Monday, September 1, 2025

Bye , bye ஜெஜு

பயணம் என்பது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வது மட்டுமல்ல. நாம் அறிந்திருந்த உலகிலிருந்து எத்தனை வேறுபட்டு நிற்கிறது நம்மைச் சுற்றியுள்ள வேறொரு உலகம் என்பதை உணர்த்தி ஆச்சரியத்தில் ஆழ்த்தி வாழ்வை ஆராதிக்க வைக்கிறது. அறியாத பாதைகளில் நடந்துசெல்வதன் மூலம் இந்த பிரம்மாண்ட உலகில் சிறு துளி தான் நாம் என்பதையும் உணர்ந்து தாழ்மையையும் கற்றுக்கொள்ள வைக்கிறது. அன்றைய விடியலின் பொழுது கம்பீரமாக நின்று கொண்டிருந்த ஹாலாசன் மலையைப் பார்க்கும் பொழுதும் அப்படித்தான் தோன்றியது எனக்கு. தன் பொற்கதிர்களால் வான் உலா வந்து கொண்டிருந்தான் கதிரவன். இந்த நல்ல நாளில் ஒரு பொழுதையும் வீணாக்கக் கூடாது என்று தயாராகி விட்டோம். காலை உணவிற்குப் பிறகு வண்டியைத் திறக்க முயன்றால் அது சண்டித்தனம் செய்தது. என்னடா மதுரைக்கு வந்த சோதனை? விடுதி வரவேற்பறையில் "It's okay to not be okay" தொடரின் கதாநாயகனைப் போல் இருந்த இளைஞனின் உதவியை நாடினோம்.

         
ஆங்கிலத்தில் பேசும் பொழுது கொரியர்கள் கொஞ்சம் வெட்கப்படுவது போல இருக்கிறது. நாங்கள் கூறியதைப் பொறுமையாகக் கேட்டுப் பணிவாகச் சாவியை வாங்கிக்கொண்டு கதவைத் திறக்க முடியாது போகவே, பாட்டரி போயிருக்கும் என்று உள்ளே சென்று பாட்டரி இருக்கிறதா என்று தேடினான் அந்தத் தம்பி. அங்கு இல்லை என்று தெரிந்தவுடன் வாடகைக்கார் நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு கேட்க, அவர்களும் பாட்டரி வாங்கிப் போட்டுவிட்டு அவர்களிடம் இருந்து பணத்தை வாங்கிக்கொள்ளலாம் என்று கூறினார்கள். சாலையில் இருக்கும் கடைக்குச் சென்று வாங்குமாறு சொல்ல, நாங்களும் என்னடா, நல்ல நாளில் இப்படி ஒரு மணிநேரத்தை வீணடிக்கிறோமே என்று அதிகாலை எட்டு மணிக்கு கடைகள் திறந்திருக்குமா என்ற சந்தேகத்துடன் நடந்து சென்றோம்.


சாலையில் வண்டிகள், பேருந்துகளின் நடமாட்டமும் அலுவலகத்திற்குச் செல்லும் சிலரையும் காண முடிந்தது. மதுரையைப் போலவே மெல்லத்தான் விடிகிறது இந்த ஊரும்! வயதான தம்பதிகளின் கடைக்குச் சென்று பேட்டரியை வாங்கிக் கொண்டோம். கையிருப்பாக வைத்திருந்த பணத்தையெல்லாம் முன்தின பயணத்தில் செலவிட்டதால் அருகிலிருந்த ஏடிஎம்-ற்குச் சென்றால் அது உள்ளூர் வங்கி அட்டைகளை மட்டுமே எடுத்துக் கொள்ளும் என்று தெரிந்தது. "இப்ப என்னம்மா பண்றது? அவசர செலவுக்குப் பணம் இல்லியே? எல்லா இடத்திலும் கார்டு எடுத்துப்பாங்கன்னு கொஞ்சப் பணம் தான் எடுத்து வந்தேன்.இப்ப அதுவும் தீர்ந்து போயிடுச்சு" என வருத்தப்பட்டாள்.

"ம்ம்ம்ம். அதுக்குத்தான் நானும் கொஞ்சம் பணம் எடுத்துட்டு வர்றேன்னு சொன்னேன். நீ வேண்டாம்னுட்டே. ஆனாலும் நான் எடுத்துட்டு வந்திருக்கேன். இந்தா பணத்தை வச்சுக்கோ" கொடுத்தவுடன், "தாங்க்ஸ்மா. நல்ல வேளை! இல்லைன்னா பணம் மட்டுமே வாங்கிப்போம்னு சொல்ற இடங்கள்ல கஷ்டமாயிருக்கும். இனிமே வெளிநாடுகளுக்குப் போனா கார்டை மட்டும் நம்பக்கூடாதுன்னு தெரிஞ்சுகிட்டேன். எதிர்பாராவிதமாக உடோ தீவிற்குச் சென்றதால் செலவாகி விட்டது" என்றாள்.

இந்தியாவில் நேர் எதிர் அனுபவம். பணத்தை வைத்துக் கொண்டு குதூப்மினார் சென்றால் QR code ஐ ஸ்கேன் செய்து அனுமதிச்சீட்டு வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூலாக சொல்லிவிட்டார்கள்! வேறு வழியின்றி டிரைவரிடம் வாங்கச் சொல்லி பணத்தைக் கொடுத்தோம். என்னதான் முன்னேறிய நாடுகள் என்றாலும் எல்லா இடங்களிலும் கடன் அட்டையை வைத்துக் கொண்டு சமாளிக்க முடியாது. கையில் கொஞ்சம் உள்ளூர் பணமும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று

அருகிலிருந்த வங்கிக்குச் சென்றால் வேறொரு வங்கியில் தான் வெளிநாட்டு கரன்சிகளை வாங்கிக் கொள்வார்கள் என்று கூற, 10 நிமிடங்களுக்கு நடந்து சர்வதேச வங்கிக்குச் சென்றோம். அதிகாலை நேரமென்பதால் இருவர் மட்டுமே இருந்தனர். அத்தனை குப்பையான வங்கியை மதுரையில் கூட நான் பார்த்தது கிடையாது! மேஜை நிறைய பேப்பர் குப்பைகள் ஒருபக்கம். பெரிய திரைகளுடன் கூடிய கணினி இத்யாதிகள் மறுபக்கம். அலுவலகமெங்கும் தாறுமாறாக இறைந்து கிடந்த பேப்பர்களைப் பார்த்தவுடன் என்னடா இது சவுத் கொரியா தானா? ஒரு வேளை தீவிற்குள் இருப்பதால் இப்படி அலங்கோலமாக இருக்கிறதோ என்றெல்லாம் எண்ண வைத்து விட்டது. பேந்த பேந்த விழித்துக் கொண்டிருந்த எங்களைப் பார்த்ததும் எந்த வித முகப்பூச்சும் இல்லாமல் இருந்த 'ஒல்லி பெல்லி' மங்கை ஆங்கிலத்தில் என்ன உதவி தேவை என்று வினவ, நாங்களும் டாலர்களுக்கு உள்ளூர் கரன்சி(Won) வேண்டும் என்று கேட்க, எந்தவித ஆவணங்களையும் கேட்காமல் கொடுத்து விட்டார்! ஆச்சரியமாக இருந்தது! பொதுவாக, இந்தியாவில் பாஸ்போர்ட் கேட்பார்கள். வந்த வேலை முடிந்தது என்று விடுதிக்குத் திரும்பினோம். இதே அமெரிக்க வங்கிகள் என்றால் முகம், நகப்பூச்சுகள், ஒரு பிளாஸ்டிக் சிரிப்புடன் வாழை இலையில் நெய்யைத் தடவியது போல பேசியிருப்பார்கள். வாடிக்கையாளர்களைக் கவரும் விதத்தில் நடக்க வேண்டுமென்பது எழுதாத சட்டம். ஆனால் இங்கோ, அழகாக கண்களை உறுத்தாத வகையில் உடையணிந்து இயற்கையாக இருந்தது எனக்குப் பிடித்திருந்தது. வழியில் ஒதுக்குப்புறமான இடத்தில் புகை பிடித்துக் கொண்டிருந்தவர்கள் இந்தியர்கள் இருவரை அப்பொழுது தான் பார்ப்பது போல பார்க்க, பழக்க தோஷத்தில் கைப்பையை இறுக்கப் பற்றிக் கொண்டு அவர்களைக் கடந்தோம். நமக்கு யாரைக் கண்டாலும் பயம்😜
                            
விடுதியை அடைந்ததும் சாவி ரிமோட்டில் பேட்டரியைப் போட்டு கொடுத்த கதாநாயகனுக்கு நன்றி கூறி அங்கிருந்து கிளம்பினோம். அன்று செல்ல வேண்டிய ஹாலாசன் மலைப்பயணம் ஏழு மணிநேரங்களாகும் என்று தெரிந்ததால் அதற்குப் பதிலாக தென்மேற்கில் வேறு சில இடங்களுக்குச் சென்று வரலாம் என்று திட்டத்தை மாற்றி விட்டோம். ஜெஜூ தீவை முழுவதுமாகக் கண்டுகளிக்க குறைந்தது ஒரு வாரமாவது வேண்டும். கிழக்கில் நாங்கள் பார்க்காதது 'Folk Village" மட்டுமே. பல தொடர்களில் பார்த்து விட்டதால் அங்கு செல்லவில்லை. பார்க்க வேண்டிய இடங்கள் அத்தனைக் கொட்டிக்கிடக்கிறது!
  
                                

இயற்கை, வரலாறு, கடல் காட்சிகளை ஒரே பயணத்தில் கண்டுகளிக்க தென்பகுதியில் உள்ள சன்பாங் மலை, சொங்காக்சான் மலை, யோங்மியோரி கடற்கரைக்குச் சென்று வரவேண்டும். ஒவ்வொன்றும் அத்தனை அழகு!

தீவின் தென்மேற்குக் கரையில் உருண்டையாக எழுந்து நிற்கும் சன்பாங் மலை (Sanbang Mountain) அங்குள்ள மிகவும் தனித்துவமான இயற்கைச் சிறப்புகளில் ஒன்று. தூரத்திலிருந்தே கவர்ந்து விட்டது. மற்ற எரிமலை மலைகளைப் போல் இல்லாமல் சுற்றிலும் சமவெளி இருக்க, இந்த மலை திடீரென நிலப்பரப்பிலிருந்து எழுந்து நிற்கிறது. எரிமலையின் வெடிப்பிலிருந்து உருகிய கல் திடமாகி உருவான "trachytic rock dome" என்பதே இதன் தனிச்சிறப்பு. இம்மலையைச் சுற்றிலும் கனோலா செடிகளின் மஞ்சள் நிற மலர்கள் பூத்துக் குலுங்குவதைப் பார்க்கவும் படங்களை எடுத்துக் கொள்ளவும் பலரும் கிளம்பி வந்திருந்தார்கள். ஒரு பாட்டி வசூல் செய்து படங்களை எடுக்க அனுமதித்தார். நாங்களும் உள்ளே சென்று சுற்றிப்பார்த்து படங்களை எடுத்துக் கொண்டோம். மழைக்காலத்தின் துவக்கத்தில் மலையைச் சுற்றியுள்ள வயல்கள் எல்லாம் பொற்கதிர்களாய் மலர்ந்த மஞ்சள் கனோலா மலர்களால் நிரம்பி வழிய, நடுவில் எழுந்திருக்கும் கரும்பாறை பார்ப்பவர்களின் மனதைக் கொள்ளை கொள்கிறது. வண்டியிலிருந்தே இந்த மலையைச் சுற்றி வரும் வகையில் பாதையை அமைத்திருந்தார்கள். அங்கிருந்து 15 நிமிடங்களில் 'Songaskan Mountain' வந்தடைந்து விட்டோம்.

சன்பாங் , ஹாலாசன் மலைகளுக்கிடையில் அமைந்துள்ள சொங்காஸ்கான் மலையில் சுற்றுப்புறத்தில் ஒன்று, உச்சியில் ஒன்று என இரண்டு கிரேட்டர்கள் இருக்கின்றன! வண்டி நிறுத்தத்திலிருந்து மலை மீது ஏறவே வெகுதூரம் நடந்து செல்ல வேண்டியிருக்கிறது! உச்சிக்குச் செல்ல ஐந்து மணிநேரங்களாவது ஆகும் என்று தெரிந்தவுடன் இரண்டு மணிநேரத்தில் பார்த்தவரை போதும் என்று இறங்கி விட்டோம். நல்ல கூட்டம் அன்று. கோடையில் இந்த இடங்கள் எல்லாம் பயணிகளால் நிரம்பி வழியும். இதற்காகவே கோடைப்பயணத்தை முழுவதுமாக தவிர்ப்போம்.

                             

ஓரிடத்தில் ஆழ்கடலில் அரியவகை மீன்களைப் பிடிக்கும் 'ஹென்யோ' பாட்டிகள் நடத்தும் உணவகம் இருந்தது. ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தார்கள். மலை மீது ஏற ஒவ்வொரு பகுதியும் கடலுடன் சேர்ந்து அதிஅற்புதமாகக் காட்சி தந்து கொண்டிருந்தது. இந்த மலை, அதன் புவியியல் அமைப்புகளுக்காகவும், கடற்கரைக் காட்சிகளுக்காகவும் பிரபலமானது என்று அறிந்து கொண்டோம். படங்களுடன் விளக்கமாக அங்கிருந்து தெரியும் மலைகள், தீவுகளைப் பற்றின விளக்கங்களை ஆங்காங்கே வைத்திருந்தது சிறப்பு. சில தொடர்களில் வந்த இடங்கள் என்பதை அங்கிருந்து பார்க்கும்பொழுது தெரிந்தது. இந்த மலைப்பாதையின் மற்றொரு முக்கிய அம்சம், 1943–1945 இடையே ஜப்பானிய ராணுவம் கட்டிய குகைகள் ஆகும். அதை நன்கு பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். வரலாறு முக்கியம்ல?
 
