Sunday, January 29, 2017

குடியரசு தின விழா 2017



ஒவ்வொரு வருடமும் இந்திய குடியரசு தின விழாவை ஜனவரி 26ந் தேதிக்குப் பிறகு வரும் வார இறுதியில் ஆல்பனியில் இருக்கும் இந்திய சங்கம் கொண்டாடும். நியூயார்க் தூதரக அதிகாரியையும், அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரையும் நிகழ்ச்சி விருந்தினர்களாக அழைப்பார்கள். இந்த வருடமும் அவர்கள் வந்து நிகழ்ச்சியை கௌரவித்தார்கள். அமெரிக்க மற்றும் இந்திய தேசிய கீதங்களுடன் விழா ஆரம்பமானது.

அமெரிக்காவில் இத்தனை வருடங்கள் குப்பையை கொட்டிக் கொண்டிருந்தாலும் தேசிய கீதத்தின் கடைசி மூன்று நான்கு வரிகள் மட்டுமே மனசிலாயி. இந்திய தேசிய கீதம் பாடும் போது அனைவரும் பரவசத்துடன் நின்றிருந்தார்கள்.

வழக்கம் போல் பல நடன நிகழ்ச்சிகள். பரதம், fusion டான்ஸ், பாடல் என்றிருந்தாலும் ஐந்தாறு வயது குழந்தைகளின் நடனத்தைப் பார்க்க பாவமாகத்தான் இருந்தது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் கையை காலை அசைத்தாலே நாட்டிய சிகாமணிகளென கற்பனை செய்து அவர்களை மேடையேற்றி, பார்ப்பவர்களை வதைப்பதை நிறுத்த இச்சங்கங்கள் ஆவன செய்யுமா? அட்லீஸ்ட் ஆடும் பாடலுக்குப் பொருளறிந்து ஆடத் தெரிந்தவர்களை மட்டும் மேடையேற்றுவார்களா? பெற்றோர்களும் தங்கள் ஆசையை அக்குழந்தைகளின் மேல் திணிப்பதை இங்கு வந்தும் தொடருவது தான் கொடுமை.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்  மேடையில் பளபளவென போட்டிருக்கும் பேனரை அரங்கில் எங்காவது மாட்டி இரு நாட்டின் தேசியக்கொடிகளை மட்டும் மேடையில் வைத்தால் நிகழ்ச்சியின் போது எடுக்கும் படங்கள் நன்றாக வரும். இல்லையென்றால் பேனர் மேல் விழும் விளக்கின் ஒளியும் சேர்ந்து நடனம் ஆடுபவர்கள்  பேசுபவர்களின் முகங்கள் பல படங்களிலிலும் வெளுத்துப் போய் திகிலாக இருக்கிறது!

கணவரும் மகனும் வந்தே மாதரம் பாடலை கிட்டார் மற்றும் fluteல் வாசித்ததைப் பலரும் பாராட்டினார்கள். இந்த வருட நிகழ்ச்சியின் ஹைலைட்டாக நிகழ்ச்சிகளின் நடுநடுவே நடத்திய Republic Day Trivia quiz அருமை. அமெரிக்காவில் பிறந்த குழந்தைகள் அதற்குப் பதில் அளித்த விதம் நிறைவாக இருந்தது.

கைவிட்டு எண்ணக்கூடிய அளவில் தான் தமிழ் மக்கள் கலந்து கொள்வார்கள். இன்றும் அப்படியே. சில குறைகள் இருந்தாலும் இந்தியாவை நம் நாட்டைக் கொண்டாடுகிற விழா என்பதால் நாங்கள் தவறாமல் கலந்து கொள்கிற நிகழ்ச்சி ஒன்று.

நிறைவான நாள்.

ஜெய்ஹிந்த்!








No comments:

Post a Comment

சுவதந்த்ரவீர் சாவர்க்கர்

மிக அழகாக திரு.வீர் சாவர்க்கரின் வாழ்க்கையை எடுத்துரைக்கும் படம். நிறைய மெனக்கெட்டிருக்கிறார்கள். சாவர்க்கராக நடித்திருக்கும் 'ரந்தீப் ஹ...