்டு தோலை துப்புவதிலும், தண்ணீரைத் தேடி குடிப்பதிலும், மண்ணில் புரண்டு புழுதியில் உடலை புரட்டி எடுப்பதிலும், இணையுடன் சேர அது எழுப்பும் குரலும்(!), கூட்டிற்காக இலை, தழைகளை எங்கிருந்தோ சேர்த்து அதன் மேல் முட்டைகளை அடைகாத்து சின்னஞ்சிறு பறவைகளின் சிறகு முளைத்து பறக்கும் காலம் வரை தாய், தந்தையின் கண்காணிப்பில் அவர்கள் வளர்வது என்று படித்ததை நேரில் பார்த்த பொழுது...அவர்களின் உலகத்தில் இருக்கும் சுவாரசியம் பலவும் ஆச்சரியமாக இருந்தது.
முதன் முதலில் Cardinal ஆண் பறவையை பார்த்த பொழுது ஆச்சரியமாக இருந்தது. வித்தியாசமான ஹேர் ஸ்டைலுடன் உடல் முழுவதும் அடர் சிகப்பு நிறம், முகம் மட்டும் கருமையுடன். சிறிது வண்ணம் குறைந்த பெண் பறவையும் பெரிய கண்களுடன் கொள்ளை அழகு. ஆண் பறவை தன் இணைக்கு ஊட்டி விட்டுத் தன் அன்பை வெளிபடுத்துமாம். வீட்டிற்குப் பின் ஒரு ஜோடி இருக்கிறது. அடிக்கடி வந்து விதைகளை உண்டு செல்லும். நிமிடத்திற்குள் பறந்து விடும்.
K-PAX படத்தில் ஒரு நீலப்பறவை வரும். ஏதோ ஒரு பறவை என்று நினைத்திருந்த எனக்கு வீட்டின் முன் இருக்கும் மரத்தில் அது அமர்ந்திருந்த பொழுது அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. தலைக்கொண்டையுடன் நீல வண்ணமும், வெள்ளை நிறத்துடனும் ஒரு அழகுப்பறவை !! அதுவும் தன் துணையுடன் அவ்வப்போது தரிசனம் கொடுக்க ...ஆனந்தம் ஆனந்தம்...
கைக்கு அடக்கமான அழகு குட்டிப் பறவைகள், கறுப்புத் தலையுடன் வெள்ளை நிறப்பறவை Chickadee. கைகளில் ஏந்த மனம் துள்ளும். அது சாப்பிடுவதும், அலகை தீட்டிக் கொள்வதும், குரலும் ...அழகோ அழகு. பனிக்காலத்தில் அதன் வருகை அதிகமாக இருந்தது. மழைக்காலத்தில் குறைந்து விட்டது.
வெள்ளை நிற முகமும், வயிறும் கொண்ட நீண்ட அலகுடன் 'டொக்டொக்' என்று மரப்பட்டைகளை கொத்திக் கொண்டிருக்கும் Nuthatch, மரங்களில் ஏறி இறங்கும் அழகே அழகு!
இருப்பதிலேயே மிகவும் வேகமானதும், மனம் மயக்குவதும் மரங்கொத்திப் பறவைகள் தான். மரத்தின் மேல் ஏறும் அழகில் மனதை பறிகொடுக்காமல் இருக்க முடியாது தான்! அதிலும் எத்தனை வகைகள்!
Junco என்றொரு குட்டிப்பறவை. பொந்துகளில் கூடு கட்டி வாழ்கிறது. வெள்ளையும், சாம்பல் நிறமும் கலந்த ஒரு அழகு தேவதை. வசீகரமான குரலுடன் இப்பறவைகளும் வலம் வருகிறது.
எனக்குத் தெரிந்த வரையில் காகம் என்றால் கருப்பு நிறத்துடன் இருக்கும். அடர் கருப்பில் அண்டங்காக்கையும் தான். இது வரை நான்கு கறுப்புப் பறவைகளை பார்த்து விட்டேன். ஒவ்வொன்றும் ஒவ்வொருத் தனித்தன்மையுடன்.
Brewer's Black Bird என்று ஒரு காகம். நீண்ட வால், மயில் கழுத்து வண்ணத்தில் இதன் கழுத்தும், பளிச்சென்றிருக்கும் வெள்ளைக் கண்கள், கூரிய அலகுகள். ஆண் பறவை தான் இவ்வளவு அழகுடன்!
Brown-headedCowbirds என்றொரு கருப்பு பறவை இனம். இதுவும் தன் துணையுடனே வலம் வரும் :)
சிறகில் மஞ்சளும், சிவப்பும் வண்ணங்களை கொண்ட Red-winged Blackbird குரல் அப்படி ஒரு கட்டையான குரல். அதே பறவையால் அப்படி ஒரு அழகானவிசிலும் அடிக்க முடியும் என்றால் நம்பித்தானே ஆக வேண்டும். அவர்களுக்குள் பேசும் சங்கேத மொழியோ என்னவோ!
அமைதியாக, பறவைகளுக்கே உரிய ஆர்ப்பாட்டமில்லாத 'Mourning Dove' அழகு தேவதைகள். ஏன் தான் இதற்கு இந்தப் பெயரோ? என்று எண்ண வைக்கிறது. தன் துணையுடனே என்றும் இருக்கும். சேர்ந்தே வருவார்கள், உண்பார்கள், பறப்பார்கள். அதனால் எனக்கு மிகவும் பிடித்த பறவையும் கூட. துணையுடன் இருக்கையில் யாரையும் நெருங்கவும் விடுவதில்லை.
Song Sparrow என்று உடல் முழுவதும் பழுப்பு, வெள்ளை நிறத்துடன் இருக்கும் இந்தப் பறவைகளின் குரல் நன்றாக இருக்குமாம்.
Rock Pigeon -நம்மூர் வெள்ளைப்புறாக்கள் வகையை சேர்ந்தவை. தலையை முன்னுக்கும் பின்னுக்கும் ஆட்டி ஆட்டி நடக்கும் அழகும், வண்ண வண்ண சிறகுகளுடன் மூக்குத்தி அணிந்ததைப் போன்ற அலகுகளுடன் வலம் வரும் பெரிய பறவைகள்- பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
GoldFinch என்று மஞ்சள் வண்ணத்திலும், Purple Finch, House Finch என்று தலையில் சிவப்பு வண்ணத்துடன் வலம் வரும் சிட்டுக் குருவிகளும் பார்ப்பதற்கு அழகோ அழகு.
பூனை போல் கத்தும் Cat Bird. முதலில் குரலை கேட்டவுடன் பூனைக்குட்டி தான் இங்கிருக்கிறதோ என்று எண்ண வைத்து பிறகு அப்படி ஒரு பறவை இருப்பது தெரிந்தது!
கழுத்தை தூக்கி எப்பொழுதும் அலெர்ட்டாக இருக்கும் Robin பறவைகள் பார்ப்பதற்கு மிகவும் வண்ணமயமாக இருக்கிறது.
Killdeer என்றொரு பறவை இனம். ஓரிடத்தில் ஒரு நொடிக்கு மேல் நிற்பதில்லை. நடந்து கொண்டே இருக்கும். 'சடக்'கென்று நின்று விடும். திடீரென்று இறக்கையை தூக்கி இரையை பயமுறுத்துமாம் !
கழுகுகளிலும் ஏராள இனங்கள். பெரிய பறவைகள் பெரிய கூடுகளை உயர்ந்த இடங்களில் கட்டிக் கொண்டு, ஷிப்ட் போட்டு அடைகாப்பதும், உணவை கொண்டு ஊட்டி விடுவதும், குட்டிகள் நன்கு வளரும் வரை பாதுகாப்பதும் ...
ஜோடி ஜோடியாக வாத்து நடை போட்டவர்களும், தன குஞ்சுகளுடன் குடும்பமாக நடந்து செல்வது காண கோடி இன்பம்! வாத்துக்களிலும் பல வகைகள்! ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணாதிசயத்துடன் !
அதிகாலையிலும், இருள் நெருங்கும் வேளையிலும் மனித நடமாட்டம் குறைந்தவுடன் தத்திதத்தி தாவிச் சென்றும், சிறு சத்ததிற்கும் ஓடிச் சென்று தன் பெரிய காதை கூராக்கி கேட்கும் முயல் இனங்கள் கைகளில் எடுத்து கொஞ்சத் தூண்டும் அழகு செல்லங்கள் என்றால்,
மரங்களில் ஓடிவிளையாடும் அணில்களோ இன்னும் அழகு. சிறு கைகளால் குழி தோண்டி உணவை புதைத்து, சுற்றிப் பார்த்து மண்ணை போட்டு மூடும் அழகும், பசிக்கும் வேளையில் எங்கு புதைத்தோம் என்று முகர்ந்து கொண்டே கைகளால் குழியை தோண்டுவதும் ...அதன் உலகமே தனி தான் போல!
பறவைகளில் ஆண் பறவைகளை எளிதில் கண்டு பிடித்து விடலாம். வண்ணத்திலும், அழகிலும் ஒரு படி மேல்!
துணையை கவருவதற்காக அவர்கள் செய்யும் தந்திரங்களும் ஏராளம்! பெண் பறவைகளும் லேசுப்பட்டவர்கள் இல்லை போலிருக்கு :) தன் எல்லையில் பிற பறவைகள் வந்து விட்டால் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பிரச்னை தான் இவர்கள் வாழ்விலும். குஞ்சுகளை அடைகாக்கும் நேரங்களில் அருகில் யாராவது வர நேர்ந்தால் மிக அருகில் பறந்து அவர்களை விரட்டுவதாகட்டும், தேடித்தேடி உணவை கொண்டு வந்து குட்டிகளுக்கு ஊட்டுவதாகட்டும், குட்டிகளின் அருகிலேயே இருந்து அவர்களை கண்காணிப்பாகதாகட்டும் ...மனிதர்கள் தோற்று விடுகிறார்கள்! ஒவ்வொரு பறவையின் கூடும் கைதேர்ந்த வல்லுனரால் கட்டப்பட்டது போல் இருக்கிறது. சில பறவைகள், அடுத்தவர் கட்டிய கூட்டில் முட்டையிட்டு சென்று விடுமாம்!
பறவைக்குஞ்சுகள் பறக்கும் காலம் வந்தவுடன் தாய்ப்பறவை அதை கண்டுகொள்வதில்லை. தந்தைப்பறவை தான் குஞ்சுகளுக்கு ஊட்டி விடுகிறது!
சில பறவைகள் தரையில் ஊர்ந்து செல்லும் பூச்சிகளை உண்டால், சில பறவைகள் பறக்கும் பூச்சிகளை சாப்பிடுகிறது! உருவங்களில், வண்ணங்களில், குரல்களில் என்று பல இனங்கள்! பனிக்காலம் முடிந்தவுடன் கூட்டிற்குத் திரும்பும் பறவைகளும், கோடைமுடிந்தவுடன் புலம்பெயரும் பறவைகளும் ...
நம்மைச் சுற்றியிருக்கும் இவ்வுலகில் பறவைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒரு விதம் ...
பறவைகளின் படங்களை கண்டுகளிக்க ( To view more pictures)...
No comments:
Post a Comment