இறங்கும் வழியில் ஓரிடத்தில் நெருப்பில் சுட்ட சர்க்கரைவள்ளிக் கிழங்கை வாங்கிச் சாப்பிட்டோம். இரு வயதான தாத்தா, பாட்டிகள் நடத்தும் உணவகத்தில் 'பேக்ஸ்ட்ரீட் பாய்ஸ்'ன் பாடலைக் கேட்க ஆச்சரியமாக இருந்தது! நிறைய மேற்கத்திய பாடல்களைக் கேட்க முடிந்தது. இல்லையென்றால் இருக்கவே இருக்கு கே-பாப். ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்த கணவன், மனைவி கொரியன்களுடன் தீவின் அழகைப் பற்றிப் பேசிக்கொண்டே மலையை விட்டு இறங்கினோம். அவர்களும் முதன்முறையாகத் தீவிற்கு வந்திருக்கிறார்கள்! மலைமுழுவதும் பச்சைப்பசேலென இருக்கிறது. மஞ்சள் வண்ண கனோலா, பிங்க் நிற செர்ரி மலர்கள் என்று கண்ணுக்குக் குளுமையாகவும் குழந்தைகளைக் கவர குதிரை சவாரிகளும் உண்டு.

                            

கீழே வண்டி நிறுத்தத்திற்கு அருகில் ஒரு ஸ்டார்பக்ஸ்! நன்கு பிரபலமாகி இருக்கிறது போல! அது என்ன மாயமோ தெரியவில்லை சுற்றுலாவினர் பலரும் வந்து செல்லும் இடத்தில் ஓரிடத்தில் கூட குப்பைகளே கண்ணில் படவில்லை. மக்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தால் மட்டுமே இதெல்லாம் சாத்தியமாகுமோ? அங்கிருந்த கடையில் சில பரிசுப் பொருட்களை வாங்கிக் கொண்டு 'Yongmeori Coast' புறப்பட்டோம். செல்லும் வழியில் கனோலா மலர்களின் பின்னணியில் மலையும் அங்குள்ள அற்புதமான புத்தர் கோவிலும் தெரிந்தது. மிகப்பெரிய புத்தர் சிலை! தீவில் பார்த்த முதல் புத்தர் கோவில் இது தான். சுற்றுலாவினர் அதிகம் தென்பட்டார்கள். உலகெங்கிலும் மலைகளைத் தேடித்தேடி போய் உச்சியில் புத்த மடாலயங்களையும் பெரிய புத்தர் சிலையையும் கட்டி வைத்திருக்கிறார்கள்!

                                 

ஜெஜு தீவு எரிமலைகளால் உருவானாலும் யோங்மியோரி கடற்கரை ஜெஜுவின் மிகப் பழமையான எரிமலையால் உருவானது. அதன் தனித்துவமான புவியியல் அமைப்பு UNESCO மூலம் மதிப்பீடு செய்யப்பட்டு 2010ஆம் ஆண்டில் தீவு முழுவதும் UNESCO Global Geopark Network உறுப்பினராக இணைக்கப்பட்டிருக்கிறது.

'யோங்மியோரி' என்ற பெயர் 'நாகத்தின் தலை' என்பதைக் குறிக்கிறது. கடற்கரைப் பாறைகள் நீளமான எரிமலைப் பாறைகளால் உருவாகி, நாகத்தின் தலையாகக் காட்சி தருவதால் இந்தப் பெயர். கடலின் அலைகள் பாறைகளை வடிவமைத்து தனித்துவமான காட்சிகளை உருவாக்குகின்றன. குறைந்த அலைகள் இருக்கும் நேரத்தில் மட்டுமே பாறைகளில் நடக்க முடியும். கடல் குகைகளையும் பார்க்கலாம். யோங்மியோரி கடற்கரையில் (Yongmeori Coast) காணப்படும் hexagonal joints (ஆறு பக்கக் கூட்டுப் பாறைகள்) ஒரு முக்கிய புவியியல் சிறப்பு. லாவா குளிரும்போது அது சுருங்கி உடைந்து, இயற்கையாகவே ஆறு பக்க வடிவில் (hexagonal columns) சிதறுகிறது. இது “columnar jointing” என அழைக்கப்படுகிறது. இங்குள்ள பாறைகளில் பழமையான உயிரினங்களின் அடையாளங்கள், அவற்றின் எலும்புகள், படிமங்கள் போன்றவை காணப்படுவதால் மிகவும் அரிய பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. பலவகையான கடல் உயிரினங்களும் இங்கே இருப்பதாகத் தகவல் பலகைகளில் குறிப்பிட்டிருந்தார்கள். இந்த அரிதான அமைப்புகள் ஐரோப்பா, வடஅமெரிக்காவில் நாங்கள் பயணித்த கடற்கரைகளில் காணாத காட்சிகள் என்பதால் எங்களை மிகவும் கவர்ந்தது. மாணவர்கள் கூட்டம் இங்கு அதிகம் தென்பட்டது. ஆளாளுக்கு விதவிதமான போஸ்களில் படங்களை எடுத்துக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து மதிய வெயிலில் ஜொலித்துக்கொண்டிருந்த கடலை பார்த்துக் கொண்டிருந்தோம்.
                         

