கார்த்திகை மாதம் மாலை அணிந்து நேர்த்தியாகவே விரதமிருந்து, விரதமிருந்து
பார்த்தசாரதியின் மைந்தனே உனை பார்க்க வேண்டியே தவமிருந்து...
என்று காலை வேளைகளில் காபி கடைகளிலும், வீடுகளிலும் வீரமணி/ஜேசுதாசின் குரல்களில் ஐயப்ப பக்திபாடல்கள் ஒலிக்கும் நாட்கள் இது. பலரும் மாலையணிந்து, விரதம் ஆரம்பிப்பார்கள். வீடுகளிலும் பூஜை, புனஸ்காரம் என்று ஐயப்ப மந்திரம் ஒலிக்கும். பக்தர்களும் துளசி மாலை,காவி, கருப்பு வேட்டி அணிந்து, செருப்பு போடாமல் செல்வதைப் பார்க்கலாம். பலரும் முறையாக 48 நாட்கள்( ஒரு மண்டலம்) விரதமிருந்து குருசாமியின் அருளுடன் இருமுடி எடுத்துக் கொண்டு ஐயப்ப கோவிலுக்கு குழுக்களாக பஸ்ஸில் செல்வார்கள். பல இடங்களிலும் எப்படி சாமி இருக்கிறீங்க, சாமி சரணம் என்று ஒருவருக்கொருவர் பார்த்து வணங்குவதையும் இந்த மாதத்தில் பார்க்கலாம்.
என் பெரியப்பா இருபது வருடங்களுக்கும் மேலாக தவறாமல் ஐயப்பன் கோவிலுக்குச் சென்று வந்தார். அவருடைய குருசாமியின் காலம் முடிந்தவுடன் இவர் பொறுப்பேற்றார். இருமுடி கட்டும் நிகழ்ச்சி நடக்கும் அன்று பந்தடி ஏழாவது தெருவில் இருந்த அவர் வீட்டில் பஜனை, பூஜை, பக்தர்களுக்கு சாப்பாடு என்று களை கட்டும். நாங்களும் தவறாமல் போய் விடுவோம். மாலையில் இருட்டிய பிறகு தான் பூஜை ஆரம்பிக்கும். பெரிய ஐயப்பன் சுவாமி படத்தை மலர்மாலைகளால் அலங்கரித்து, பதினெட்டுப் படிகள் வைத்து, திருவிளக்குகள் இரு புறமும் ஏற்றி பூஜைகள் ஆரம்பிப்பார்கள்.
ஒரு பக்கம் இருமுடிக்கான தேங்காய்கள் குடுமிகள் இல்லாமல், ஒரு கண் மட்டும் துளையிட்டு நெய்க்காக காத்திருக்கும். மிகப் பெரிய பாத்திரங்களில் நெய், தட்டுகளில் பழங்கள், ஜவ்வாது, சந்தனம், குங்குமம், சாம்பிராணி வாசனையுடன் அந்த இடமே பரவசமாக இருக்கும். ஐயப்பன் கோவிலுக்குப் போகும் பக்தர்கள் தங்கள் மூட்டை முடிச்சுகளுடனும், குடும்பங்களுடனும் வர ஆரம்பிக்க,
உள்ளே ஒரு பெரிய பாயில் சாதம் ஆற வைத்து, புளிக் கரைசல் கொட்டி, புளியோதரை மணக்க மணக்க தயார் ஆகி கொண்டிருக்கும். வருகிறவர்களை போய் சாப்பிட்டு வாருங்கள் என்று பெரியம்மாவும், அவர் குடும்பமும் சொல்ல, அனைவரும் எழுந்து சென்று புளியோதரை, சுண்டல், தேங்காய் சட்னி, சேமியா கேசரி சாப்பிட்டு விட்டு பூஜை செய்யும் இடத்திற்குப் போய் உட்கார்ந்து கொள்வார்கள். மெதுவாக கூட்டம் சேர ஆரம்பிக்கும்.
எல்லா பக்தர்களும் வந்தவுடன், ஸுவாமியேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏய் சரணம் ஐயப்பாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ என்ற நீண்ட முழக்கத்துடன் இருமுடி பூஜை ஆரம்பிக்கும். மார்கழி மாதம் இளங்குளிருடன் இருக்கும் அந்த மாலைவேளையில், கோவிலுக்குச் செல்பவர்கள் நாற்பத்தியெட்டு நாட்கள் விரதமிருந்து தாடி வளர்த்துக் கொண்டு திருநீறு, சந்தனம், குங்குமம் பூசிக் கொண்டு பக்திப் பழமாக இருப்பார்கள். முதலில் குழந்தைசாமிகளும், பிறகு கன்னிசாமிகளும் (திருமணமாகதவர்கள், முதல் முறை போகிறவர்கள்), என்று வரிசைக் கிரமமாக நெய் நிரப்ப வருவார்கள்.
மறுபக்கம் மைக், தபேலா, ஆர்மோனியம் பெட்டியுடன் பாடுபவர்கள் கூட்டம். அவரும், ஸுவாமியேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏய் என்று சொல்ல, பக்தர்களும், கூட்டமும்,சரணம் ஐயப்பாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ என்று சொல்லி முடிக்க, பள்ளிக்கட்டுச் சபரிமலைக்கு, கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை, சுவாமியே ஐயப்போ என்று ஆரம்பமாகும் கச்சேரி, அனைவரையும் கட்டுப் போட்டு வைத்திருக்கும். பொதுவாகவே, இந்த பாடல்கள் எல்லாம் எளிய நடையில், பாமரரும் பாடும் வண்ணம் இருப்பதால் பலரும் இந்த பாடலை பாடிக் கொண்டே இருப்பார்கள்.
