Thursday, January 1, 2026

பாதுகாப்பு, அடையாளம், கட்டுப்பாடு: சீனாவின் இஸ்லாமிய தீவிரவாத அணுகுமுறை

சொல்வனம் இதழ் 357ல் வெளியான சீனாவின் உய்குர் முஸ்லீம்களை அரசு கையாண்ட விதத்தைப் பற்றின என்னுடைய கட்டுரை.


சீனா என்றதும் பெய்ஜிங், ஷாங்காய் போன்ற பிரம்மாண்ட நகரங்கள், பழங்காலக் கோயில்கள், சீனப் பெருஞ்சுவர் தான் பலருக்கும் நினைவில் வரும். உலகில் பெரும்பாலானோருக்கு, சீனா கலாச்சார ரீதியாக ஒரே சீரான நாடாகவும் கிழக்கு ஆசியா முழுவதும் தடையின்றிப் பரவியிருக்கும் ஒரு ஒற்றை நாகரிகமாகவும் காட்சியளிக்கிறது. ஆனாலும், பெய்ஜிங்கிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால், பாலைவனங்களையும் மலைத்தொடர்களையும் கடந்து, முற்றிலும் மாறுபட்ட ஒரு சீனா உள்ளது. அங்கே, ஒரு காலத்தில் சந்தைகளில் தொழுகைக்கான அழைப்பு ஒலித்தது. துருக்கிய மொழிகள் தெருக்களில் நிறைந்து மத்திய ஆசிய மரபுகள் அன்றாட வாழ்க்கையை வடிவமைத்திருந்தன.

இதுவே சீனாவின் இஸ்லாமியர்களின் மையப்பகுதி ஆகும். அங்கு என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள, தலைப்புச் செய்திகளையும் முழக்கங்களையும் கடந்து, புவியியல், வரலாறு, சமூகம், பாதுகாப்புச் சிக்கல்கள், அரசாங்கக் கொள்கைகள் ஆகியவற்றை படிப்படியாகக் கவனமாகப் பார்க்க வேண்டியது அவசியம். சமீப காலமாகத்தான் இரண்டு கோடிக்கும் அதிகமான முஸ்லிம்களின் தாயகமாகவும் அந்நாடு இருக்கிறது என்பதை உலக நாடுகள் உணர ஆரம்பித்துள்ளன. அதுவும் உலகளாவிய இஸ்லாமியப் பயங்கரவாதம் தலைவிரித்தாடும் காலத்தில் சீனாவில் இருக்கும் முஸ்லிம்களைப் பற்றிய தகவல்களும் அவர்களைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆவலும் பெருகியுள்ளது. சீனாவும் அவர்களை மிகுந்த கவனத்துடன் கையாண்டு வருகிறது என்பதைச் செய்திகளில் அறிகிறோம்.



சீனாவின் தொலைதூர மேற்கு, வடமேற்குப் பகுதிகளில் மத்திய ஆசியாவிற்கு மிக நெருக்கமான பரந்த நிலப்பரப்பில் தனித்துவமான கலாச்சாரத்துடன் இவர்கள் வாழ்ந்து வந்தாலும் வரலாற்று ரீதியாக அப்பகுதிகள் அமைதியற்றவையாக சீன அரசுக்குப் பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. கடந்த இரண்டு தசாப்தங்களாக உலகளாவிய விவாதத்தின் மையமாகவும் மாறி, பிரிவினைவாதத்தையோ வன்முறையையோ அனுமதிக்காமல், மதத் தீவிரவாதம், இன அடையாளம், தேசிய ஒற்றுமையை சீனா எவ்வாறு கையாள்கிறது என்று உலக அரங்கில் பேசுபொருளாகவும் விவாதிக்கப்பட்டுவருகிறது.

சீனாவின் நடவடிக்கைகளைப் புரிந்துகொள்ள இந்தப் பகுதிகள் எங்கு அமைந்துள்ளன, அங்கு யார் வாழ்கிறார்கள், வரலாறு இன்றைய பதட்டங்களை எவ்வாறு வடிவமைத்துள்ளது என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

சீனா அதிகாரப்பூர்வமாக 56 இனக் குழுக்களை அங்கீகரித்துள்ளது. அவற்றில் 10 இஸ்லாமியக் குழுக்கள் இருந்தாலும் அமைதியின்மை, அரசின் கட்டுப்பாடு குறித்த விவாதங்களில் இரண்டு பகுதிகள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன.


முதலாவதாக, சீனாவின் வடமேற்கில் கஜகஸ்தான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கிர்கிஸ்தான் உட்பட 8 நாடுகளுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ‘ஷின்ஜாங் (Xinjiang) உய்குர் தன்னாட்சிப் பகுதி’. இது சீனாவின் நிலப்பரப்பில் ஆறில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது. இப்பகுதி மட்டும் பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் மொத்த பரப்பளவை விடப் பெரியது. 2022 கணக்கின் படி இதன் மக்கள் தொகை சுமார் இரண்டரைக் கோடி. பெரும்பாலும் ‘டர்கிக்’ இனக்குழுவைச் சார்ந்த சன்னி முஸ்லீம்கள். மாண்டரின் மொழியை விட உஸ்பெக்குக்கு நெருக்கமான உய்குர் மொழி பேசுபவர்கள். இசை, நடனம், பஜார், மசூதியை மையமாகக் கொண்ட சமூக வாழ்க்கை வாழ்பவர்கள். விவசாயம், வர்த்தகம், கைவினைப்பொருட்கள் முக்கிய தொழில்களாக இருந்து வருகின்றன. இவர்களது மொழி, கலாச்சாரம், வரலாற்று நினைவுகள் இவர்களை கிழக்கு சீனாவை விட மத்திய ஆசியாவுடன் நெருக்கமாக இணைக்கின்றன.

மேலும், ஷின்ஜாங் ஒருபோதும் தனிமைப்படுத்தப்பட்ட பிராந்தியமாக இருந்ததில்லை. இது சீனா, பாரசீகம், அரேபியா, ஐரோப்பாவை இணைக்கும் ‘Silk Road’ பாதையில் அமைந்துள்ளது. ஐரோப்பாவின் பல பகுதிகள் இஸ்லாத்தை அறிந்துகொள்வதற்கு முன்பே, 8 ஆம் நூற்றாண்டில் இஸ்லாம் இங்கு நுழைந்துள்ளது. “ஷின்ஜாங்” என்ற பெயருக்கு நேரடிப் பொருள் “புதிய எல்லை” என்பதாகும்.

இரண்டாவதாக, மிகவும் சிறிய, ‘ஹுய்’ முஸ்லிம்களின் தாயகமான ‘நிங்சியா (Ningxia) ஹுய் தன்னாட்சிப் பகுதி’. இங்குள்ளவர்கள் இனரீதியாக ஹான் சீனர்களைப் போன்றவர்கள். மாண்டரின் மொழியில் பேசினாலும் மதத்தால் இஸ்லாமியர்கள். வரலாற்று ரீதியாக அதிக ஒருங்கிணைப்புடனும், குறைந்த மோதல் போக்குடனும் இருப்பவர்கள்.

வெவ்வேறு காலங்களில் துருக்கிய ராஜ்ஜியங்கள், மங்கோலியர்கள், சிங் (Qing) சீனாவால் இப்பகுதிகள் ஆளப்பட்டு 1884ல் அதிகாரப்பூர்வமாக நவீன சீனாவுடன் இணைக்கப்பட்டது. 1930,1940களில் குறுகிய கால பிரிவினைவாத இயக்கங்கள் தோன்றி, பனிப்போர் காலத்தில் சித்தாந்தப் போராட்டங்கள் துவங்க, 1949-க்குப் பிறகு, கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் தனது கட்டுப்பாட்டை இங்கு நிலைநிறுத்தியது. வரலாற்று அடுக்குகளால் சீனாவின் முஸ்லிம் கொள்கைகள் ஹுய் முஸ்லிம்களுக்கும் உய்குர்களுக்கும் இடையில் கடுமையாக வேறுபடுகின்றன.

சீனாவின் கவலை இஸ்லாம் மதம் பற்றியது அல்ல. மாறாக அது “மூன்று தீமைகள்” என்று வரையறுக்கும் பிரிவினைவாதம், மதத் தீவிரவாதம், பயங்கரவாதம் போன்ற விஷயங்களைப் பற்றியது:

1990-கள் முதல் 2010-களின் நடுப்பகுதி வரை, ஷின்ஜாங்-ல் கத்திக்குத்துத் தாக்குதல்கள், தொடர் குண்டுவெடிப்புகள், கலவரங்கள், பொதுமக்கள், காவல்துறையினர் மீதான தாக்குதல்கள் அரங்கேறியுள்ளன. தாக்குதல் நடத்திய சிலருக்கு, ஆப்கானிஸ்தான், சிரியாவில் செயல்படும் குழுக்கள் உட்பட வெளிநாட்டு ஜிஹாதி வலைப்பின்னல்களுடனும் தொடர்பு இருந்தது. சீனாவின் தலைமையோ பிராந்திய ஒருமைப்பாட்டை உயிர்நாடியாகக் கருதுகிறது. இவர்களை விட்டால் பிரிந்து சென்றுவிடும் அபாயம் இருப்பதை உணர்ந்தது. சோவியத் ஒன்றியத்தின் சரிவு, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற வரலாற்று உதாரணங்கள் சீனக் கொள்கை சிந்தனையை வலுவாகப் பாதிக்க, இப்பகுதிகளைக் கட்டுக்குள் கொண்டு வருவது அவர்களின் தலையாய சிந்தனையாக உருமாறியது. அதுவும் தவிர, எண்ணெய், எரிவாயு, நிலக்கரி சுரங்கங்கள் நிறைந்துள்ள பகுதி மட்டுமல்லாது மத்திய ஆசியாவிற்கான நுழைவாயில் என்பதால் புவியியல் ரீதியாகவும் இப்பகுதி சீன அரசிற்கு மிக முக்கியமானது. நிலைமை எல்லை மீறுவதற்குள் தீவிர நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

உய்குர் தன்னாட்சிப் பிராந்தியத்தில் நிலவிய அமைதியின்மையைப் பிராந்திய/இனப் பிரச்சினை என்பதிலிருந்து, தேசிய பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு முன்னுரிமையாகச் சீன அரசாங்கம் முறையாக மறுவகைப்படுத்தியபோது ஒரு தீர்க்கமான மாற்றம் ஏற்பட்டது. உள்ளூர் நிர்வாக விவாதங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு நிலைக்கு அதை உயர்த்தியது. ஒருமுறை இது பாதுகாப்புப் பிரச்சினையாகக் கருதப்பட்டதும் மத்திய அதிகாரிகள் அதிக நேரடிக் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டனர். கொள்கை முடிவுகள் பிராந்தியத் தலைமையிலிருந்து தேசியத் தலைமைக்கு மாற்றப்பட்டன. சீனாவின் சட்டக் கட்டமைப்புக்குள் விதிவிலக்கான நிர்வாக நடவடிக்கைகள் நியாயப்படுத்தப்பட்டன. இந்த மாற்றம், அதைத் தொடர்ந்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் அடித்தளத்தை அமைத்தது.

