Monday, August 27, 2012

மனிதரில் இத்தனை நிறங்களா?

நாம் எல்லோரும் நம் வாழ்க்கையில் விதவிதமான மனிதர்களை சந்தித்துக் கொண்டே இருக்கிறோம். சிலர், நெடுநாள் பழக்கமாக இருப்பினும், ஒதுங்கியே தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பார்கள். சிலர், பழகிய சில நாளிலேயே ஏதோ ஜென்மத்திற்கும் உடனிருந்த மாதிரி நல்லது கெட்டதுகளில் கூடவே இருப்பார்கள். சிலர், நமக்கு பிரச்சினை என்றால் ஒதுங்குவதும், பிறகு வந்து ஓட்டிக்கொள்வதும் நடக்கும். சிலர், நம் பிரச்சினை என்ன என்று தெரிந்து கொள்வதற்காகவே பழகுவார்கள்!

என் வாழ்க்கையில் பலவிதமான மனிதர்களை சந்தித்திருக்கிறேன், இன்னும் சந்தித்துக் கொண்டு இருக்கிறேன். உண்மையிலேயே என் மீது அக்கறை கொண்டு இன்றும் அதே அன்புடனும், பாசத்துடனும் இருப்பவர்கள், அக்கறையுடன் இருப்பது போல் முதுக்குப்பின் புறம் பேசுபவர்கள், உண்மை நட்புடன் இருப்பவர்கள்.....என்று பல தரம்.

நல்ல நிலையில் இருந்த பொழுது எங்களைச் சுற்றி இருந்த பலரும் கஷ்டப்படும் நேரத்தில் காணாமல் போனது விந்தை தான்! அன்று எங்களுடன் துணையிருந்த  நல்ல நண்பர்கள், நெருங்கிய சொந்தங்கள், அவர்களுடைய உதவியை மனதார நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில், மனதை ரணமாக்கிய மனிதர்களும் இருந்தனர் என்பதை மறக்க முடியவில்லை.

ஆக மொத்தம், என் அனுபவத்தில், பணம் பத்தும் செய்யும் என்பது உண்மை. 

பணம் இருக்கும் போது வந்த மனிதர்கள், பணம் இல்லை என்றவுடன் எதற்குப் பிரச்சினை என்று ஒதுங்கியதும், பிறகு ஒன்றுமே நடவாதது போல் வந்ததும் உண்மை. பிரச்சினைகள் இருந்த போதும் எங்களை பாதுகாப்பாக கை காட்டி அழைத்துச்  சென்ற மாமனிதர்களும் உண்டு.

தாமரை இலைத் தண்ணீர் போல் பழகியவர்கள் பலர். எங்கே நாங்கள் அவர்கள் வீட்டு விஷேசங்களில் கலந்து கொண்டால், மற்றவர்கள் ஏதாவது கேட்டு விடுவார்களோ என்று சாமர்த்தியமாக எங்களைத்  தற்காலிகமாக மறந்து போன உறவுகளும், அதை மறைக்க அவர்கள் பேசிய பேச்சுக்களும்! அப்பப்பா! சில கண்டான் காமாட்சிகள், பார்த்த நேரத்தில் உள்ளம் உருகி பேசுவார்கள். மற்ற நேரங்களில், நாம் உயிருடன் இருக்கிறோமா இல்லையா என்ற அக்கறை கூட இல்லாதவர்கள். பார்த்தவுடன் பசக் என்று ஒரு சிரிப்பு, திரும்புவதற்குள் அது காணாமல் போயிருக்கும். சிலர், தனக்கு வேலை ஆக வேண்டுமென்றால் குழைந்து, குழைந்து பேசுவார்கள், காரியத்தில் கண்ணாய் இருப்பார்கள். காரியம் முடிந்ததும் ஆள் அம்பேல். சிலரோ வஞ்சப் புகழ்ச்சி அணியில் பட்டம் பெற்றவர்கள். நன்றாக நம்மை வாழ்த்துவது மாதிரி அவர்கள் பொருமலை பொருமி விட்டுப் போவார்கள். சிலர், ஆளுக்குத் தகுந்த மாதிரி பேசுவார்கள். முதுகுக்குப்பின் புறம் பேசுபவர்கள் பலர்!

ஒரு கட்டத்தில் இம்மாதிரியான மனிதர்களை இனம் கண்டு ஒதுங்கிச் சென்றாலும் தாமாகவே வலிய வந்து மிக சாமர்த்தியமாக வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல் அவர்கள் குறைகளை மறைக்க, நம்மை புண்படுத்துவதும் உண்டு. அவர்கள் தவறுகளை எடுத்துச் சொன்னால் மரியாதை குறைவாக பேசுகிறாய், உன் வயது என்ன என் வயது என்ன? எதிர்த்துப் பேசுகிறாய்.  ஏதோ இன்று ஒரு நிலையில் வந்தவுடன் தலை கால் புரியாமல் நடக்கிறாய் என்று வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி, நாம் என்ன சொல்ல வருகிறோம் என்று புரிந்து கொள்ளாமலே தம் குறைகளை மறைக்க நம்மை வார்த்தைகளால்  குத்தி மனம் வேதனை அடையச் செய்வதும் நடக்கிறது. இதில் பலரும் தாங்கள் கடைபிடிக்க முடியாத அறிவுரைகளை தாரளமாக,இலவசமாக வழங்குவார்கள். அவர்களுக்கு என்று வரும் பொழுது, அந்த அறிவுரைகள் எல்லாம் காணாமல் போய் விடுகிறது.

வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும், வையகம் இது தானடா - என் அனுபவ உண்மை.

