Tuesday, March 31, 2020

Crash landing on you


Hyun Bin And Son Ye Jin Spend Quality Time Together Before Her ...

கொரோனா வீட்டுச் சிறை அடைப்பில் கொரியன் சீரியல்கள் பார்க்கத்தொடங்கியதில் ஆரம்பித்தது இந்த பைத்தியம். இதற்கு முன் பல கொரிய படங்களைப் பார்த்திருந்தாலும் மெதுவாக செல்லும் "Crash landing on you" தொடர் ஆர்வத்தை உண்டாக்க, காலையில் ஆரம்பித்து நடுநிசி வரை என்று இரு நாட்களில் பார்த்து முடித்தேன். வட மற்றும் தென் கொரியாவின் வாழ்க்கை முறை, புவியியல் அமைப்பு, சிக்கென உடையுடன் அழகிய பெண்கள், நிதானமான நடிப்பில் உள்ளங்கவரும் கதாநாயகன், "துறுதுறு" நாயகி, இருவருக்கிடையே தொட்டுத்தொடரும் காதல் , குடும்பச் சண்டைகள், வெட்டி வம்புகள், நண்பர்கள்  என கலவையுடன் ஆங்காங்கே மெதுவாகச் சென்றாலும் சோர்வடையாமல் செல்கிறது இத்தொடர்.

பெரும்பாலான ஆசிய திரைப்படங்களில் உணவும் முக்கிய கதாபாத்திரமாக இருப்பது போல் இப்படத்திலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். கூடவே மதுவும்! அதுவும் குடும்பமாகவும்  நண்பர்களுடனும் ! அவர்களின் சமையல் முறையும், சிறிதாக இருந்தாலும் வீடுகளின் அழகும், நேர்த்தியும் புதுமையுடன் கூடிய பழமையும் அழகாகவே இருக்கிறது. படம் நிறைவடைவது சுவிட்சர்லாந்தில்! கண்களுடன் மனதும் நிறைவாக!

தமிழ் சீரியல் இயக்குனர்கள் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. பார்க்கும் நமக்கும் தான். என்று தான் நாம் இத்தகைய பொழுபோக்கு அம்சங்களுடன் கூடிய தொலைகாட்சி தொடர்களைத் தமிழில் காண்போமா? குடும்பத்தைச் சின்னாபின்னாமாக்கும் தொடர்களிலிருந்து வெளியே வந்தால் காத்திருக்கிறது நல்ல நெட்ஃப்ளிக்ஸ் தொடர்கள்!

என்ஜாய் :)

இனி எண்ட தேசம் சவுத் கொரியா 
எண்ட ஹீரோ....💓💓💓

Saturday, March 28, 2020

கோவிட்19

அமெரிக்காவிற்கும் ஈரானுக்குமிடையே மூன்றாம் உலகப்போர் மூண்டு விடுமோ என்ற விவாதத்தில் இருந்த மக்களை தற்போது COVID-19 என்ற புதிய கொரோனா வைரஸ் நுண்ணுயிரி ஒன்று ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. வைரஸின் தாக்குதலையும் பரவுதலையும் கட்டுக்குள் கொண்டு வர இயலாமல் மருத்துவமனைகளும் ஆராய்ச்சி மையங்களும் உலகெங்கும் போராடி வருவது மக்களை மேலும் பயத்தில் ஆழ்த்தியிருக்கிறது. வைரஸ் காய்ச்சல் ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்னும் குரங்கினங்களின் மூலம் எபோலா, வௌவால்கள் மூலமாக சார்ஸ், பறவைகள் மூலமாக பறவைக்காய்ச்சல், பன்றிகள் வாயிலாக நிஃபா, கொசுக்கள் வழியாக வெஸ்ட் நைல் வைரஸ் தொற்று நோய்கள் விரைவாக பரவி அதே வேகத்தில் கட்டுப்படுத்தவும் முடிந்ததில் பல உயிரிழப்புகள் இருந்தாலும் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