இதன் மூலம் கிராமம், மாவட்டம், பணியிட மட்டங்களில் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கை விரிவுபடுத்தி உள்ளூர் முடிவெடுக்கும் அமைப்புகளின் சுயாட்சியைக் குறைத்தது. மத, கல்வி, பொருளாதார நிறுவனங்களுக்குள் கட்சி அதிகாரிகளை இணைத்து அரசியல் அதிகாரம் சீரானதாகவும் செங்குத்தாகவும் சீரமைக்கப்பட்டதையும் உறுதிசெய்தது. சம்பவங்கள் நடந்த பிறகு பதிலளிப்பதை விட, தடுப்பு மற்றும் முன்கூட்டியே கண்டறிய நகர்ப்புற, கிராமப்புறங்களில் அடர்த்தியான பாதுகாப்பு கட்டமைப்பு நிறுவப்பட்டது.


நிலையான சோதனைச் சாவடிகள், வழக்கமான அடையாள சரிபார்ப்பு, 
பிராந்திய கட்டளை கட்டமைப்புகளுடன் ஒருங்கிணைந்த உள்ளூர் அளவிலான கண்காணிப்புகள் அமைக்கப்பட்டன.

மத வாழ்க்கையின் மீது அரசு கடுமையான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியது. அரசு அங்கீகரிக்கப்பட்ட தலைமையின் கீழ் மசூதிகளைக் கொண்டுவந்தது. அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு வெளியே மதக் கல்வி தடைசெய்யப்பட்டது. தீவிரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பொது மத வெளிப்பாடு கட்டுப்படுத்தப்பட்டது. இந்த நடவடிக்கைகள் மதத்தின் அரசியல்மயமாக்கப்பட்ட தீவிரவாத விளக்கங்களைத் தடுக்க வடிவமைக்கப்பட்டதாகவும், அதே நேரத்தில் அரசு அனுமதித்த மத நடைமுறையைத் தொடர அனுமதிப்பதாகவும் சீனா கூறுகிறது.

மாண்டரின் முதன்மை கற்பித்தல் மொழியாக மாறியது. மாநில குடிமைக் கல்வி விரிவுபடுத்தப்பட்டது. தேசிய அடையாளத்தை வலியுறுத்தும் கலாச்சார விவரிப்புகள் ஊக்குவிக்கப்பட்டன

பெய்ஜிங்கின் பார்வையில், பொருளாதார இயக்கத்திற்கு நீண்டகால நிலைத்தன்மையும் மொழியியல், கருத்தியல் ஒருங்கிணைப்பும் அவசியம்.

வேலையின்மை, வறுமையை நிவர்த்தி செய்தல், சமூக தனிமைப்படுத்தலைக் குறைத்தல், தீவிரவாத வலையமைப்புகளிலிருந்து தனிநபர்களைத் திசைதிருப்புதலை நோக்கங்களாகக் கொண்டு சீனா அதிகாரப்பூர்வமாகத் தொழில் கல்வி, பயிற்சி முயற்சிகள் என்று விவரிக்கப்படும் பெரிய அளவிலான திட்டங்களைச் செயல்படுத்தியது. சில காலகட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்குப் பங்கேற்பு கட்டாயமாக இருந்தது. இது கொள்கையின் மிகவும் சர்ச்சைக்குரிய அம்சங்களில் ஒன்றாகவும் அமைந்தது. இருப்பினும், இந்தத் திட்டங்கள் ஷின்ஜாங்-ல் அன்றாட வாழ்க்கையையும் சமூக அமைப்பையும் மறுவடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தன.

மேலும், பொருளாதார ஒருங்கிணைப்பு, உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக போக்குவரத்து, தளவாட கட்டமைப்பு, தொழில்துறை பூங்காக்கள், நகர்ப்புற மேம்பாடு, தேசிய விநியோகச் சங்கிலிகளுடன் இணைக்கப்பட்ட வேலைவாய்ப்புத் திட்டங்கள் என்று அரசு பெருமளவில் முதலீடு செய்தது. ஷின்ஜாங்கின் பொருளாதாரத்தைத் தேசிய பொருளாதாரத்துடன் மிக நெருக்கமாக இணைப்பதன் மூலம், பிராந்திய தனிமைப்படுத்தல், பிரிவினைவாத நிர்வாகத்தின் சாத்தியக்கூறுகளைக் குறைத்தது.

Topic summary of tweet text posted between December 2019 and May 2021#StopXinjiang Rumors – ASPI



பாதுகாப்பு, நிர்வாகம், சமூக சேவைகளை ஒருங்கிணைக்க மேம்பட்ட டிஜிட்டல் அமைப்புகள் பயன்படுத்தப்பட்டன. மக்கள்தொகை இயக்கத்தின் தரவு சார்ந்த கண்காணிப்பு, அடையாளம், வேலைவாய்ப்பு, குடியிருப்பு பதிவுகளின் ஒருங்கிணைப்பு, முன் கணிப்பு இடர் மதிப்பீட்டு கருவிகள் என்று ஒவ்வொன்றையும் கருத்தில் கொண்டு அரசு தீவிரமாகச் செயல்பட்டு நீண்டகால கட்டுப்பாட்டையும் வலுப்படுத்தியது.

சர்வதேச எல்லை கட்டுப்பாடுகளின் மூலம் நாடுகடந்த போராளி தொடர்புகளைத் துண்டித்து பிரிவினைவாத/ தீவிரவாத இயக்கங்களுக்கான வெளிப்புற சித்தாந்த, தளவாட ஆதரவைக் குறைத்தது.

மேற்கூறிய பாதுகாப்பு அமலாக்கம், நிர்வாக மறுசீரமைப்பு, சித்தாந்த ஒழுங்குமுறை, பொருளாதார ஒருங்கிணைப்பு, தொழில்நுட்ப கண்காணிப்பு ஆகியவற்றை ஒன்றிணைத்தது. கண்காணிப்புக் படக்கருவிகள், காவல்துறை சோதனைச் சாவடிகள், டிஜிட்டல் கண்காணிப்பு என்று உய்குர் முஸ்லிம்கள் கடுமையான பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டனர். தீவிரவாத சித்தாந்தத்தை அகற்றி மக்களை பொருளாதார ரீதியாக ஒருங்கிணைக்க தீவிரவாத எதிர்ப்புப் பயிற்சி, மொழிக் கல்வி, வேலைவாய்ப்புத் திறன் திட்டங்கள், மறு கல்வி / தொழிற்பயிற்சி மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மத ஆடை மீதான கட்டுப்பாடுகள், மசூதிகள் மீது அரசின் மேற்பார்வை, அரசு நிறுவனங்களுக்கு வெளியே மதக் கல்விக்கு வரம்புகள் என கலாச்சார ஒழுங்குமுறைகளும் அமல்படுத்தப்பட்டன.

கலாச்சாரம், மத சுதந்திரங்கள் கட்டுப்படுத்தப்பட்டதாக பன்னாட்டு விமர்சகர்கள் வாதிட்டாலும் ஷின்ஜாங் முழுவதும் அமல்படுத்தப்பட்ட மேற்கூறிய கொள்கைகள் தாக்குதல்களைத் தடுத்து ஸ்திரத்தன்மையை மீட்டெடுத்தன. 2017 முதல் வன்முறை வெகுவாகக் குறைந்து சுற்றுலா மீண்டும் தொடங்கியுள்ளது. உள்கட்டமைப்பு விரிவாக்கப்பட்டுள்ளது. கலாச்சார வெளிப்பாடு நெருக்கமான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு ஷின்ஜாங் இன்று நிலையான நிர்வாகமாக மாறியுள்ளது என்பதே அரசின் பதிலாக இருக்கிறது.



அதே வேளையில், இஸ்லாத்தை வெளிப்படையாகப் பின்பற்றும் ஹுய் முஸ்லிம்களிடையே மசூதிகள் சுதந்திரமாக இயங்குகின்றன. பிரிவினைவாத வரலாறு இல்லை. ஒழுங்கமைக்கப்பட்ட தீவிரவாத இயக்கங்கள் இல்லை. சீன கலாச்சாரத்தோடு ஒன்றிச் செயல்படுகிறார்கள். இந்த வேறுபாடு, சீன அரசின் கொள்கையானது மதத்தை அல்ல, தீவிரவாதத்தையே குறிவைக்கிறது என்பதற்கு ஆதாரமாக சீனாவால் அடிக்கடி சுட்டிக்காட்டப்படுகிறது.

உய்குர் முஸ்லிம்களின் மீதான சீன அரசின் கொள்கைகள் மீது உலகளாவிய தவறான புரிதல் இருந்தாலும் சீனாவைப் பொறுத்தவரை “எந்த விலை கொடுத்தாவது சிரியா போன்ற சரிவைத் தடுப்பது” மட்டுமே நோக்கமாக உள்ளது. குறிப்பாக பல நூற்றாண்டு கால மோதல்களாலும் எல்லை தாண்டிய தாக்கங்களாலும் வடிவமைக்கப்பட்ட பிராந்தியங்களில், பாதுகாப்பு, கலாச்சார அடையாளம், தனிநபர் சுதந்திரம் ஆகியவற்றுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்துவது எளிதல்ல. ஆனால் சீனா அதனை நன்கு புரிந்து கொண்டுள்ளது.

உய்குர் முஸ்லிம் பிராந்தியங்கள் மீதான சீனாவின் கட்டுப்பாடு, ஒரே ஒரு கொள்கையின் மூலம் அடையப்படவில்லை, மாறாக ஆட்சிமுறை, சமூகம், அன்றாட வாழ்க்கை ஆகியவற்றின் அமைப்புரீதியான மாற்றத்தின் மூலம் அடையப்பட்டது. இந்த அணுகுமுறை, மாற்று அதிகார மையங்கள் வலுப்பெறுவதற்கு முன்பே அவற்றை அகற்றுவதன் மூலம் ஸ்திரமின்மையைத் தடுக்க வேண்டும் என்ற சீனாவின் பரந்த அரச தத்துவத்தைப் பிரதிபலிக்கிறது.

இதில் எந்தச் சந்தேகமும் இல்லாத விஷயம் என்னவென்றால், இது ஷின்ஜாங் கலாச்சார சுயாட்சிக்கும் அரசு அதிகாரத்திற்கும் இடையிலான சமநிலையை மாற்றியமைத்துள்ளது.