அடுத்த இடத்திற்குச் செல்வதற்கு முன் கடையில் வறுத்த கிழங்கு, ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு Cheonjeyeon Falls சென்றோம். இந்த இடத்தில் நீரூற்று, அரண்மனை வளாகம், மூன்றடுக்கு அருவி, பாலம் என்று காட்சிகளுக்கு குறைவில்லை. படங்கள் எடுக்க அருமையான இடம். நடந்து நடந்து கால்கள் களைத்துப் போக, விடுதிக்குத் திரும்பும் பொழுது மணி ஆறாகி விட்டிருந்தது.

                                                                             

சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு ஆசை ஆசையாக 'Buldak Ramen'ஐ சுவைக்க சாலையில் இருந்த சிறுகடைக்குச் சென்றோம். இவ்வளவு காரமாகவா சாப்பிடுகிறார்கள் கொரியர்கள்! அடேங்கப்பா! காரத்தின் அளவுக்கேற்ப விதவிதமான சுவைகளில் வகைவகையான மாமிசங்களுடனும் இல்லாமலும் கிடைக்கிறது. கடையிலேயே மைக்ரோவேவ் அவன் இருக்கிறது. அங்கேயே சூடு பண்ணி சாப்பிடும் வசதிகள் இருப்பதால் பலரும் கடைகளிலேயே சாப்பிடுகிறார்கள். கையால் சாப்பிடும் வேலை இல்லை என்பதால் தண்ணீர் தேவையில்லை. கடைகளும் சுத்தமாக இருக்கின்றன. எத்தனை எளிதாக வாழ்க்கையை மாற்றிவிட்டிருக்கிறார்கள்!

                             

வயிறும் மனதும் நிறைந்த நாளாய் அன்று பார்த்த இடங்களை பற்றிப் பேசிக்கொண்டு இருந்தோம். ஜெஜூவிற்குச் செல்பவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள். நல்ல வேளை! நாங்கள் தவற விடவில்லை. நாளை மாலை வரைதான் ஜெஜூ வாசம்! அதனால் வடகிழக்கில் பார்க்கவேண்டிய முக்கியமான இடங்களைக் குறித்து வைத்துக் கொண்டோம். மெதுவாக எழுந்திருந்து பொறுமையாக பார்ப்போம் எனத் தீர்மானித்து உறங்கச் சென்றோம்.

காலையில் எழுந்து அறையை காலி செய்து பெட்டிகளை வண்டியில் ஏற்றிவிட்டு சாப்பிடச் சென்றோம். முட்டைப்பொரியல், கிம்ச்சி, seaweed சூப், கஞ்சி, பிரட், சாலட் எல்லாவற்றையும் ஒருகை பார்த்து விட்டு 'Samdal-ri' கிராமத்தைப் பார்க்க புறப்பட்டோம்.

                        

கொரியா செல்வதற்கு முன் நான் பார்த்துக் கொண்டிருந்த 'Welcome to Samdal-ri' தொடர் ஜெஜூவிற்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையை மேலும் தூண்டியது. தொடரில் வரும் மரமும், தெருக்களும், நீலமும் பச்சையும் கலந்த கடலும், கடற்கரையோரமும் பசுமையும் என வெகுவாக என்னை கவர்ந்திருந்தன. அதனால் அந்த மரத்தைத் தேடி கிராமத்திற்குச் சென்றோம். வழியில் அழகழகு ஊர்கள் தென்பட்டன. காற்றாலைகளும் வண்ண வண்ண வீடுகளுமாய் எத்தனை இடங்களில் தான் நிறுத்தி நிறுத்திச் செல்வது? என்னுடன் பயணிப்பவர்களுக்கு அதீத பொறுமை இருக்க வேண்டும். பாவம் மகளரசி!

