Saturday, April 2, 2016

காலத்தின் கோலம்

மதுரையில் இருந்த வரை தள்ளு வண்டியில் அழகாக அடுக்கி வைத்த அந்தந்த சீஸன் பழங்களை அம்மாவுடன் சென்று வாங்குவது வழக்கம். ஒரு வித மணத்துடன் இனிப்பாக வாயில் வைத்தால் கரையும் காஷ்மீர் ஆப்பிள் பார்க்கவே அவ்வளவு நன்றாக இருக்கும். பச்சையும் மஞ்சளும் கலந்த சாத்துக்குடி மீடியம் சைஸில் இனிப்பும் புளிப்புமாக. ஒரு டஜன் என்ன விலை என்று ஆரம்பித்துப் பேரம் பேசி வாங்க வேண்டியிருக்கும். கருகருவென உருண்டு திரண்டு இருக்கும் பன்னீர் திராட்சை எடை போட்டு வாங்கலாம்.
இனிப்ப்ப்ப்ப்பான கருப்பு நுனிகரும்பு பொங்கல் சமயத்தில் மேலூர் பக்கம் அறுவடை செய்கிறார்கள். பார்க்கவே கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருந்தது.

மாம்பழ சீஸனில் சப்போட்டா, ராஜபாளையம், கிளிமூக்கு, மல்கோவா, பங்கனபள்ளி என்று விதவிதமாக மணக்க மணக்க வண்டு துளையிட்ட இனிப்பான பழங்கள். வாழைப்பழங்களும் ஒன்றல்ல இரண்டல்ல, ரஸ்தாளி, நாட்டுப்பழம், பச்சைவாழை, மலைப்பழம், கற்பூரவள்ளி...இன்னும் பல வகைகள். கொடைக்கானல் ஆரஞ்சு(அது தான் கமலா ஆரஞ்ஜோ ?) ஒவ்வொரு சுளையும் சாற்றுடன் இனிப்பாக. சப்போட்டா, நாவல் பழம், முழு நெல்லிக்காய், அரை நெல்லிக்காய் , இலந்தம் பழம், கடுக்காய்ப்பழம், விளாம்பழம், மாவடு, குண்டு மாங்காய், சீதாப்பழம், கொய்யாப்பழம் , அழகான சிறிய கொடை ரோடு ப்ளம்ஸ்கள்...எவ்வளவு சுவையுடன்...

இன்றோ, ஆப்பிள் என்றால் நியூயார்க் ரெட் ஆப்பிள், வாஷிங்டன் கிரீன் ஆப்பிள் என்று கொடுக்கிறார்கள். அதுவும் எடைக்கு. ருசி எல்லாம் பார்க்கப்படாது. மெழுகு தேய்த்த தோலுடன் பார்க்க 'பளபள'வென்றிருந்தாலும் சுவையில்லாத ஒன்று. விலையும் அதிகம். ஆரஞ்சு கூட விதையில்லாதது கிடைக்கிறது! சர்க்கரையில் ஊற வைத்தது போல் இருக்கிறது பச்சை கொடிமுந்திரி. ப்ளம்ஸ் கூடச் சிவப்புக் கலரில் சதைப்பற்றுடன் சுவை குறைந்து...வாழைப்பழம் இறக்குமதி செய்யப்பட்ட ரகம்! இப்பொழுது கிடைக்கும் தர்பூசணி பழங்களில் கூட விதைகள் இருப்பதில்லை. பழங்களும் கூடுதல் நிறத்துடன்!

மலை வாழையில் கூட கலப்படம். மொத்தத்தில் அன்று கிடைத்த சுவையான கலப்படமில்லாத பழங்கள் இன்று அவ்வளவாக கிடைப்பது இல்லை. கொட்டையில்லாத, பூச்சிகள் இல்லாத, கூடுதல் செயற்கை இனிப்புடன் வலம் வரும் பழங்கள் சந்தையில் அதிகமாகி விட்டது. அழகர் கோவில், குற்றாலம், கொடைக்கானல் பகுதிகளில் இன்னும் சில பழங்களை விட்டு வைத்திருக்கிறார்கள். விரைவில் அவைகளும் மாறலாம்.

கடைகளில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கிவி,ஆரஞ்சு, ஆப்பிள்,வாழை இன்ன பிற பழங்கள்.

தோட்டத்தில் இயற்கை முறையில் விளைந்த பழங்களை உண்ட காலங்கள் கனவாகிவிட்டது பலருக்கும்! மரபணு மாற்றத்தில் உருமாறிக் கொண்டிருக்கிறோம். நிறுத்தி நிதானமாக யோசிக்க நமக்கு நேரமில்லை. பத்து வருடம் முன்பு  கிலோ 20-30 ரூபாய்க்கு ஒரு கிலோ ஆப்பிள் வாங்கலாம். இன்று ஒரு கிலோ 250 ரூபாய். ஆனால் அன்று வாங்கிய அதே விலைக்கு டெட்ராபேக்ல ஜூஸ் இன்றும் கிடைக்கிறது!

இன்று 200 மில்லி ஃப்ரூட் ஜூஸ் 20 ரூபாய்க்கு வாங்க முடியும் நம்மால் ஒரு பழத்தை கூட அந்த விலைக்கு வாங்க முடியாது. இங்கு தான் கார்ப்பரேட் தந்திரம் இருக்கிறது. பாட்டிலில் அடைத்து விற்கும் பழரசங்கள் கெமிக்கல் குப்பைகள் என்று அறிந்தும் குழந்தைகளுக்குப் பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறோம். நவநாகரீக உலகில் இணைந்து விட்டோம் என்ற மிதப்புடன் நாமும் பழகி, குழந்தைகளையும் அடிமையாக்கி, சுற்றுப்புறச் சூழலையும் கெடுத்துக் கொண்டு இருக்கிறோம். இறக்குமதி செய்யப்பட்ட செயற்கை ரசாயனங்களை கொண்ட  பழரசங்கள் உடலுக்கு கேடு விளைவிப்பவை.

விலை மலிவாக கிடைக்கும் இந்த இனிப்பு குப்பைகளை ஒதுக்கி பழங்களாக சாப்பிடுவதே உடல்நலத்திற்கு நல்லது. மக்கள் விழித்துக் கொண்டால் நலம். இல்லையேல் இது காலத்தின் கோலம் என்று கடந்து போக வேண்டியது தான் !




2 comments:

  1. காலத்திற்கு ஏற்ற நல்ல பதிவு. பழைய கால உணவு மற்றும் பழங்களின் சுவை நெஞ்சில் இன்றும் இனிக்கிறது. இந்த தலைமுறையினர் இழந்ததில் இதுவும் அடக்கம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி, திருமதி.சாந்தி பலராமன்.

      Delete

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...