ஷின்ஜாங் என்பது வெறும் ஒரு செய்தித் தலைப்பு மட்டுமல்ல.

அது புவியியலும் சித்தாந்தமும் சந்திக்கும் ஒரு இடம். உலகளாவிய எதிர்-தீவிரவாத (counter-extremism) விவாதங்களில் அதிகமாக மேற்கோள் காட்டப்படும் அதே நேரத்தில் கடும் விவாதத்திற்கும் உட்படும் ஒரு வழக்குக் கள ஆய்வாகவும் (case study) உள்ளது.

எதிர்-தீவிரவாத நடவடிக்கைகளின் விளைவுகள், அவற்றை நடைமுறைப்படுத்தும் அரசின் அரசியல், சட்ட அமைப்புகளிலிருந்து பிரிக்க முடியாதவை என்பதை சீன அரசு உலகிற்கு எடுத்துரைக்கிறது. இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒரு தனிப்பட்ட குற்றச்செயல் பிரச்சினையாக அல்ல, தேசிய ஒருமைப்பாட்டை அச்சுறுத்தும் முழுமையான பாதுகாப்பு சவாலாக அணுகி வெற்றியும் கண்டுள்ளது சீனா. அதன் பதில் நடவடிக்கைகளான எதிர்-தீவிரவாதம், சமூக நிர்வாகம், கல்விக் கொள்கை, வேலைவாய்ப்பு, தொழில் பயிற்சி, டிஜிட்டல் கண்காணிப்பு, எல்லை பாதுகாப்பு என அனைத்தையும் ஒரே நிர்வாக கட்டமைப்புக்குள் இணைத்தது. முடிவெடுக்கும் அதிகாரம் மையப்படுத்தப்பட்டது. செயல்படுத்தல் வேகமாக நடந்தது. பொதுக் கருத்து எதிர்ப்புக்கு அமைப்பு சார்ந்த இடம் வழங்கப்படவில்லை. இதனால், குறுகிய கால பாதுகாப்பு அளவுகோள்களில் தாக்குதல்களின் எண்ணிக்கை, அமைப்புசார்ந்த தீவிரவாத செயல்பாடுகள், பொது ஒழுங்கு, பெரிய அளவிலான தீவிரவாத வன்முறை கணிசமாக குறைந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.



இதற்கு மாறாக, சுதந்திர ஜனநாயக நாடுகள் முற்றிலும் வேறுபட்ட கட்டுப்பாடுகளுக்குள் செயல்படுகின்றன.

பிரான்ஸ்– வலுவான உளவுத்துறை, அவசர சட்ட அதிகாரங்கள் இருந்தும், நீதிமன்ற மேற்பார்வை, குடிமக்கள் உரிமைகள், அரசியல் எதிர்ப்பு ஆகியவை முன்கூட்டிய தலையீட்டின் வரம்புகளை நிர்ணயிப்பதால் ஜிஹாதி தாக்குதல்களைத் தொடர்ந்து எதிர்கொள்கிறது.

யுனைடெட் கிங்டம் – தீவிரவாத எதிர்ப்பு கட்டமைப்பு, சமூக ஈடுபாடு, தன்னார்வப் பங்கேற்பு மூலம் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. சதித் திட்டங்களைத் தகர்ப்பதில் இது திறம்படச் செயல்பட்டாலும், ஒத்துழைக்காத, விரைவாகத் தாங்களாகவே தீவிரவாத மனப்பான்மைக்கு ஆளாகும் நபர்களால் இந்நாட்டின் தீவிரவாத தடுப்புக் கொள்கைகள் செயலிழந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்கா – உலகிலேயே வலுவான கருத்துச் சுதந்திரம், மதச் சுதந்திரப் பாதுகாப்புகளை கொண்டுள்ளது. இதனால், எதிர்-தீவிரவாத நடவடிக்கைகள் பெரும்பாலும் தாக்குதல்களுக்குப் பின்னர் நடைபெறும் நீதிமன்ற ஆய்வு, கூட்டாட்சி அமைப்புகளால் கட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கின்றன.

இந்தியா – ஜனநாயகமான ஆனால் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு கட்டமைப்புக்குள் இயங்கும் நாடு. வலுவான காவல் துறையையும் அரசியலமைப்புப் பன்மைத்துவத்தையும் ஒருங்கிணைத்து பெரிய அளவிலான கிளர்ச்சிகளைக் கட்டுப்படுத்தியுள்ளது. ஆனால் சமூக, சட்டரீதியான முரண்பாடுகளுக்கு மத்தியில், தொடர்ச்சியான, பரவலாக்கப்பட்ட தீவிரவாத அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறது.

மேற்கூறிய அனைத்து நாடுகளிலும் தீவிரவாத சிந்தனை வேர் பிடித்த பிறகே அரசின் தலையீடு தொடங்குகிறது. இது குடிமக்கள் உரிமைகளுக்கும் அரசியல் ஒப்புதலுக்கும் கொடுக்கப்படும் முன்னுரிமையின் நேரடி விளைவு.

ஆனால் சீனாவின் அனுபவம் வேறு. சிந்தனையும் கருத்து வெளிப்பாடுகளும் அரசால் கட்டுப்படுத்தப்படும்போது, மத நிறுவனங்கள் அரசின் நிர்வாக கட்டமைப்பில் இணைக்கப்படும்போது, நீதிமன்ற சிதறல் இல்லாத கண்காணிப்பு அமைப்புகள் இயங்கும்போது, தடுப்பு நடவடிக்கைகளுக்கு அரசியல் மறுப்பு இல்லாத சூழ்நிலைகளில் முடிவுகள் எவ்வாறு மாறுகின்றன என்பதை உலகிற்குக் காட்டுகிறது. சர்வாதிகார அரசுகளுக்கு மட்டுமே இது சாத்தியமாகும்.

ஷின்ஜாங் நமக்குக் காட்டுவது ஒரு தீர்வை அல்ல.

தீவிரவாதத்தை கட்டுப்படுத்தும் விதம், ஒவ்வொரு சமூகமும் தன் ஆட்சிமுறையிலும் மதிப்புகளிலும் எடுத்துக் கொள்ளும் முடிவுகளின் பிரதிபலிப்பே என்ற உண்மையைக் கூறுகிறது. மக்களின் பாதுகாப்பிற்கும் சுதந்திரத்திற்கும் இடையே உலகம் செய்யும் தேர்வுகளே, எதிர்காலத்தின் அரசியல் முகவரியை நிர்ணயிக்கும்.

लोकः समस्ताः सुखिनो भवन्तु, உலகத்தில் அனைவரும் சந்தோஷமாக இருக்கட்டும் எனும் தாரக மந்திரம் உணர்ந்தார் தான் யாரோ?

Thursday, December 25, 2025

இருட்டின் வெளிச்சம்: உய்குர் கட்டாயத் தொழில் சர்ச்சை

சொல்வனம் இதழ் 356ல் வெளியான என்னுடைய கட்டுரை, சர்வ வல்லமை பொருந்திய நாடுகள் எவ்வாறு உண்மையை இருட்டடிப்பு செய்கிறது. அதன் இரும்புக்கரங்கள் எவ்வாறு கல்விநிலையங்களைக் கூட செயலிழக்கச் செய்கிறது என்பதைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறது. இருட்டின் வெளிச்சம்: உய்குர் கட்டாயத் தொழில் சர்ச்சை – சொல்வனம் | இதழ் 356 | 14 டிச 2025

சமீபத்தில் ஒரு கல்லூரிப் பேராசிரியருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது எங்கும் அரசியல் சரிநிலை (“பொலிடிகல் கரெக்ட்னஸ்”) என்ற பெயரில் ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டுவிட்டது. உண்மையைக் கூட எழுதுவதற்கோ, பேசுவதற்கோ அஞ்சும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது என்று மனம் நொந்து கூறினார். வரலாற்றை உள்ளது உள்ளபடி மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுக்க முடியவில்லை. அவர்களும் உண்மையைக் கேட்கும் நிலையில் இல்லை. அப்படியே விளக்கினாலும் பிரச்சினை என்று ஒன்று வந்தால் பல்கலைக்கழகத்தின் ஆதரவு கூட ஆசிரியர்களுக்குக் கிடைக்குமா என்பதே சந்தேகம் தான் என்று வருந்தினார். இதோ சென்ற வாரம் வெளிவந்த செய்தி அவருடைய பயத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

‘லாரா டி. மர்ஃபி’ – கடந்த வாரத்தில் ஊடகங்களில் தலைப்புச்செய்தியாக வலம் வந்த பெண்மணி. முன்னணி மனித உரிமை ஆராய்ச்சியாளர். ‘Center for Strategic and International Studies’ன் Human Rights Initiative-ல் மூத்த இணை ஆராய்ச்சியாளராக பணியாற்றுகிறார். மனித, பொருளாதார, சுற்றுச்சூழல் பாதிப்புகளைப் பதிவுசெய்து, தொழிலாளர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுப்பதே அவரது பணியின் நோக்கமாகும். இவர் இங்கிலாந்தில் உள்ள ‘ஷெஃபீல்ட் ஹாலம்’ பல்கலைக்கழகத்தில் ஹெலினா கென்னடி சர்வதேச நீதி மையத்தின் மனித உரிமைகள் மற்றும் சமகால அடிமைத்தனம் தொடர்பான துறையின் பேராசிரியராகவும் உள்ளார்.

பைடன் நிர்வாகத்தின் போது, அமெரிக்க உள்துறைப் பாதுகாப்புத் துறையின் (DHS) கொள்கை பிரிவு உள் செயலாளரின் ஆலோசகராக இருந்த அவர், பல்துறை இணைந்த ‘Forced Labor Enforcement Task Force’-ஐ ஆதரித்து, கட்டாயத் தொழிலாளர் பிரச்சினை தொடர்பான அமெரிக்கக் கொள்கைகள், ஆய்வுகள், சர்வதேச பங்குதாரர் தொடர்புகளை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தவர். சீனாவை மையமாகக் கொண்ட இவருடைய ஆராய்ச்சி, ‘அமெரிக்க உய்குர் கட்டாய தொழிலாளர் தடுப்புச் சட்டம்’ (‘Uyghur Forced Labor Prevention Act’) அமல்படுத்தப்பட்டதில் மிக முக்கிய காரணியாக இருந்தது. அதே ஆராய்ச்சி தான் தற்பொழுது பேசுபொருளாகி உலக ஆராய்ச்சியாளர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இவருடைய ஆராய்ச்சி ‘Forced Labour Lab’, சீனாவில் உய்குர் சமூக மக்களின் கட்டாயத் தொழிலாளர் நடைமுறைகளை ஆவணப்படுத்தி ஆதாரங்களின் அடிப்படையில் அரசாங்கங்கள், NGO-க்கள், நிறுவனங்கள் மூலமாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் நலனிற்காக நடவடிக்கைகள் எடுப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. அதற்காகப் பல துறைகளையும் ஆய்வு செய்துள்ளார் மர்ஃபி . புதுப்பிக்கத்தக்க ஆற்றல், முக்கிய கனிமங்கள், வாகன உற்பத்தி, துணிநூல், வேளாண்மை, ரசாயனத் துறைகள் போன்ற முக்கிய உலகளாவிய துறைகளில் இடம்பெறும் கட்டாயத் தொழிலாளர் முறைகேடுகளை வெளிக்கொணருவதே அவரது ஆராய்ச்சியின் மையப் புள்ளியாகக் கூறப்படுகிறது.