சிலர், தனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டங்கள் வருகிறது என்று சதா புலம்பிக் கொண்டே இல்லாத கடுகளவுப் பிரச்சினையை மலையளவாக்கிப் பெரிதாக கற்பனை செய்துக் கொண்டு புலம்பி கொண்டிருப்பார்கள். பிரச்னை இல்லாத மனிதர்கள் இருக்கிறார்களா என்ன? இவர்கள் தான் கண்ணை மூடிக் கொண்டால் உலகம் தூங்குகிறது என்று நினைக்கும் ரகம்.  

என்ன எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டு விடக் கூடாது சிலரிடம். ஒரே புலம்பல் புலம்பிவிடுவார்கள். அதில் எத்தனை சவிகிதம் உண்மை, அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்! நல்ல விஷயங்கள் பல இருந்தாலும் பாராட்ட மனமில்லாமல் எப்பொழுதும் அடுத்தவரிடம் குறை கண்டு கொண்டே இருப்பார்கள்  நல்லவர்கள் போல் வெளியில் வேடமிட்டு அடுத்தவரை குழி தோண்டி புதைப்பதில் இன்பம் காண்பார்கள். சிலர், கடவுள் பெயரை சதா சொல்லிக் கொண்டே, பல அழிவு வேலைகளை செய்து கொண்டிருப்பார்கள். அடுத்தவர் குடும்பத்தை கெடுப்பதிலே குறியாய் அலைபவர்கள் பலர். ஒன்றுமே தெரியாத மாதிரி நல்லவர் போல வேஷம் போட்டு பிரச்சினையை பண்ணுபவர்கள் சிலர்.

கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலையும் ரகம் சிலர். நல்ல அறிவுரைகளைச் சொன்னாலும், தெருவில் வருவோர் போவோரின் பேச்சைக் கேட்டு அலையும் ரகம். சிலருக்கு நல்ல விதத்தில் சொன்னால் எதுவும் மண்டையில் ஏறாது. 

நன்றாக ஒருவருடைய பணத்தையும், நேரத்தையும் பயன்படுத்திக் கொண்டு, நீ என்ன செய்தாய் என்று வெட்கமில்லாமால் கேட்கும் ஜென்மங்களும் இருக்கத் தான் செய்கின்றன. பணம் ஒன்றையே குறிவைத்துப்  பழகும் ஜென்மங்கள். அன்பு, பாசத்திற்கு ஏங்கும் மனதை புரிந்து கொள்ளாமல், பணம் ஒன்றிலே குறியாயிருந்து, வார்த்தையால் மனதை ரணகளமாக்கி தன் வாழ்க்கையையும் கெடுத்துக் கொண்டு, மற்றவர்களின் வாழ்க்கையையும் அழிக்கும் மனித உருவில் அசுரர்கள். 

இருப்பதைக் கொண்டு சந்தோஷமாக வாழாமல், அடுத்தவரை நினைத்து வாழ்க்கையை தொலைப்பவர்கள். சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் விழித்துக் கொண்டிருப்பவர்கள், வயதில் மட்டும் பெரியவர்கள் என்ற அதிகாரப் போதையில் இலவச அறிவுரைகளை வழங்குகிறேன் என்று உண்மை என்ன என்று தெரியாமல் வாய்க்கு வந்ததைப் பிதற்றும் பித்தர்கள், பிரச்சினைகள் கண் முன்னே இருந்தும் எனக்கேன் வம்பு என் இலைக்கு பாயசம் கிடைத்ததா என்று தன்னை மட்டுமே நினைத்துக் கொள்ளும் மூடர்களும் என்று இன்னும் இப்படிப் பல பேர்! சொல்லிக் கொண்டே  போகலாம்.

ஆனாலும், பல நல்ல உள்ளங்கள் இருக்கத் தான் செய்கின்றன. உண்மையான பாசத்துடனும், நட்புடனும், உதவி என்று போனால் உதவும் நல்ல நெஞ்சங்களும் இருப்பதினால், அற்ப பதர்கள் வாழ்வில் குறுக்கிட்டாலும், அந்த வலி போக சிறிது நாளானாலும் மனவேதனைகள்  வந்த வழியிலேயே போய் விடுகிறது.

மனிதர்கள் பலவிதம் ! ஒவ்வொருவரும் ஒரு விதம் ....புரிகிறது, தெரிகிறது. ஆனாலும், தானாக வந்து எதையாவது உளறிக் கொட்டி மனதை புண்படுத்தும் நல்லவர்கள் வாழ்க்கையில் இருந்தே ஆக வேண்டும் என்பது தான் நான் வாங்கி வந்த வரம் போல! ம்ம்ம்....

2 comments:

  1. ம்ம்ம்...சத்தியமான வார்த்தைகள்.

    எங்கே வீழ்கிறோமோ அங்கிருந்தே எழுந்திருக்க வேண்டும் என்றொரு பௌத்த மரபு உண்டு. நம் பலவீனங்களை பலமாக்கிக் கொண்டு அதிலி ருந்து மீண்டெழும் தந்திரத்தை இம் மாதிரி மனிதர்களும் அவர்கள் தரும் அனுபவமுமே கற்றுத் தருகிறது.

    இத்தகைய மனிதர்களையும், அவர்கள் தந்த அனுபவங்களை நானும் உணர்ந்திருக்கிறேன்,கடந்திருக்கிறேன்.நமக்கானவர்கள் யாரென காலம் உணர்த்திய பின்னர் அவர்களோடு மட்டும் தனித்திருப்பதும்,இனைந்திருப்பதும் சுகமாயிருக்கிறது.

    எல்லாம் நன்மைக்கே.... :)

    ReplyDelete
  2. உண்மை, சரவணன். அனுபவங்கள் கற்றுத் தந்த விஷயங்கள் பல.

    ReplyDelete

'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...