சொல்வனம் இதழில் வெளிவந்துள்ள என்னுடைய தென்கொரிய பயணக்கட்டுரையின் இரண்டாவது பாகம் ‘யூ அஸ் ஹோட்டல்’ செக்விபோ நகர்
ஜெஜு தீவிற்கும் நியூயார்க்கிற்கும் இடையே 13 மணி நேர வேறுபாடு இருந்தும் பயணக்களைப்பில் நன்கு உறங்கி விட்டோம். காலையில் ஆறே முக்காலுக்கெல்லாம் தயாராகி ஜன்னல் திரைச்சீலையை விலக்கினால் கம்பீரமான ஹாலாசன் மலைச்சிகரம் 55 டிகிரி ஃபாரன்ஹீட் குளிரைப் போர்த்திக் கொண்டு காட்சி தந்து கொண்டிருந்தது பொழுது புலர்ந்திருந்தாலும் தலையை வெளியே நீட்டலாமா வேண்டாமா என்று கதிரவன் ‘இங்கி பிங்கி பாங்கி’ போட்டுக் கொண்டிருந்தான். நாங்கள் தங்கியிருந்த ‘யூ அஸ் ஹோட்டல்’ செக்விபோ நகரின் ஜங்குன் மாவட்டத்தில் சுற்றுலாவினருக்கு ஏற்ற அனைத்து வசதிகளுடன் சர்வதேச மாநாட்டு மையம், புகழ்பெற்ற இடங்களுக்கு அருகில் இருந்ததால் சென்று வர மிகவும் வசதியாக இருந்தது. கோடை காலத்தில் அங்கே தங்க அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்!

காலை உணவிற்கான நேரமும் வந்துவிட்டது என்று கீழிறங்கிச் சென்றால் எங்களுக்கு முன்பே கணவனும் மனைவியுமாக இரு கொரியர்கள் அங்கே உணவருந்திக் கொண்டிருந்தார்கள்! காற்றோட்டமான பெரிய உணவுக்கூடம்! தட்டுகள், முள்கரண்டிகள், கிண்ணங்கள், கோப்பைகளை நேர்த்தியாக அடுக்கி வைத்திருந்தார்கள். சுத்தமான மேஜைகள். வரிசையாக உணவுகள்.
நான்கு விதமான கிம்ச்சி வகைகள்தனித்தனி பாக்கெட்டுகளில் seaweed வைத்திருந்தார்கள். சோறு, சோய்பீன் பேஸ்ட் முட்டைகோஸ் சூப், அரிசிக்கஞ்சி (ஞாயிறு தோறும் காலை உணவாக இதை (என் தாய்மொழியில் கென்னிபேஸ்) அம்மா செய்தாலும் அதை நான் இதுவரையில் சாப்பிட்டது கூட இல்லை. இங்கே என்னடான்னா! கடவுள் இருக்காடா குமாரு என்னைய சோதனை பண்ண
) பொரித்த முட்டை, உருளைக்கிழங்கு, சாசேஜ், stir fried beef with vegetables, சாலட், அதற்கு ட்ரெஸ்ஸிங்ஸ், ப்ளூபெர்ரி தயிர், டேன்ஜரின் பழச்சாறு, பிரட் பட்டர் ஜாம், சீரியல் வகைகள், காஃபி, தேநீர் என்று அதகளப்படுத்தியிருந்தார்கள். மேற்படி ஐட்டங்களைத் தவிர மற்ற எல்லாவற்றையும் சுவைத்துப் பார்க்க தீர்மானித்து இரு தட்டுகளை நிரப்பிக் கொண்டேன். கிம்ச்சிக்கென்றே ஒரு தட்டு
அங்கிருந்த மேஜைகளில் ‘சாப்ஸ்டிக்ஸ்’ இருந்தாலும் நான் எதையாவது எடுக்கப் போக, அது பறந்து பக்கத்து மேசைக்குப் போய்விட்டால் எதற்கு வம்பு என்று முள்கரண்டியால் சாப்பிட ஆரம்பித்தேன். காரசாரமான கிம்ச்சி…ம்ம்ம்ம். சுவையோ சுவை! அமெரிக்க கடைகளில் விற்பதெல்லாம் குப்பை என்று உணர வைத்தது! சீவீட்-ல் வைத்து வெத்தலையை மடிப்பது போல மடித்து அப்படியே ‘லபக்’.
