Thursday, January 1, 2026

பாதுகாப்பு, அடையாளம், கட்டுப்பாடு: சீனாவின் இஸ்லாமிய தீவிரவாத அணுகுமுறை

சொல்வனம் இதழ் 357ல் வெளியான சீனாவின் உய்குர் முஸ்லீம்களை அரசு கையாண்ட விதத்தைப் பற்றின என்னுடைய கட்டுரை.


சீனா என்றதும் பெய்ஜிங், ஷாங்காய் போன்ற பிரம்மாண்ட நகரங்கள், பழங்காலக் கோயில்கள், சீனப் பெருஞ்சுவர் தான் பலருக்கும் நினைவில் வரும். உலகில் பெரும்பாலானோருக்கு, சீனா கலாச்சார ரீதியாக ஒரே சீரான நாடாகவும் கிழக்கு ஆசியா முழுவதும் தடையின்றிப் பரவியிருக்கும் ஒரு ஒற்றை நாகரிகமாகவும் காட்சியளிக்கிறது. ஆனாலும், பெய்ஜிங்கிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால், பாலைவனங்களையும் மலைத்தொடர்களையும் கடந்து, முற்றிலும் மாறுபட்ட ஒரு சீனா உள்ளது. அங்கே, ஒரு காலத்தில் சந்தைகளில் தொழுகைக்கான அழைப்பு ஒலித்தது. துருக்கிய மொழிகள் தெருக்களில் நிறைந்து மத்திய ஆசிய மரபுகள் அன்றாட வாழ்க்கையை வடிவமைத்திருந்தன.

இதுவே சீனாவின் இஸ்லாமியர்களின் மையப்பகுதி ஆகும். அங்கு என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள, தலைப்புச் செய்திகளையும் முழக்கங்களையும் கடந்து, புவியியல், வரலாறு, சமூகம், பாதுகாப்புச் சிக்கல்கள், அரசாங்கக் கொள்கைகள் ஆகியவற்றை படிப்படியாகக் கவனமாகப் பார்க்க வேண்டியது அவசியம். சமீப காலமாகத்தான் இரண்டு கோடிக்கும் அதிகமான முஸ்லிம்களின் தாயகமாகவும் அந்நாடு இருக்கிறது என்பதை உலக நாடுகள் உணர ஆரம்பித்துள்ளன. அதுவும் உலகளாவிய இஸ்லாமியப் பயங்கரவாதம் தலைவிரித்தாடும் காலத்தில் சீனாவில் இருக்கும் முஸ்லிம்களைப் பற்றிய தகவல்களும் அவர்களைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆவலும் பெருகியுள்ளது. சீனாவும் அவர்களை மிகுந்த கவனத்துடன் கையாண்டு வருகிறது என்பதைச் செய்திகளில் அறிகிறோம்.



சீனாவின் தொலைதூர மேற்கு, வடமேற்குப் பகுதிகளில் மத்திய ஆசியாவிற்கு மிக நெருக்கமான பரந்த நிலப்பரப்பில் தனித்துவமான கலாச்சாரத்துடன் இவர்கள் வாழ்ந்து வந்தாலும் வரலாற்று ரீதியாக அப்பகுதிகள் அமைதியற்றவையாக சீன அரசுக்குப் பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. கடந்த இரண்டு தசாப்தங்களாக உலகளாவிய விவாதத்தின் மையமாகவும் மாறி, பிரிவினைவாதத்தையோ வன்முறையையோ அனுமதிக்காமல், மதத் தீவிரவாதம், இன அடையாளம், தேசிய ஒற்றுமையை சீனா எவ்வாறு கையாள்கிறது என்று உலக அரங்கில் பேசுபொருளாகவும் விவாதிக்கப்பட்டுவருகிறது.

சீனாவின் நடவடிக்கைகளைப் புரிந்துகொள்ள இந்தப் பகுதிகள் எங்கு அமைந்துள்ளன, அங்கு யார் வாழ்கிறார்கள், வரலாறு இன்றைய பதட்டங்களை எவ்வாறு வடிவமைத்துள்ளது என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

சீனா அதிகாரப்பூர்வமாக 56 இனக் குழுக்களை அங்கீகரித்துள்ளது. அவற்றில் 10 இஸ்லாமியக் குழுக்கள் இருந்தாலும் அமைதியின்மை, அரசின் கட்டுப்பாடு குறித்த விவாதங்களில் இரண்டு பகுதிகள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன.


முதலாவதாக, சீனாவின் வடமேற்கில் கஜகஸ்தான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கிர்கிஸ்தான் உட்பட 8 நாடுகளுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ‘ஷின்ஜாங் (Xinjiang) உய்குர் தன்னாட்சிப் பகுதி’. இது சீனாவின் நிலப்பரப்பில் ஆறில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது. இப்பகுதி மட்டும் பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் மொத்த பரப்பளவை விடப் பெரியது. 2022 கணக்கின் படி இதன் மக்கள் தொகை சுமார் இரண்டரைக் கோடி. பெரும்பாலும் ‘டர்கிக்’ இனக்குழுவைச் சார்ந்த சன்னி முஸ்லீம்கள். மாண்டரின் மொழியை விட உஸ்பெக்குக்கு நெருக்கமான உய்குர் மொழி பேசுபவர்கள். இசை, நடனம், பஜார், மசூதியை மையமாகக் கொண்ட சமூக வாழ்க்கை வாழ்பவர்கள். விவசாயம், வர்த்தகம், கைவினைப்பொருட்கள் முக்கிய தொழில்களாக இருந்து வருகின்றன. இவர்களது மொழி, கலாச்சாரம், வரலாற்று நினைவுகள் இவர்களை கிழக்கு சீனாவை விட மத்திய ஆசியாவுடன் நெருக்கமாக இணைக்கின்றன.

மேலும், ஷின்ஜாங் ஒருபோதும் தனிமைப்படுத்தப்பட்ட பிராந்தியமாக இருந்ததில்லை. இது சீனா, பாரசீகம், அரேபியா, ஐரோப்பாவை இணைக்கும் ‘Silk Road’ பாதையில் அமைந்துள்ளது. ஐரோப்பாவின் பல பகுதிகள் இஸ்லாத்தை அறிந்துகொள்வதற்கு முன்பே, 8 ஆம் நூற்றாண்டில் இஸ்லாம் இங்கு நுழைந்துள்ளது. “ஷின்ஜாங்” என்ற பெயருக்கு நேரடிப் பொருள் “புதிய எல்லை” என்பதாகும்.

இரண்டாவதாக, மிகவும் சிறிய, ‘ஹுய்’ முஸ்லிம்களின் தாயகமான ‘நிங்சியா (Ningxia) ஹுய் தன்னாட்சிப் பகுதி’. இங்குள்ளவர்கள் இனரீதியாக ஹான் சீனர்களைப் போன்றவர்கள். மாண்டரின் மொழியில் பேசினாலும் மதத்தால் இஸ்லாமியர்கள். வரலாற்று ரீதியாக அதிக ஒருங்கிணைப்புடனும், குறைந்த மோதல் போக்குடனும் இருப்பவர்கள்.

வெவ்வேறு காலங்களில் துருக்கிய ராஜ்ஜியங்கள், மங்கோலியர்கள், சிங் (Qing) சீனாவால் இப்பகுதிகள் ஆளப்பட்டு 1884ல் அதிகாரப்பூர்வமாக நவீன சீனாவுடன் இணைக்கப்பட்டது. 1930,1940களில் குறுகிய கால பிரிவினைவாத இயக்கங்கள் தோன்றி, பனிப்போர் காலத்தில் சித்தாந்தப் போராட்டங்கள் துவங்க, 1949-க்குப் பிறகு, கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் தனது கட்டுப்பாட்டை இங்கு நிலைநிறுத்தியது. வரலாற்று அடுக்குகளால் சீனாவின் முஸ்லிம் கொள்கைகள் ஹுய் முஸ்லிம்களுக்கும் உய்குர்களுக்கும் இடையில் கடுமையாக வேறுபடுகின்றன.

