Wednesday, January 30, 2013

ஜில் ஜில் திகர்தண்டா

மதுரையில் மட்டும் அதுவும் நகருக்குள் மட்டுமே கிடைத்துக் கொண்டிருந்த இந்த திகர்தண்டா இப்பொழுது பல இடங்களிலும் கிடைக்கிறது.

சிறு வயதில் என் பாட்டி வீடு மஞ்சனக்காரத் தெருவில் இருந்த பொழுது, அங்கு போகும் போதெல்லாம் தவறாமல் தூக்குச் சட்டியில் வாங்கி வருவது வழக்கம். எனக்கு எப்போதும் எங்கு போனாலும் எப்படி செய்கிறார்கள் என்ற ஆர்வம். மஞ்சனக்காரத் தெரு முக்கில் ஒரு நாலு சக்கர வண்டியில் வைத்து ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். எத்தனை வேண்டும் என்று கேட்டுக் கொண்டு வரிசையாக கண்ணாடி டம்ளர்களை வைத்து பெரிய அகண்ட சில்வர் பாத்திரத்தில் சிறிது தண்ணீருடன் இருக்கும் ஐஸ்கட்டிகளை இடக்கையில் வைத்து ஒரு கனத்த கரண்டி கொண்டு 'நங்நங்'கென்று போட்டு உடைக்க, உடைந்த ஐஸ் கட்டிகளை கண்ணாடி டம்ளர்களில் போடுவார். இன்னொரு பாத்திரத்தில் ஊற வைத்த கடற்பாசி இருக்கும். அதே கரண்டியில் கொஞ்சம் எடுத்துக் கொண்டு சிறிது சிறிதாக டம்ளர்களில் போடுவார். ஒரு தூக்குச் சட்டியில் சர்பத் இருக்கும். அதையும் கரண்டியில் எடுத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக டம்ளர்களில் ஊற்றுவார். அடுத்து பாலாடை ஒரு ஸ்பூனில் எடுத்து போட்டு ஒரு ஆத்து ஆத்த, திகர்தண்டா ரெடி. நாக்கில் நீர் ஊற ஐஸ் கட்டி உருகுவதற்குள் பாட்டி வீட்டிற்கு ஓட்டம். பாட்டியும் எல்லோருக்கும் டம்ளர்களில் ஊற்றிக் கொடுக்க, மெதுவாக ஸ்பூன் போட்டு சாப்பிட்டால், ஆஹா! வழுவழு கடற்பாசி, இனிப்பான சர்பத் நல்ல வாசனையுடன், பாலாடையும், ஐஸ்கிரீமும் சேர்ந்து   சில்லென்று தொண்டைக்குள் இறங்கும் பொழுது அதுவும் சுட்டெரிக்கும் வெயில் காலத்தில்..ம்ம்ம்ம்ம்  ..

இதுவே ஸ்பெஷல் என்றால், ஐஸ்கிரீம் சேர்த்த திகர்தண்டா. அது இன்னும் சுவையாக இருக்கும். ஐஸ்கிரீம் மட்டும் எடுத்துக் கொண்டு பகல் நேரத்தில் நாங்கள் இருந்த பகுதிகளில் வருவார்கள். கோன் ஐஸ்கிரீம் பிரபலமாகிக் கொண்டிருந்த நேரம் அது.வண்டி வருவது தெரிந்தவுடனே ஐஸ்கிரீம் வேண்டும் என்று அடம் பிடித்து சாப்பிட்டதெல்லாம் ஒரு காலம்! எவ்வளவு சாப்பிட்டாலும் எடை ஏறாத காலம். இப்போது பார்த்தாலே எடை எகிறி விடுகிறது!

ஆரம்பத்தில் மஞ்சனக்காரத்தெரு முக்கிலும், கீழமாசிவீதி முக்கிலும் இருந்த கடைகள் இன்று பலவாக பெருகி விட்டிருக்கிறது. எல்லாக் கடைகளிலும் கூட்டம்! ஏனோ, வெளியூரில் இருக்கும் மக்களுக்கு இந்த சுவை அவ்வளவாக பிடிப்பதில்லை:( இப்போதெல்லாம் விருந்துகளிலும் ஐஸ்கிரீம் வைக்க இந்த கடையைத் தான் நாடுகிறார்கள். ஆயிரம் ரூபாய் வரை கேட்கிறார்கள். தொண்டை வலி, இருமல், இருந்தாலும், வந்தாலும் பரவாயில்லை விருந்தில் வைக்கும் ஐஸ்கிரீமை சுவைக்காமல் பெரியவர் முதல் சிறுவர் வரை விடுவதில்லை. மதுரை மக்களை அப்படி மயக்கி வைத்திருக்கிறது இந்த ஐஸ்கிரீம்!இன்று திகர்தண்டா 30,40,50 ரூபாய்களில் கிடைக்கிறது. 50 ரூபாய்க்கு தாராளமாக ஐஸ்கிரீம், பாலாடையுடன் தொண்டைக் குழியில் இறங்கும் பொழுது 'ஜில்'லென்று - சாப்பிட்டாலே பரவசம் தான். ஐஸ் பாஸந்தியும் கிடைக்கிறது.

ஜில் ