Friday, March 11, 2016

ஹலோ! கஸ்டமர் சர்வீஸ்... அப்படின்னா???

கல்லூரி படிப்பு முடித்து வேலைக்கு விண்ணப்பித்துக் கொண்டிருந்த காலத்தில் என்னுடைய சீனியர் மாணவி ஒருவர் என்னுடைய resume கொடுத்தால் அவர் வேலை செய்யும் இடத்திலேயே முயற்சிக்கலாம் என்று சொன்னவுடன் பெங்களூர் டேஸ் கனவுகளோடு நானும் அவரை சந்திக்கச் சென்றேன். அப்பொழுது அவர் வீட்டில் இல்லை. அவருடைய பெற்றோர்களிடம் பேசும் பொழுது சமீபத்தில் அவர் வேலை நிமித்தமாக பாரிஸ் சென்று வந்த விவரத்தைக் கூறி அங்கு எடுத்திருந்த படங்களை காண்பித்தார்கள். பரவாயில்லையே, சேர்ந்த ஒரு வருடத்தில் அவருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கண்டிப்பாக இந்த கம்பெனியில் சேரும் வழியை பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

மதுரை ரயில்வே நிலையத்தின் எதிரே இருக்கும் வங்கிக்கு காலையில் சென்றாள். இவ்வளவு நேரம் ஆகியும் இன்னும் ஆளைக் காணாமே என்று அவருடைய அப்பா தெருவை எட்டி எட்டி பார்த்துக் கொண்டே இருந்தார். நான் வேண்டுமானால் இன்னொரு நாள் வருகிறேனே என்றதற்கு இல்லைம்மா இருந்து பேசி விட்டுப் போய் விடு நாளைக்கு ஊருக்குச் சென்று விடுவாள் என்று சொல்ல, வேறு வழியின்றி உட்கார்ந்திருந்தேன்.

மதுரை வெயில் 'சுள்'ளென்று அடித்துக் கொண்டிருக்க கடுகடுத்த முகத்துடன் வியர்வை வழிய உள்ளே நுழைந்த என்னுடைய சீனியர் என்னை பார்த்ததும் சிரித்துக் கொண்டே, சாரி, வங்கியில் இவ்வளவு நேரமாகும் என்று தெரிந்திருந்தால் உன்னை சிறிது நேரம் கழித்து வரச் சொல்லி இருப்பேன் என்று கூறி விட்டு, நான் எடுத்துச் சென்றிருந்த resumeல் மாற்ற வேண்டியதைச் சொல்லி விட்டு ஒரு காப்பியை எடுத்துக் கொண்டார்.

இங்கிருக்கும் வங்கிகளுக்கு கஸ்டமர் சர்விஸ் என்றால் என்ன என்று துளியூண்டு கூட தெரியவில்லை. நான் பாரிஸில் வங்கிகளுக்காக சாஃப்ட்வேர் எழுதத் தான் சென்றேன். அங்கு வங்கிகளில் இவ்வளவு நேரம் காத்திருக்க வைப்பதில்லை. ஒவ்வொரு கஸ்டமரையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என எவ்வளவு தீவிரமாக அவர்கள் மனம் புண்படாத மாதிரி இருப்பார்கள் தெரியுமா என்றார். நம் நாடு என்று திருந்துவது? யாருக்கும் அக்கறையில்லை என்று புலம்பித் தள்ளி தீர்க்க...

எல்லோருக்கும் தோணுவது போல், என்னாடா, மதுரையில் பிறந்து வளர்ந்து இன்று ஏதோ ஒரு வெளிநாட்டிற்குப் போய் விட்டு வந்து இந்த அலம்பல் பண்றாரேன்னு தோன்றியது. ஹ்ம்ம்...ஃபாரின் போனாலே ஆட்கள் மாறி விடுவார்கள் போலும் என்று நினைத்துக் கொண்டேன்.

நான் அமெரிக்கா வந்த பிறகு மதுரைக்குச் சென்ற பொழுது ஒரு வேலையாக வங்கிக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. ஹாஜீமூசா பக்கத்தில் இருந்த ஞாபகத்தில் சென்றால் இடத்தை மாற்றி விட்டிருந்தார்கள். அங்கிருந்தவர்களிடம் கேட்டால், அது எப்பவோ மாத்திட்டாங்களேம்மான்னு வாசலில் உட்கார்ந்திருந்தவர் சொல்ல, குத்துமதிப்பாக அவர் சொன்ன விலாசத்தை கேட்டுக் கொண்டு ஆட்டோ பிடித்து போனால், தேடினேன், தேடினேன் அந்த அட்ரஸ் மட்டும் தென்படவே இல்லை. என்னடா இது, இங்கே ஒரு பேங்க் இருக்கிறது. ஒருத்தருக்கும் தெரியவே இல்லையே? என்று தெருவில் இறங்கி நடந்து ஒவ்வொரு வீட்டையும் பார்த்துக் கொண்டே வந்தால், ரேஷன் கடை முன் இன்றைய சப்ளை : காலை - 10-12 ஜீனி, மதியம் - 1-4 மண்ணெண்ணெய் போர்டு போல், ஒரு சின்ன போர்டில் பேங்க் பெயர்.

அட ராமா! எப்படி இருந்த வங்கி இன்று இப்படி உருமாறி போயிற்றே! எவ்வளவு பெரிய வங்கி இன்று ஆட்கள் குறைப்புடன் இடத்தையும் சிறிதாக்கிக் கொண்டிருக்கிறது!

வாசலில் காக்கிச் சட்டை போட்டு வெயிலில் நின்று அநியாயத்திற்கு கறுத்துப் போயிருந்த தாத்தா கையில் லத்தி ஒன்றை வைத்துக் கொண்டு அந்த வங்கிக்கு காவல்! மேல தான்ம்மா பேங்க் இருக்கு என்றார். வளைந்து சென்ற குறுகிய படிகள்! ஏறும் போதே மூச்சு வாங்குகிறது. வயதானவர்களுக்கு மிகவும் சிரமமாகத் தான் இருக்கும். அதைப் பற்றி யார் கவலைப்படுகிறார்கள் ? தஸ்புஸ்வென்று மூச்சு விட்டுக் கொண்டு ஒரு வழியாக உள்ளே நுழைந்தேன்.

நுழைந்தவுடனே இடப்பக்கத்தில் இரு கவுண்டர்கள். நிச்சயம் நான் மாடியேறி வந்தது அவர்களுக்கு கேட்டிருக்கும். ஆனாலும் கேட்காத மாதிரி தலையை கவிழ்த்துக் கொண்டு ஓரக்கண்ணால் நான் நிற்பதையும் பார்த்துக் கொண்டே லெட்ஜரில் கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்! எதிரில் இருந்த புறாக்கூண்டில் உட்கார்ந்து பணத்தை 'சரசர'வென எண்ணிக் கொண்டிருக்கும் கேஷியர்... அங்கிருந்த வங்கி ஊழியர்கள் மூவரும் வருபவர்கள் யாரையும் பார்ப்பதில்லை அது எங்களது வேலையுமில்லை என்ற ரேஞ்சில் கடமையாக பணியாற்றிக் கொண்டிருந்தனர்!

சரி, மேனஜரை பார்த்துப் பேசலாம் என்று அவர் மேஜைக்கு எதிரில் நிற்கிறேன். அப்போது பிஸியாக தன் கைப்பேசியில் யாருடனோ சீரியஸாக பேசிக் கொண்டிருந்தார். பேசி முடிக்கட்டும் என்று காத்திருந்தேன். பேசினார் பேசினார் பேசிக் கொண்டே இருந்தார். நீ ஒண்ணு பண்ணு ராமசாமி. கடைக்குப் போய் அத வாங்கி வீட்ல அண்ணி இருப்பா. குடுத்திட்டு எனக்கு ஒரு ஃபோன போடு. இந்த ரேஞ்சில் போய்க் கொண்டே இருந்தது அவருடைய தொல்லை பேச்சுகள். எனக்குப் பிறகு வந்த கூட்டம் பெருகி அனைவர் முகத்திலும் எள்ளும் கொள்ளும். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டே இருந்தோம். அந்த மேனேஜரோ யாரைப் பற்றியும் கவலைப்படாமல் தன் பேச்சிலேயே மும்முரமாக...மேஜையில் இருந்த பேப்பர் வெயிட்டால் மண்டையில் ஓங்கி ஒரு போடு போட வேண்டும் போல் கோபம். இதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியாது. மேஜையைத் தட்டி சார் என்றேன். அந்த...க்கு அது அவமரியாதையாக இருந்திருக்கும் போல, சரி, ராமசாமி நீ அப்புறமா ஃபோன் பண்ணு என்று வைத்து விட்டு, என்னம்மா? ம்ம்ம்... வாயில் வந்த வசவை கட்டுப்படுத்திக் கொண்டு நான் கேட்க வேண்டிய கேள்வியை கேட்டதற்கு எழுதி கொடுத்துட்டுப் போங்க, ஹெட் ஆபிஸ்ல இருந்து கூப்பிடுவாங்க. இதுக்கு எவ்வளவு நேரம் நான் காத்திருக்கணுமா ? இவ்வளவு பேரு வரிசையில நிக்கிறாங்க. நீங்க பாட்டுக்கு உங்க வேலைய பார்த்துக்கிட்டு இருக்கீங்க என்றவுடன் ஒரு முறைப்பு. முணுமுணுத்துக் கொண்டே வெளியேறினேன். ஏதோ என் மேல் தவறு மாதிரி பார்த்தார்கள். சை !

வேறொரு முறை என் கையெழுத்தைப் பார்த்து இது உங்கள் கையெழுத்து இல்லை மேடம். நீங்கள் எங்கு வங்கிக் கணக்கை ஆரம்பித்தீர்களோ அந்த வங்கிக்கே சென்று பணத்தை எடுங்கள் என்று சொல்லி கடுப்பேற்றினார்கள். அடச் சை!

வாடிக்கையாளர்களை மரியாதையாக நடத்துவதும் இல்லை. அவர்களுடைய கேள்விகளை காது கொடுத்து கேட்பதும் இல்லை. தினம்தினம் இவர்களை எதிர்கொள்ளும் மக்களை நினைத்தால் தான் கஷ்டமாக இருக்கிறது.

இதற்க்கெல்லாம் முத்தாய்ப்பு இந்த ஐசிஐசிஐ வங்கிக்காரர்கள். NRI என்று தெரிந்து விட்டால் போதும், வாங்க வாங்க, என்று ஏதாவது ஒரு பாலிசியை தலையில் கட்ட காபி, கோலா, கிஃப்ட் என்று நாம் பேச இடமே கொடுக்காமல் அவர்கள் மட்டுமே பேசி நாம் கேட்டு...அப்பப்பா...ஊருக்குப் போனால் இவர்களிடமிருந்து தப்பி வருவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது.

அங்கிருக்கும் ATMகள் அதை விட. மூன்றில் ஒரு ATM எப்பொழுதுமே மௌனியாகவே இருக்கிறது! என்னங்க வெறும் நூறு ரூபாய் நோட்டு தான் இருக்காம் இந்த ATMல என்று கேட்டால், காவலுக்கு நிற்பவரோ, எதுத்தாப்பல இருக்குற ATMல எடுத்துக்கோங்க மேடம். அப்புறம் எதுக்கு உங்க பேங்க் ATM ?

சரியா தான் போட்டேன். பாஸ்வர்டு இது இல்லைன்னு வருது? உள்ள கேட்டுக்கோங்க மேடம். உள்ளே போய் கேட்டால் சாரி மேடம். நீங்க NRI ? ஆமா, இத மட்டும் கரெக்டா கண்டு பிடிச்சிடுங்க. மேடம், ஒரு அஞ்சு நிமிஷம். சாரிங்க, நான் இன்னைக்கு ஊருக்கு கிளம்பணும்னு ஊர் வந்து இறங்கியதிலிருந்து இவர்களிடமிருந்து தப்பிக்க பொய் சொல்ல வேண்டியிருக்கிறது.

பாவம் இவர்கள் தங்களுடைய வருடாந்திர பாலிசி டார்கெட்டை எட்ட, எங்களை மாதிரி ஆட்களிடம் நேரங்காலம் தெரியாமல் நிலைமை புரியாமல் வாங்கி கட்டிக் கொள்கிறார்கள். வீட்டிற்கே வந்து உட்கார்ந்து கொண்டு இந்த பாலிசி வாங்குங்கள், அந்த பாலிசி வாங்குங்கள் என்று ஒரே அராஜகம் வேறு. ஆன்லைன் விஷயத்திலும் என்றுமே பிரச்னை தான்.

குப்பை, வண்டிகள் விடும் புகை, கொசு, ஈயிடமிருந்து கூட தப்பித்து விடலாம்...ஆனால் இவர்களிடமிருந்து தப்பிப்பது தான் பெருஞ்சிரமமாக இருக்கிறது.

வாடிக்கையாளர்கள் விஷயத்தில் தனியார் வங்கிகள் அரசு வங்கிகளை விட கொஞ்சம் பரவாயில்லை. ஆனாலும் அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது.

வங்கிக்குச் செல்லும் போதெல்லாம் அன்று என் சீனியர் மாணவி சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உண்மை என்று புரிந்தது. கேஎப்சி , மெக் டி, பீட்ஸா, கோலா... என்று வேண்டாத அமெரிக்க விஷயங்களில் நாட்டம் கொள்ளும் நாம் மேலை நாடுகளில் குறிப்பாக வங்கிகளில் வாடிக்கையாளர்களை நடத்தும் விதம் பற்றி தெரிந்து கொள்ளுதலும் அவசியம். வாடிக்கையாளர்கள் இல்லையேல் நிறுவனம் இல்லை, நமக்கு வேலை இல்லை என்று தெரிந்தால் இவர்கள் தங்களை மாற்றிக் கொள்வார்களோ என்னவோ?

1 comment:

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...