சீனாவின் கவலை இஸ்லாம் மதம் பற்றியது அல்ல. மாறாக அது “மூன்று தீமைகள்” என்று வரையறுக்கும் பிரிவினைவாதம், மதத் தீவிரவாதம், பயங்கரவாதம் போன்ற விஷயங்களைப் பற்றியது:

1990-கள் முதல் 2010-களின் நடுப்பகுதி வரை, ஷின்ஜாங்-ல் கத்திக்குத்துத் தாக்குதல்கள், தொடர் குண்டுவெடிப்புகள், கலவரங்கள், பொதுமக்கள், காவல்துறையினர் மீதான தாக்குதல்கள் அரங்கேறியுள்ளன. தாக்குதல் நடத்திய சிலருக்கு, ஆப்கானிஸ்தான், சிரியாவில் செயல்படும் குழுக்கள் உட்பட வெளிநாட்டு ஜிஹாதி வலைப்பின்னல்களுடனும் தொடர்பு இருந்தது. சீனாவின் தலைமையோ பிராந்திய ஒருமைப்பாட்டை உயிர்நாடியாகக் கருதுகிறது. இவர்களை விட்டால் பிரிந்து சென்றுவிடும் அபாயம் இருப்பதை உணர்ந்தது. சோவியத் ஒன்றியத்தின் சரிவு, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற வரலாற்று உதாரணங்கள் சீனக் கொள்கை சிந்தனையை வலுவாகப் பாதிக்க, இப்பகுதிகளைக் கட்டுக்குள் கொண்டு வருவது அவர்களின் தலையாய சிந்தனையாக உருமாறியது. அதுவும் தவிர, எண்ணெய், எரிவாயு, நிலக்கரி சுரங்கங்கள் நிறைந்துள்ள பகுதி மட்டுமல்லாது மத்திய ஆசியாவிற்கான நுழைவாயில் என்பதால் புவியியல் ரீதியாகவும் இப்பகுதி சீன அரசிற்கு மிக முக்கியமானது. நிலைமை எல்லை மீறுவதற்குள் தீவிர நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

உய்குர் தன்னாட்சிப் பிராந்தியத்தில் நிலவிய அமைதியின்மையைப் பிராந்திய/இனப் பிரச்சினை என்பதிலிருந்து, தேசிய பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு முன்னுரிமையாகச் சீன அரசாங்கம் முறையாக மறுவகைப்படுத்தியபோது ஒரு தீர்க்கமான மாற்றம் ஏற்பட்டது. உள்ளூர் நிர்வாக விவாதங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு நிலைக்கு அதை உயர்த்தியது. ஒருமுறை இது பாதுகாப்புப் பிரச்சினையாகக் கருதப்பட்டதும் மத்திய அதிகாரிகள் அதிக நேரடிக் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டனர். கொள்கை முடிவுகள் பிராந்தியத் தலைமையிலிருந்து தேசியத் தலைமைக்கு மாற்றப்பட்டன. சீனாவின் சட்டக் கட்டமைப்புக்குள் விதிவிலக்கான நிர்வாக நடவடிக்கைகள் நியாயப்படுத்தப்பட்டன. இந்த மாற்றம், அதைத் தொடர்ந்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் அடித்தளத்தை அமைத்தது.

இதன் மூலம் கிராமம், மாவட்டம், பணியிட மட்டங்களில் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கை விரிவுபடுத்தி உள்ளூர் முடிவெடுக்கும் அமைப்புகளின் சுயாட்சியைக் குறைத்தது. மத, கல்வி, பொருளாதார நிறுவனங்களுக்குள் கட்சி அதிகாரிகளை இணைத்து அரசியல் அதிகாரம் சீரானதாகவும் செங்குத்தாகவும் சீரமைக்கப்பட்டதையும் உறுதிசெய்தது. சம்பவங்கள் நடந்த பிறகு பதிலளிப்பதை விட, தடுப்பு மற்றும் முன்கூட்டியே கண்டறிய நகர்ப்புற, கிராமப்புறங்களில் அடர்த்தியான பாதுகாப்பு கட்டமைப்பு நிறுவப்பட்டது.


நிலையான சோதனைச் சாவடிகள், வழக்கமான அடையாள சரிபார்ப்பு, 
பிராந்திய கட்டளை கட்டமைப்புகளுடன் ஒருங்கிணைந்த உள்ளூர் அளவிலான கண்காணிப்புகள் அமைக்கப்பட்டன.

