Thursday, October 18, 2012

போவோமா ஊர்கோலம் - அசைவ உணவகங்கள் மதுரையில்- 1

புரட்டாசி முடிந்து ஐப்பசி ஆரம்பமானவுடன் பல சௌராஷ்டிரா வீடுகளில் மணக்க மணக்க கறிக்குழம்பு, பிரியாணி என்று களை கட்டும். பல வீடுகளிலும் புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவ உணவுகள் சமைப்பார்கள். பாட்டி வீட்டுக்குப் போனால், கண்டிப்பாக அசைவம் தான். சில சமயங்களில், அசைவ உணவகங்களிலிருந்தும் வாங்கி வந்து சாப்பிடுவதுண்டு. அந்த காலத்தில், பெண்கள் அங்கு போய் சாப்பிடுவது மிகவும் குறைவு :( 

பல திரிகளில் நான்-வெஜ் உணவுகளைப் பற்றிப் பேச, என் பங்குக்கு நானும் மதுரையில் எனக்குப் பிடித்த அசைவ உணவகங்களைப் பற்றி எழுதுகிறேன்.

என் பாட்டிக்கு திருப்பதி கடவுள் மேல் கோபம் போல. சனிக்கிழமைகளில் தவறாமல் கோழி பிரியாணி அதுவும் தமிழக உணவு விடுதியிலிருந்தோ, கேசவன் பிரியாணி என்று அரசமரம் பக்கம் ஒன்று இருந்தது அங்கிருந்தோ கொண்டு வரச் சொல்லி சாப்பிடுவார். கொண்டு வருபவர்களுக்கு காசும், கொஞ்சம் பிரியாணியும், கறியும் கிடைக்கும். எங்களில் யாரவது ஒருவர் போய் வாங்கி வருவோம். 


காமராஜர் சாலையில் தமிழக உணவு விடுதிக்குப் போனால் கல்லாவில் உள்ளவர் ஆர்டர் எடுத்துக் கொண்டு ஒரு அரை ப்ளேட் கோழி பிரியாணி, நிறைய தயிர் வெங்காயம், சால்னா என்று சொல்ல சில நிமிடங்களில் சுடச்சுட ஒரு பெரிய பொட்டலம் வரும். வாசனை சும்மா 'கும்'மென்று இருக்கும். தூக்கில் சால்னாவும் கமகமக்கும். சரியாக சில்லறை வாங்கிக் கொண்டு கல்லாவில் ஒரு சிறு தட்டில் வறுத்த சோம்பு வைத்திருப்பார்கள் அதை கொஞ்சம் எடுத்து வாயில் போட்டுக் கொண்டு வீட்டுக்கு வந்து அம்மாவிடம் பொட்டலத்தை கொடுக்க, அவரும் ஒரு தட்டில் பிரியாணி, வெங்காயத்தை வைத்து சால்னா ஊத்தி பாட்டியிடம் கொடுப்பார். நாங்களும் வாசனை கிறுகிறுக்க அவர் தட்டையே ஜொள்ளு விட்டுப் பார்த்துக் கொண்டிருப்போம். அம்மாவும் அந்த பக்கம் போங்கள் பாட்டியை நிம்மதியாக சாப்பிட விடுங்கள் என்று சொன்னாலும்:( 

அதேபோல் தான், கேசவன் கடை பிரியாணியும். பல சௌராஷ்டிரா மக்களின் அபிமான கடை :) காமராஜர் சாலையில் ஒரு சிறிய வீட்டில் தான் இந்த கடை இருந்தது. நுழையும் இடத்தில் கல்லா. அவரைத் தாண்டி போனால், 'ப' வடிவில் பலகை போட்டு பெரிய பெரிய அலுமினிய அண்டாக்களில் மட்டன் பிரியாணி, கோழி பிரியாணி, அவித்த முட்டை, சால்னா என்று வைத்திருப்பார்கள். வெள்ளை வெளேரென்று அவித்த முட்டையை பார்க்க அழகாக இருக்கும்.  ஆர்டர் வர, வர ஒருவர் பார்சல் கட்டிக்கொண்டிருப்பார். பக்கத்திலேயே ஆம்லேட் போட பச்சை முட்டையை ட்ரேயில் வைத்திருப்பார்கள். போனவுடன் கல்லாவில் உட்கார்ந்திருப்பவரிடம் ஆர்டர் சொல்ல அவர் உள்ளே இருப்பவரிடம் அதையே அவர் ஸ்டைலில் அரை பிளேட் கோழி பிரியாணி, ரெண்டு பரோட்டா என்று சொல்லி  ஒரு மணி வைத்திருப்பார், டிங் டிங் என்று ரெண்டு தட்டு தட்ட, ஒருவர் வந்து சால்னவிற்கு தூக்குச்சட்டி கொண்டு போய் கொடுக்க, உள்ளே இருப்பவர், இடது கையை சட்டி மாதிரி குழியாக்கி, ஏற்கெனவே வடிவாக கத்தரித்து வைத்த பேப்பரை இடக்கையில் வைத்து, அதன் மேல் வாழை இலையை வைக்க, ஒரு கப் பிரியாணியை சைசாக எடுத்து இலை மேல் வைக்க, ஓரத்தில் இரண்டு அவித்த முட்டைகளை வைத்து, ஒரு சிக்கன் கால்/தொடை பீஸ் ஒன்று வைத்து, தயிர் வெங்காயத்திற்கென்று சிறு சிறு இலைகளை நறுக்கி வைத்திருப்பார்கள், அதை ஓரத்தில் வைத்து, வெங்காயத்துடன் தயிர் இருக்கும் ஆனா இருக்காது என்ற கதையாக இருக்கும் சுவையான வெங்காயத்தை வைத்து பொட்டலத்தை அழகாக டைட்டாக மடித்து தலைக்கு மேல் தொங்கி கொண்டிருக்கும் கயிறை எடுத்து கட்ட, பார்சல் ரெடி. தூக்குச் சட்டியில் கொதிக்கும் சால்னா! 

