Saturday, October 6, 2012

இயற்கை என்னும் இளைய கன்னி - 1 - இலையுதிர் காலம்

Fall view, Vermont
எனக்குத் தெரிந்து, ஆடி மாதத்தில் அரசமர இலைகள் எல்லாம் உதிர்ந்து மொட்டை மரமாக காட்சியளிக்கும் இலையுதிர்காலம் தான் நான் மதுரையில் பார்த்தது.

கனடாவில் பார்த்த இலையுதிர்காலம் மிகவும் வித்தியாசமாக இருந்தது.

நல்ல கோடை வெயிலுக்குப் பிறகு,  செப்டம்பர் மாத இறுதியில் இருந்து இலைகள் நிறம் மாறத் தொடங்கியது. முதலில் பழுப்பு மஞ்சள், பிறகு கண்ணைப் பறிக்கும் ஆரஞ்சு, சிவப்பு என்று மாறி ஒரு வண்ணப்படைப்பை பார்த்த பொழுது அவ்வளவு ஆனந்தமாக இருந்தது. ஓடி,ஓடிப் போய் ஒவ்வொரு மரத்தின் கீழும் போடோக்கள் எடுத்து வீட்டிற்கு அனுப்பினோம். அவர்களும், காலெண்டரில் பார்த்த மாதிரியே இருக்கு என்று சொன்னார்கள். இப்பொழுதெல்லாம் ஓடிப் போய் எடுப்பதில்லை,ஓடவும் முடியவில்லை:(                                                                                  

இந்த அழகு, குறுகிய காலத்திற்கு தான். அதுவும் அக்டோபர் மாதம் இரண்டாவது, மூன்றாவது வாரங்களில் ஆகாயத்தில் தீட்டிய வண்ணங்கள் போல இந்த மரங்கள் உள்ள அடர்ந்த மலைப்பகுதிகளில் ஓட்டிச் செல்வது ஒரு நல்ல அனுபவம். மழை வந்து விரைவிலேயே இலைகள் உதிர்ந்து விடும். இந்த அழகு வண்ண மரங்களை பார்ப்பதற்கென்றே மலையோர ஸ்பெஷல் ரயில் வண்டிகளையும் இந்த சீசனில் பார்க்கலாம்.
சூரிய ஒளி குறைந்து, காலையில் புற்களில் லேசான பனித்துளிகள், மழையின் ஈர வாசனை, 'குப்'பென்ற புகை கூட்டம், மூடு பனி என்று பலவிதமான கோலங்களுடன் தான் விடியல் இந்த கால கட்டத்தில். காலையில் எழுந்திருப்பதே பெரும் போராட்டமாக தான் இருக்கும்:(

இதில், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் அந்த மூடுபனியில் நடந்து போவதை பார்க்க நன்றாக இருக்கும். சாலைகளில் ஏதோ கும்மிருட்டில் ஓட்டுவது போல் பிரமையாக, வண்டிகள் மெதுவாக சென்று கொண்டிருக்கும்.

இந்த மாதத்தில், அருகில் உள்ள பழத்தோட்டங்களில் ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரீஸ், ராஸ்பெர்ரீஸ், பேரிக்காய், பீச், பூசணிக்காய்கள் என்று எவ்வளவு வேண்டுமானாலும் நாமே பறித்து விலைக்கு வாங்கிக் கொள்ளலாம். அங்கேயே குழந்தைகளுக்கென்று குதிரை வண்டிப் பயணம்!, ட்ராக்டரில் புல்லுக் கட்டுடன் ஜாலி பயணம், ஐஸ்கிரீம், ஆப்பிள் சைடர் டோனட்ஸ் என்று சுவை மிக்க தின்பண்டங்களும் கிடைக்கும். நம்மூரில் சொல்லுவார்கள், ஏன் இப்படி திறந்த வாயை மூடாம வேடிக்கப் பார்க்குறே என்று, அப்படித் தான் குழந்தைகளும் ஆடு, மாடு, குதிரை, கோழி, சேவல், பன்னிக் கூட்டங்களைப் பார்த்து கொண்டிருப்பார்கள்!


இன்னும் இரு மாதங்களுக்குள் இலைகள் உதிர்ந்து மரமெல்லாம் மொட்டையாகி பனிக்காலத்திற்கு தயாராகி விடும். மனதளவில் மக்களும் பனிக்கும், குளிருக்கும் தயாராகி விடுவார்கள்.




Photos by: OKV

2 comments:

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...