மக்களைப் பாதித்த மற்ற வைரஸ்களை விட கொடுமையான உயிர்க்கொல்லியாக உருவெடுத்திருக்கும் புதிய கொரோனா வைரஸின் மூலத்தை சீன அரசாங்கம் இன்று வரையில் தெளிவுப்படுத்தவில்லை. அதுவே இந்நோய் புற்றீசலாக பரவவும் தீர்வுகள் கிடைக்காமல் அல்லாடவும் காரணமாகி இருக்கிறது. டிசம்பர் 2019ல் சீனாவின் வூஹான் நகரில் ஒரு மீன் சந்தையில் தொடங்கியதாக, மாமிசத்திலிருந்து பரவியதாக பல்வேறு யூகங்கள்! நிமோனியா காய்ச்சலாக மனிதர்களிடையே பரவும் இந்த தொற்று நோயின் தீவிரம் கருதி "பொது சுகாதார அவசரநிலை"யாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மனிதர்களுக்கிடையே பரவும் COVID-19 , காய்ச்சல், இருமல், சுவாசக்கோளாறில் தொடங்கி பலரின் இறப்பிற்கும் காரணமாகி வருவதால் மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்பு 2002ல் சீனாவில் தொடங்கிய சார்ஸ் (Severe Acute Respiratory Syndrome) வைரஸால் 24 நாடுகளில் 8,098 மக்கள் பாதிக்கப்பட்டு 774 இறந்துள்ளார்கள். 2012ல் சவுதி அரேபியாவில் ஆரம்பித்து 27 நாடுகளுக்குப் பரவிய மெர்ஸ் வைரஸ் (Middle East Respiratory Syndrome) 2,494 பேரை பாதித்து 858 பேர் பலியானதாக உலக சுகாதார மையம் அறிவித்துளளது. COVID-19 வைரஸ் 60 நாடுகளுக்கும் மேலாக பரவி 96,278க்கும் அதிகமான மக்களைப் பாதித்து 3,304 உயிர்களை காவு வாங்கியுள்ளதாக வரும் செய்திகளில் உயிரிழப்புகள் அதிகளவில் சீனாவிலும் அதனைத் தொடர்ந்து ஈரான், சவுத் கொரியா, இத்தாலி, ஜப்பானிலும் தொடர்வதும் மக்களைப் பீதிக்குள்ளாக்கியிருக்கிறது. சீனாவில் மட்டும் 80,151க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு 2,943 பேர் வரை உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.

பசிக்காக புசித்த காலங்கள் மறைந்து ருசிக்காக மாறிய சீனர்களின் உணவுப்பழக்கமும் பல்வேறு புதுப்புது வைரஸ் கிருமிகளைத் தோற்றுவிக்க, இறைச்சி உண்பவர்களும் கவனத்துடன் இருக்க வேண்டிய நேரமும் கூட! ஊடகங்களில் சீன மாமிச சந்தைகளின் படங்கள், வீடியோக்கள் அம்மக்களின் மேல் ஒருவித அருவருப்பை உண்டாக்கியுள்ளது. வைரஸ் கிருமிகளைப் பரப்பும் நாட்டையும் நாட்டு மக்களின் மேலும் வெறுப்பும் தோன்றியிருப்பதை மேற்குலக ஊடகங்களின் செய்திகளில் காண முடிகிறது. பாம்பு, வௌவால், பூனை, நாய், பன்றி என்று காண்பதையெல்லாம் உண்பவர்களாகச் சித்தரித்து தங்களை மேலானவர்களாக, நாகரீகமானவர்களாக காட்டிக் கொண்டு சீன கடைகளில் பொருட்கள் வாங்குவதைத் தற்காலிகமாக ஒதுக்கியிருப்பதும், அவர்களுடைய உணவகங்களைத் தவிர்ப்பதும் இனவெறி அன்று வேறு என்ன? நோய் மூலக்காரணியான மிருகமோ, நாடோ, மக்களோ பாதிக்கப்படாதவாறு கவனமாக COVID-19 என புதிய கொரோனா வைரஸிற்குப் பெயரிட்டதாக உலக சுகாதார மையத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் ஃப்ளோரிடா, கலிஃபோர்னியா, சியாட்டில் மாநிலங்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மற்ற மாநிலங்களை விட அதிகமாக இருக்கிறது. பதினைந்து மாநிலங்களில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் இருப்பதாகவும் எவ்வித அறிகுறியுமில்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் நோய் பரவுவதற்கு காரணமாக இருப்பதால் பள்ளி, கல்லூரிகளில் முன்னெச்சரிக்கையாக அறிவிப்புகளும் விழிப்புணர்வுச் செய்திகளும் பகிரப்பட்டு வருகிறது. சியாட்டில் நகர மருத்துவமனை ஒன்றில் ஆறு பேர் உயிரிழந்த பிறகு மக்களிடையே இந்நோயின் தீவிரவாதம் அச்சத்தையும், அரசின் செயல்பாடுகளிலும் அதிபரின் அறிக்கையில் இருக்கும் அலட்சியத்தால் அதிருப்தியும் தொடருகிறது. உலகளாவிய பங்குச்சந்தை வீழ்ச்சியும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நிதி அறிக்கையும் மெத்தனமாக இருந்த ட்ரம்ப் அரசின் கவனத்தை ஈர்த்து இதன் தீவிரத்தை உணரத் தொடங்கியிருக்கிறார்கள்.

