Sunday, January 29, 2017

குடியரசு தின விழா 2017



ஒவ்வொரு வருடமும் இந்திய குடியரசு தின விழாவை ஜனவரி 26ந் தேதிக்குப் பிறகு வரும் வார இறுதியில் ஆல்பனியில் இருக்கும் இந்திய சங்கம் கொண்டாடும். நியூயார்க் தூதரக அதிகாரியையும், அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரையும் நிகழ்ச்சி விருந்தினர்களாக அழைப்பார்கள். இந்த வருடமும் அவர்கள் வந்து நிகழ்ச்சியை கௌரவித்தார்கள். அமெரிக்க மற்றும் இந்திய தேசிய கீதங்களுடன் விழா ஆரம்பமானது.

அமெரிக்காவில் இத்தனை வருடங்கள் குப்பையை கொட்டிக் கொண்டிருந்தாலும் தேசிய கீதத்தின் கடைசி மூன்று நான்கு வரிகள் மட்டுமே மனசிலாயி. இந்திய தேசிய கீதம் பாடும் போது அனைவரும் பரவசத்துடன் நின்றிருந்தார்கள்.

வழக்கம் போல் பல நடன நிகழ்ச்சிகள். பரதம், fusion டான்ஸ், பாடல் என்றிருந்தாலும் ஐந்தாறு வயது குழந்தைகளின் நடனத்தைப் பார்க்க பாவமாகத்தான் இருந்தது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் கையை காலை அசைத்தாலே நாட்டிய சிகாமணிகளென கற்பனை செய்து அவர்களை மேடையேற்றி, பார்ப்பவர்களை வதைப்பதை நிறுத்த இச்சங்கங்கள் ஆவன செய்யுமா? அட்லீஸ்ட் ஆடும் பாடலுக்குப் பொருளறிந்து ஆடத் தெரிந்தவர்களை மட்டும் மேடையேற்றுவார்களா? பெற்றோர்களும் தங்கள் ஆசையை அக்குழந்தைகளின் மேல் திணிப்பதை இங்கு வந்தும் தொடருவது தான் கொடுமை.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்  மேடையில் பளபளவென போட்டிருக்கும் பேனரை அரங்கில் எங்காவது மாட்டி இரு நாட்டின் தேசியக்கொடிகளை மட்டும் மேடையில் வைத்தால் நிகழ்ச்சியின் போது எடுக்கும் படங்கள் நன்றாக வரும். இல்லையென்றால் பேனர் மேல் விழும் விளக்கின் ஒளியும் சேர்ந்து நடனம் ஆடுபவர்கள்  பேசுபவர்களின் முகங்கள் பல படங்களிலிலும் வெளுத்துப் போய் திகிலாக இருக்கிறது!

கணவரும் மகனும் வந்தே மாதரம் பாடலை கிட்டார் மற்றும் fluteல் வாசித்ததைப் பலரும் பாராட்டினார்கள். இந்த வருட நிகழ்ச்சியின் ஹைலைட்டாக நிகழ்ச்சிகளின் நடுநடுவே நடத்திய Republic Day Trivia quiz அருமை. அமெரிக்காவில் பிறந்த குழந்தைகள் அதற்குப் பதில் அளித்த விதம் நிறைவாக இருந்தது.

கைவிட்டு எண்ணக்கூடிய அளவில் தான் தமிழ் மக்கள் கலந்து கொள்வார்கள். இன்றும் அப்படியே. சில குறைகள் இருந்தாலும் இந்தியாவை நம் நாட்டைக் கொண்டாடுகிற விழா என்பதால் நாங்கள் தவறாமல் கலந்து கொள்கிற நிகழ்ச்சி ஒன்று.

நிறைவான நாள்.

ஜெய்ஹிந்த்!








The Impossible (2012)


மூன்று குழந்தைகளுடன் கணவன், மனைவி செல்லும் விடுமுறைப் பயணம் தாய்லாந்தின் அழகான வெள்ளை மணல் கடற்கரையோரத்தில் என ஆரம்பமாகிறது இப்படம். சில நிமிடங்களில் பறவைகளின் அலறலில் கரையோர தென்னை மரங்கள் ஒவ்வொன்றும் நிமிடங்களில் சரிய, கடலில், நீச்சல் குளத்தில் இருந்த மக்கள் சூழ்நிலையை உணர்வதற்குள் சுனாமியால் கபளீகரம் செய்யப்பட்ட காட்சியை மிகவும் தத்ரூபமாக காட்சிப்படுத்தியிருந்தார்கள்.

