Friday, November 2, 2012

போவோமா ஊர்கோலம் - அசைவ உணவுகள்- மீன், கருவாடு


பொதுவாக, மீன் சாப்பிடும் குடும்பங்கள் எனக்குத் தெரிந்து மிகவும் குறைவு. சிலருக்கு மீன் வாசனை பிடிக்காது. சிலருக்கு முள்ளைப் பார்த்தால் பிடிக்காது. ஆனால், மீன் சாப்பிட்டுப் பழகியவர்களுக்கு அந்த வாசனையும், முள்ளும் ஒரு பொருட்டே அல்ல.

நித்தம் நித்தம் நெல்லிச் சோறு நெய்மணக்கும் கத்திரிக்கா, நேத்து வச்ச மீன் குழம்பு ...முள்ளும் மலரும் என்ற படத்தில் வரும் இந்த பாடலில், கதாநாயகி நேத்து வெச்ச மீன்குழம்பு பற்றி பாடியது போல், மீன் குழம்பின் சுவை சமைத்த தினத்தை விட, மறுநாள் தான் சுவை கூடி இருக்கும். புளி,  தக்காளி போட்டு சமைக்கும் உணவுகள் எல்லாம் அடுத்த நாள் சாபிட்டால் புளிப்பு சுவை இன்னும் கூடி அருமையாக இருக்கும். அதே போல், முதல் மரியாதையில் ராதா மண்சட்டியில் செய்த மீன் குழம்பை, தட்டு நிறைய சாதத்தில் ஊற்றி, சாப்பிடுய்ய்ய்யா என்று சிவாஜிக்கு கொடுக்கும் பொழுது, ஜிவ்வென்று பலருக்கும் நாக்கில் நீர் ஊறியிருக்கும். அதை விட, ராதா மீன் சாப்பிடும் காட்சியில், சின்ன முழுமீனை வாயில் போட்டு, மீன் எலும்பு மட்டும் வெளியில் எடுக்கும் காட்சி கண்ணிலிருந்து மறைய ரொம்ப நாளானது. தியேட்டரை விட்டு வெளியில் வரும் பொழுதே அம்மாவிடம் அதே மாதிரி மீன் குழம்பு பண்ணிக் கொடுக்க வேண்டும், நாங்களும் அதே மாதிரி சாப்பிட்டு பார்க்க வேண்டும் என்று பண்ணிய அடத்தில், விரைவிலேயே மணக்கும் மீன் குழம்பு தயாரானது. நாங்களும் ஆசையுடன் மீன்குழம்பு சாதத்தை பிசைந்து கொண்டு, மீனை எடுத்து, வாயில் வைக்க, கடுக்கு முடுக்கு என்று எலும்புடன் தான் சாப்பிட முடிந்தது. அதில் மிகுந்த வருத்தம். பிறகு வழக்கம் போல் முள்ளை  எடுத்து சாப்பிட  வேண்டியதாகி விட்டது. ஆனாலும் என்ன, சுவையான் மீன் குழம்பு சாதம் சாப்பிட்ட திருப்தி !

நாங்கள் இருந்த பகுதியில் காலையில் மீனு,மீனு என்று கூவிக் கொண்டு கூடையில் மீன் விற்பவர்களிடம் வாங்கி அவர்களையே சுத்தம் செய்ய சொல்லி விட்டு எப்படா மீன் குழம்பு ரெடி ஆகும், மீன் வறுவல் கிடைக்கும் என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருப்போம். வறுவலுக்கு மசாலா எல்லாம் தடவி  மீனை சிறிது நேரம் வெய்யிலில் வைத்து பிறகு பொரித்தால் சும்மா 'ஜிவ்'வென்றிருக்கும்!
நல்லெண்ணையில் கடுகு, வெந்தயம் தாளித்து, வெங்காயம், பூண்டு, தக்காளி வதக்கி, கரைத்த புளிக்கரைசலை ஊற்றி, சிறிது கொதித்தவுடன், தேங்காய், பெருஞ்சீரகம் சேர்த்து அரைத்த கலவையை சேர்த்து, நன்கு கொதித்தவுடன், மீனை போட்டு, மீன் வெந்ததும் சாப்பிட்டால், ம்ம்ம்மம்ம்மம்ம்ம்ம்ம, அவ்வளவு நன்றாக இருக்கும். அதை விட, மறுநாள் சாப்பிட்டால், அதை விட சூப்பராக இருக்கும்.

மதுரையில் எனக்குத் தெரிந்து ஆட்டுக்கறி, கோழிக்கறி அளவிற்கு மீன் சாபிடுவதில்லை.