அதற்காக, NGO-க்கள், கொள்கை நிறுவனங்கள், செயற்கைக்கோள் படங்கள் (satellite imagery), வர்த்தகம், விநியோகச் சங்கிலி பகுப்பாய்வு மூலமாக, பாதிக்கப்பட்டவர்கள், தொழிலாளர்கள், உயிர் தப்பியவர்களின் சான்றுகளைச் சேகரித்துள்ளார். அதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் கட்டாயத் தொழிலாளர்களைக் கொண்டு இயங்கும் தொழிற்சாலைகளுக்குமான தொடர்பையும், மனித உரிமை மீறல்கள், தொழிலாளர் சுரண்டல் நடைமுறைகள், சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் அம்பலப்படுத்தினார்.
லாரா மர்ஃபியின் ஆய்வு, உலகளாவிய விநியோகச்சங்கிலி, சர்வதேச சட்டங்கள், மனித உரிமை பொறுப்புகள் ஆகியவற்றை வெளியிடுவதால் பல நாடுகள் இவருடைய ஆராய்ச்சியில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டுள்ளன. குறிப்பாக, அமெரிக்கா. ‘Uyghur Forced Labor Prevention Act (UFLPA)’, சீனாவின் ஷின்ஜியான்ல் கட்டாயத் தொழிலாளர்களை வைத்துச் செய்த பொருட்களை இறக்குமதி செய்யத் தடை விதிக்கும் முக்கிய அமெரிக்கச் சட்டம் ஆகும். மர்ஃபியின் ஆராய்ச்சி அளித்த ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு அமெரிக்க கொள்கை வடிவமைப்பாளர்கள், அரசு சாரா நிறுவனங்கள், அமலாக்க அதிகாரிகளால் இயற்றப்பட்ட சட்டம். எனவே, இந்த ஆய்வு அமெரிக்கச் சந்தையில் நுழையும் பொருட்கள் கட்டாயத் தொழிலாளர் தொடர்புடையதா என்பதைக் கண்டறிய முக்கியமானதாகிறது.

ஐரோப்பிய யூனியன், யுனைடெட் கிங்டம் இரண்டிலும் கட்டாயத் தொழிலாளர்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் சந்தையில் நுழையக் கூடாது என்ற சட்டங்களும், கண்காணிப்பு விதிகளும் உள்ளன. இதனால் இந்த ஆய்வு ஐரோப்பிய மனித உரிமை அமைப்புகளுக்கும் முக்கியமானது.

மர்ஃபியின் ஆய்வு சுமத்தும் குற்றங்களால் சம்பந்தப்பட்ட பல நிறுவனங்கள் இன்று பதிலளிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்த ஆராய்ச்சியின் மூலம் சீன அரசையும், பல்வேறு துறைகளையும், நிறுவனங்களையும் குற்றம் சாட்ட, அரசியல், பொருளாதார ரீதியாக சீனாவிற்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளது. வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்குமா சீன அரசு? அதிகாரிகள் உடனே பல்கலைக்கழகத்திற்கு அழுத்தம் கொடுக்க, ஆராய்ச்சியின் இறுதி பதிப்பு வெளிவருவது உடனே கட்டுப்படுத்தப்பட்டது.

2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பல்கலைக்கழகத்திற்குத் திரும்பிய பொழுது சர்வதேச மோதலின் மையத்தில் தான் வசமாக சிக்கியுள்ளதையும் சீனாவை மையமாகக் கொண்ட கட்டாய தொழிலாளர் விசாரணைகளை இனி தொடர முடியாது என்றும் அறிந்து கொண்டார் மர்ஃபி. பல்கலைக்கழக உள் ஆவணங்கள் மூலம் ஆகஸ்ட் 2022லிருந்தே ஷெஃபீல்ட் ஹாலமின் வலைத்தளங்கள், மின்னஞ்சல் தொடர்புகள் சீனாவிற்குள் தடுக்கப்பட்டுள்ளதையும் அறிந்தார். மர்ஃபியின் ஆராய்ச்சி சீன அதிகார அரசின் அதிருப்தியைத் தூண்டியதற்கான ஆரம்ப அறிகுறியாகவும் அது பார்க்கப்பட்டது.

ஏப்ரல் 2024ல் அதிருப்தி மேலும் தீவிரமடைய, அதே ஆவணங்களில் சீன “தேசிய பாதுகாப்பு சேவை” அதிகாரிகள் என்று விவரிக்கப்பட்ட மூன்று நபர்கள் பல்கலைக்கழகத்தின் சீன அலுவலகத்திற்குச் சென்று மர்ஃபியின் கட்டாய தொழிலாளர் ஆய்வகத்தால் தயாரிக்கப்பட்ட ஆராய்ச்சி குறித்து கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஒரு ஊழியரை விசாரித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2024 ஜூலை-செப்டம்பர் வாக்கில், ஆராய்ச்சியின் இறுதிக் கட்டத்தை வெளியிடுவதாக மர்ஃபி தயாராக, அது சீன அரசின் கோபத்திற்கு ஆளாகி பழிவாங்கலைத் தூண்டக்கூடும் என பல்கலைக்கழகம் தயங்கியது.

சீனாவில் ஆராய்ச்சியைத் தொடர்ந்து நடத்துவது அங்குள்ள பணியாளர்களுக்கு அபாயம் ஏற்படுத்தக்கூடும். கூட்டாளிகளும் பாதிக்கப்படலாம். மாணவர் சேர்க்கை எண்ணிக்கை மீதும் தாக்கம் ஏற்படுத்தலாம் என பல்கலைக்கழகத் தலைமை அஞ்சி, மீதமுள்ள மானிய நிதிகளை ஆகஸ்ட் 2024ல் ‘Global Rights Compliance’ எனும் அரசு சாரா தொண்டு நிறுவனத்திற்கே திருப்பி அனுப்பிவிட்டது. மேலும், மர்ஃபியின் ‘Forced Labour Lab’ ஆராய்ச்சியின் இறுதிப் பதிப்பை பல்கலைக்கழகத்தின் பெயரில் வெளியிடுவதற்குப் பதிலாக முற்றிலுமாக நிறுத்த தடைவிதித்தது.

லாரா மர்ஃபியின் ஆராய்ச்சியைக் கட்டுப்படுத்தும் முடிவு அவருக்கும், அவருக்கு உதவிய பல குழுக்களுக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது. UK மற்றும் சீனாவில் உள்ள Sheffield Hallam அலுவலகப் பணியாளர்கள் உறுதிப்படுத்தப்படாத சூழலையும் செயல்பாட்டுச் சவால்களையும் சந்தித்தனர். உய்குர் சமூகத்தினரும் மற்ற தொழிலாளர்களும் மறைமுகமாகப் பாதிக்கப்பட்டனர்.

இத்தகைய வெளிநாட்டுத் தலையீட்டால் உணர்திறன் வாய்ந்த மனித உரிமைப் பணிகளில் கல்வி சுதந்திரத்தின் எதிர்காலம் பற்றிய அவசர கேள்விகளையும் எழுப்பி பரபரப்பான விவாதங்களும் நடைபெற, மர்ஃபியும் வழக்குத் தொடுக்க, இறுதியில், பல்கலைக்கழகம் பொது மன்னிப்பை அறிவித்து மர்ஃபியின் ஆராய்ச்சியை மீண்டும் அனுமதித்தது. அவரது அகாடமிக் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஒப்புக் கொண்டது. மேலும், UK counter-terror போலீசும் பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் வெளிநாட்டு உளவுத்துறைக்கு உதவி செய்ததாக இருக்கக்கூடும் என்பதை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளது.

இந்தச் சம்பவம், ஜனநாயக நாடுகளிலும் பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டு அழுத்தத்தால் எப்படி பாதிக்கப்படக்கூடும் என்பதையும் ஆராய்ச்சியாளர்கள், பணியாளர்கள், உலகளாவிய மனித உரிமை சமூகத்தின் மீது நேரடியாக எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள் என்பதையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

அதே நேரத்தில் மர்ஃபி ஏன் சீனாவின் ஷின்ஜியாங்-ஐ ஆராய்ச்சிக்களமாக தேர்ந்தெடுத்தார் என்ற கேள்வியும் எழுகிறது. வடமேற்கு சீனாவின் ஷின்ஜியாங் பிராந்தியத்தில் 1.2 கோடி உய்குர், துர்கிக் சிறுபான்மையினர் வாழ்கின்றனர். அங்கே தான் அதிகளவில் கைதிகள், கட்டாயத் தொழிலாளர்கள், “மறு கல்வி” திட்டங்கள் என்ற பெயரில் மனித உரிமை மீறல்கள் காணப்படுகின்றன என்று ஐ.நா., தன்னார்வல ஆய்வாளர்கள், மனித உரிமை அமைப்புகள் மேற்கொண்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய பெரும் அளவிலான தொழிலாளர் மாற்றுத் திட்டங்கள் வேறு எந்த நாட்டிலும் காணப்படவில்லை. இங்கு பட்டுத் தயாரிப்பு, சோலார்-பாலிசிலிக்கான், அலுமினியம், பிற மூலப்பொருட்களின் முக்கிய உற்பத்தியாளர்களும் அதிகளவில் இருக்கின்றனர். மர்ஃபியின் ஆய்வு இந்தப் பொருட்கள் எவ்வாறு சப்ளை செயின்களில் சேர்கின்றன என்பதைக் கண்காணிக்கிறது.

