Monday, October 29, 2012

அடடா மழைடா, அடை மழைடா..

Sandy புயல்,மழை காரணமாக நியூயார்க் நகரம் ஸ்தம்பித்து போய்' இருக்கிறது. புயலுக்கு பயந்து கல்லூரிகள், பள்ளிகள் மூடப்பட்டு விட்டதால் குழந்தைகளுக்கு கொண்டாட்டம். காற்று பலமாக வீசிக் கொண்டிருக்கிறது. நாடக நடிகை போல் வானமும் வந்து கொட்டி அழுது தீர்த்து விட்டுப் போகிறேன் என்று இருண்டு கொண்டு வருகிறது. இந்த புயல் கடந்து வருகின்ற பாதை முழுவதும் பல அழிவுகளை நடத்திக் கொண்டே வருவதால் பல இடங்களிலும் முன்னெச்சரிகை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நேற்றிலிருந்து சூரியனும் உள்ளேன் அய்யா பாணியில் வருவதும் பின் மறைந்து போவதுமாய் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கிறது. உதிர்ந்த இலைகள் காற்றில் பறந்து கொண்டிருக்கிறது. இன்றிரவிற்குப் பிறகு நிறைய மரங்கள் காற்றில் கீழே விழும் அபாயம் உள்ளது! தொலைக்காட்சிகளில் அடிக்கடி புயல் பற்றிய செய்திகளை அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று மதியத்திலிருந்து காற்றுடன் மழை என்ற அறிவிப்பை தொடர்ந்து பள்ளிகளும் சீக்கிரமாகவே மூடப்பட்டுவிட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்று சொல்கிறார்கள்:( இன்னும் Irene புயல் பாதிப்பிலிருந்து மீண்டு வர முடியாமல் தவிக்கும் விவசாயிகள் இன்னும் கலக்கம் அடைந்திருப்பார்கள். வீடுகளில் தண்ணீர் புகுந்து அதன் விளைவுகளை சந்தித்தவர்கள் நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் பட்ட காலிலேயே படும் என்பது போல் மீண்டும் ஒரு பெரும்புயல். கொஞ்சம் கலக்கமாகத்தான் இருக்கிறது.

நியூயார்க் 
என் சிறுவயதில் மேகம் கருத்து வானம் இருண்டு கொண்டு வந்தாலே மனதில் சந்தோஷமும், கரண்ட் போய் விடுமே என்ற கவலையும் வந்து விடும். என் அப்பா, அம்மாவிற்கோ மாடியில் காய்ந்து கொண்டிருக்கும் சாயம் போட்ட நூல்களை மழையில் நனையாமல், விரைவில் காய வைக்க வேண்டுமே என்ற கவலை. அந்த காலத்திலேயே தண்ணீர் பஞ்சம் இருந்தாலும் மழை வந்தால் எங்கள் வீடே அல்லோலகப்படும். வேலைக்காரர்கள் இல்லை என்றால்,ஆளுக்கு ஒரு திசையில் மாடிக்குச் சென்று விறுவிறுவென்று, காயப்போட்டிருக்கும் நூல்களை ஓரத்திலிருந்து தள்ளி நடுப்புறத்திற்கு கொண்டு வருவோம், மழையில் நனையாமல் இருப்பதற்கு. அதற்குள், நாங்கள் நன்றாக நனைந்திருப்போம். அவசர அவசரமாக எல்லோரும் தலையை துவட்டிக் கொண்டு உட்கார்ந்தால், சொல்லி வைத்த மாதிரி, எங்கேயாவது 'டப்' என்று ட்ரான்ஸ்பார்மர் வெடிக்க, 'பட்'டென்று கரண்ட் போக, படிப்பு அம்பேல். அதுவும், அடுத்த நாள் டெஸ்ட் ஏதாவது இருந்தால், அவ்வளவு தான். அரிக்கேன் விளக்கு, மெழுகுவர்த்தி தேடி போக, இருட்டில் ஒவ்வொன்றையையும் தேடி பிடித்து எடுப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடும். மெழுகுவர்த்தி காற்றுக்கு அணைந்து போக, மீண்டும் அரிக்கேன் விளக்குக்கு பலத்த சண்டை நடக்கும். இப்பொழுது இந்த காட்சிகள் எல்லாம் மதுரையில் சர்வ சாதாரணமாகி விட்டது! மாணவர்களுக்கு தான் பெரும் அவஸ்தை.