கிராமத்திற்குள் நுழைந்து தெருக்களைப் பார்த்தவுடன் தெரிந்துவிட்டது . எத்தனை அழகாக இந்த தெருக்களை காட்சிப்படுத்தியிருந்தார்கள்! அதோ நான் தேடி வந்த நடுத்தெரு திண்ணை மரம்! என்ன? இலைகள் இன்றி மொட்டையாக இருந்தாலும் திண்ணையில் சிறிது நேரம் அமர்ந்து வேடிக்கை பார்த்தோம். ஒரு ஜனமும் கண்ணில்படவில்லையே! வீடுகளைச் சுற்றி எரிமலைக் கற்களால் சுவர்களைக் கட்டியிருந்தார்கள். எல்லா வீடுகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத் தான் இருந்தது. சதுர வடிவில் நான்கைந்து பேர் அமரும் வகையில் மரப்பலகை இருக்கை. அருகில் இருந்த பேக்கரிக்குச் சென்றால் அங்கே தொடரை எடுத்த காட்சிகளைப் படங்களாக மாட்டியிருந்தார். சிறிது நேரம் தொடரைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். என்னைப் போன்ற கே-ட்ராமா பைத்தியங்கள் அதிகம் பேர் அந்த ஊருக்கு வந்து செல்வதாகவும் அருகில் இருக்கும் கிராமத்தில் கூட பல காட்சிகள் எடுத்திருப்பதாகவும் கூறினார். டாஞ்செரின் கேக் அத்தனை சுவையாக இருந்தது. சிறிது நேரம் தெருக்களைச் சுற்றி வந்து கடற்கரைக்குச் சென்றோம்.
                         

இந்த காட்சிகளுக்காகத்தான் இங்கு வந்ததே. அதைப் பார்த்த திருப்தி கிடைத்துவிட்டது. ஊரில் மனிதர்கள் வாழ்கிறார்களா என்ன? அனைத்து வீடுகளிலும் தோட்டங்கள் இருந்தன. கிம்ச்சி செய்யப் பயன்படுத்தும் சைனீஸ் காபேஜ், வெங்காயத் தாள், கீரை வகைகளை வளர்க்கிறார்கள். எரிமலைக் கற்கள் நிரம்பி இருப்பதால் கொஞ்சம் அழுக்காக இருப்பது போலத் தோன்றினாலும் தெருக்கள் சுத்தமாக இருந்தன. ஈக்கள், நாய்கள், பன்றிகள், மாடுகள் என்று மதுரை மண்ணின் மைந்தர்கள் எதுவும் கண்களில் படவேயில்லை!
 
அதிசயித்தபடியே நீல மேகத்தைப் பிரதிபலித்துக் கொண்டிருந்த கடலை ரசித்துவிட்டு 'மஞ்சங்குள்' லாவா குகைகளைப் பார்க்க கிளப்பினோம் . எங்கள் நேரம்! பழுதுபார்க்கும் வேலை காரணமாக அதை தற்காலிகமாக மூடிவிட்டிருந்தார்கள். அதைப் பற்றி நிறைய வாசித்திருந்ததனால் மிகுந்த ஆவலுடன் சென்றிருந்தேன். கொஞ்சம் ஏமாற்றம் தான். சரியென்று மிகவும் பிரபலமான ''ஹே டாக்' கடற்கரைக்குச் சென்றோம். பளிச்சென்று வெயில். வண்டியை நிறுத்தி விட்டு அருகிலிருந்த கடையில் ஜூஸ் வாங்கி குடித்து விட்டு கடலை நோக்கி நடக்கும் பொழுது தமிழில் பேசுவது கேட்டது. யாருடா நம்ம இனம்? ஜெஜுவிற்கு வந்திருக்கிறது என்று பார்த்தால் இரு பெண்களுடன் அப்பா, அம்மா கலிஃபோர்னியாவில் இருந்து வந்திருந்தார்கள்!

ஜெஜு தீவைச் சுற்றி இருக்கும் கடல் நீலமும் பச்சை வண்ணமும் கலந்து அழகோ அழகோவென்று காண்போரை வசீகரிக்கிறது. வெண்மணல் கரையைத் தொட்டுத்தொட்டு செல்லும் ஆர்ப்பாட்டமில்லாத அலைகள் எரிமலைப்பாறைகள் மீது மோதிச் செல்லும் அழகு என்று நடக்க நடக்க காட்சிகள் ஏராளம்! இன்ஸ்டாக்ராமிற்காக ஆடிப்பாடி வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஒருமணிநேரமாவது சுற்றிப்பார்த்து மனதில் காட்சிகளைப் பதிவுசெய்து கொண்டோம். பயமில்லாமல் பாறைகளில் நின்று பார்க்க முடிகிறது. காற்று அதிகம் அடித்தால் டண்டணக்கா தான்.