மத வாழ்க்கையின் மீது அரசு கடுமையான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியது. அரசு அங்கீகரிக்கப்பட்ட தலைமையின் கீழ் மசூதிகளைக் கொண்டுவந்தது. அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு வெளியே மதக் கல்வி தடைசெய்யப்பட்டது. தீவிரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பொது மத வெளிப்பாடு கட்டுப்படுத்தப்பட்டது. இந்த நடவடிக்கைகள் மதத்தின் அரசியல்மயமாக்கப்பட்ட தீவிரவாத விளக்கங்களைத் தடுக்க வடிவமைக்கப்பட்டதாகவும், அதே நேரத்தில் அரசு அனுமதித்த மத நடைமுறையைத் தொடர அனுமதிப்பதாகவும் சீனா கூறுகிறது.

மாண்டரின் முதன்மை கற்பித்தல் மொழியாக மாறியது. மாநில குடிமைக் கல்வி விரிவுபடுத்தப்பட்டது. தேசிய அடையாளத்தை வலியுறுத்தும் கலாச்சார விவரிப்புகள் ஊக்குவிக்கப்பட்டன

பெய்ஜிங்கின் பார்வையில், பொருளாதார இயக்கத்திற்கு நீண்டகால நிலைத்தன்மையும் மொழியியல், கருத்தியல் ஒருங்கிணைப்பும் அவசியம்.

வேலையின்மை, வறுமையை நிவர்த்தி செய்தல், சமூக தனிமைப்படுத்தலைக் குறைத்தல், தீவிரவாத வலையமைப்புகளிலிருந்து தனிநபர்களைத் திசைதிருப்புதலை நோக்கங்களாகக் கொண்டு சீனா அதிகாரப்பூர்வமாகத் தொழில் கல்வி, பயிற்சி முயற்சிகள் என்று விவரிக்கப்படும் பெரிய அளவிலான திட்டங்களைச் செயல்படுத்தியது. சில காலகட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்குப் பங்கேற்பு கட்டாயமாக இருந்தது. இது கொள்கையின் மிகவும் சர்ச்சைக்குரிய அம்சங்களில் ஒன்றாகவும் அமைந்தது. இருப்பினும், இந்தத் திட்டங்கள் ஷின்ஜாங்-ல் அன்றாட வாழ்க்கையையும் சமூக அமைப்பையும் மறுவடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தன.

மேலும், பொருளாதார ஒருங்கிணைப்பு, உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக போக்குவரத்து, தளவாட கட்டமைப்பு, தொழில்துறை பூங்காக்கள், நகர்ப்புற மேம்பாடு, தேசிய விநியோகச் சங்கிலிகளுடன் இணைக்கப்பட்ட வேலைவாய்ப்புத் திட்டங்கள் என்று அரசு பெருமளவில் முதலீடு செய்தது. ஷின்ஜாங்கின் பொருளாதாரத்தைத் தேசிய பொருளாதாரத்துடன் மிக நெருக்கமாக இணைப்பதன் மூலம், பிராந்திய தனிமைப்படுத்தல், பிரிவினைவாத நிர்வாகத்தின் சாத்தியக்கூறுகளைக் குறைத்தது.

Topic summary of tweet text posted between December 2019 and May 2021#StopXinjiang Rumors – ASPI



பாதுகாப்பு, நிர்வாகம், சமூக சேவைகளை ஒருங்கிணைக்க மேம்பட்ட டிஜிட்டல் அமைப்புகள் பயன்படுத்தப்பட்டன. மக்கள்தொகை இயக்கத்தின் தரவு சார்ந்த கண்காணிப்பு, அடையாளம், வேலைவாய்ப்பு, குடியிருப்பு பதிவுகளின் ஒருங்கிணைப்பு, முன் கணிப்பு இடர் மதிப்பீட்டு கருவிகள் என்று ஒவ்வொன்றையும் கருத்தில் கொண்டு அரசு தீவிரமாகச் செயல்பட்டு நீண்டகால கட்டுப்பாட்டையும் வலுப்படுத்தியது.