குளிர்ப்பிரதேசங்களில் ஃப்ளு சீசனில் இந்த வைரஸின் தாக்கத்தால் பலரும் குழப்பத்தில் இருந்தாலும் புதிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே இறப்பதில்லை என்பதே ஆறுதலான செய்தி. வயதானவர்களையும், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு கொண்டவர்களையும் அதிகம் தாக்குவதால் இந்நோயைத் தவிர்க்கும் வழிகளை ஊடகங்களிலும் செய்திகளிலும் பரப்பி வருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களின் இருமல், தும்மல் மூலமாகவும், தொடுதல், கை குலுக்குதல் போன்றவைகளின் மூலமாகவும் மனிதர்களுக்கிடையே பரவும் இந்த தொற்றுநோய் முறையான மருத்துவ பரிசோதனைகளின் மூலமாக கண்டறியப்பட்டு குணமாக்கப்படுகிறது. நோய் பாதுகாப்பு & தடுப்பு மையம் நோயைக் கண்டறியவும், நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும்

சீனாவில் நோயின் தாக்கம் குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பி தங்களுடைய ஆலைகள் இயங்க ஆரம்பித்து விட்டதாக ஆப்பிள் தலைமை நிர்வாகி டிம் குக் வெளியிட்ட அறிக்கை சற்று ஆசுவாசமளித்தாலும் அமெரிக்காவிலும் மற்ற நாடுகளிலும் தலையெடுக்க ஆரம்பித்திருக்கும் கொரோனா வைரஸ் அச்சத்தையே தருகிறது. ஈரானிலும் இத்தாலியிலும் இந்த எண்னிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. பொது இடங்கள், பிரார்த்தனைக் கூடங்கள் என மக்கள் நடமாடும் இடங்களுக்குச் செல்லாமல் இருப்பதும் ஃப்ளூ அறிகுறிகள் இருந்தால் முடிந்தவரையில் மருத்துவரின் வழிகாட்டுதலில் வீட்டில் இருந்து கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டாலும் நிதர்சனத்தில் வேலைக்குச் சென்றால் தான் வருமானம் என்ற நிலையில் உள்ளவர்களால் இதனைப் பின்பற்ற முடியாததும் நோய்ப்பரவலுக்கு காரணமாகிறது.

மக்கள் தொகை அதிகமாக உள்ள இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைவாக இருப்பது ஆறுதலாக உள்ளது. வூஹான் நகரிலிருந்து திரும்பிய மூன்று கேரள மாணவர்கள் சிகிச்சைப் பெற்று நலமுடன் இருக்கிறார்கள். புதிதாக ஹைதராபாத் , டெல்லி, ஜெய்ப்பூர் நகரங்களில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளார்கள். நோய் பரவாமல் இருக்க மக்களிடையே விழிப்புணர்வையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளையும் அரசாங்கம் எடுத்துக் கொண்டிருக்கிறது.

ஊடகங்களிலும் பரபரப்பிற்கு பஞ்சமில்லை. வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறார் போப் போன்ற தகவல்களும் வைரலாக பரவியது. இருமல், ஜலதோஷம், இருந்தாலே ஓய்வெடுக்க வேண்டிய நிலையில் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு ஆசி வழங்கிச் சூழலை மேலும் நெருக்கடிக்கு ஆளாக்குவதாக போப்ன் மேல் எழுந்த கண்டனத்தில், தற்பொழுது ஃப்ளு காய்ச்சல் என்று மக்கள் சந்திப்பைத் தவிர்த்திருக்கிறார். ஈரான் அமைச்சர் பேட்டி கொடுக்கும் பொழுதே நோய்வாய்ப்பட்டிருப்பதை தொலைக்காட்சியில் கண்டவர்கள் அதிர்ந்தார்கள். பாதிக்கப்பட்டவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதையும் மனிதர்களைச் சந்திக்காமல் இருப்பதும் மட்டுமே இந்நோய் மேலும் பரவாமல் காக்க உதவும்.

வைரஸ் தொற்று நோயை அடிப்படையாக கொண்ட "Contagion" ஹாலிவுட் திரைப்படமும், 1981ல் டீன் கூண்ட்ஸின் "The Eyes of Darkness" புதினமொன்றில் வூஹான்-400 வைரஸ் உயிரியல் போர்க்கருவியாக சித்தரிக்கப்பட்டதும் கவனம் பெற்று திட்டமிட்டே சீனாவின் ஆராய்ச்சிக்கூடத்தில் இருந்து வெளிவந்திருக்குமோ என்றும் சில யூகங்கள்! சீனாவை ஒடுக்க அமெரிக்கா உருவாக்கியதே இந்த வைரஸ் என்று ரஷ்யாவும், குடியரசுக்கட்சியின் செனட்டர் டாம் காட்டன் சீனாவின் ஆரய்ச்சிக்கூடத்தில் இருந்து வெளிவந்ததே இந்த வைரஸ் போன்ற பேட்டிகளும் செயலற்ற அரசாங்கத்தின் பலவீனங்களே.

