Sunday, June 30, 2024

அக்ஷர்தாம்



அமெரிக்காவில் நியூ ஜெர்சி மாநிலத்தில் ராபின்ஸ்வில் நகரில் உலகின் மிகப்பெரிய கோவிலான 'அக்ஷர்தாம்' கட்டப்பட்டு வந்த நிலையில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் வேலைகள் நிறைவடைந்தது. 183 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள அழகான கோவிலை பல பாகங்களாக கட்டி வந்தார்கள். முதலில் பிரதான கோவில் மண்டபத்தைக் கட்டி பார்வையாளர்களை அனுமதித்தார்கள். அப்பொழுது அங்கு சில முறை சென்று வந்திருக்கிறோம். மக்கள் யாவரும் வியந்து பார்க்கும் வகையில் அமைந்துள்ள கட்டிடக்கலை, விண்ணை முட்டும் கோபுரம், பரந்து விரிந்த வளாகம் என அனைத்தும் சுத்தமாகப் பராமரிக்கப்பட்டு வருவது பாராட்டுக்குரியது. பல்லாயிரக்கணக்கான தன்னார்வலர்களின் உதவியுடன் 2011ல் துவங்கிய கோவில் பல மில்லியன் டாலர்கள் செலவில் கட்டப்பட்டு இன்று உலகமக்கள் பலரும் வந்து செல்லும் இடமாக மாறியுள்ளது. இன்னும் கட்டட வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.

வார இறுதியில் கோவிலுக்குச் செல்வதற்கு முன் பதிவு செய்து கொண்டு அந்த நேரத்தில் தான் செல்ல வேண்டும். செவ்வாய் அன்று பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இரவு 7.30 மணி ஆரத்தி நேரம். அமைதியாக உள்ளே சென்று பார்வையிட, ஆங்காங்கே மைய மண்டபம், தூண்கள், சிற்பங்களைப் பற்றின சிறு தகவல்களைத் தெரிந்து கொள்ளும் வகையில் வைத்திருப்பது சிறப்பு.

நாங்கள் சென்றிருந்த நேரம் நல்ல கூட்டம். வண்டிகளை நிறுத்தும் இடத்திலிருந்து கைகளை வான் நோக்கி உயரத்தியபடி நிற்கும் சுவாமி நாராயணின் பொன்னிறச் சிலையும் அதன் பின் பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கும் கோபுரமும் மனத்தை கொள்ளை கொள்கிறது. சிலைகளை வடித்தவர்கள் அத்தனை தத்ரூபமாக அமைத்திருந்தது சிறப்பு! தாய்லாந்தில் புத்த ஆலயங்களின் உள்ளே செல்வதற்கு உரிய உடைகளை அணிய வேண்டும் என்பது சட்டம். கோவில்களுக்கு வெளியே பாண்ட், தோள்பட்டை மூடிய வெள்ளை சட்டைகளை விற்றுக் கொண்டிருப்பார்கள். அப்படித்தான் இங்கும் உடைக்கான கட்டுப்பாடு இருந்தது. கோடைக்காலம் என்று 'ஹாயாக' காற்று உள்ளே செல்லும் வகையில் உடை உடுத்தி வந்தவர்களுக்கு 'கட்டிக்கோ ஒட்டிக்கோ' பாணியில் வெள்ளைநிற வேட்டியும், மேலங்கியையும் கோவிலைச் சார்ந்தவர்களே கொடுத்துக் கொண்டிருந்தார்கள். கோவிலின் உள்ளே செல்ல அனுமதி இலவசம்.


உத்தரப்பிரதேசத்தில் பிறந்து பதினோராவது வயதில் இந்து மதத்தின் பால் ஈர்க்கப்பட்டு துறவறம் பூண்டு ஏழு வருடங்கள் இந்தியா, நேபாளத்தைச் சுற்றி முடிவில் குஜராத்தில் வந்து சேர்ந்திருக்கிறார் சுவாமி நாராயணன். வேதங்களிலிருந்து தான் கற்ற, பரமாத்மாவை வழிபட்டு அவரின் உண்மையான வடிவத்தை ஆத்மாவாக உணரும் 'அக்ஷரபிரம்ம-பரப்பிரம்ம' தத்துவத்தை மக்களிடையே கொண்டு சென்றதைச் சிற்பங்கள் வாயிலாக கோவில் முழுவதும் செதுக்கியுள்ளார்கள். ராமாயணம், மகாபாரத காட்சிகளையும் சுற்றுச்சுவர்களில், தூண்களில் செதுக்கியுள்ளார்கள். மைய மண்டபத்தில் திருப்பதி பாலாஜி, ராம் பரிவார், சிவன்-பார்வதி, கிருஷ்ணா- ராதா சன்னிதிகளும் ஸ்ரீ சுவாமி நாராயணன் மற்றும் சீடர்களின் சன்னிதிகளும் இருக்கிறது. தலையை நிமிர்த்திப் பார்த்தால் அழகான சிற்பங்கள்! கோவில் முழுவதுமே பல திறமையான கலைஞர்களின் கைத்திறனை வெளிப்படுத்துகிறது!

மெதுவாக கோவிலைச்சுற்றி வர குறைந்தது இரண்டு மணிநேரங்கள் ஆகிறது. அங்கிருக்கும் உணவகத்தில் இந்திய சைவ உணவுகள் கிடைக்கிறது.


சுவாமி நாராயணன் சிலையில் அத்தனை ஒரு உயிரோட்டம்! சாந்தமான கண்களும் புன்முறுவல் பூத்த இதழ்களும் மனதை வருட, கோவிலுக்குச் சென்ற இனிமையான அனுபவம் மகிழ்ச்சியாக இருந்தது.

வேதங்கள் சொல்வது போல் எங்கும் அமைதியும் இனிமையும் நிலவட்டும்.



அக்ஷர்தாம்படங்கள்


 


புத்தர் கோவில்

நியூயார்க் மாநிலத்தின் தலைநகரான 'ஆல்பனி' நகரிலிருந்து சில பல மைல்கள் தொலைவில் வெவ்வேறு நாட்டினரின் புத்த மடாலயங்கள் இருக்கின்றன. ...