                        

வண்டியைத் திருப்பிக் கொடுக்க இன்னும் நேரம் இருக்கிறது. பெட்ரோலை நிரப்பித் தரவேண்டும். இப்பொழுது நெரிசல் மிக்க பகுதிக்கு வந்து விட்டோம் என்று புரிந்தது. வாடகை வண்டியைத் திருப்பிக் கொடுக்க, ஒரு கேள்வியுமில்லை. பேட்டரிக்கான பணத்தைக் கொடுத்துவிட்டார்கள். அங்கிருந்து ஷட்டில் எடுத்துக்கொண்டு விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தோம். வெளிநாட்டுக்காரர்களுக்கென்று தனி வரிசை. உள்ளூர்க்காரர்கள் கை நிறைய டேன்ஜரின் பழப்பெட்டிகள், கூடைகள், இனிப்புகள் என்று எடுத்துச் சென்று கொண்டிருந்தார்கள். அங்கும் விற்றுக்கொண்டிருந்தார்கள். உள்ளூர் விமானங்களில் தண்ணீர், காஃபி எல்லாம் எடுத்துச் செல்ல அனுமதிக்கிறார்கள்!

அங்கிருக்கும் உணவகங்களில் அத்தனை கூட்டம். முதன்முறையாக உடான் நூடுல்ஸ் சாப்பிட்டேன். அமெரிக்காவை விட உணவுவிலை இங்கு மலிவு தான். எங்கும் பெண்கள் தான் அதிகம் வேலை பார்த்துக் கொண்டிருப்பதாக தோன்றியது! அதுவும் வயதான பெண்கள். பம்பரமாய்ச் சுற்றிக் கொண்டிருந்தார்கள்! கட்டிளங்காளைகள், கன்னிகளுடன் விமானநிலையம் பரபரப்புடன் இருக்க, 'ஜெஜூ ஏர்'ல் ஏறி சியோல் நகருக்குப் பயணமானோம். இங்கிருந்த ஒவ்வொரு நாளும் பார்த்த ஒவ்வொரு இடங்களும் மறக்க முடியாத இனிய அனுபவத்தைக் கொடுத்திருந்தது. 7.15 மணிக்கு 'பை பை ஜெஜூ' சொல்லி கிளம்பி 8.30மணிக்கு சியோல் வந்து சேர்ந்தோம்.

                                            
                                 

அங்கிருந்து விடுதிக்குச் செல்ல சப்வே ரயிலில் ஏறி அரைமணி நேரப் பயணம். இளைஞர்கள் அனைவரும் ஃபோனில் மூழ்கியிருந்தார்கள். அமெரிக்கன் பிராண்ட் ஷூக்கள், ஐபோன்கள், பெரிய வாட்ச்சுகள், பெண்கள் முகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள் போலிருக்கு! மீசையில்லாத ஆண்கள் ஆனால் தலை முழுவதும் முடி! என்ன கொடுமை சரவணா இது😎இதே நியூயார்க் ட்ரெயினில் என்றால் எத்தனை மொட்டைத்தலைகள். எத்தனை விதமான மனிதர்கள், நிறங்கள், உடைகளைப் பார்த்திருப்பேன் என்று நினைத்துக் கொண்டேன். கொரியன்கள் உடை விஷயத்தில் மிகவும் கண்ணியமாக உடலை அதிகம் வெளிப்படுத்தாத அளவிற்கு கொஞ்சம் லூசாகவே அணிகிறார்கள்!

நாங்கள் இறங்க வேண்டிய இடத்தை அடைந்ததும் வெளியில் வந்தால் ட்ரெயின் டிக்கெட்டை ஓரிடத்தில் போடும் இயந்திரத்தில் போட்டால் கொஞ்சம் காசு திரும்ப கிடைக்கிறது! subway சுத்தமாக இருக்கே என்றவுடன், "இதெல்லாம் சுத்தமா? சுத்தம் என்றால் அது ஜப்பான் தான்" என்றால் மகள்! ம்ம்ம்ம். பெட்டிகளைச் சுமந்து கொண்டு வெளியில் வந்தால் ஒரே சத்தம். நடைபாதைகளில் மக்கள் கூட்டம். வழிநெடுக உணவகங்கள். கடைகள். எத்தனைக்கெத்தனை ஜெஜூ அமைதியாக இருந்ததோ அதற்கு எதிர்ப்பதமாக இருந்தது சியோல். எங்களுக்கோ ஒரே கொண்டாட்டம். முகவரியைத் தேடி விடுதி இருக்கும் தெருவில் நுழைந்தவுடன் டெல்லியில் நாங்கள் தங்கியிருந்த இடம் தான் நினைவிற்கு வந்தது. சிறிதும் பெரிதுமாக நெருக்கமான கட்டிடங்கள்.