பேராசிரியர் மர்ஃபியின் ஆய்வில் சீனா கடுமையாக எதிர்க்கும் பகுதிகள் அனைத்தும் ஷின்ஜியாங்கில் நடைபெறும் தொழிலாளர் மாற்றுத் திட்டங்கள் உலகளாவிய சப்ளை-செயின்களுடன் எவ்வாறு இணைக்கப்படுகின்றன என்ற அவரது கண்டுபிடிப்புகளைச் சுற்றியே அமைகின்றன. உய்குர், துர்கிக் சிறுபான்மையினர் வலுக்கட்டாயமாக வேலைக்கு அனுப்பப்படுகிறார்கள் என மர்ஃபி வழங்கிய விரிவான ஆதாரங்களை சீனா மறுக்கிறது. அவை அனைத்தும் “தன்னார்வச் சேர்க்கை”, “வறுமை ஒழிப்பு” திட்டங்கள் எனக் கூறி, கட்டாயத் தொழிலின் குற்றச்சாட்டுகளை “அபத்தமான பொய்கள்” என விவரிக்கிறது. உலகின் பெரும்பாலான பாலிசிலிக்கான் உற்பத்தி செய்யும் ஷின்ஜியாங்கின் சோலார் தொழில், கார் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் அலுமினியம், இரும்பு, கனிமங்கள் பற்றிய அவரது ஆய்வும், கண்டுபிடிப்புகளும் சீனாவின் மிகுந்த எதிர்ப்புகளைச் சந்தித்தவை. குறிப்பிட்ட சீன நிறுவனங்களின் பெயர்களை வெளிப்படையாகச் சேர்த்திருப்பதும், “வெளி வாழ்வுப் பயிற்சி மையங்கள்” எனப்படும் கட்டிடங்களில் நடைபெறும் அரசியல் அழுத்தத்தையும் கண்காணிப்பையும் அவர் பதிவுசெய்திருப்பதும் சீனாவை மேலும் ஆத்திரப்படுத்தியுள்ளது.

அவரது ஆய்வு அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் விதிக்கும் இறக்குமதி தடைகளுக்கும் தணிக்கைகளுக்கும் “ஆதாரமாக” பயன்படுத்தப்படுகிறது என சீனா குற்றம் சாட்டுகிறது. ஆராய்ச்சியின் முடிவுகளை ஏற்கும் போது அரசியல், பொருளாதார விளைவுகளும் மிகப் பெரியதாக இருக்கும் என்பது தான் சீன அரசின் கோபத்திற்குக் காரணம்.

மர்ஃபியின் ஆய்வைச் சுற்றியுள்ள சர்ச்சை இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதன் எதிர்காலம் பன்னாட்டு அரசியல், பல்கலைக்கழக கொள்கைகள், உலகளாவிய சப்ளை-செயின் சீர்திருத்தங்கள் எவ்வாறு மாறுகின்றன என்பதிலேயே நிர்ணயிக்கப்படும். உய்குர் கட்டாயத் தொழில் தடுப்பு சட்டம் (UFLPA) போன்ற கடுமையான அமெரிக்க இறக்குமதி சட்டங்கள் வலுவடையும் நிலையில், மர்ஃபியின் ஆய்வு மேலும் பல நிறுவன விசாரணைகள், வர்த்தக கட்டுப்பாடுகள், சப்ளை-செயின் ஆய்வுகளுக்கு வழிகாட்டும் வாய்ப்புகள் அதிகம். இதனால் உலகளாவிய நிறுவனங்கள் தங்களின் மூலப்பொருட்களை மிகத் துல்லியமாகத் தடம் பின்தொடர வேண்டிய சூழ்நிலை உருவாகும். அதே சமயம், சீனா கட்டாயத் தொழில் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்து, ஷின்ஜியாங்கில் நடைபெறும் தொழிலாளர் மாற்றுத் திட்டங்கள் அனைத்தும் சட்டப்பூர்வமான தன்னார்வத் தொழிலாகும் என்று வலியுறுத்தும். எனவே அந்தக் குற்றச்சாட்டுகளைச் சரிபார்க்கவோ, ஒத்துழைக்கவோ அரசிடமிருந்து கிடைக்கும் வாய்ப்புகள் மிகக் குறைவு.

பல்கலைக்கழகங்களுக்கோ, இந்த விவகாரம் கல்விச் சுதந்திரத்தின் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு பெரிய கேள்வியையும் ஒரு வெளிநாட்டு அரசு, பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் வெளியிடும் ஆய்வை கையாள முடியுமா என்பதையும் எழுப்புகிறது. நேரடியாகப் பாதிக்கப்படும் உய்குர் சமூகங்களுக்கு, சர்வதேச கவனிப்பு, உண்மையான பாதுகாப்பிற்கும் கொள்கை மாற்றத்துக்கும் வழிவகுக்குமா என்பதே முக்கியமான கேள்வி. இறுதியாக, திறந்த ஆய்வும், அரசால் கட்டுப்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ விளக்கங்களுக்கு இடையே நடைபெறும் இந்த மோதல் மேலும் தீவிரமாகப் போகிறது. இது ஒரு சாதாரண மனித உரிமை பிரச்சனை அல்ல, உலக அளவில் கல்விச் சுதந்திரம் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை நிர்ணயிக்கக்கூடிய ஒரு முக்கியமான சோதனை.

அரசுகள், பல்கலைக்கழகங்கள், தொழில் துறை நிறுவனங்கள் எவ்வாறு பதிலளிக்கின்றன என்பதைப் பொறுத்தே இனி மனித உரிமை ஆய்வுகள் அரசியல் அழுத்தத்தை எதிர்கொள்ளுமா அல்லது அதனால் மாற்றப்படுமா என்பதைத் தீர்மானிக்கும். பயமுறுத்தலுக்கு எதிராக உண்மையைத் தேடும் துணிச்சல் ஒரு ஆய்வாளரின் சாதனை மட்டும் அல்ல, உலகளாவிய மனித உரிமை ஆய்வின் நம்பகத்தன்மையை நிர்ணயிக்கும் அளவுகோலும் ஆகும்.

Tuesday, November 25, 2025

சலிக்காத தொடர்கள்

ராமாயணம், மகாபாரதம் இதிகாச கதைகளை எத்தனை முறை வாசித்தாலும், பார்த்தாலும் சலிப்பதே இல்லை. முதன்முதலில் தொன்னூறுகளில் 'ராமாயணம்' தொடராக தூர்தர்ஷனில் வெளிவந்த பொழுது அதன் பிரம்மாண்ட காட்சிகளில் தொலைந்து போனது இன்றும் நினைவில் இருக்கிறது. ஒவ்வொரு ஞாயிறு அன்றும் தொடர் ஒளிபரப்பும் நேரத்தில் தெருவில் மக்கள் நடமாட்டமே இருக்காது அல்லது மிக குறைவாக இருக்கும். குடும்பங்களாக உட்கார்ந்து களித்த தொடர் அது. ஹிந்தியில் தான் ஒளிபரப்பினார்கள். ஆனாலும் ரசித்தோம். ஏனென்றால் பலவாறு கதைகளைக் கேட்டிருந்தோம். அதில் சீதையாக நடித்தவர் பாரளுமன்ற உறுப்பினர் ஆகும் அளவிற்கு மக்களின் அமோக ஆதரவு பெற்றிருந்தது. 

பிறகு 'மகாபாரத்' வெளிவந்தது. பீமன், கர்ணன், துரியோதனன், அதுவும், கண்ணனாக நடித்தவர்கள் பிரபலமானார்கள். பிறகு விஜய் டிவியில் தமிழிலும் வெளிவந்து அதுவும் பிரபலமானது. ஒவ்வொரு தொடரிலும் நடிக்கும் கதைமாந்தர்கள் அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றார்கள்.அதனாலேயே இன்று வரையிலும் இத்தொடர்கள் பிரபலமாகவே இருக்கிறது. இருக்கும்.


சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸ்-ல்  'குருக்ஷேத்ரா' என்றொரு தொடர் வெளியாகியிருக்கிறது. 18 நாட்கள் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையில் நடக்கும் போரை மிக அழகாக தொகுத்து வழங்கியிருக்கிறார்கள். அனிமேஷன் என்பதால் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் கதையில் சற்றும் தொய்வு ஏற்படாமல் மிக அழகாக எடிட் செய்து கொண்டு சென்ற விதம் பாராட்டுக்குரியது. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தையும் போரில் கண்ணனின் பங்கையும் மிகமிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். பின்னணி இசையும் கேட்க நன்றாக இருக்கிறது.


முதல் நாள் போரில் ஆரம்பித்து பாண்டவர்கள் ஹஸ்தினாபுரம் திரும்பி யுதிஷ்டிரர் அரியணை ஏறும் வரை செல்லும் இந்தத் தொடரை கண்டுகளியுங்கள். கதைகள் தெரிந்த குழந்தைகளும் ரசிப்பர். ஒரு தொடரில் அனைத்தையும் காண்பிப்பது சாத்தியமில்லை. அதுவும் தவிர, பல்வேறு திரிக்கப்பட்ட கதைகள் இருப்பதால் ஆர்வமுள்ளவர்கள் முறையான புத்தகங்களைத் தேடி வாசியுங்கள். தொடர்களில் காண கிடைக்காத காட்சிகள் ஏராளம் அதில் புதைந்து கிடக்கிறது. 






Wednesday, November 12, 2025

AIM for Seva வெள்ளிவிழா ஆண்டு


"Education is the key to the development of a society."


பூஜ்யஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் சத்திய வாக்கு! ஒரு சமுதாயம் உயர கல்வி அவசியம். அவர் மனதில் 25 வருடங்களுக்கு முன் தோன்றிய எண்ணம் நனவாகி 'AIM for Seva' என்ற அமைப்பாக உருவெடுத்தது. மலைவாழ் மக்களின் குழந்தைகள் தினமும் நான்கு மைல்கள் நடந்து சென்று கல்வி கற்க வேண்டிய சூழலை அறிந்து அவர்களுக்கு உதவ, பள்ளிகளுக்கு அருகிலேயே 'சத்ராலயா' எனும் இலவச தங்கும் இடங்கள் கட்டப்பட்டது. கூடவே, ஆரோக்கிய உணவும், உடைகளும், பாதுகாப்பான சூழலும், மருத்துவ வசதிகளும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டன.

2001ல் முதன்முதலாக மாணவர்களுக்கான தங்குமிடம் ஒன்று தமிழ்நாட்டில் அணைக்கட்டி மலைக்கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பெண் குழந்தைகளுக்காக ஒன்று என்று விரைவில் வளர்ந்து தற்பொழுது 95 உறைவிடப் பள்ளிகள் 17 மாநிலங்களில் உருவாகியுள்ளது. 3000 கிராமங்களில் இருந்து 4,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நான்கு முதல் 12ஆம் வகுப்புகள் வரை பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. 2002ல் இருந்து AIM for Seva அறக்கட்டளை வாயிலாக ஒன்பது பள்ளிகளும் ஒரு கல்லூரியும் உருவாகியுள்ளது. கிண்டர்கார்ட்டன் முதல் இங்கு படிக்கும் 5000 மாணவர்களுக்கு அரசு பாடத்திட்டங்களுடன் வாழ்க்கையில் முன்னேறவும் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ உதவும் வழிவகைகளும் கற்றுத்தரப்படுவது சிறப்பு.