அவருக்கு சைடாக, ஒரு பெர்ர்ர்ரிய தோசைக்கல்லில், ஏற்கெனவே பிசைந்து ஊற வைத்து, வட்ட வட்டமாக வைத்த உப்பின பரோட்டா மாவை , மாஸ்டர் எடுத்து அப்டி ஒரு தட்டு தட்டி, சட்டி முழுவதும் பரப்பி வைக்க, பார்ப்பதற்கே அவ்வளவு நன்றாக இருக்கும்! பரோட்டா மாஸ்டர் ஆளுக்கு பனியன், கைலியுடன் அந்த அனலில் வேர்த்து விறுவிறுக்க கருமமே கண்ணாயினார் மாதிரி ஒரு தூக்குச் சட்டியில் இருந்து என்ன எண்ணையோ, அதை திருப்பி போடும் கரண்டி விட்டு எடுத்து பரட்டோக்கள் மேல் அள்ளித் தெளிக்க, பரட்டோக்களும் சலசலவென்ற சத்தத்துடன் நிறம் மாற, நிமிடத்தில் எல்லாவற்றையும் திருப்பி போட்டு விடுவார். மீண்டும் எண்ணை அபிஷேகம் நடக்க சுடச்சுட ஆவி பறக்கும் பரட்டோக்கள் ரெடி!  உள்ளே கீழே உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருப்பவர்களுக்கும்(ஆர்டினரி ரூம்), பார்சல் கேட்பவர்களுக்கும் என்று பரோட்டக்கள் போகும். ஸ்பெஷல் ரூம் என்றால், மேசை, நாற்காலி போடப்பட்டிருக்கும் :)  பரட்டோக்கள் போடும் அந்த கல்லின் ஓரத்தில் ஆம்லட், ஆப்பாயில், கொத்துப் பரட்டோ, நிறைய வெங்காயம் , தக்காளி, மிளகு, கருவேப்பிலை, பொறித்த சிக்கன் போட்டு ஒரு வறு,வறுத்தெடுத்துக் கொடுத்தால் ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.

கிளம்பும் பொழுது வறுத்த பெருஞ்ஜீரகம் எடுத்து வாயில் மென்று கொண்டே வீட்டுக்கு வர, ஏதோ பிரியாணியை சாப்பிட்டது போலவே இருக்கும். அந்த சூடான பிரியாணியும், கறியும், வாழை இலை மணத்துடன், வெங்காயமும், சால்னாவும் தொட்டுச் சாப்பிட, ஏகாந்தம். சாப்பிட்டு முடித்த பின்னும், கையில் இருக்கும் அந்த வாசனை....ஆஹா!!!!!

அப்படியே, அம்சவல்லிக்கும் போய் விட்டு வரலாம் கொஞ்ச நாள் கழித்து...

2 comments:

  1. ஆஹா!, பதிவெங்கும் பிரியாணி வாசம்.படிச்ச உடனே பசிக்குது...::))

    அந்தக் காலத்து பிரியாணி இன்னும் நினைவில் மணக்க முக்கிய காரணம்....பிரியாணி அரிசி எனப்படும் சீரகசம்பா அரிசிதான்.இப்போது திரும்பிய பக்கமெல்லாம் பாசுமதி அரிசிதான் பயன் படுத்துகிறார்கள்.நிறைய எழுதலாம்தான்...பதிவை விட கமெண்ட் நீளமாய்டும்ல...:)

    ReplyDelete
  2. நன்றி, சரவணன். பிரியாணி universal பிடித்த உணவு எனக்குத் தெரிந்த வரைக்கும். இன்றும் மதுரையில் தள்ளுவண்டியில் விலை குறைவாக கிடைக்கும் உணவும் கூட! பதில் நீளமாக இருந்தாலும் பரவாயில்லை, சரவணன், எழுதவும். மழை நேரத்தில் சுடச்சுட பிரியாணி சாப்பிட்டால் நன்றாகத் தான் இருக்கும் :)

    ReplyDelete

'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...