அந்த பக்கம், குருசாமியிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டு, மனையில் அமர்ந்து, ஐயப்ப கோஷத்துடன் நெய்யை எடுத்துத் தேங்காய்களில் ஒவ்வொருவராக நிரப்பிக் கொண்டே வர, ஒருவர் துளைகளை மூடி, இருமுடி பையுனுள் வைக்க, அதனுடன் மற்ற பூஜை சாமான்களையும் வைத்துக் கட்டி, நிரப்பியவர் தலையில் வைக்க, அவரும் மூன்று முறை சுவாமியே சரணம் அய்யப்பா சொல்லி குருசாமியிடம் கொடுக்க, என்று தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்.
அதற்குள், பகவான் சரணம், பகவதி சரணம், தேவன் பாதம், தேவி பாதம், பகவானே, பகவதியே... என்று வீரமணி, மற்றும் ஜேசுதாஸ் பாடிய பிரபலமான பாடல்கள் பாடிக் கொண்டிருப்பார்கள். பாடகர்களும் மாற, மாற கூட்டத்தை உற்சாகப்படுத்தும் வண்ணம் வில்லாளி வீரனே, வீரமணி கண்டனே, யாரைக் காண, சுவாமியைக் காண என்று எல்லோரும் பாடும் வண்ணம் பாட, நேரம் போவது தெரியாமல், பூஜையின் கடைசி கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கும் போது மணி இரவு பன்னிரெண்டை நெருங்கி கொண்டிருக்கும்.
நடுநடுவில் ஆண்கள் கூட்டம் மெதுவாக தவிட்டுச் சந்தை காபி கடைக்குப் போய் சூடாக காபியும் குடித்து விட்டு வர, குருநாதரும் இருமுடி கட்டி விட்டு, கடைசி நிமிட ஆரத்தி பூஜைக்குத் தயாராகிக் கொண்டிருப்பார்.
பாட்டு கச்சேரியும் முடிந்து விட்ட நிலையில், பதினெட்டு படிகளிலும் தீபங்கள் ஏற்றி, மற்ற அனைத்து விளக்குகளையும் அணைத்து விட்டு, எண்ணை விளக்கொளியில் எரியும் தீபங்கள் மட்டும் ஒளிர, ஒன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா, சுவாமி பொன் ஐயப்பா, என் ஐயனே பொன் ஐயப்பா என்று மொத்த கூட்டமும் பாடிக் கொண்டே வர, பெரியப்பாவும் ஒவ்வொரு படிகளின் தீபங்களையும் ஏற்றிக் கொண்டே வர, பதினெட்டாம் படி வந்தவுடன் பாடலின் வேகமும் அதிகரித்து, அந்த இடமே கற்பூர வாசனையுடன் பக்தி மணம் கொண்டு கமழும்.
அதற்குள் பஸ்சும் வாசலில் வந்து விட, ஆரத்தி எடுத்து முடித்தவுடன், பெரியப்பா அவரவர் இருமுடி எடுத்து பக்தர்கள் தலையில் வைக்க, அவர்களும் அவரிடம் ஆசி வாங்கி குடும்பத்தினரிடமிருந்து விடைப்பெற்றுக் கொண்டு,உறவினர்கள் போட்ட மாலைகளுடன் பஸ்ஸில் ஏற, தேங்காய் உடைத்த பிறகு, அனைவரையும் ஏற்றிக் கொண்டு பஸ்சும் புறப்பட, நாங்களும் பெரியம்மவிடமும், அக்காக்களிடமும் விடை பெற்றுக் கொண்டு நல்ல பூஜையை பார்த்த திருப்தியில் வீடு போய் சேர்வோம். ஐந்து அல்லது ஆறு நாட்களுக்குப் பிறகு, நெய் பிரசாதம் வீடு வந்து சேரும். கமகமக்கும் பிரசாத நெய் கையில் வைத்து சப்புக் கொண்டு சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.
நான்கு வருடங்களுக்கு முன்பு, என் கணவர் மாலையிட்டு, கனடாவில் இருக்கும் scarborogh நகரத்திலிருக்கும் ஐயப்பன் கோவிலிலிருந்து இருமுடி எடுத்துக் கொண்டு, டிசம்பர் மாத குளிரில் செருப்பு போடாமல், மேல் சட்டை அணியாமல், ஐநூறு பக்தர்களுடன், பெரும்பாலும் ஸ்ரீலங்கா தமிழ் மக்கள், போன பொழுது, அந்த பஜனை, பூஜைகள், கற்பூர வாசனை என்று மதுரையை நினைவுப்படுத்தியது. அதற்கு அடுத்த வருடங்களில், பனிப் பொழிவின் காரணமாக, லோக்கலில் இருக்கும் கோவிலிலேயே பூஜையை செய்து விடுகிறோம். இங்கும் மலையாளிகள் ஞாயிற்றுக் கிழமைகளில் பூஜை செய்கிறார்கள். கனடாவிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் ஐயப்பன் கோவிலுக்குப் போக இந்தியா வருகிறவர்களும் இருக்கிறார்கள். அமெரிக்காவில் பெரும்பாலும் வாஷிங்டன் DC யில் உள்ள ஐயப்ப கோவிலுக்கு போகிறார்கள்.
பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால், ஐயனை நீ காணலாம், சபரி ஐயனை நீ காணலாம் ... ,
ஹரிஹராசனம் விஷ்வமோகனம், ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம்....
என்று ஜேசுதாஸ் உருகி உருகிப் பாடும் பாடல்கள் இன்னும் காதிலேயே ஒலித்துக் கொண்டிருக்கிறது.