நகர்ப்புற மாணவர்களைப் போலவே கிராமங்களில், தொலைதூரங்களில் வசிக்கும் வசதியற்ற மாணவர்களுக்கும் கல்வியை அளித்து நாட்டை முன்னேற்றுவதே இந்த அமைப்பின் நோக்கமாகும்.

25 வருடங்களில் 2 கோடி கிராமப்புற மக்களை அடைந்துள்ள இந்த அமைப்பின் வாயிலாக ஒவ்வொரு வருடமும் 10,000 மாணவர்கள், 65,000 மருத்துவ பயனாளர்கள் உதவிகளைப் பெறுகிறார்கள். கிராமப்புற பஞ்சாயத்து, உள்ளூர் பள்ளிகள் மூலம் உதவி தேவைப்படும் குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களுடைய பாதுகாப்பு, உணவு, உறைவிடம், கல்விக்கு உத்தரவாதம் அளித்து குடும்பச்சூழ்நிலையில் வளர்த்து வருகிறார்கள்.

பள்ளிப் பாடங்களுடன், நடனம், நாட்டியம், இசை, விளையாட்டு, ஓவியம், கைத்தொழில் என்று மாணவர்களின் திறமைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ற வகையில் சிறப்புப் பாடங்களும் அளிக்கப்படுகின்றன. பெற்றோரைப் போல ஆசிரியர்கள் வழிநடத்தி, மரியாதை, பொறுப்பு, அன்பு போன்ற நற்பண்புகளையும் கற்றுக்கொடுக்கிறார்கள்.

உள்ளூர் திருவிழாக்கள், கோவில் நிகழ்ச்சிகள், சமுதாய கூடங்களில் பங்குகொள்ள வைத்து கலாச்சாரத்தையும் அறிமுகப்படுத்துகின்றனர் இந்த அமைப்பினர். இங்குக் கற்க வந்தவர்கள் பலரும் படித்து முடித்து பணிபுரிந்து அவர்களுடைய சமுதாயத்தில் முன்மாதிரியாக வலம் வருகிறார்கள்.

"ஊர் கூடித் தேர் இழுத்தால் தான் தேர் நகரும்" என்பது போல ஒரு இயக்கம் உருவாக பல நல்ல உள்ளங்களின் நேரமும் நன்கொடைகளும் அவசியம். சுவாமிஜியின் கனவு சாத்தியமாக அவர் வேண்டிக்கொண்டபடி மக்களும் தாராளமாக உதவி வருகிறார்கள்.

ஒரு குழந்தையின் படிப்பிற்கும் பராமரிப்பிற்கும் ஆண்டுக்கு $500 செலவாகிறது. மாதந்தோறும் $40 சேமித்தால் கூட, ஒரு மாணவனுக்குக் கல்வி வழங்க முடியும். ஆல்பனி சாப்டர் 200 குழந்தைகளுக்கான செலவுகளை ஏற்றுக்கொண்டுள்ளதாக அறிவித்தனர். கிட்டத்தட்ட 150 மாணவர்களுக்கான பணத்தேவையை அன்றே மக்கள் நன்கொடையாக வழங்கிவிட்டனர்.

நன்கொடையாளர்களைப் பாராட்டும் வண்ணம், நடன, நாட்டிய, இசை நிகழ்ச்சிகள் அமெரிக்கா முழுவதும் வருடம் ஒரு முறை தேர்ந்த வல்லுநர்களால் நடத்தப்படுகின்றன. இந்த வருடம், 'ஓம் நமோ நாராயணாய'(அக்ரே பஷ்யாமி), "என் முன் இருக்கும் தெய்வம்" என்ற தலைப்பில் அருமையான நடன நிகழ்ச்சி திருமதி.அனிதா குஹா அவர்களின் குழுவினரால் அரங்கேறியது. ஸ்ரீ.துஷ்யந்த் ஸ்ரீதர் ஸ்பஷ்டமாக விவரிக்க, டாக்டர்.ராஜ்குமார் பாரதி இசையில் அருமையான லைட்டிங், சவுண்ட் உடன் கூட்டம் முழுவதும் தன்னை மறந்து ரசிக்க, மெய்சிலிர்க்கும் அனுபவம்!

பகவான் மகாவிஷ்ணுவின் அவதாரங்களை எத்தனை முறை கேட்டாலும், பார்த்தாலும் பரவசம் கொள்ளும் மனது இந்த நாட்டிய நிகழ்ச்சியில் ஒன்றிப்போனது மட்டுமன்றி தமிழ், மலையாளம் என்று இசையும், பாடல்களும் கலந்து கொடுத்தது அருமை. நாராயண பட்டாதிரியின் குருவாயூரப்பனைப் போற்றிப் புகழும் பாடல்கள் வாயிலாக விஷ்ணுவின் அவதாரங்களைக் காட்சிகளாக்கி இறுதியில் பரம்பொருளின் அவதாரத்தைப் பார்த்ததும் பரவசம் அடையாதவர்களே இல்லை. சிலப்பதிகாரம், திருப்பாவையிலிருந்தும் பாடல்களைக் கேட்க இனிமை.

 ஆடாமல் அசையாமல் நின்ற குருவாயூரப்பன், ருத்ர தாண்டவம் ஆடிய பரமசிவன், வராகமூர்த்தி, ஆக்ரோஷ நரசிம்மர் ,வாசுகி தலையில் நர்த்தனம் ஆடிய கிருஷ்ணன், பாற்கடலைக் கடைந்த அசுரர்கள் தேவர்கள், அசுரர்களை மட்டுமா கவர்ந்தாள் அந்த மஹாலக்ஷ்மி? அடடா! சொல்லிக்கொண்டே போகலாம் நடனமாடியவர்களைப் பற்றி! பட்டாதிரியாக நடித்தவர் ஏற்கெனவே ராம சரிதம் நிகழ்ச்சியில் அனுமனாக நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர். மிகவும் ஆத்மார்த்தமாக அனுபவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சியை அமைத்துக் கொடுத்தவர்களுக்குப் பாராட்டுகள்.


அங்கு வந்திருந்தவர்களுக்கு இரவு உணவை வழங்கி அசத்திய குழுவினருக்கும் உதவிய நல்லுள்ளங்களுக்கும் வாழ்த்துகள்!

எத்தனை நாட்கள் தான் நாமும் சமுதாயத்திடமிருந்து பெற்றுக்கொண்டிருப்பது? நாமும் பதிலுக்கு நம்மால் முடிந்த உதவியைச் செய்வதுதானே முறை? இந்த எண்ணம் அனைவரின் மனதில் தோன்றி விட்டால் கல்வி கற்ற சமுதாயத்தை உருவாக்கி நாட்டை முன்னேற்றலாம்.

"To live is to be a positive contributor."

-பூஜ்யஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி

Tuesday, November 11, 2025

நம் பாதுகாப்பிற்கு நாமே பொறுப்பு

இந்தக் காணொளியில் வக்கீல் சுமதி அவர்கள் பேசியிருக்கும் விஷயங்கள் கவனிக்கத்தக்கவை.  Advocate Sumathi Interview

ஊடகங்களுக்கு என்று ஒரு தார்மீக பொறுப்பு இருக்கிறது. இருந்தது கொத்தடிமைகள் ஆவதற்கு முன். இப்பொழுதோ ஊழல்வாதிகளை, கயவர்களை எல்லாம் விட்டுவிட்டு பாதிக்கப்பட்டவர்களை மேலும் வக்கிர எழுத்துக்களாலும் பேச்சாலும் பாதிக்கிறார்கள். அவர்களின் குடும்பங்களுக்குத் தீராத வலியை உண்டாக்குகிறார்கள்.

போதைப்பொருட்கள் தீராவிட ஆட்சியில் பெருகி ஒடுவதை கேட்க துப்பில்லாதவர்கள் இந்த ஆர்எஸ்பி ஊடகவியாதிகள்.

பெண்களுக்குப் படிக்கும் இடத்தில், வீட்டில் கூட பாதுகாப்பு இல்லை என்கின்ற பொழுது மேலும் கவனமாக, பொறுப்பாக இருக்க வேண்டும் என்று சுமதி அவர்கள் சொல்வது முற்றிலும் சரி.

அதுபோலவே, தண்டனைகள் கடுமையாக இல்லாதவரை இப்படியான குற்றங்கள் தொடரும் என்றதும் 100% சரி.

டில்லி நிர்பயா விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கொடூரன் மைனர் என்று தையல் மெஷின் கொடுத்து விடுதலை செய்ய சொன்ன கனிமொழி அரசியல்வியாதிகள் சாபக்கேடு.

இந்த விஷயத்தில் உடனடியாகச் செயல்பட்டு கயவர்களைப் பிடித்த காவல்துறைக்குப் பாராட்டுகள்.

தேவையில்லாத இடத்தில் மூக்கை நுழைக்கும் நீதியரசர்கள் விரைவில் மரணதண்டனை தருவார்களா? கயவர்களை வெளியில் விடுவதால் தான் இந்த அவலங்கள் அதுவும் திராவிட மாடல் அரசாங்கத்தில் சர்வ சாதாரணமாக பெருகியிருக்கிறது.

இந்தப் பொறுக்கிகளுக்கு ஆதரவாக வழக்காட எந்த வக்கீலும் வரக்கூடாது. அரசு தரப்பும் இந்தக்கயவர்கள் வெளியில வராதபடி தக்க தண்டனை கொடுக்க வேண்டும். இந்த நாய்களுக்கெல்லாம் உடனடி மரணதண்டனை தான் சரியானது. 

கொடுப்பார்களா 😡😡😡

 


Thursday, November 6, 2025

இராணுவ உடையில் ஒரு கூலிப்படை

சொல்வனம் இதழில் வெளிவந்துள்ள இராணுவ உடையில் ஒரு கூலிப்படை – சொல்வனம் | இதழ் 353 | 26 அக் 2025 கட்டுரை.



ஜனநாயக நாடாக இருந்தபோதிலும் பாகிஸ்தான் ராணுவம் தான் நீண்ட காலமாக இஸ்லாமாபாத் அரசாங்கத்தின் அதிகாரப் புலங்களை மறைமுகமாகக் கட்டுப்படுத்தி வருகிறது என்பதை உலகம் அறியும். தங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்காதவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருந்தாலும் சிறையில் அடைப்பது, மரண தண்டனை வழங்குவது ராணுவத்தினரின் செயல்களாக இருந்து வருகிறது. இந்தியாவிலிருந்து பிரிந்து சென்றிருந்தாலும் வளர்ச்சிப் பாதையில் செல்லாமல் இஸ்லாமியப் பயங்கரவாதத்தையும் இந்திய வெறுப்பையும் சுமந்து கொண்டு அலையும் நாட்டிற்குத் தங்களுடைய சுய லாபத்திற்காகப் பிற நாடுகள், குறிப்பாக அமெரிக்கா இதுவரையில் பணத்தை வாரி இறைத்தது.