இரு குழந்தைகளுடன் கணவர் ஒரு பக்கமும், மூத்த மகனும் அம்மாவும் மறுபக்கம் பிரிய, உடல் நிறைய காயங்களுடன் தப்பிக்க வழிதேடுகையில் ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டு அவனையும் சேர்த்துக் கொண்டு காத்திருக்க, சேதாரமடைந்த அப்பகுதியில் உயிருக்குப் போராடுபவர்களை தேடி காப்பாற்றும் தாய்லாந்து மக்கள் இவர்களையும் காப்பாற்ற, மருத்துவமனையில் சிகிச்சை பெரும் நேரத்திலும் தன் மகனை அழைத்து அங்கிருப்பவர்களை உதவ்ச் சொல்வது, குழந்தைகளைத் தொலைத்த பெற்றோர்கள் அலைவது, அவசர சிகிச்சைப்பிரிவுகள் ஏனோ அன்றைய சுனாமி பாதித்த தமிழ்நாட்டையும் மக்களின் அழுகுரல்களும் டிவியில் கண்ட காட்சிகள் நினைவிற்கு வந்தது.

மறுபுறம் இரு குழந்தைகளையும் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி விட்டு மனைவியையும் மகனையும் தேடி அலையும் அப்பா, குழந்தைகள் மூவரும் ஒருவரை ஒருவர் கண்டடையும் இடம், அப்பாவுடன் சேரும் குழந்தைகள் ...சுனாமியன்று சென்னையில் பரிதவித்த குடும்பங்கள், மனைவி, குழந்தைகளை கல்பாக்கத்தில் தொலைத்த உறவுகளின் நினைவுகளில் மனம் கனத்துப் போனது.

வாழ்க்கை தரும் எதிர்பாரா முடிவுகளையும் இழப்புகளையும் யார் தான் அறிவர்?

2012ல் வெளிவந்த இப்படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுத்த படமாம். சுனாமி காட்சிகளை எடுத்த விதம் ரியலி இம்பாஸிபிள்!








Tuesday, January 3, 2017

2017...ஆரம்பம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

2017 பிறந்த நேரம் ஆருடம் என்ன சொல்கிறது என்று பலரும் தங்கள் ராசி பலன்களை ஆராய்ந்து கொண்டிருக்க , என்னுடைய வருடாந்திர பலன்கள் எப்படி இருக்குமென வழக்கம் போல் நானே கணித்து விட்டேன்.

நியூயார்க் நகர புதுவருட சிறப்பு நிகழ்ச்சிகளைப் பார்த்து விட்டு அதிகாலையில் மகளை ஊருக்கு அனுப்ப விமானநிலையம் சென்று சிறிது நேர கனத்த மௌனத்திற்குப் பிறகு சிரித்துக் கொண்டே அவளை வழியனுப்பி விட்டு வர, ஆல்பனியும் விடிய ஆரம்பிக்க, வானில் தகதகவென பொன்னிறத்தில் சூரிய பகவானின் வருகை மனதை உற்சாகப்படுத்த, எனைத் தொடர்ந்த சூர்யாவுடனான பயணம் மிகவும் இனிமையாக இருந்தது. தென்றலாய் குளிரும் தழுவ, நிமிடங்களில் வானும் தன் நிறங்களை மாற்றிக் கொள்ள, ஆதித்யனின் திவ்ய தரிசனத்தை ஒரு சில நிமிடங்கள் மட்டுமே வெளியில் நின்று ரசிக்க முடிந்தது. 

அம்மா, என் ஃபிளைட் அரைமணி நேரம் தாமதமாகப் புறப்படுமாம். அநேகமாக அடுத்த விமானத்தைத் தவற விட்டுவிடுவேன் போல என மகளிடமிருந்து குறுஞ்செய்தி. குழந்தை நேரத்திற்கு ஊர் போய்ச் சேர வேண்டுமே என்ற கவலையுடன் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே கவுண்டரில் பேசி உடனடியாக புறப்படும் வேறு விமானத்தில் கிளம்புகிறேன் என்ற செய்தி சிறிது ஆசுவாசப்படுத்த... விட்ட இடத்திலிருந்து தூங்கலாம் என்று கண்ணை மூடப் போகும் நேரத்தில், ஸ்டுப்பிட் பிளேன். டீ ஐசிங் செய்கிறார்கள். இப்போதைக்கு கிளம்பாது போலிருக்கு!

குறைந்த தூக்கம் தந்த அயர்ச்சி, விமானத்தைத் தவற விட்டால் என்று ஊர் போய்ச் சேருவது என்ற கவலையும் சேர்ந்த அவளுடைய புலம்பலை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தேன். எனக்குச் செய்தி அனுப்பிக் கொண்டே நியூஜெர்சியிலிருந்து புறப்படும் விமான நேரத்தை மாற்றி விட்டேன் என்று அடுத்த குறுஞ்செய்தியில்!  விடுமுறை மற்றும் பனிக்காலங்களில் பயணிப்பதில் இப்படியான சிரமங்கள் தவிர்க்க முடியாதவை தான். நல்ல வேளை மாற்று விமான இருக்கையும் எந்த விவகாரமுமில்லாமல் கிடைத்து விட்டது. நல்லபடியாகத் தான் உனக்கு புது வருடம் ஆரம்பித்திருக்கிறதென சமாதானப்படுத்தினேன்.