அதே போல் தான், கருவாட்டுக் குழம்பும். அதுவும், என் அம்மா வைக்கும் கருவாட்டுக் குழம்பு ஒரு ஸ்பூன், ஒரு தட்டு நிறைய சாதத்திற்கு வரும். எண்ணை மிதக்க, பூண்டு, கருவாடு குழம்புடன் ஒட்டிக் கொண்டிருக்க, சாப்பிட்டால், அன்றைய நாள் முழுவதும் கை மணக்கும். நாங்கள் இருந்த வீட்டுக்கு அருகாமையில், பல கிறித்துவ வீடுகளில் கருவாடு விற்றார்கள். அவர்கள் வீட்டுக்குள் நுழையும் பொழுதே, கருவாட்டு வாசனை மூக்கைத் துளைக்கும். அதை, வெறும் எண்ணையில் வறுத்து ரசம் சாதத்துடன் சாப்பிட்டாலும் அவ்வளவு நன்றாக இருக்கும். உடம்பு சுகமில்லாமல் இருந்து, வாய்க்கு ருசியாக எதையாவது சாப்பிட வேண்டும் என்று நினைத்தால், சிறிய வறுத்த கருவாடை சாப்பிட்டாலே போதும். ருசி நாளங்கள் எல்லாம் ஆட ஆரம்பித்துவிடும். கருவாட்டுப் பிரியர்களுக்கு நான் சொல்வது புரியும். உடம்புக்கும் மிகவும் நல்லது என்று அடிக்கடி எங்கள் வீட்டில்நெய் மீன் கருவாட்டுக் குழம்பு பண்ணுவோம். இப்பொழுது அதை தூக்கிக் கொண்டு, விமான நிலையத்தில் இருக்கும் K9 நாய்களின் பிடியில் மாட்டாமல் வர வேண்டுமே என்ற பயத்திலும், என் மகனுக்கு அந்த 'தீவிர' வாசனை பிடிக்காததாலும், எடுத்து வருவதில்லை.


6 comments:

  1. அக்கா - இந்த மீன் குழம்பும் மீன் வறுவலும் நீங்கள் சமைத்ததா? பார்க்க நன்றாக இருக்கிறது.

    சுக்கட் வறுத்தது எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஒரே ஒரு முறை சுக்கட் குழம்பு சாப்பிட்டிருக்கிறேன். ஆனால் இதுவரை கருவாடு சாப்பிட்டதில்லை.

    ReplyDelete
  2. குமரன் - இரண்டு படங்களும் இணையத்தில் இருந்து எடுத்தது. சுக்கட் குழம்பும் மிகவும் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  3. ஒரு குண்டான் சோற்றையும் ஒரே மூச்சில் காலியாக்கும் மகத்துவம் மீன் குழம்புக்கே உரித்தானது. அதுவும் என் அம்மாவின் கைப் பக்குவத்திற்கு இனையாகாது. ஏனோ இன்றுவரை அம்மாவின் கைப்பக்குவத்தை மீறீய ஒரு மீன் குழம்பு எனக்கு வாய்க்கவே இல்லை. மீன் குழம்புக்கான சரியான பக்குவத்தை சமையல் குறிப்புகள் ஒரு போதும் கொண்டு தரமுடியாது என்பதை அனுபவத்தில் கண்டிருக்கிறேன். அது ஒரு தனித்துவமான கலை....அதுவும் அழிந்து கொண்டிருக்கும் கலை.

    கருவாட்டுக் குழம்பும், கருவாடும் ஒரு தெய்வீக அனுபவம். :)). மிளகும் பூண்டும் தட்டிப் போட்டு ஒரு கருவாட்டுக் குழம்பு வைப்பார்கள். சுரீரென நாடி நரம்பெங்கும் வியாபிக்கும் அந்த அனுபவத்தை வார்த்தையில் சொல்லி மாளாது. திருக்கை மீன் கருவாடு சின்ன சின்ன க்யூப் போல இருக்கும். பலருக்கும் அதைப் பற்றி தெரியாது ஆனால்...ஒரு தடவை திருக்கை மீன் கருவாட்டுக் குழம்பு சாப்பிட்டுவிட்டால்.....ஹா...ஹா...இதை எழுதும் போதே நாவூறுகிறது. :))

    ReplyDelete
  4. வாவ்! என்னைப் போலவே அனுபவித்து சாப்பிட்டிருக்கீறீர்கள் சரவணன். அம்மா கைப்பக்குவம் யாருக்கும் வராது, உண்மை தான்!

    ReplyDelete
  5. Super,bhavi...ennakkj padikkum pothu nakkule thanni vanthiruchi:-)non veg kulambugalil pidithathu meen kulambu than enakku

    ReplyDelete
  6. சோபனா, உனக்கு மீன் பிடிக்குமென்று தெரியாது. நீங்கள் எல்லாம் வெஜ் என்று நினைத்தேன்!

    ReplyDelete

அமரன்

'அமரன்' திரைப்படம் தீபாவளிக்கு அமெரிக்காவிலும் திரையிடப்பட்டு பெரும்பான்மை மக்கள் கண்டுகளித்த சில படங்களில் அதுவும் நல்ல இடத்தைப் பி...