ஆப்கானிஸ்தான் போரின் போது முக்கியமான வான்வழி, பொருட்கொடுப்பு வழிகளை வழங்கியதற்காக பாகிஸ்தானின் ஆயுதப்படைகள் அமெரிக்காவிடமிருந்து பில்லியன் டாலர் அளவிலான நிதியைப் பெற்றன. ஆனால் 2018ல் அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தங்களிடம் நிதியைப் பெற்றுக் கொண்டு தாலிபானுக்கும் பாதுகாப்பு தஞ்சம் அளித்து வருகிறது என்று குற்றம்சாட்டி, பெரும்பாலான பாதுகாப்பு உதவிகளை நிறுத்தி விட்டார். 2021ல் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதும், இரண்டாவது முறையாக ட்ரம்ப் பதவியேற்ற பின்னும் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாட்டின் பணவரவு முற்றிலுமாக குறைந்து விட்டாலும் மனிதாபிமான அடிப்படையில் செய்யும் உதவிகள் மட்டும் தொடர்ந்து வருகிறது. மேலும் “ஆபரேஷன் சிந்தூர்”-ல் வாங்கிய அடி பலமாக இருந்தாலும் “வலிக்கல” என்று கைப்புள்ளையாகி விட்டது பாகிஸ்தான். தற்பொழுது ஏற்பட்டிருக்கும் பொருளாதார சறுக்கலிலிருந்து மீண்டுவர, மீண்டும் மீண்டும் பன்னாட்டு நிதி அமைப்பு, கூட்டாளிகளிடம் கையேந்திக் கொண்டிருக்கிறது.

இந்நிலைமையைத் தவிர்ப்பதற்காக புதிய அவதாரம் எடுத்துள்ளது. 2021ம் ஆண்டு அப்போதைய ராணுவத் தளபதி காமர் ஜாவேத் பஜ்வா “புவிசார் பொருளாதார பார்வை” பற்றின முக்கிய உரையில், “நாட்டின் உள்ளும் வெளியும் அமைதியை நிலைநாட்டவும், பாகிஸ்தானை ஒரு பொருளாதார மையமாக நிறுவி உள்பிராந்திய வர்த்தக இணைப்பை அதிகரிக்கவும் ராணுவத்தின் பங்கு அவசியம்” என்பதனைக் கோடிட்டுக் காட்டினார். பாஜ்வாவிற்குப் பின் பதவியேற்ற அசிம் முனிரின் முதன்மை முயற்சியாக, கட்டுக்கோப்பான ராணுவத்தின் அதிகாரத்துவ செல்வாக்கைப் பயன்படுத்தி வலுவான பொருளாதாரத்தை அடைய 2023ல் தொடங்கப்பட்டது தான் SIFC. (Special Investment Facilitation Council) செப்டம்பர் 8, 2025ல் அமெரிக்காவுடனான $500 மில்லியன் கனிம ஒப்பந்தத்திற்கான கையெழுத்து விழாவில் ராணுவத் தளபதி அசிம் முனிரும் பிரதம மந்திரி ஷெஹ்பாஸ் ஷெரிஃப்புடன் கலந்து கொண்டது, அவர்களின் தலைவர்களை விட ராணுவமே தேசியக் கொள்கையை நிரந்தரமாக வடிவமைக்கும் என்ற கோட்பாட்டினை நிரூபித்துள்ளது.



அதனைத் தொடர்ந்து நாட்டின் பொருளாதார நிலைமையைச் சமாளிக்க தங்களின் ஒரே பலமான ராணுவத்தைக் கொண்டு பொருளீட்டத் திட்டமிட்டது தற்போதைய பாகிஸ்தான் அரசு. செப்டம்பர் 17, 2025 அன்று சவுதி அரேபியாவுடன் “பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம்” மூலமாக இரு நாடுகளுக்கு இடையே நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பை உறுதி செய்துள்ளது பாகிஸ்தான்.

இந்த ஒப்பந்தம் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் போன்ற வெளிநாட்டுத் தாக்குதல்களுக்கு எதிரான பாகிஸ்தானின் பாதுகாப்பு உத்தரவாதமாக விளம்பரப்படுத்தப்படுகிறது. இதில் இரு நாடுகளுக்கும் எதிரான எந்தவொரு ஆக்கிரமிப்பும் இரு நாடுகளுக்கும் எதிரான தாக்குதலாகக் கருதப்படும் என்றிருந்தாலும் உண்மையில், இது சவுதி அரேபிய நிர்வாகத்தின் உத்தரவுகளுக்காகக் காத்திருக்கும் கூலிப்படையாக பாகிஸ்தான் ராணுவத்தின் நிலையை உறுதிப்படுத்துகிறது. அது மட்டுமில்லாமல் பாகிஸ்தானை “உதவி பெறும் நாடு” என்ற நிலையிலிருந்து, அமெரிக்காவின் பிராந்திய ஆதிக்கத்தில் நம்பிக்கை இழந்து வரும் நாடுகளுக்கு “பாதுகாப்பு வழங்கும் நாடாக” மாற்றும் நோக்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.

பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டாலும், தோஹாவில் ஹமாஸ் தலைமையைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய முன்னறிவிப்பில்லாத வான்வழித் தாக்குதல் நடந்த சில நாட்களுக்குப் பிறகு வெளிவந்த இந்த ஒப்பந்த அறிவிப்பு தான் தற்பொழுது உலகநாடுகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. சவுதி அரேபியாவைப் பொறுத்தவரை, சக வளைகுடா நாடும் அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடான கத்தார் மீதான தாக்குதல், அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதங்கள் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே என்பதனை ஊர்ஜிதம் செய்துள்ளது. அதனால் பாகிஸ்தானின் அணுசக்தி குடையின் கீழ் இருப்பதும் அதன் ராணுவமும் ரியாத்திற்கு பாதுகாப்பாக இருப்பது சவுதிக்கு அவசியமானதாக இருக்கிறது.

இஸ்லாமாபாத்தைப் பொறுத்தவரை, இந்த ஒப்பந்தம் ஒரு முக்கியமான பொருளாதார உயிர்நாடியாகியுள்ளது. ஐந்து பில்லியன் டாலர் சவுதி முதலீட்டுத் தொகுப்பும் பில்லியன் கணக்கான வணிக ஒப்பந்தங்களும் இந்தியாவிற்குப் புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் பாகிஸ்தானுடனான மோதலில் சவுதியின் தலையீட்டையும் கவனத்தில் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு இந்தியாவைத் தள்ளியுள்ளது.



அது மட்டுமில்லாமல், ட்ரம்ப்பின் நெருங்கிய வட்டத்தில் உள்ளவர்களைக் குறிவைத்தும், தன்னைத்தானே புகழ்ந்து கொண்டிருந்தாலும் வேறு யாராவது தன்னைப் புகழ்ந்து பேசமாட்டார்களா’ என்று ஏகத்திற்கும் காத்திருந்த ட்ரம்ப்பை ‘அமைதிக்கான மனிதர்’ என பொய்யாகப் புகழ்ந்தும் தந்திரமாகக் காய்களை நகர்த்தி தனக்குச் சாதகமாக்கிக் கொண்டுள்ளார் ஷெரிஃப். அது மட்டுமா? இந்தியாவுடனான பாகிஸ்தானின் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதில் மத்தியஸ்தம் செய்ததாக ட்ரம்ப்பின் பொய்யை இவரும் சேர்ந்து புளுகி அவரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைத்து அங்கிள்சாமை கவிழ்த்த நாடகங்களை உலகம் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு தான் இருந்தது.

எப்படியாவது ட்ரம்ப்பிடம் நல்ல பெயர் வாங்கி மீண்டும் பணத்தைக் கறந்து விட வேண்டும் என்று பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை வேறு முடுக்கிவிட்டுள்ளது. அதை நிரூபிக்கும் விதமாக 2021ம் ஆண்டு காபூல் விமான நிலையத்தில் நடந்த தாக்குதலில் 13 அமெரிக்கப் படைவீரர்களைக் கொன்ற இஸ்லாமிய அரசு தீவிரவாதியை இந்த ஆண்டு தொடக்கத்தில் கைது செய்தது. இதற்கெல்லாம் ஈடாக, கடந்த மாதம் வெள்ளை மாளிகைக்கு விஜயம் செய்த ஷெரிஃப், முனீர் இருவரையும் “சிறந்த மனிதர்கள்” என்று ட்ரம்ப் பாராட்டியுள்ளார். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த அரசியல் தலைவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் முகஸ்துதி செய்து கொள்வதைப் பார்த்து முகஞ்சுளித்துக் கொண்டது உலக நாடுகள்.

ஆனால் அதைப்பற்றிக் கவலை கொள்ளவில்லை இருவரும். பொருளாதார ரீதியாக, பாகிஸ்தானுக்குச் சாதகமான 19 சதவிகித வரி விகிதமும் அமெரிக்க முதலீடுகளுக்கான வாய்ப்புகளும் கிடைத்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவைப் பகைத்துக் கொள்ளாமல் சவுதியுடனான கூட்டணியை வலுப்படுத்தும் சுதந்திரத்தையும் பெற்றுள்ளது பாகிஸ்தான்.



சவுதி ஒப்பந்தம் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றிருந்தாலும் ஆப்பிரிக்காவிலும் புதிய கடல்சார் தளங்களிலும் அதன் விரிவாக்கம் கவனத்தைப் பெற்றிருக்கிறது. செங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் பாகிஸ்தானின் ஆதிக்கத்தை வலுப்படுத்த ஆகஸ்ட் மாதத்தில் சோமாலிய அமைச்சரவை பாகிஸ்தானுடன் ஐந்து ஆண்டு ராணுவ பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தைப் போட்டுள்ளது.

வடக்கே, கிழக்கு லிபியா அரசாங்கத்துடன் பாதுகாப்பு உறவுகளை உறுதிப்படுத்தியுள்ளது. அங்கு ஜெனரல் கலீஃபா ஹப்தாரின் சுயமாக அறிவிக்கப்பட்ட லிபிய தேசிய ராணுவம், திரிபோலியில் ஐ.நா. ஆதரவு அரசாங்கத்திற்கு எதிராக ஒரு அரசை அமைத்துள்ளது. ஹப்தாரின் மகன் சதாம் ஹப்தார், ஜூலை மாதம் இஸ்லாமாபாத்திற்கு விஜயம் செய்து ஷெரீப்பையும் முனீரையும் சந்தித்து இரு தரப்பிலும் ஒத்துழைப்பை ஆழப்படுத்த ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் மத்தியதரைக்கடலில் தனது கடற்படை இருப்பை விரிவுபடுத்தியது மட்டுமில்லாமல் அதன் போர்க்கப்பல்கள் துருக்கிய கடற்படையுடன் கூட்டு ரோந்துப் பணிகளை மேற்கொண்டுள்ளன. இந்த எல்லைமீறலை கிரீஸ் எதிர்த்துள்ளது.