நோய்ப்பரவுதலை அச்சத்துடன் உலக நாடுகள் எதிர்கொள்ளும் வேளையில்
சீனாவிலிருந்து ஏற்றுமதியாகும் தொடர் விநியோகப் பொருட்களின் தட்டுப்பட்டால் அமெரிக்க ஐரோப்பிய உற்பத்தி நிறுவனங்களில், கட்டுமானப் பிரிவுகளில் ஏற்பட்டிருக்கும் மந்த நிலைமை நீடித்தால் வேலைவாய்ப்பு இழப்புகளையும் பொருளாதாரச் சரிவையும் எதிர்கொள்ள வேண்டியிருக்குமோ என்ற பதட்டமும் ஏற்பட்டுள்ளது. பயணங்கள் மேற்கொள்வதில் இருக்கும் விபரீதத்தால் விமான பயணங்களும் குறைந்து சுற்றுலாவினரை நம்பி இருக்கும் நாடுகளும் வருமான இழப்பைச் சந்தித்து வருகிறது.

நிறுவனங்கள் வேலை நீக்கம் செய்யாத வரை, நுகர்வோர் கலாச்சார மாறுதல்கள் இல்லாதவரை வைரஸின் பாதிப்பு அதிகம் இருக்கப் போவதில்லை. சீனாவை நம்பியிராத நிறுவனங்கள் பாதிக்கப்படும் பொழுது தான் பொருளாதாரச் சரிவின் தீவிரம் உணரப்படும். ஒன்றோடொன்று தொடர்புடைய வர்த்தக நிறுவனங்களின் வீழ்ச்சி சிற்றலைகள் பேரலையாக உருவெடுக்கும் பொழுது பலத்த பொருளாதார சேதம் உலகளவில் ஏற்படலாம். அந்த நிலை இனி வரும் காலங்களில் தெரிய வரும் என்று பொருளாதார வல்லுநர்களும் தங்கள் அச்சத்தை வெளியிட்டுளார்கள். அமெரிக்காவில் கீழ்நோக்கிச் சென்ற பங்கு வர்த்தகத்தை மீண்டும் உயர்த்த அரசு சார்பில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டாலும் தடுமாற்றம் தொடர்ந்து கொண்டிருப்பதால் மக்களிடையே பதட்டமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சீனாவின் குறைவான எண்ணெய் பயன்பாட்டாலும் வைரஸின் தீவிரம் குறையும் வரையில் அமெரிக்காவில் பெட்ரோல் விலை குறையும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஏபிசிநியூஸ் ஒளிபரப்பியது.
கொரோனா வைரஸைப் பற்றியும் அதன் பாதிப்புகளையும் முதன்முதலில் கண்டறிந்த மருத்துவர் லீ வென்லியாங்னின் அறிக்கைகளை சீன அரசாங்கம் மறுத்தது மட்டுமன்றி அது தவறான செய்தி என்று அவரை ஒப்புக் கொள்ளச் செய்து, பல உயிர்களுடன் அவரும் இந்நோய்க்குப் பலியானதில் மக்கள் வெகுண்டு எழ, தவறை உணர்ந்தது சீன அரசாங்கம். தொடக்கத்தில் கட்டுப்படுத்தியிருந்தால் இன்று ஆயிரக்கணக்கானவர்களை இழந்திருக்க மாட்டோம். இழந்து கொண்டிருக்கவும் அவசியம் இல்லை. புரிதலற்ற அரசாங்கத்தின் வீண் பிடிவாதமும், மக்களை அலட்சியப்படுத்தும் சர்வாதிகார எண்ணமும் வீணாக பல்லாயிரம் மக்களின் உயிரைக் கொன்றதிலாவது இனி விழித்துக் கொள்ளுமா சீன அரசாங்கம்? கற்றுக் கொள்ளுமா அமெரிக்க அரசாங்கம்?

நாட்டின் ஒரு பகுதியில் நடக்கும் இயற்கைப் பேரழிவின் சரிவிலிருந்து விரைவில் மீண்டு விட முடியும். தற்பொழுது உலக அளவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார பாதிப்பிலிருந்து அனைத்து நாடுகளும் விரைவில் மீள வேண்டும் என்பதே என் அவா.

பொருளாதாரத்தில், அறிவியலில், தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாடுகளாயிருந்தாலும் தன்னைத்தானே சமன் செய்து கொள்ளும் இயற்கையின் முன் ஒரு நுண்ணுயிரிடம் தோற்றுத் தான் போகிறோம்.

உயிரின் மகத்துவம் உணர்ந்த பொழுதில் மனிதம் செழித்திருக்கும்.

AIM for Seva வெள்ளிவிழா ஆண்டு

"Education is the key to the development of a society." பூஜ்யஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் சத்திய வாக்கு! ஒரு சமுதாயம் உயர...