Sunday, August 19, 2012

பயணக் குறிப்புகள் - Neuschwanstein Castle , ஜெர்மனி


Bye, Bye Swiss
அடுத்த நாள் எல்லோரும் குளித்து, காலை உணவை முடித்துக் கொண்டு, சமையலறையை சுத்தம் செய்து விட்டு, இரண்டு ப்ளாஸ்க்குகளில் சூடான டீ எடுத்துக் கொண்டு, துணிமணிகளை பேக் செய்து காரில் ஏற்றி விட்டு, நாங்கள் தங்கியிருந்த வீட்டின் முன் நின்று பல படங்களை எடுத்து விட்டு, செண்பகமே, செண்பகமே, தென் பொதிகை சந்தனமே என்று ராமராஜன் ஸ்டைலில் மாடுகளைப் பார்த்துக் கொண்டே, இந்த மணிச்சத்தம் இனி கேட்க முடியாதே என்ற ஏக்கத்துடன் பார்க்க, அவைகளும் விட்டதுடா தொல்லை, நம்மை தூங்க விடாமல் பண்ணியவர்கள் ஒரு வழியாக கிளம்பி விட்டார்கள் என்று சொல்லுவது போல் இருந்தது:( வீட்டு உரிமையாளரிடம் போய் சாவி கொடுத்து விட்டு, கொடுக்க வேண்டிய பணத்தை செட்டில் செய்து விட்டு மலை இறங்க ஆரம்பித்தோம்.

Going back to Germany
நடுவில் காரை நிறுத்தி பல இடங்களில் படங்கள் எடுத்துக் கொண்டோம். லேசாக மழை தூறிக் கொண்டிருந்தது. எல்லா இடமும் எடுக்க வேண்டும் போல் இருந்தது. கடைசியாக தேவாலயம் முன்பு சிறிது நேரம் செலவிட்டு, ஒரு மனதாக இறங்க ஆரம்பித்தோம்.
ஜெர்மனி போவதற்கு இந்த முறை வேறு வழியில் பயணம். போகும் வழியில்Neuschwanstein என்ற கோட்டையை பார்த்துவிட்டு போவதாக திட்டம். அது பவேரியா என்ற மாநிலத்தில் இருந்தது. ஐந்து மணி நேரப் பயணம். மெயின்ரோடைத் தொட்டவுடன், ஜெர்மனி செல்ல எடுத்த ஹைவேயில், எதிர்த்தார் போல், மேகத்தை தொட்டுக்கொண்டு பிரமாண்ட ஆல்ப்ஸ் மலை பரந்து விரிந்திருந்த அழகு, மேக மூட்டத்துடன் கருநீலநிறவானம், லேசான தூறல் என்று Lord of the Rings படத்தை நினைவுப்படுத்தியது.

கண்ணைகவரும் மலை, ஆறு, அருவிகள் என்று வந்த இடத்தில் சிறிது நேரம் காரை நிறுத்தி, ஒரு பெருமூச்சுடன், அடுத்த முறை வரும் பொழுது இங்கு ஏதாவது ஒரு இடத்தில் தங்கிக் கொள்ள வேண்டும் என்று ஒரு அட்வான்ஸ் பிளானும் போட்டு விட்டு?, அங்கிருந்த கடையில் அந்த நாட்டின் நாணயங்களையும், சில சாமான்களையும் வாங்கிக் கொண்டு மீண்டும் பயணம்.

Waiting for a bus to Neuschwanstein Castle

நாங்கள் Neuschwanstein வந்து சேரும் பொழுது மாலை நான்கு ஆகி விட்டது. கார் வைக்க இடத்தை தேடி அலைந்து, பிறகு, கோட்டைக்கு போக பஸ்
டிக்கெட் எடுத்துக் கொண்டு, மழையில் வரிசையில் காத்திருந்தோம். முருகன், இப்படியே நடந்துபோகலாம் தான் ஆனால்,மழையாக இருப்பதால் வேண்டாம் என்று சொன்னார். பல இடங்களில், நாங்கள் பார்த்தது, காரை நிறுத்தி பஸ்ஸில் மட்டுமே போக செய்திருந்த வசதி தான். இதனால் போக்குவரத்து நெரிசல் இல்லை, நடந்து மலை ஏறுபவர்களுக்கும் சிரமம் இல்லை. நாங்கள் நின்று கொண்டிருந்த இடத்திற்கெதிரில் மஞ்சள் நிறத்தில் ஒரு மாளிகை Hohenschwangau Castle. அது, நாங்கள்பார்க்க போகின்ற கோட்டை/மாளிகையை கட்டியவரின் மகனின் மாளிகையாம்.

கோட்டையும் அதை சுற்றியுள்ள இடங்களும், மலைகளும் அந்த ராஜாக்களின் கலை ஆர்வத்தையும், இயற்கை ரசனையையும் பறைச்சாற்றுவதாய் இருந்தது.
View from the Castle

நேரமாகி கொண்டிருந்ததால், இந்த கோட்டையை பார்க்க முடியவில்லை. இந்த Neuschwanstein கோட்டையை முன்மாதிரியாக வைத்து டிஸ்னிலாண்டில் ஒன்றும் வைத்திருக்கிறார்கள் என்று பேசிக் கொண்டிருக்கும் போதே பஸ்சும் வந்து, கூட்டத்தோடு கூட்டமாக நாங்களும் ஏறி உட்கார, மெதுவாக பஸ் ஆடி அசைந்து  மலையில் ஏற, இங்கே நடந்து மலை ஏற முடிந்திருக்குமா, நல்லவேளை மழை வந்தததால் தப்பித்தோம் என்று நினைத்துக் கொண்டே இறங்கிக் கொண்டோம். இறங்கிய இடத்திலிருந்து கோட்டைக்குப் போவதற்குள் மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கி விட்டது :( நல்ல செங்குத்தான மலைப்பாதை தான்!
ஒவ்வொரு இடத்திலிருந்தும் ஒரு வியூ. ஒரு பக்கம் பச்சை வண்ண நிலப்பரப்புடன், அங்காங்கே ஆறுகளும், குளங்களும். ஒரு பக்கம், சலசலவென்று அருவி. மேலே நிமிர்ந்து பார்த்தால் கம்பீரமான கோட்டை மதிற்சுவர்கள்  மலைப் பின்னணியில். பவேரியன் கொடியுடன் முகப்பு வாசல். உள்ளே நுழைந்தால், அவ்வளவு கூட்டம். ஐந்து மணிக்குள் கோட்டையை சுற்றிக் காண்பிக்கும் நிகழ்ச்சி முடிவடைந்து விட்டதால், உள்ளே போக முடியவில்லை. உள்ளே விலையுர்ந்த ஆடை, ஆபரணங்களும், ராஜாக்கள் பயன்படுத்திய பொருட்களும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருக்குமாம்.


அடாது மழையிலும் விடாது முடிந்த வரை, உள்ளே போய்ப் பார்த்து விட்டு வந்தோம். அந்த மழையிலும் நல்ல கூட்டம்.

மழை தான் இன்னும் விட்டபாடில்லை. மீண்டும் வெளியே வந்து சிறிது நேரம் சுற்றிப் பார்த்து விட்டு, கீழிறங்கி விட்டோம். கீழே ஓரிடத்தில் சாப்பிட்டு விட்டு, சில நினைவுப் பொருட்களை வாங்கிக் கொண்டு மீண்டும் ஐந்து மணி நேரப் பயணம். அப்போதே மிகவும் களைப்பாக இருந்தது. இருட்டவும் ஆரம்பித்து விட்டது. நாங்கள் முருகன் காரை தொடர்ந்து போக, அவர் ஓட்டமெடுக்க, பல சிவப்பு நிற கார்களில் அவருடைய காரை தொடர்வது கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. மழையும் விடாமல் துரத்திக் கொண்டே வர, வீடு வந்து சேரும் பொழுது நடுநிசி! நன்கு தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளை எழுப்பி, சாமான்களை எல்லாம் வீட்டிற்குள் கொண்டு வந்து, களைப்புடன் தூங்கும் பொழுது ஒன்றுமே நினைவில் இல்லை.

Castle view from the entrance









No comments:

Post a Comment

'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...