பாகிஸ்தானின் மற்றொரு குறிப்பிடத்தக்க முன்னெடுப்பு, சூடானின் ஆயுதப் படைகளுடன் ஆகஸ்ட் மாதம் கையெழுத்திட்ட 1.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள மிகப்பெரிய பாதுகாப்பு ஒப்பந்தம் ஆகும். சூடான் நாட்டுப் படைகள், துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகளுடன் (RSF) பேரழிவுகரமான உள்நாட்டுப் போரில் சிக்கியுள்ளன. சவுதி அரேபியா, சூடான் படைகளுக்கு ஆதரவாக இருப்பதால் RSFஐ எதிர்த்துப் போரிட, இந்த ஒப்பந்தத்திற்கான நிதியை வழங்கியதாகக் கூறப்படுகிறது. (With foreign cash, strategic location and cover)



பரஸ்பர நன்மை பயக்கும் இந்த ஒப்பந்தத்தால் அண்டை நாட்டுப் பிரச்சினையைக் குறைக்க ரியாத்திற்கு மிகவும் உதவும். இஸ்லாமாபாத்தைப் பொறுத்தவரை, இது ராணுவ-தொழில்துறை வளாகத்திற்கான ஒரு லாபகரமான ஒப்பந்தமாகும். இதன்மூலம், சீனாவால் உருவாக்கப்பட்ட ராணுவ வன்பொருட்களை ஆப்பிரிக்கப் போருக்கு வழங்கும் ராணுவ சப்ளையராகவும் வளைகுடாவின் புதிய பாதுகாப்பு கட்டமைப்பிலும் அதன் பங்கை உறுதிப்படுத்துகிறது. (Saudi Arabia loaned Pakistan $3 billion)

பாகிஸ்தானின் இத்தகைய லட்சிய முயற்சிகளால் குறிப்பிடத்தக்க ஆபத்துகள் இல்லாமல் இல்லை. 2015ல் ஏமனில் சவுதி தலைமையிலான ஹவுதிகளுக்கு எதிரான போரில் சேர இஸ்லாமாபாத் மறுத்துவிட்டது. ஆனால் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள், பயிற்சியுடன் தொடர் ஆதரவை ஈரான் வழங்கி வருவதால் புதிய ஒப்பந்தத்தை இறையாண்மைக்கு அச்சுறுத்தலாகக் கருதுகிறது. ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா பாகிஸ்தானைப் பயன்படுத்த விரும்புகிறது என்றும் நம்புகிறது. ஈரானும் சவுதி அரேபியாவும் தங்கள் உறவுகளை மேம்படுத்த முயற்சித்து வந்தாலும், காசா போர் மத்தியகிழக்கில் புதிய உறுதியற்ற தன்மையை உருவாக்கியுள்ளது. இந்த ஜூன் மாத தொடக்கத்தில், இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியது. இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் சவுதி வான்வெளியைப் பயன்படுத்தியதாகக் கூறப்பட்டது. இதனால் பாகிஸ்தானின் ஆதரவு நிலையில் மாற்றம் ஏற்படக்கூடும். சவுதிஅரேபியாவுடனான அதன் ஒப்பந்தத்தில் உள்ள பரஸ்பர பாதுகாப்பு விதி, பிராந்திய மோதல்களுக்கு நாட்டை இழுக்கக்கூடும். பணத்திற்காகப் போடப்பட்டுள்ள இந்த பாதுகாப்பு ஒப்பந்தங்களால் வெளிநாட்டுப் போர்களில் சிக்கிக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். முதன்மை எதிரியான இந்தியா, உள்நாட்டுத் தீவிரவாதக் குழுக்களான தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான், இஸ்லாமிய அரசு கோரசன் மாகாணம் முதல் பலூச் பிரிவினைவாதிகளின் தாக்குதல்களைச் சமாளிப்பதில் பிரச்சினைகள் வரலாம். (private military company notorious for providing mercenary services)

தற்போதைய நிலைப்பாட்டால் பாகிஸ்தான் ஒரு “கூலிப்படை நாடாக” மாறி ரஷ்யாவிற்கு ஆதரவாக உக்ரைன் போரில் ஈடுபட்டு வருகிறது என்று அதிபர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். 9/11 தாக்குதலுக்குப் பின் அமெரிக்கா தலைமையிலான பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இஸ்லாமாபாத் ஒரு “முன்னணி நட்பு நாடாக” இணைந்ததால் உள்நாட்டில் பின்னடைவை ஏற்படுத்தி 90,000 உயிர்களுக்கும் 150 பில்லியன் டாலர் பொருளாதார இழப்புகளுக்கும் காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.



மேற்கூறிய வரலாற்று இழப்புகளும் பிரச்சினைகளும் இருந்தபோதிலும், வாய்ப்புகளும் ஆபத்துகளுமாய் இரட்டை முனைகள் கொண்ட வாள் தான் பாகிஸ்தானின் இந்த புதிய முயற்சி. பாதுகாப்பு மற்றும் புவிசார்-பொருளாதார உத்தியை இணைப்பதற்கான அதன் முயற்சிகளின் இறுதி நிலைத்தன்மை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும் ஒன்று மட்டும் நிச்சயம்: பாகிஸ்தானுக்கு விற்க கைவசம் ஒரு தயாரிப்பு உள்ளது. தற்போதைய நிலையற்ற உலகில், ராணுவ வணிகம் செழித்து வருகிறது. அதுவும் வளைகுடா பகுதிகளில் அதன் தேவை அதிகமாகவே இருக்கிறது. அதை நன்கு பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை ராணுவம் செய்து வருகிறது.

பாகிஸ்தான் ராணுவம் பெரும்பாலும் நாட்டின் மிகவும் சக்திவாய்ந்த நிறுவனம் என்று தவறாக அடையாளப்படுத்தப்படுகிறது. உண்மையில் இது ஒரு கூலிப்படை நிறுவனமாகும்.1970 ஆம் ஆண்டு ஜோர்டானில் ஜியா-உல்-ஹக்கின் கட்டளையின் கீழ் பாகிஸ்தான் துருப்புக்கள் 25,000 பாலஸ்தீனியர்களைக் கொன்ற கறுப்பு செப்டம்பர் முதல் தற்போதைய ரியாத்துடனான புத்தம் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் வரை, பாகிஸ்தானின் படைத்தளபதிகள் மிகப்பெரிய காசோலைகளில் கையெழுத்திடுபவர்களுக்காக நீண்ட காலமாகப் போராடி வருவது வரலாறு (1979 Grand Mosque seizure in Mecca). அணு ஆயுதக் கேடயம் என்ற வாக்குறுதியுடன் சவுதி அரேபியாவுடனான சமீபத்திய ஒப்பந்தம், ராவல்பிண்டியின் நீண்ட கூலிப்படை பேரேட்டில் புதிய அத்தியாயமாகும். (signed a mutual defence pact with Saudi Arabia)

பாகிஸ்தானுடனான அரபு நாடுகளின் உறவு என்பது சகோதரத்துவ அடிப்படையில் அமைந்தது அல்ல. பரிவர்த்தனை சார்ந்தது. வளைகுடா அவர்களுக்குப் பணத்தையும் எண்ணெயையும் வழங்க, பாகிஸ்தான், துருப்புக்களையும் போலி கண்ணியத்தையும் வழங்குகிறது. அதற்கு ஈடாக, இரு தரப்பினரும் உலக அரங்கில் தாங்கள் முக்கியமானவர்கள் என்று பாசாங்கு செய்து வாஷிங்டனுக்கு நிரூபிக்க முயற்சிக்கிறார்கள்.

பாகிஸ்தான் தளபதிகளின் விசுவாசம் தங்கள் நாட்டிற்கோ, இஸ்லாத்திற்கோ, காசாவிற்கோ அல்ல. தங்கள் காசோலைகளில் கையெழுத்திடுபவர்களுக்கு மட்டுமே. என்று பாகிஸ்தானியர்கள் ராணுவ நிறுவனம் தங்கள் பாதுகாவலர் அல்ல. சுயலாபத்திற்காக இயங்கும் கூலிப்படை என்பதை உணருகிறார்களோ அன்று நாடு
பிளவுபடும். வரலாறு அவர்களைப் போர்வீரர்களாக நினைவில் கொள்ளாது. பேரரசிற்கு விலைபோனவர்களாக மட்டுமே நினைவில் கொள்ளும் என்பதையும் ராணுவ அதிகாரிகள் அறிவார்கள். தற்பொழுது மக்களை ஏமாற்ற, தேசபக்தி, “உம்மாவின் பாதுகாப்பு” போன்ற வெற்று முழக்கங்களிட்டு உயரடுக்கினரின் வங்கிக் கணக்குகளைப் பாதுகாத்துக் கொள்கிறது.

திவாலான நாடு மீண்டும் கூலிப்படை நாடாக அவதரித்திருப்பது வளைகுடா பாதுகாப்பையும் பிராந்திய மறுசீரமைப்பையும் பிரதிபலிக்கிறது. இந்த களேபரங்களுக்கு மத்தியில், இந்தியாவுடனான சவுதி அரேபியாவின் உறவுகள் முன்னெப்போதையும் விட வலுவாக உள்ளன என்றும் எதிர்காலத்தில் தொடர்ந்து வளரும் என்றும் கூறப்படுகிறது. தற்பொழுது அமெரிக்கா வேறுபட்ட நலன்களைச் சமநிலைப்படுத்த வேண்டிய கட்டாயத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. வரும் ஆண்டுகளில் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் செல்வாக்கை வடிவமைக்கவும் நம்பிக்கையைப் பெறவும் அதிபர் ட்ரம்ப்பின் நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கும் என்பதையும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது உலகம்.

King Hussein of Jordan flanked by Pakistani soldiers. In 1970, Pakistan deployed an infantry regiment in Jordan to suppress Palestinian fighters. Pakistan Army is a mercenary force, once butchered 25,000 Palestinians – India Today  


பாதுகாப்பு, அடையாளம், கட்டுப்பாடு: சீனாவின் இஸ்லாமிய தீவிரவாத அணுகுமுறை

சொல்வனம் இதழ் 357ல் வெளியான சீனாவின் உய்குர் முஸ்லீம்களை அரசு கையாண்ட விதத்தைப் பற்றின என்னுடைய கட்டுரை. பாதுகாப்பு, அடையாளம், கட்டுப்பாடு: ...