Sunday, October 21, 2012

போவோமா ஊர்கோலம் - அசைவ உணவகங்கள் மதுரையில்- 2

அம்சவல்லி - மதுரையில் பலரின் விருப்பமான அசைவ உணவகம். கீழ வெளி வீதியில் சிந்தாமணி தியேட்டருக்கு அருகில் நெல்பேட்டை ஜன சந்தடியில் டிராபிக் அல்லாடும் இடத்தில் இருக்கிறது. முன்பு, கால் ப்ளேட் பிரியாணி கூட கிடைக்கும். அது மட்டன் பிரியாணி ஆக இருக்கும். வீட்டிலிருந்து சிறிது தொலைவில் இருந்ததால் வேலை ஆட்களோ, அப்பாவோ போய் பிரியாணி வாங்கி வருவார்கள். அன்று சமயலறைக்கு விடுமுறை. காலையிலிருந்தே பசிக்கிற மாதிரி இருக்கும். நேரம் மெதுவாக போகிறதோ என்று அடிக்கடி பார்க்கத் தோன்றும். மதிய நேரத்தில் யார் யாருக்கு என்ன என்ன வேண்டும் என்று லிஸ்ட் போட்டுக் கொடுக்க, அக்காவிற்கு எப்பொழுதும் முக்கால் ப்ளேட் பிரியாணி, தம்பி ஒருவனுக்கு அப்போது பிரியாணி பிடிக்காது. அவனுக்கு பரோட்டா. ஆனால், இப்பொழுது வெளுத்துக் கட்டுகிறான் பிரியாணியை

சமயங்களில் மீன் ரோஸ்டும் கூட. பிரியாணி பையை வாங்கும் பொழுதே வாசனை தூக்கும். பரபரவென்று பொட்டலத்தை பிரித்து எனக்கு துப்பாக்கி, எனக்கு எலும்பில்லாமால் நல்ல கறி என்று ஒவ்வொருவர் சொல்ல, அடுத்தவர் பொட்டலத்தில் நிறைய கறி இருப்பதாகவே தெரியும் :(  அன்றும், இன்றும், என்றென்றும், அம்சவல்லி பிரியாணி, அம்சவல்லி பிரியாணி தான். இப்பொழுது குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிடும் வகையில் இருக்கிறது. நிறைய பெண்களும் சாப்பிட வருகிறார்கள் :) அம்சவல்லி பிரியாணியின் ஒரு சிறப்பு, மசாலா எல்லாம் நன்கு அரைக்கப்பட்டு அரிசியுடன் நன்கு கலந்து அந்த கலரை பார்க்கவே அவ்வளவு நன்றாக இருக்கும். பொட்டலத்தை பிரிக்கும் போதே, தயிர் வெங்காய வாசனையுடன் மசாலா வாசனையும் சேர்ந்து ஏற்கெனவே பசியோடு இருப்பவர்களுக்கு இன்னும் பசிக்க, சில நிமிடங்கள் யாரும் பேசாமல் ருசித்துச் சாப்பிட...ம்ம்ம்ம். அது எப்படி என்று தெரியவில்லை, நெய்மீன் ரோஸ்ட் சுத்தமாக எண்ணை இல்லாமல் காரத்துடன் சிவக்க வறுத்து அவ்வளவு சுவையாக இருக்கும். ஆனால், அநியாயத்திற்கு விலை :( சாப்பிட்ட பிறகு, சூடா ஒரு டீ. மணமணக்கும் கையுடன் மனம் மகிழ அந்த தினம் போகும் :) மசாலா சாப்பாடு சாப்பிட்டால் அன்றைய தினம் மகிழ்ச்சியாகவே இருக்கும். அது தான், மசாலாக்களின் குணமே!


இப்படித் தான், மதுரை அருளானந்தம் ஹோட்டலில் கிடைக்கும் அயிரை மீன் குழம்பும். இந்த ஹோட்டல் விளக்குத்தூண் அருகில் ஒரு சந்தில் இருந்தது. அரைத்து விட்ட மசாலாக்களுடன், மண் வாசனை நிறைந்த நெத்திலி மீன், நெத்தியடியாக இருக்கும். குழந்தை பெற்ற பெண்களுக்கு நிறைய கொடுப்பார்கள். அந்த மீன் சிறு குளங்களில் கிடைக்கும். கரகரவென்று மண் வாசனையுடன் ஒரு வித சுவையுடன் இருக்கும். ஒரு முறை, சென்னை, தி. நகரில் மதுரை அருளானந்தம் ஹோட்டல் என்று பார்த்தவுடன் ஆஹா, இங்கேயுமா என்று ஒரு பிடி பிடித்துவிட்டு வந்தோம். ஆனால், சரியான காரம் :(