கொரியன் நாடகங்களில் அதிகம் கவர்ந்தது அவர்கள் மேஜை நிறைய சாப்பாடு வகைகளை கிண்ணங்களில் வைத்துக் கொண்டு சோறு ஒரு கரண்டி, சூப், காய்கறிகள், இறைச்சிகள் என்று வாய் நிறைய சாப்பிடுவது தான். என்ன தான் நாமும் குழம்பு, ரசம், கீரை, பொரியல், கூட்டு, அப்பளம், தயிர் என்று வைத்துச் சாப்பிட்டாலும் வெறும் கிம்ச்சியுடன் சோறு சாப்பிடுவதும் நன்றாகத் தான் இருந்தது!
அரிசிக்கஞ்சி நன்றாக இருக்கிறது என்று மகள் சொல்லவும், சுவைத்துப் பார்த்தேன். உப்பு தூக்கலாக. ம்ஹூம்! எனக்குப் பிடிக்காத உணவுப்பட்டியலில் மீண்டும் போய் உட்கார்ந்து கொண்டது. ஆம்லேட்டை எண்ணெயில் பொரித்து வைத்திருந்தார்கள். அன்றன்றே தயார் செய்த சாலட், பழச்சாறு அருமை. பிரட்-ஐ மட்டும் விடுவானேன். அது வேறு நன்றாக இருந்தது. ஆக மொத்தம் காலையிலேயே வயிறு முட்ட நன்றாக சாப்பிட்டாகிவிட்டது. எங்களுடைய மேசைக்கு அருகில் ஒரு கொரியன் மூன்று தட்டுக்கள் நிறைய “மொச்சுக்கு மொச்சுக்கு” என்று வாயைத் திறந்து திணித்து சத்தம் போட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். சாப்பிடும்போது யாரையும் பார்க்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் ஒன்று, அங்கு வந்திருந்தவர்கள் அனைவரும் மிக நன்றாகவே தட்டுகள் நிறைய சாப்பிட்டார்கள். ஒருவேளை மதிய உணவைச் சாப்பிட மாட்டார்களோ என்னவோ!
‘Sunrise Peak’ (Seongsan Ilchulbong) என்னும் எரிமலைசிகரம்
ஜெஜூ தீவில் பார்ப்பதற்கு அத்தனை இடங்கள் இருக்கின்றன! முதலில் நாங்கள் ‘Sunrise Peak’ (Seongsan Ilchulbong) என்னும் எரிமலை உச்சிக்குச் செல்ல திட்டமிட்டுக் கிளம்பினோம். அதிகாலையில் சென்றிருக்க வேண்டியது. சூரியன் வருவது சந்தேகம் என்பதால் தாமதமாகச் சென்றோம். குளிர் வேறு! இரண்டரை மணிநேரம் கடலை ஒட்டிய சாலைப் பயணம். வழியில் சிறு கிராமம் போல் ஒன்று தெரிய, வண்டியை உள்ளே விட்டோம். வீடுகளற்ற நிலங்களில் முள்ளங்கி விளைச்சல் அமோகமாக இருந்தது. ஒவ்வொரு முள்ளங்கியும் நம்மூர் முள்ளங்கிகள் 10 சேர்ந்தால் எப்படி இருக்குமோ அந்த சைசில்! இந்தோனேசியாவிலிருந்து வந்த அகதிகளை? விரட்டி விரட்டி வேலை வாங்கிக்கொண்டிருந்த கொரியன் நாங்கள் எங்கிருந்து வருகிறோம் என்று உடைந்த ஆங்கிலத்தில் கேட்டுக்கொண்டு நாங்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.

அங்கிருந்து ஊருக்குள் சென்றால் மொத்தமே நான்கைந்து தெருக்கள்தான் இருந்திருக்கும். பெரிய பெரிய வீடுகள். தொடர்களில் ஆழ்கடலில் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் மூச்சைப் பிடித்துக் கொண்டு மீன் பிடிக்கச் செல்லும் ‘ஹேன்யோ’ பெண்கள் ஆரஞ்சு வண்ண வட்டவடிவ கூடைகளைச் சுமந்து செல்வார்கள். பெரும்பாலான வீடுகளில் அந்தக் கூடைகள் தொங்கிக்கொண்டிருந்தன. மீனவப் பெண்களாக இருப்பார்கள் போல! தெருக்களில் குழந்தைகள் நடமாட்டம் கூட இல்லை! எப்படி இப்படி வெறிச்சென்று இருக்கிறதோ என்று ஆச்சரியமாக இருந்தது!
