Tuesday, November 6, 2012

மதுரையில் தீபாவளி - 1


தீபாவளி என்றதும், மத்தாப்பு சுத்தி சுத்தி போடட்டுமா என்று குழந்தைகளுக்கெல்லாம் ஜாலி ஜாலி தான். புதுத்துணிமணிகள், பட்டாசு, முறுக்கு, சீடை, அதிரசம் என்று அவர்களுக்குப் பிடித்ததெல்லாம் கிடைக்கும். பெற்றோர்களுக்குத் தான் இதையெல்லாம் எப்படி சமாளிக்கிறது என்ற கவலை இருக்கும். போனஸ் கைக்கு வந்தவுடன் பலர் வீட்டிலும் சிரிப்பும், மத்தாப்பும் வெடிக்க ஆரம்பித்து விடும். கொலு முடியும் போதே கடைகளுக்குப் போய் துணிமணிகள் வாங்குவது, பட்டு சேலை வீட்டில் வைத்து விற்பவர்களிடம் குடும்பமாக போய் பார்த்து விட்டு எடுத்து வருவது, சட்டை, பேன்ட், சேலை தைக்க கொடுத்து விட்டு எப்படா வரும் என்று காத்திருந்தது என்று ஒரு சுகமான காலம். டெய்லர் கடைகளில் துணிகளை கொடுத்து தைக்க வருபவர்களின் அளவுகளை ஒரு சிறு நோட்டில் சிறிய பென்சிலால் அளவுகளை எழுத, காசா எடுக்கும் பையன் கழுத்தை வளைத்துக் கொண்டு அவன் வேளையில் மும்முரமாய் இருக்க, அந்த சிறிய கடையில் துணிகள் சிதறி தீபாவளியின் அருகாமையை பறைசாற்றிக் கொண்டிருக்கும். இன்று எல்லாமே ரெடிமேட் ஆக கிடைத்து விடுவதால் அந்த காத்திருத்தலில் இருந்த சுகம் என்ன என்று பலருக்கும் தெரியாமலே போய் விட்டது. வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை புதுத்துணி வாங்கும் பழக்கம் போய், கடைக்குப் போகும்போதெல்லாம் வாங்கும் பழக்கம் வந்து, புதுத்துணிக்களுக்காக காத்திருந்த அந்த இனிமையான நாட்களின் அருமை இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாமலே போய் விட்டது:(


எங்கள் வீட்டில் அப்பா புதுத்துணிகள் வாங்கி வந்தவுடன் அவர் தெரு முக்கில் வரும் போதே எத்தனை கடைப் பை இருக்கிறது என்று பார்த்து ஓடிப் போய் வாங்கி வந்து, வீட்டிற்குள் போய் பிரித்து இது எனக்கு, இது உனக்கு என்று சண்டை போட ஆரம்பித்து விடுவோம். கலர், சைஸ் சரியில்லை என்றால் மீண்டும் கடைக்குப் போய் மாற்ற வேண்டியிருக்கும். அடிக்கடி புதுத்துணி போட்டு, அந்த புதுத்துணி வாசனை பார்த்து, அதன் மடிப்பு கலையாமல் திருப்பி மஞ்சள் பையிலே வைக்க, பிறகு அதற்கு மேட்சாக நதியா தோடு, ஹேர்பின், பொட்டு.. என்று கோவில் கடை, புதுமண்டபம் என்று போக, நடுவில் மழையும் எங்களுடன் சேர்ந்து கொள்ளும். தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பாகவே அங்கொன்றும் இங்கொன்றுமாக பட்டாசு வெடிச் சத்தம் கேட்க ஆரம்பித்து விடும். பலசரக்கு கடைகளில் எண்ணை, டால்டா, அரிசி மாவு, கடலை மாவு ஸ்டாக் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். ரேஷன் கடைகளிலும், மண்ணெண்ணெய், பலகாரங்கள் செய்ய எண்ணை, அரிசி மாவு, சீனி எல்லாம் கொடுக்க ஆரம்பிப்பார்கள். அதை வாங்க பெண்களும், குழந்தைகளும், ஆண்களும், வயதானவர்களும் நீண்ட வரிசையில் நின்று கால்கடுக்க தவம் கிடப்பார்கள். பலரும், இனிப்பு, பாத்திரங்கள், துணிமணிகள், நகைகள் வாங்க என்று வருடம் முழுவதும் சீட்டு கட்டியிருப்பார்கள். அது கையில் கிடைத்தவுடன் அவர்களும் கடைக்கு கிளம்பி விடுவார்கள்.