சர்வதேச எல்லை கட்டுப்பாடுகளின் மூலம் நாடுகடந்த போராளி தொடர்புகளைத் துண்டித்து பிரிவினைவாத/ தீவிரவாத இயக்கங்களுக்கான வெளிப்புற சித்தாந்த, தளவாட ஆதரவைக் குறைத்தது.

மேற்கூறிய பாதுகாப்பு அமலாக்கம், நிர்வாக மறுசீரமைப்பு, சித்தாந்த ஒழுங்குமுறை, பொருளாதார ஒருங்கிணைப்பு, தொழில்நுட்ப கண்காணிப்பு ஆகியவற்றை ஒன்றிணைத்தது. கண்காணிப்புக் படக்கருவிகள், காவல்துறை சோதனைச் சாவடிகள், டிஜிட்டல் கண்காணிப்பு என்று உய்குர் முஸ்லிம்கள் கடுமையான பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டனர். தீவிரவாத சித்தாந்தத்தை அகற்றி மக்களை பொருளாதார ரீதியாக ஒருங்கிணைக்க தீவிரவாத எதிர்ப்புப் பயிற்சி, மொழிக் கல்வி, வேலைவாய்ப்புத் திறன் திட்டங்கள், மறு கல்வி / தொழிற்பயிற்சி மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மத ஆடை மீதான கட்டுப்பாடுகள், மசூதிகள் மீது அரசின் மேற்பார்வை, அரசு நிறுவனங்களுக்கு வெளியே மதக் கல்விக்கு வரம்புகள் என கலாச்சார ஒழுங்குமுறைகளும் அமல்படுத்தப்பட்டன.

கலாச்சாரம், மத சுதந்திரங்கள் கட்டுப்படுத்தப்பட்டதாக பன்னாட்டு விமர்சகர்கள் வாதிட்டாலும் ஷின்ஜாங் முழுவதும் அமல்படுத்தப்பட்ட மேற்கூறிய கொள்கைகள் தாக்குதல்களைத் தடுத்து ஸ்திரத்தன்மையை மீட்டெடுத்தன. 2017 முதல் வன்முறை வெகுவாகக் குறைந்து சுற்றுலா மீண்டும் தொடங்கியுள்ளது. உள்கட்டமைப்பு விரிவாக்கப்பட்டுள்ளது. கலாச்சார வெளிப்பாடு நெருக்கமான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு ஷின்ஜாங் இன்று நிலையான நிர்வாகமாக மாறியுள்ளது என்பதே அரசின் பதிலாக இருக்கிறது.



அதே வேளையில், இஸ்லாத்தை வெளிப்படையாகப் பின்பற்றும் ஹுய் முஸ்லிம்களிடையே மசூதிகள் சுதந்திரமாக இயங்குகின்றன. பிரிவினைவாத வரலாறு இல்லை. ஒழுங்கமைக்கப்பட்ட தீவிரவாத இயக்கங்கள் இல்லை. சீன கலாச்சாரத்தோடு ஒன்றிச் செயல்படுகிறார்கள். இந்த வேறுபாடு, சீன அரசின் கொள்கையானது மதத்தை அல்ல, தீவிரவாதத்தையே குறிவைக்கிறது என்பதற்கு ஆதாரமாக சீனாவால் அடிக்கடி சுட்டிக்காட்டப்படுகிறது.

உய்குர் முஸ்லிம்களின் மீதான சீன அரசின் கொள்கைகள் மீது உலகளாவிய தவறான புரிதல் இருந்தாலும் சீனாவைப் பொறுத்தவரை “எந்த விலை கொடுத்தாவது சிரியா போன்ற சரிவைத் தடுப்பது” மட்டுமே நோக்கமாக உள்ளது. குறிப்பாக பல நூற்றாண்டு கால மோதல்களாலும் எல்லை தாண்டிய தாக்கங்களாலும் வடிவமைக்கப்பட்ட பிராந்தியங்களில், பாதுகாப்பு, கலாச்சார அடையாளம், தனிநபர் சுதந்திரம் ஆகியவற்றுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்துவது எளிதல்ல. ஆனால் சீனா அதனை நன்கு புரிந்து கொண்டுள்ளது.