நன்றாக மழை பெய்து நிற்கும் வேளையில், அந்த ஈர மண் வாசனையும், மழை கிளப்பிய சூடும், குப்பைகளுடன் ஓடும் கலங்கலான தண்ணீரும் என்று தெருக்கள் சொத,சொதவேன்றிருக்கும். வீட்டு ஓடுகளில் இருந்து மழை நீர் வடிய, தண்ணீர் தெருக்களில் ஓட ஆரம்பிக்கும். மழையில் நனைந்தால் ஜலதோஷம் பிடித்து விடும் என்று மழையில் வெளியே விடமாட்டார்கள். அப்படியே பழகி, ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்ப்பது, கதவை லேசாக திறந்து வைத்து ரசிப்பது என்றாகி விட்டது. எங்கள் தெருவில் என் வயதை ஒத்த குழந்தைகள் எல்லோரும் எப்படா மழை நிற்கும் என்று காத்திருப்போம். பிறகு, எல்லோரும் பேப்பர் கப்பல் செய்து அவரவர் வீட்டு வாசலில் இருந்து விடுவோம். யார் கப்பல் வெகு தூரம் போகிறது என்று ஆவலுடன் பார்ப்பது, யார் கப்பல் நன்றாக இருக்கிறது என்று போட்டி போட்டு சிறு வயதில் விளையாடியது எல்லாம் மழை வரும் பொழுதெல்லாம் நினைவில் வருகிறது. அப்பாவிடம் போய், எனக்கு பெரிய பேப்பர் கப்பல் வேண்டும் என்று கேட்டு அதை தண்ணீரில் மெதுவாக விட, சமயங்களில், மழை நீர் ஓடும் வேகத்தில், கப்பல் கவிழ்ந்து விடும். அதைப் பார்த்து மற்றவர்கள் கேலி செய்ய, வெட்கத்தில் கண்ணில் பொல,பொலவென்று மழை நீர் :(இங்கே குழந்தைகளோ, மழைக்காலத்தில் போடும் பூட்ஸ்களைப் போட்டுக் கொண்டு, மழைத் தண்ணீர் தேங்கியிருக்கும் இடங்களில் போய் குதித்து விளையாடுகிறார்கள். கோடைக்காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் மழை வந்தால், குழந்தைகள் எல்லாம் ஆனந்தமாக மழையில் விளையாடுவார்கள். எல்லா இந்திய அம்மாக்களும் போலவே நானும் ஏன் மழையில் நனைகிறாய், உடம்புக்கு ஏதாவது ஆகிடப் போகிறது என்று படப்படப்பாகி விடுவேன். ஆனாலும், நாம் தான் ஆடவில்லை, நம் குழந்தையாவது அனுபவிக்கட்டுமே என்று சமயங்களில் விட்டு விடுவதும் உண்டு :) நம்மூர் மாதிரி ரோடுகளில் தண்ணீர் தங்குவதில்லை. அதனால், கத்தி கப்பல், கப்பல் எல்லாம் விட முடியவில்லை :(

ஒரு விடுமுறையில் மதுரை வந்திருந்த பொழுது, நானும் என் மகளும் மதுரையில் டவுன் ஹால் ரோட்டில் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தோம். 'ஜோ'வென்று மழை கொட்டித் தீர்த்து விட்டது. கடையில் உள்ளே இருக்கும் வரை ஒன்றும் தெரியவில்லை. வெளியில் வந்த பார்த்தால் முழங்கால் வரை தண்ணீர். அதுவும் அழுக்குத் தண்ணீர். ஒரே சேரும் சகதியும், குப்பையுமாய். என் மகளோ நான் இறங்கி நடக்க மாட்டேன் என்று ஒரே அடம். காரோ எங்கேயோ ஓரிடத்தில். டிரைவரை கூப்பிட்டால், அது ஒன் வே, நீங்கள் தெருவை கடந்து தான் வர வேண்டும் என்று சொல்ல, என் மகள் அப்போது சின்ன வயது தான், தூக்கிக் கொண்டு போனேன். நல்ல வேளை, அவள் ஒல்லியாக இருந்தாள். அதே வாரத்தில், என் குடும்பத்துடன், என் கணவரின் அண்ணன் வீட்டிற்கு போய் விட்டு வரும் பொழுது, ஒரே அடை மழை. காரில் தவிட்டுச்சந்தைப் பக்கம் வரும் வழியில், தண்ணீர் வெள்ளம் போல் வர, என் மகனுக்கோ குஷி. ஆ, flood,flood என்று ஆனந்த கூச்சல். எனக்கோ, காருக்குள் தண்ணீர் வந்து விடாமல் ஒரு பிரச்சினையும் இல்லாமல் பத்திரமாக வீடு திரும்பனுமே என்று. பந்தடி பக்கம் இஷ்டத்திற்கு ரோட்டை ஏத்தி மேடு செய்திருக்கிறார்கள். தண்ணீர் எங்கும் போக முடியாமல் அங்கேயே தேங்கி, கஷ்ட காலம்! பல இடங்களில் பள்ளங்கள். சில மூடப்படாமல் இருந்தது. அதனால், மழை வந்தால் ஒரு சிறு குளம் போல் ஆகி விடுகிறது. பஸ், லாரி வந்தால் பைக், ஸ்கூட்டர், சைக்கிள்-ல் போவோர் கதி அதோ கதி தான்:( இந்த அழகில் கரண்டும் போய் விட்டால் சொல்ல வேண்டியதில்லை. ஆனாலும், கரண்டில்லாமல் இருந்த மழை அனுபவம் குழந்தைகளுக்கு புதிது. இலவசமாக கொசுக்கடியும் :(

மழை பெய்யும் பொழுது சூடாக வாழைக்காய் பஜ்ஜி, கீரை வடை(பங்கரா பான் பைரி), தேங்காய் வடை(நளறு பைரி) சாப்பிட்டால் நன்றாக இருக்கும் :) நல்லாத் தான் இருக்கும், யாரவது சமைத்துக் கொடுத்தால் :) சமயங்களில், பண்ணுவதுண்டு. எனக்கு, சூடாக, டீ போட்டு, மழையை வேடிக்கைப் பார்க்கப் பிடிக்கும். என் கணவர் கேமரா சகிதம் போட்டோக்கள் எடுக்க கிளம்பி விடுவார். மழை நின்ற பிறகு, இள வெயிலில் தெரியும் வானவில் பார்க்க அதை விட அழகாக இருக்கும்.ம்ம்ம் ...

மழைக்கால மேகமொன்று மடி ஊஞ்சல் ஆடியது, இதற்காகத் தானே அன்று ஒரு ஜீவன் வாடியது....

No comments:

Post a Comment

'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...