சரி, அம்மா மெஸ், அம்மா மெஸ் என்று கோரிப்பாளையம் பக்கம் ஒரு பிரபலமான கடைக்கு போய் சாப்பிடலாம் என்று போனால், சரியான கூட்டம். சாப்பிடுபவர்கள் வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்தார்கள். பரிமாறுபவர்கள் அங்குமிங்கும் பம்பரமாய் சுழன்று பரிமாறிக் கொண்டிருந்தார்கள். மக்களும் லபக்கு லபக்கு என்று அள்ளி வாயில் போட்டுக் கொண்டிருந்தார்கள். ஒருவர் கூட நிதானமாக உணவை ரசித்து ருசித்து சாப்பிட்ட மாதிரி தெரியவில்லை. ஏதோ, பஸ்ஸை தவற விட்டு விடுவோம் என்ற பயத்தில் உருட்டி உருட்டி சாப்பிட்ட மாதிரி இருந்தது:( அங்கு கோலா உருண்டை, ஷ்ரிம்ப் மசாலா படு டேஸ்டாக இருந்தது. (இப்போது அய்யா மெஸ், தாத்தா மெஸ் என்று பல கடைகள்..:) )அப்படியே இன்னும் கொஞ்சம் உள்ளே போனால், தாஜ் உணவகம் இருந்தது. அங்கும் சூப்பர் பிரியாணி. கொடுக்கும் பொழுது, ஐயோ இவ்வளவு பிரியாணி சாப்பிட முடியுமா என்று மலைக்கத் தோன்றும். சாப்பிட ஆரம்பித்தால், தட்டு காலி. கல்யாணமான பிறகு, முதலில் கணவர் குடும்பத்துடன் சாப்பிடச் சென்ற முதல் இடம்! அப்போதெல்லாம், என்ன ஒன்றுமே சாப்பிட மாட்டேங்கிறாய், நன்றாக சாப்பிடு என்று சொன்னவர்கள் எல்லாம், இப்போது, நன்றாக வெட்டுகிறாய் என்று சொல்லும் அளவுக்கு நல்ல வளர்ச்சி! டவுன்ஹால் ரோட்டில் இருக்கும் தாஜ்ஜில் வீட்டு விஷேஷங்களுக்கு ஆர்டர் கொடுக்கிறார்கள். அதுவும் நன்றாக இருக்கிறது. எப்போதாவது, சௌராஷ்டிரா பிரியாணி சாப்பிட வேண்டுமென்றால், பனைமரத்து பிரியாணி/மாகாளிப்பட்டி பிரியாணி கடையில் வாங்கி வருவோம். அங்கு ஆட்டுக் கால் சூப், சுக்கா வறுவல் நன்றாக இருக்கும். இப்போது எப்படியோ?

விருந்துகளுக்கு சமைத்துக் கொடுக்கும் பல சௌராஷ்டிரா வீடுகளில் அருமையான பிரியாணி சமைத்துக் கொடுக்கிறார்கள். மசாலா குறைத்து, சிக்கன் கிரேவியுடன், பொறித்த மீன்/சிக்கன் என்று கேட்கிற மாதிரி சமைத்துச் சாப்பிடும் வசதிகள் பல மதுரையில் :)

என் கணவருக்கு சின்னக்கடை தெருவில் காளி கோவில் பக்கத்தில் இருக்கும் ராபியா மட்டன் ஸ்டால் பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். அங்கு கொத்துப் பரோட்டா மிகவும் பிரபலம். நாலைந்து பரட்டோவை பிச்சுப் போட்டு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, மஞ்சத்தூள், மிளகுத்தூள் போட்டு வறுத்து, அதன் மேல் சிக்கன் சால்னாவையும் கொட்டி, இரண்டு இரும்பு கரண்டியால் தெருவே அலறுகிற மாதிரி அந்த தோசைக் கல்லில் 'ந ந' என்று நர்த்தனமே ஆட விடுவார். அந்த கொத்துப் பரோட்டா சாப்பிட்டவர்களுக்குத் தெரியும் அதன் சுவை! அதேபோல் தான், சிக்கன் வறுவலும். பிரியாணியும். மசால் கம்மியாக நன்றாக இருக்கும். மசாலா அதிகம் பிடிக்காதவர்களுக்கு இந்த பிரியாணி கண்டிப்பாக பிடிக்கும். இந்தக் கடை இரவில் வெகு நேரம் வரை திறந்திருப்பதால், நல்ல வியாபாரம்

மதுரை தூங்கா நகரமோ இல்லையோ, நல்ல சாப்பாட்டு நகரம் :)




4 comments:

  1. Manakka, manakka oru post. Nalla nice, fluid style. This post even tempts a hard-core vegetarian like me. Sariyaana "saappaatu raami" yaa irundhuruppa (irukka) pola... :) -- Radha Bala

    ReplyDelete
  2. நன்றி, ராதா. இப்பத் தான் இலையே போட்டிருக்கேன். அதுக்குள்ள சாப்பாட்டு ராமின்னு சொன்னா, இதுக்கப்புறம் வரப்போற சைவ உணவுகள், நொறுக்குத் தீனிகள்-ன்னு பார்த்து என்ன சொல்லப் போறியோ?

    ReplyDelete
  3. Chokad lickeras bhei..Planning to attack Amma mess by this weekend as we are going for a marriage visit to Madurai..

    ReplyDelete

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...