உய்குர் முஸ்லிம் பிராந்தியங்கள் மீதான சீனாவின் கட்டுப்பாடு, ஒரே ஒரு கொள்கையின் மூலம் அடையப்படவில்லை, மாறாக ஆட்சிமுறை, சமூகம், அன்றாட வாழ்க்கை ஆகியவற்றின் அமைப்புரீதியான மாற்றத்தின் மூலம் அடையப்பட்டது. இந்த அணுகுமுறை, மாற்று அதிகார மையங்கள் வலுப்பெறுவதற்கு முன்பே அவற்றை அகற்றுவதன் மூலம் ஸ்திரமின்மையைத் தடுக்க வேண்டும் என்ற சீனாவின் பரந்த அரச தத்துவத்தைப் பிரதிபலிக்கிறது.

இதில் எந்தச் சந்தேகமும் இல்லாத விஷயம் என்னவென்றால், இது ஷின்ஜாங் கலாச்சார சுயாட்சிக்கும் அரசு அதிகாரத்திற்கும் இடையிலான சமநிலையை மாற்றியமைத்துள்ளது.

ஷின்ஜாங் என்பது வெறும் ஒரு செய்தித் தலைப்பு மட்டுமல்ல.

அது புவியியலும் சித்தாந்தமும் சந்திக்கும் ஒரு இடம். உலகளாவிய எதிர்-தீவிரவாத (counter-extremism) விவாதங்களில் அதிகமாக மேற்கோள் காட்டப்படும் அதே நேரத்தில் கடும் விவாதத்திற்கும் உட்படும் ஒரு வழக்குக் கள ஆய்வாகவும் (case study) உள்ளது.

எதிர்-தீவிரவாத நடவடிக்கைகளின் விளைவுகள், அவற்றை நடைமுறைப்படுத்தும் அரசின் அரசியல், சட்ட அமைப்புகளிலிருந்து பிரிக்க முடியாதவை என்பதை சீன அரசு உலகிற்கு எடுத்துரைக்கிறது. இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒரு தனிப்பட்ட குற்றச்செயல் பிரச்சினையாக அல்ல, தேசிய ஒருமைப்பாட்டை அச்சுறுத்தும் முழுமையான பாதுகாப்பு சவாலாக அணுகி வெற்றியும் கண்டுள்ளது சீனா. அதன் பதில் நடவடிக்கைகளான எதிர்-தீவிரவாதம், சமூக நிர்வாகம், கல்விக் கொள்கை, வேலைவாய்ப்பு, தொழில் பயிற்சி, டிஜிட்டல் கண்காணிப்பு, எல்லை பாதுகாப்பு என அனைத்தையும் ஒரே நிர்வாக கட்டமைப்புக்குள் இணைத்தது. முடிவெடுக்கும் அதிகாரம் மையப்படுத்தப்பட்டது. செயல்படுத்தல் வேகமாக நடந்தது. பொதுக் கருத்து எதிர்ப்புக்கு அமைப்பு சார்ந்த இடம் வழங்கப்படவில்லை. இதனால், குறுகிய கால பாதுகாப்பு அளவுகோள்களில் தாக்குதல்களின் எண்ணிக்கை, அமைப்புசார்ந்த தீவிரவாத செயல்பாடுகள், பொது ஒழுங்கு, பெரிய அளவிலான தீவிரவாத வன்முறை கணிசமாக குறைந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.



இதற்கு மாறாக, சுதந்திர ஜனநாயக நாடுகள் முற்றிலும் வேறுபட்ட கட்டுப்பாடுகளுக்குள் செயல்படுகின்றன.

பிரான்ஸ்– வலுவான உளவுத்துறை, அவசர சட்ட அதிகாரங்கள் இருந்தும், நீதிமன்ற மேற்பார்வை, குடிமக்கள் உரிமைகள், அரசியல் எதிர்ப்பு ஆகியவை முன்கூட்டிய தலையீட்டின் வரம்புகளை நிர்ணயிப்பதால் ஜிஹாதி தாக்குதல்களைத் தொடர்ந்து எதிர்கொள்கிறது.

யுனைடெட் கிங்டம் – தீவிரவாத எதிர்ப்பு கட்டமைப்பு, சமூக ஈடுபாடு, தன்னார்வப் பங்கேற்பு மூலம் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. சதித் திட்டங்களைத் தகர்ப்பதில் இது திறம்படச் செயல்பட்டாலும், ஒத்துழைக்காத, விரைவாகத் தாங்களாகவே தீவிரவாத மனப்பான்மைக்கு ஆளாகும் நபர்களால் இந்நாட்டின் தீவிரவாத தடுப்புக் கொள்கைகள் செயலிழந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்கா – உலகிலேயே வலுவான கருத்துச் சுதந்திரம், மதச் சுதந்திரப் பாதுகாப்புகளை கொண்டுள்ளது. இதனால், எதிர்-தீவிரவாத நடவடிக்கைகள் பெரும்பாலும் தாக்குதல்களுக்குப் பின்னர் நடைபெறும் நீதிமன்ற ஆய்வு, கூட்டாட்சி அமைப்புகளால் கட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கின்றன.

இந்தியா – ஜனநாயகமான ஆனால் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு கட்டமைப்புக்குள் இயங்கும் நாடு. வலுவான காவல் துறையையும் அரசியலமைப்புப் பன்மைத்துவத்தையும் ஒருங்கிணைத்து பெரிய அளவிலான கிளர்ச்சிகளைக் கட்டுப்படுத்தியுள்ளது. ஆனால் சமூக, சட்டரீதியான முரண்பாடுகளுக்கு மத்தியில், தொடர்ச்சியான, பரவலாக்கப்பட்ட தீவிரவாத அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறது.

மேற்கூறிய அனைத்து நாடுகளிலும் தீவிரவாத சிந்தனை வேர் பிடித்த பிறகே அரசின் தலையீடு தொடங்குகிறது. இது குடிமக்கள் உரிமைகளுக்கும் அரசியல் ஒப்புதலுக்கும் கொடுக்கப்படும் முன்னுரிமையின் நேரடி விளைவு.

ஆனால் சீனாவின் அனுபவம் வேறு. சிந்தனையும் கருத்து வெளிப்பாடுகளும் அரசால் கட்டுப்படுத்தப்படும்போது, மத நிறுவனங்கள் அரசின் நிர்வாக கட்டமைப்பில் இணைக்கப்படும்போது, நீதிமன்ற சிதறல் இல்லாத கண்காணிப்பு அமைப்புகள் இயங்கும்போது, தடுப்பு நடவடிக்கைகளுக்கு அரசியல் மறுப்பு இல்லாத சூழ்நிலைகளில் முடிவுகள் எவ்வாறு மாறுகின்றன என்பதை உலகிற்குக் காட்டுகிறது. சர்வாதிகார அரசுகளுக்கு மட்டுமே இது சாத்தியமாகும்.

ஷின்ஜாங் நமக்குக் காட்டுவது ஒரு தீர்வை அல்ல.

தீவிரவாதத்தை கட்டுப்படுத்தும் விதம், ஒவ்வொரு சமூகமும் தன் ஆட்சிமுறையிலும் மதிப்புகளிலும் எடுத்துக் கொள்ளும் முடிவுகளின் பிரதிபலிப்பே என்ற உண்மையைக் கூறுகிறது. மக்களின் பாதுகாப்பிற்கும் சுதந்திரத்திற்கும் இடையே உலகம் செய்யும் தேர்வுகளே, எதிர்காலத்தின் அரசியல் முகவரியை நிர்ணயிக்கும்.

लोकः समस्ताः सुखिनो भवन्तु, உலகத்தில் அனைவரும் சந்தோஷமாக இருக்கட்டும் எனும் தாரக மந்திரம் உணர்ந்தார் தான் யாரோ?

பாதுகாப்பு, அடையாளம், கட்டுப்பாடு: சீனாவின் இஸ்லாமிய தீவிரவாத அணுகுமுறை

சொல்வனம் இதழ் 357ல் வெளியான சீனாவின் உய்குர் முஸ்லீம்களை அரசு கையாண்ட விதத்தைப் பற்றின என்னுடைய கட்டுரை. பாதுகாப்பு, அடையாளம், கட்டுப்பாடு: ...