தீபாவளிக்கெல்லாம் ஹைலைட் - தீபாவளி முன்தினம் தான். கீழவாசலில் இருந்து(இப்பொழுதெல்லாம் அரசமரத்திலிருந்து) மஞ்சனக்காரத்தெரு வரை தெற்குமாசி வீதியின் இருபுறங்களிலும் தள்ளு வண்டியிலும், பிளாட்பார்மிலும் துணிகள், தோடு,ஹேர்பின், பொட்டு, செருப்பு, பாய், பிளாஸ்டிக் குடங்கள், பாக்ஸ்கள், எவர்சில்வர் பாத்திரங்கள், அண்டா குண்டாக்கள் என்று எல்லாவிதமான சாமான்களும் கொட்டிக் கிடக்கும். நேரம் நேரம் ஆக ஆக விலை குறைத்து கூவி கூவி விற்பார்கள். பார்த்து வாங்கினால் நல்ல லாபம். இடிமன்னர்களிடமும், பிக்பாக்கெட்காரர்களிடமும் இருந்து தப்பித்து கூட்டத்திற்குள் போகும் சாமர்த்தியம் இருக்க வேண்டும். இல்லையென்றால் ஓரிடத்தில் இருந்து வேடிக்கைப் பார்த்து விட்டு வர வேண்டியது தான். பாட்டி வீடு விளக்குத்தூண் பக்கம் இருந்ததால் கூட்டத்தை நன்றாக வேடிக்கை பார்க்க முடிந்தது. நடுநடுவே திகர்தண்டா சாப்பிட, பீமா புஷ்டி அல்வா, மாங்காய், தென்னங்குருத்து, மிட்டாய், வேக வைத்த கடலை, கிழங்கு என்று வாங்க, பட்டாசுக்கடைக்கு போக, அசைவம், சைவம் என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லா உணவகங்களிலும் என்று எங்கும் கூட்டம் மொய்த்துக் கொண்டிருக்கும். இப்படி நடுநிசி வரை போய்க் கொண்டிருக்கும். மழை பெய்தாலும் குடையுடன் போகும் கூட்டம். இதைத்தவிர, ஆங்காங்கே, திடீர் பட்டாசுக் கடைகளில் கூட்டம், ஆரியபவன், திண்டுக்கல் ரோடு, மேல மாசி வீதிகளில் இனிப்புகள் வாங்கும் கூட்டம், நகைகள் வாங்க என்று மதுரை முழுவதும் விழித்துக் கொண்டு இருக்கும் தூங்கா நகர நேரமது. சேலைக்கடைகள், அம்மன் சந்நிதி, ஜடாமுனி சந்து என்று எந்த பக்கம் திரும்பினாலும் மக்கள் கூட்டம் ஜே ஜே அலைமோதிக் கொண்டிருக்கும். தீபாவளி ரிலீஸ் படங்களின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு அதை வேடிக்கை பார்க்கிற கூட்டமும், தங்களின் விருப்பமான நடிகர்கள் படம் என்றால் பால் அபிஷேகமும், மாலையும், தலைவனைப் போலவே மொட்டையடித்தும், மீசைஎடுத்தும், தாடி வளர்த்தும், பிடித்த நடிகைகள் என்றால் கோவில் கட்டி கும்பிட தயங்காத விடலைகளின் கூட்டமுமாய் என்று முழு நகரமும் விழாக்கோலத்தில் இருக்கும் நாளது!

ஊரிலிருந்து வரும் விருந்தினர்கள் கூட்டம், தலை தீபாவளி கொண்டாடும் புதுமணத் தம்பதிகள் கூட்டம், மகன்/மகள் வருகையை எதிர்நோக்கி காத்திருக்கும் பெற்றோர்கள் கூட்டம், அப்பா, அம்மாவைப் பார்க்க போகிற மகன்/மகள்கள் கூட்டம், தாத்தா , பாட்டிகளைப் பார்க்க போகின்ற பேரன், பேத்திகள் கூட்டம் என்று ரயில், பஸ், விமான நிலையங்களில் கூட்டம் அலைமோதும் நேரமிது.

தீபாவளிப் பயணம் தொடரும் ..

2 comments:

  1. "மஞ்சள் பை" & "அரசமரத்திலிருந்து) மஞ்சனக்காரத்தெரு வரை தெற்குமாசி வீதியின் இருபுறங்களிலும் தள்ளு வண்டியிலும், பிளாட்பார்மிலும் துணிகள், தோடு,ஹேர்பின், பொட்டு, செருப்பு, பாய், பிளாஸ்டிக் குடங்கள், பாக்ஸ்கள், எவர்சில்வர் பாத்திரங்கள், அண்டா குண்டாக்கள் என்று எல்லாவிதமான சாமான்களும் கொட்டிக் கிடக்கும். நேரம் நேரம் ஆக ஆக விலை குறைத்து கூவி கூவி விற்பார்கள்." --- golden memories..

    ReplyDelete
    Replies
    1. மஞ்சள் பை மறந்து போகுமா?

      Delete

அமரன்

'அமரன்' திரைப்படம் தீபாவளிக்கு அமெரிக்காவிலும் திரையிடப்பட்டு பெரும்பான்மை மக்கள் கண்டுகளித்த சில படங்களில் அதுவும் நல்ல இடத்தைப் பி...