எனக்கு மதுரை தங்கம் தியேட்டர் தெருவிற்குள் நுழைந்தது போல இருந்தது. ஓரளவு ஆங்கிலம் பேசுபவர்கள் விடுதி வரவேற்பறை அலுவலகத்தில் இருந்தனர். எங்களது பாஸ்போர்ட் விவரங்களை வாங்கிக் கொண்டு மாடியில் இருக்கும் அறைக்கான சாவியைக் கொடுத்து விட்டு காலை உணவிற்கான இடத்தையும் காட்டினார்கள். சிறிய அறை. ஜெஜு தீவில் நாங்கள் தங்கியிருந்த சொகுசு அறை எங்கே? இத்துனூண்டு இடத்தில் பெட்டிகளை வைத்து விட்டு கீழே விழாமல் நடப்பதே சிரமமாக இருந்தது இங்கே. வாடகையும் அதிகம்! நகரம் என்றால் சும்மாவா?

"வாம்மா. இங்க தெரு உணவுகள் ரொம்ப பாப்புலர். என்னென்ன இருக்குன்னு பார்த்துட்டு கொஞ்ச தூரம் நடந்துட்டு வரலாம்" என்று உடனே கிளம்பி விட்டோம்.
 
சாலையோரங்களில் இரவு உணவுக்காக தற்காலிக இருக்கைகள், மேஜைகள் போடப்பட்டு அப்படியொரு கூட்டம். மேஜைகளில் சோஜு பாட்டில்கள்! கிழக்காசியா, பெருநகரத்திற்கே உரிய அத்தனை அம்சங்களுடன் இருந்த நகரம் இரவை உயிர்ப்பித்துக் கொண்டிருந்தது. ஆவி பறக்க, கிண்ணங்களில் சூப், டம்ப்ளிங்ஸ், கைகளில் சாப்ஸ்டிக் வைத்துக் கொண்டு சத்தம் போட்டு சிரித்துக் கொண்டிருந்த புதியதொரு உலகத்தைப் பார்த்தோம். எங்கே மனிதர்கள் என்று தேடிக் கொண்டிருந்தேன். அவர்கள் அனைவரும் சியோலில் கொட்டமடித்துக் கொண்டிருந்தார்கள்!

நாங்களும் ஒரு மணிநேரம் வரை சுற்றிப்பார்த்து என்னென்ன உணவு வகைகளை கடைகளிலும் தள்ளுவண்டிகளிலும் விற்கிறார்கள் என்று பார்த்துக்கொண்டே வந்தோம். சுற்றுலாவினரும் உள்ளூர் மக்களும் என்று அந்த இடம் தீபாவளி நேரத்து மதுரை விளக்குத்தூண் பகுதியைப் போல 'ஜேஜே' என்றிருந்தது. வேலை முடிந்து வீட்டிற்குப் போகமாட்டார்களோ என்ற சந்தேகமும் வலுத்தது. பெரும்பாலும் இளைஞர்கள், இளம்பெண்கள் பட்டாளம். தள்ளாடி தள்ளாடி சிரித்துப் பேசிக்கொண்டே செல்லும் நடுத்தர வயது ஆண்களும் அதிகம் தென்பட்டார்கள். மகள் டோக்கியோ தெருக்களும் இப்படித்தான் களை கட்டியிருக்கும் என்று கூறி அங்கு அவள் பார்த்த, சாப்பிட்ட உணவுகளைச் சொல்லி ஒரு கடையின் முன் நிற்க, அங்கிருந்த இளைஞன் ஆங்கிலத்தில் சரளமாக உரையாடி இரண்டு மூன்று டம்ப்ளிங் வகைகளை அறிமுகப்படுத்தினான். நாங்களும் எங்களுக்குப் பிடித்த டம்ப்ளிங்குகளை வாங்கிக்கொண்டு அறைக்குத் திரும்பினோம்.
                                     
                                          
வாவ்! இத்தனை சுவையான டம்ப்ளிங்குகளை நான் இதற்கு முன் சாப்பிட்டிருக்கவில்லை. ரசித்து ருசித்து சாப்பிட்டோம். "எனக்கு வேறெதுவும் வேண்டாம். இனி எண்டே நாடு கொரியா. எண்டே சாப்பாடு ஷ்ரிம்ப் டம்ப்ளிங்" என்று பாட, இது ஆரம்பம் தான். நாளைக்கு 'food tour' போறோம். அங்க இன்னும் நிறைய தெரிஞ்சுப்போம். உனக்கு எல்லாமே பிடிக்கும் என்றாள் என் செல்லம்.

ஆஹா! கனவுகளுடன் உறங்கச் சென்றோம்.












No comments:

Post a Comment

Bye , bye ஜெஜு

பயணம் என்பது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வது மட்டுமல்ல. நாம் அறிந்திருந்த உலகிலிருந்து எத்தனை வேறுபட்டு நிற்கிறது நம்மைச் சுற்...