கடற்கரையோரம் வண்டியை நிறுத்தி அமைதியாக கரையைத் தொட்டுச் செல்லும் அலைகளைப் பார்த்தவாறே இறங்கி சிறிது தூரம் உள்ளே சென்றோம். கரையோரம் கடற்பாசிகள், நத்தக்கூடுகள், பல வண்ணங்களில், உருவங்களில் சங்குகள், சிப்பிகள் என்று வேடிக்கை பார்க்க நேரம் போனதே தெரியவில்லை!
கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனிதர்களே இல்லாத இடத்தில் இயற்கையின் நடனம் அதிஅற்புதமாக இருந்தது! ஈஷ்வர் இருந்திருந்தால் ஷேக்ஸ்பியர், ஓர்ட்ஸ்ஒர்த், யேட்ஸ் கூறியது என்று அந்த ரம்மியமான சூழலுக்கு ஏற்ற கவிதை, வசனங்களைச் சொல்லி தியானநிலையில் இருந்திருப்பார் என்று நினைத்துக் கொண்டோம். உச்சி வெயில் வருவதற்கு முன் கிளம்பிவிட வேண்டும் என்று அங்கிருந்து செல்ல மனமில்லாமல் ஆட்கள் இல்லாத சாலைகளில் மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தோம்.
வழியில் காஃபி கடைகளைத் தேடினால் ‘ஸ்டார்பக்ஸ்’ தான் தெரிந்தது. ஆங்கிலம் பேசுபவர்கள் இருந்ததால் வேண்டியதைக் கேட்டு வாங்க ஒரு பிரச்சினையும் இல்லை. ‘கம்சாஹமிதா’ சொல்லி அரைமணி நேரத்தில் ‘sunrise peak’கிற்கு வந்தால்… அடேங்கப்பா! பேருந்துகளில், கார்களில் சுற்றுலாவினர் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது! நல்ல வேளை! வண்டியை நிறுத்த அருகிலேயே இடம் கிடைத்து விட்டது. மலையைப் பார்த்தால், “என்ன இப்படி செங்குத்தா இருக்கு? அய்யோடா! லதா இன்னிக்கு உனக்கு இருக்கு”

மலைக்குச் செல்ல டிக்கெட் வாங்க சிறிது தூரம் நடக்க வேண்டியிருந்தது. அதற்கே எனக்கு மூச்சிரைத்தது. விண்ட்டர் ஜாக்கெட் கணம் வேறு. மழை இல்லாததால் மொத்த சுற்றுலாக்கூட்டமும் அதுவும் வயதான சீனர்கள் கூட்டம் அங்கே குழுமியிருந்தது. அவர்களைப் பார்த்தால் எப்பொழுதும் பொறாமையாக இருக்கும். ‘விறுவிறு’வென்று பாட்டிகளும் தாத்தாக்களும் நடக்கிறார்கள். ‘கிடுகிடு’ வென மலையேறுகிறார்கள்! யாருக்கும் கால்கள் வளைந்திருக்கவில்லை. மதுரையில் நான் பார்த்த பல வயதான ஆண், பெண்களுக்கு மூட்டு தேய்ந்து கால்கள் வளைந்து கவலைக்குரிய விஷயம். இந்தப் பாட்டிகள் குட்டையாக அதிக எடையில்லாமல் மலையேறுவதெல்லாம் பேரதிசயமாக இருந்தது எனக்கு! அப்புசாமி தாத்தாக்களை விட சீதா பாட்டிகள் அழகாக, நேர்த்தியாக உடையணிந்து நகப்பூச்சு, மேக்கப், உதட்டுச்சாயம், வெயிலுக்கு கண்ணாடி, தலைக்குத் தொப்பி என்று அட்டகாசமாக வந்திருந்தார்கள். யாரையும் கூப்பிடாமல் தனக்குத்தானே செல்ஃபி’ எடுத்துக் கொண்டு ரகளை செய்து கொண்டிருந்தார்கள்.
படிகளுடன் கூடிய பாதையில் நாங்கள் மெல்ல மலையேற ஆரம்பிக்க, சுற்றிலும் சூரிய ஒளியில் மின்னும் நீல கடல். மலைப்பாதையில் பலவித பைன் மரங்களுடன் நிழல் தரும் பெரு மரங்கள். நடுநடுவே தனித்து நிற்கும் செங்குத்தான பாறைகள். ஒவ்வொரு பாறைக்கும் கதைகள் இருக்கிறது. அத்தீவின் மக்களும் இயற்கையைத் தெய்வமாக வணங்கியிருப்பது புரிந்தது.மற்ற நாடுகளைப் போலவே இங்கும் மூளைச்சலவை செய்யப்பட்டு மரபிலிருந்து விலகி வரலாற்றை மறந்திருக்கிறார்கள். மறக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
செங்குத்தான பயணம் ஆரம்பிக்க, ஆங்காங்கே இளைப்பாறிச் செல்லும் கூட்டத்துடன் ஐக்கியமாகி, மேலே செல்ல முடியுமா என்ற சந்தேகம் கூட வந்து விட்டது. அத்தனை கடினமில்லை என்ற இந்த மலையேற்றத்திற்கே நாக்கு தள்ளுதே நாளை ஹாலாசன் மலை கடினமான ஏற்றம் வேறு! இப்பவே கண்ணை கட்டுதே
நான் யோசிக்கிறேன் என்று தெரிந்து “மெதுவா போகலாம்மா. உன்னால முடியும். உன் ஜாக்கெட்டை குடு. அதை வேற போட்டுக்கிட்டு அதனால தான் இப்படி வேர்த்துக் கொட்டுது.” உற்சாகப்படுத்திக் கொண்டே பொறுமையாக வந்தாள் என் செல்லம். ஒவ்வொரு இடத்திலிருந்தும் கீழே பார்க்க வெகுதொலைவிற்கு வந்திருப்பது தெரிந்தது. எல்லா இடங்களிலும் முடிந்த வரை ‘கிளிக்’ ‘கிளிக்’ தான். 30 நிமிடங்களில் ஏறி விடலாம் என்று இணையதளத்தில் போட்டிருந்தார்கள். மலை உச்சியை அடைய 45 நிமிடங்களாயிற்று! அழகாக படிகள் அமைத்து சுற்றுலாவினர் அமர்ந்து கண்டுகளிக்கும் வகையில் அமைத்திருந்த இடத்தில் உட்கார்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டோம்.

5000 வருடங்களுக்கு முன் கடலில் வெடித்த எரிமலை உருவாக்கிய ‘Tuff Cone’ என்ற அரிய பாறை வகை தான் இந்த Ilchulbong கிரேட்டர். 600 மீட்டர் அகலம் கொண்ட பாறை கடல் மட்டத்திலிருந்து 182 மீட்டர் உயரத்தில் பச்சைப்பசேல் என்றிருக்கிறது! கண்ணுக்கு குளிர்ச்சியாக சுற்றிலும் நீல வண்ண கடலும், சிலுசிலு கடற்காற்றும், பசுமைத்தோட்டமுமாய் ரம்மியமாக இருந்தது! இங்கு 240-க்கும் மேற்பட்ட தாவர வகைகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்கள்.
இது மாதிரியான பாறை அமைப்புகள் உலகில் மிகச்சிலவே. அதனாலேயே, 2007ல் யுனெஸ்கோ உலக இயற்கை பாரம்பரியத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. 2010ல் ‘ஜெஜு வல்கானிக் தீவுகளும் லாவா குழாய்களும்’ உலக புவியியல் பூங்கா (Global Geopark) பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது போன்ற தகவல்களை அங்கே தெரிந்து கொண்டோம்!
இத்தனை கஷ்டப்பட்டு ஏறி வந்ததன் பலனை முழுமையாக அனுபவித்துவிட்டு படிகளில் இறங்க ஆரம்பித்தோம். ஏறிச்செல்லும் பாதையிலிருந்து இது வேறு பாதையில் செல்கிறது. பவளப்பாறைகள் நிரம்பிய பரந்து விரிந்த கடலின் வண்ணம் மனதை கொள்ளை கொள்ள, காட்சிகளை மனதில் பதிந்து வைத்துக் கொண்டேன்.
விரைந்து செல்லும் படகில் சுற்றுலாவினரை ஏற்றிக்கொண்டு தீவைச் சுற்றி வந்து கொண்டிருந்தன இரு படகுகள்! “அம்மா போகலாமா?” “பயங்கர வேகமா ஒரு புறம் படகைச் சரித்துக்கொண்டே போகிறான். நனைந்தால் மாற்றுத்துணி இல்லை. வேண்டாம்” என்று சொல்லிவிட்டேன். மீன் பிடிக்கச் செல்லும் பெண்களின் நடனம் இரண்டு மணிக்குத் தான். அதற்கு இன்னும் ஒன்றரை மணிநேரம் இருக்கிறது என்று சிறிது நேரம் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தோம். பெரும்பாலும் ஆசியர்கள்! வெகுசில வெள்ளையர்கள். நாங்கள் இருவர் மட்டுமே அங்கே இந்திய முகங்கள்!
ஓய்வுபெற்ற ஜெர்மானியர் ஒருவர் மனைவியுடன் ஆறு மாதமாக ஆசியப்பயணம் சுற்றிக்கொண்டிருப்பதாகக் கூறினார். அடுத்து ஜப்பானுக்குப் போவதாகச் சொல்ல, தன்னுடைய ஜப்பான் அனுபவங்களை மகள் பேசிக்கொண்டிருந்தாள். நான் படங்கள் எடுத்துக் கொண்டிருந்தேன்.
நண்பர்களுடன் சென்று கொண்டிருந்த ஓய்வுபெற்ற கொரியன் ஒருவர் எங்கிருந்து வருகிறோம், பார்த்தாலே தெரிகிறது அம்மாவும் மகளும் என்று ஆங்கிலத்தில் சரளமாக உரையாடினார். வேலை நிமித்தமாக பல நாடுகளுக்கும் சென்று வந்திருக்கிறார். இந்தியாவின் லடாக் பகுதிக்குச் சென்று வந்ததாகவும் மீண்டுமொருமுறை அங்குள்ள புத்த மடாலயங்களுக்குச் சென்று வர விரும்புவதாகவும் கூறினார். நானும் ஈஷ்வர் அங்கு சென்று வந்த அனுபவங்களைக் கூறினேன். அவருடன் வந்திருந்த நண்பரை அறிமுகப்படுத்தினார். அவருக்கு ஆங்கிலம் தெரிந்திருக்கவில்லை. ‘ஆண்யோஅசையோஓ’ என்று நாங்கள் கூற கடகடவென்று கொரியனில் பேச… சப் டைட்டில் இல்லாமல் அவதிப்பட்டோம் “மிகவும் அழகான, பாதுகாப்பான நாடு இது. உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துகள்” என்று கூறி அவர்கள் விடைபெற்றார்கள்.
அங்கிருந்த கடைகளில் ஊருக்கு எடுத்துச் செல்ல சில பரிசுப்பொருட்கள், மாண்டரின், டேன்ஜரின்ஸ் பழங்களால் செய்த இனிப்புகள், பழங்களை வாங்கிக் கொண்டோம். காலையில் சாப்பிட்டது இன்னும் நிறைவாக இருக்கவே, பழத்தை மட்டும் ருசித்தோம்.

தொடர்கள் மூலமாக நான் அறிந்திருந்த ஜெஜூ தீவு, மினுமினுக்கும் நீல வண்ண கடலுடன் மீன்பிடி கிராமங்களும் சிறு வீடுகளும் சுத்தமான தெருக்களும் மரத்தடியும் தான். அதுவும் ‘Welcome to Samdal-ri’ தொடர் முழுவதையும் அங்கே எடுத்து பார்ப்பவர்களை பைத்தியமாக்கி விட்டார்கள். ஒவ்வொரு இடமும், மரமும் என்று பிரபலமாகி என்னைப் போன்ற பைத்தியங்கள் அங்கே படையெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன் அத்தனை கூட்டம் அங்கே இருந்தது!
‘உடோ’ தீவு
மலையின் கிழக்கே ‘Udo Island’. பசு படுத்திருப்பது போல காட்சி தருவதால் ‘Cow Island’ என்றும் அழைக்கப்படும் அழகிய தீவு. இங்கிருந்து படகில் 15 நிமிடங்களில் அங்கு பயணிக்கலாம் என்று தெரிந்தவுடன் வண்டியை எடுத்துக் கொண்டு படகுகள் புறப்படும் இடத்திற்குச் சென்று விட்டோம். இரண்டு மணிக்கு கிளம்பி 2.15க்கு ‘உடோ’ தீவில் கால் வைக்க, ஆஹா! இந்த அழகிய தீவைப் பார்க்க முடியுமோ என்று எண்ணியிருந்தேன். அழைத்து வந்து விட்டாள் செல்லம் ஐந்தரை மணிக்குள் திரும்பி விட வேண்டும் என்று கூறி இறக்கி விட்டார்கள். இந்தக் குட்டி தீவில் ஒரு ரவுண்டு அடிக்க ஒரு மணி நேரம் போதும். நிறுத்தி நிறுத்திச் சென்றால் 2-3 மணிநேரங்கள் தாராளமாக எடுக்கும். ஏற்றமும் இறக்கமுமாய் சாலைகள்! நீல-பச்சை கதிர் கலக்கிய நீர் வண்ணம், திரைப்படங்கள், விளம்பரங்களில் பெரும் புகழ் பெற்ற இடமாக வலம் வர, சுற்றுலாவினரும் இங்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

நடை, சைக்கிள், மினி மிதிவண்டி, மினி கார்களில் 17 கிமீ தீவைச் சுற்றிப்பார்க்க முடிகிறது. வாடகை விலை தான் அதிகம். அதுவும் கூட்டத்தைக் கண்டால், மொழி புரியாதவர்கள் வந்தால் நன்றாக கொள்ளை அடிக்கிறார்கள். பேரம் பேச வேண்டியிருக்கிறது. நாங்களும் இருவர் அமர்ந்து செல்லும் ஒரு மூன்று சக்கர வண்டியை எடுத்துக் கொண்டோம். மகள் சில நிமிடங்களில் அதை ஓட்டப் பழகிக் கொண்டாள். நான் சொகுசாக பின்னால் அமர்ந்து கொண்டேன். ஈஷ்வர் வந்திருந்தால் பைக்கை எடுத்திருப்பார் பயமில்லாமல் வழியெங்கும் நிறுத்தி வேடிக்கை பார்க்க முடிந்தது.
எரிமலைக்கற்கள் நிரம்பிய Geommeolle கருப்பு மணல் கடற்கரை பார்க்க வித்தியாசமாக இருந்தது! கடலில் கால் நனைத்துவிட்டு வந்தோம். 2000 பேர் வரை வசிக்கும் தீவில் குடியிருப்புகள், பசுமை விளைநிலங்கள், வெண்மணல் கடற்கரை, ஏகத்துக்கும் உணவகங்கள் என்று காட்சிகளுக்குப் பஞ்சமில்லை. புதிய வீடுகளைக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். தோட்டங்களுடன் அழகான குட்டி குட்டி வீடுகள். எரிமலைக்கற்களைக் கொண்டே சுற்றுச்சுவர்களை எழுப்பியிருந்தார்கள். வளர்ந்து வரும் தீவு போலிருக்கிறது!

Joseon அரசு காலகட்டத்தில், வழிகாட்டவும், பாதுகாப்பிற்காகவும் smoke signals பயன்படுத்தப்பட்ட இடமாக Beacon Mound இருந்திருக்கிறது. அருகே வெள்ளைநிற உலோக லைட்ஹவுஸ். இத்தீவின் நிலக்கடலை ஐஸ்கிரீம் மிகவும் பிரபலம். அதையும் விடுவானேன்சுவையாக இருந்தது! பெண்கள் ஆழ்கடல் உயிரினங்களைப் பிடித்து சுடச்சுட சமைத்துக் கொடுக்கும் உணவகங்கள் கரையோரங்களில் இருக்கின்றன. நேரம் தான் இல்லை எங்களுக்கு. இல்லையென்றால் அதையும் ஒரு கை பார்த்திருக்கலாம்.
அங்கிருக்கும் மலைஉச்சியிலிருந்து தீவைச் சுற்றியிருக்கும் அழகைக் காண முடிகிறது. திகட்ட திகட்ட தீவைச் சுற்றி வந்தோம். நாலரை மணிக்கு வண்டியைக் கொடுத்தவுடன் அவர்களே படகுத்துறையில் இறக்கி விட்டுவிட்டார்கள். 5.30 மணிக்கு கடைசி படகு. அதற்குள் சுற்றுலாவினர் அனைவரும் திரும்பிவிட, ஊரே காலியானது போல இருந்தது. கடைகள், உணவகங்கள் எல்லாம் மூடிவிட்டிருந்தார்கள்! கோடைக்காலத்தில் நேர நீட்டிப்பு இருக்கும் என்று தெரிந்து கொண்டோம்.
வரிசையில் நின்று படகில் ஏறி உள்ளே போய் உட்காரலாம் என்று சென்றால் எல்லோரும் கீழே தரையில் சம்மணமிட்டு உட்கார்ந்திருக்கிறார்கள். இதை நான் எதிர்பார்த்திருக்கவில்லை! கொரியன் தொடர்களில் கதாபாத்திரங்கள் கீழே உட்காருவது சர்வசாதாரணமாக இருக்கும். படகில் கூடவா?! நல்ல பழக்கம் தான்! அங்கே மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் குறைவு போலிருக்கிறது! நல்ல ஊருடே!

அங்கும் நாங்கள் இருவர் மட்டுமே அந்நியமாகத் தெரிந்தோம். பை, பை உடோ ஐலாண்ட். சில மணிநேரங்கள் தான் அங்கிருந்தோம் என்றாலும் பார்த்த காட்சிகள் என்றும் மனதில் நிலைத்திருக்கும். மகிழ்வுடன் திரும்பி வண்டியை எடுத்துக்கொண்டு விடுதி திரும்பும் வழியில் ஜெஜூ தீவில் பிரபலமான Seopjikoji Coastal Walk செய்து விடலாம் என்று அங்கு சென்றோம்.
வாடகை வண்டிகளில் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருந்தார்கள் மக்கள். குளிரும் கடற்காற்றுமாய் மீண்டும் மலையேற்றம். அங்கே சுற்றுலாவினரைக் கவரும் வண்ணம் gingerbread ஹவுஸ் ஒன்று பேக்கரி ஆக செயல்பட்டு வருகிறது. கடலும் செங்குத்துப்பாறைகளும் பார்க்க சலிக்கவே இல்லை. ஏறிக்கொண்டே சென்றால் மலையுச்சியில் ஒரு லைட்ஹவுஸ். இந்த இடங்கள் எல்லாமே கனடாவின் கிழக்குக்கடற்கரையோரம் நாங்கள் சென்ற பயணத்தை நினைவுறுத்திக்கொண்டே இருந்தது. என்ன? அங்கே கல் பாறைகள். இங்கே எரிமலைப் பாறைகள். சீற்றமில்லாத அமைதியான கடல் இங்கே. அங்கே ஆர்ப்பரிக்கும் அட்லாண்டிக் கடல்.

‘கிடுகிடு’வென கூட்டத்துடன் ஏறி சுற்றிப் பார்த்துவிட்டு ‘ஜில்ல்ல்ல்ல்’ காற்று முகத்திலடிக்க இறங்கி விட்டோம். சூரியனும் களைத்து மேகங்களில் புதைந்து கொண்டிருந்தான். நடந்து நடந்து காலையில் சாப்பிட்டது முழுவதும் கரைந்து விட்டது. விடுதி அருகே வரும்பொழுது மணி இரவு 7.45. ஊரே உறக்கத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தது. உணவகங்களைக் கூட சீக்கிரமே மூடிவிடுவார்கள் போலிருக்கு! என்ன ஊருடா இது?
இரவு உணவிற்கு பிரபலமான கொரியன் உணவகத்திற்கு அழைத்துச் செல்கிறேன் என்று கூறி விலாசத்தைக் கண்டுபிடித்து உள்ளே சென்றால் இரண்டு குடும்பங்கள் மேஜை நிறைய உணவுக்கிண்ணங்களுடன் பகிர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். எங்கள் இருவரைக் கண்டதும் பரிமாறுபவர்/நிர்வாகி உள்ளே அழைத்து அமர வைத்தார். புதுமுகங்களைப் பார்த்தவுடன் கேட்கும் கேள்விகளைக் கேட்டு விட்டு என்ன வேண்டும் என்று கேட்க, மகள் உணவை ஆர்டர் செய்ய கொண்டு வருகிறேன் என்று உள்ளே சென்றார். ஒரு பெண்மணி தண்ணீர் குவளை, டம்ளர்களை வைத்து விட்டுச் செல்ல, ஒரு பெரிய தட்டு நிறைய குட்டி குட்டி கிண்ணங்களில் கிம்ச்சி, சூப், சமைத்த, சமைக்காத காய்கறிகள் என்று ஐயோ! எது என்னன்னு தெரியலையே என்று வடிவேலு மாதிரி தலையைச் சொரிந்து கொண்டே இதெல்லாம் எப்படி சாப்பிடறதுன்னு கொஞ்சம் சொல்லுங்க என்று கேட்க, அவரும் சிரித்துக் கொண்டே, முட்டைகோஸ் இலைகளில் சில காய்கறிகள், கிம்ச்சியை வைத்து சுருட்டி அப்படியே வாய்க்குள் தள்ள வேண்டும் என்றார்.

ஆகா! சோதனையால்ல இருக்கு! seaweed சூப் எடுத்துச் சுவைத்துப் பார்த்தால் ஒருவித கவிச்சி வாசனையுடன் உப்பு தூக்கலாக இருந்தது. ஆனாலும் குடித்தோம். தொடர்களில் கொரியர்கள் பிறந்தநாளின் பொழுது அம்மாக்கள் இதைத்தான் செய்து கொடுப்பது போல் காட்சிகள் இருக்கும். உடலுக்கு நல்லதாம்.
இரண்டு மூன்று கிண்ணங்களில் இருந்த காய்கறிகள் விரைவிலேயே காணாமல் போயிற்றுமீன் வருது என்று கூறியவர் அங்கே உள்ளே சமைத்துக் கொண்டிருந்த இந்திய இளைஞனை அறிமுகப்படுத்தினார்! அமைதியாக உள்ளே இருந்தபடி பார்த்துக் கொண்டிருந்த மனுஷன் வெளியே வரவே இல்லை. சிறிது நேரத்தில் ஜெஜூவின் பிரபலமான grilled hairtail fish முழுமீனாக ஒரு நீண்ட தட்டில் வந்தது. இத்தனை பெரியதாக இருக்கிறதே! இரண்டு பேர் சாப்பிட முடியுமா? யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே கத்தியுடன் வந்தவர் எங்கள் கண்முன்னே லாவகமாக இரண்டாகப் பிளந்தார். அதற்குப் பிறகு மீன் எப்படி காலியானது என்றே தெரியவில்லை
எலும்பு மட்டும் தட்டில் இருந்தது. திருப்தியாக வயிறு முட்டச் சாப்பிட்டிருந்தோம் . எங்களுக்குப் பிறகு வந்த ஒரு குடும்பத்துடன் கடையை மூடி விட்டார்கள்! விடிய விடிய உணவகங்களைத் திறந்து வைத்து வியாபாரம் செய்யும் பழக்கமோ அவசியமோ இல்லை போலிருக்கு! சாப்பிட்டதற்குப் பணத்தைக் கொடுக்கும் பொழுது அவர் உணவகத்தைத் தேடி வந்த எங்களுக்குப் பரிசாக அங்கே விற்றுக் கொண்டிருந்த டேன்ஜரின் இனிப்பு பாக்கெட் ஒன்றைப் பரிசாகக் கொடுத்தார். நன்றி கூறி புது உணவுகளை உண்ட திருப்தியுடன் விடுதிக்குத் திரும்பினோம்.
வண்டியை நிறுத்தி சிறிது நேரம் நடந்துவிட்டு வரலாம் என்று நடமாட்டமில்லாத தெருக்கள் வழியாக சாலை வரை பயமில்லாமல் சென்று வர முடிகிறது. கால்கள் களைத்து ஹாலாசன் மலைப்பயணம் வேண்டாம் என்று கெஞ்ச, அருகில் இருந்த மசாஜ் நிலையத்தில் காலுக்கு மசாஜ் செய்து கொண்டோம். நாளை எங்குச் செல்லலாம் என்று திட்டமிட்டு அடுத்த நாளும் மழை இல்லாத நாளாக இருக்கவே நிம்மதியாக உறங்கச் சென்றோம்.