வருடத்தின் முதல் நாளாக இருந்தால் எனக்கென்ன மனக்கவலை என்று வழக்கம் போல மதிய நேரத்தில் அதுவும் அப்பா எழுப்பியதால் எழுந்து வந்தான் சுப்பிரமணி. லேக் ஜார்ஜ் போயிட்டு வரலாம். சீக்கிரம் ரெடியாகுங்க.

வருடத் துவக்கத்தில் நடக்கும் மிகப் பிரபலமான polar plunge என்று உறைந்து போயிருக்கும் ஏரியின் கரையோரத்தில் ஒரு முங்கு முங்க காத்திருக்கும் ஒரு கூட்டம்! நானும் குதிப்பேன் என்று அடம் பிடித்தவனை வேண்டாம் என்று சொல்லியதாலோ என்னவோ வேண்டாவெறுப்பாக மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டு வந்தவனுக்கு இந்த வருட அறிவுரைப்படலமும் ஆரம்பமாயிற்று!

ஐ-போனில் சூரியோதயம் 

கிளம்பும் நேரத்தில் தான் வண்டியில் பெட்ரோல் இல்லையென தெரிந்தது. சரியென்று முதலில் வந்த கேஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்து கிரெடிட் கார்ட் போட்டால் திரையிலோ ஊமை நாடகம்! என்னடா இது? வேறு பல கார்டுகளுக்கும் இதே நிலைமை. வாய் அர்ச்சனை பாட ஆரம்பிக்க, வேறு சில பம்ப்களிலும் இதே மங்குண்ணி ஆட்டம். சை!

இப்ப கோவப்பட்டு என்ன ஆகப்போகுது? கடையில போய் சொல்லிட்டு வா.

'விடுவிடு'வென உள்ளே நுழைந்தால் நம்மூர்க்காரர் ஒருவர் கவுண்டரில்!
என்ன ஆச்சு? ஒரு பம்ப்பிலும் கிரெடிட் கார்ட் வேலை செய்யவில்லை என கேட்டவுடன், ஒரு சாரி கூடச் சொல்லாமல், ஆமா, சிஸ்டம் கோளாறு என்று கூலாகச் சொல்ல, மொதல்ல அத எழுதி வெளிய மாட்டுங்க. நான் ஏதோ என் கார்ட் தான் வேலை செய்யலையோன்னு வரிசையா எல்லா பம்ப்லேயும் நின்னு நேரத்தை விரையம் பண்ணினேன் என்று கடுகடுத்துவிட்டு வெளியே வந்தேன். நல்லா ஆரம்பிக்குது புது வருஷம் எனக்கு!

திருவிழா கூட்டமாக இருந்த லேக் ஜார்ஜ் வந்தவுடன் எங்களை இறக்கி விட்டு கார் நிறுத்த இடத்தை தேடி கணவரும் கிளம்ப, ஏன்டா இப்பிடி மூஞ்சிய தூக்கி வச்சிக்கிட்டு வர்ற? வா சீக்கிரம். நான் ஓடிக் கொண்டிருந்தேன். அங்கு இரண்டாயிரம் பேர் வரை வந்திருந்தார்களென  அறிவித்தார்கள். குளிரும் வழக்கத்தை விட குறைவே. ஏரியும் உறைந்திருக்கவில்லை. ஆனால் ஐஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஜில் நீரில் ஓடிச்சென்று நீந்தி விட்டு வெறுங்காலுடன் பனி மீது நடந்து கொண்டிருந்தார்கள். எப்படித்தான் முடிகிறதோ! ஆச்சரியத்துடன் அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்திலிருந்து விலகி ஏரியைச் சுற்றி நடக்க ஆரம்பித்தோம். ஏரிக்குள் செல்லும் படகுப்பயணத்திற்கு நீண்ட வரிசையில் ஒரு கூட்டம் காத்திருந்தது.

வெளிறிய வானம், இலைகளைத் துறந்த மரங்களுடன் பொலிவிழந்த மலைகள், குளிர் காற்று  என பனிக்காலத்தை பறைச்சாற்றிக் கொண்டிருந்தது லேக் ஜார்ஜ்.

பிப்ரவரியில் இங்கு நடக்கும் வின்டர் கார்னிவல் மிகவும் பிரபலம். ஏரியின் மேல் கார், பைக் ரேஸ்கள் நடக்க, காரில் சென்ற திகிலான அனுபவமும், உறைந்த பனி ஏரியின் ஒரு கரையில் இருந்து மறுகரை வரை நடந்த ஜில்ல்ல்லான அனுபவமும் உண்டு!

நாங்கள்  வீடு வந்து சேர்ந்ததும் ஊர் சென்று சேர்ந்து விட்டதாக மகளிடமிருந்து தகவலும் வர, 

இனி எல்லாம் சுகமே!



படங்கள்


















































'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...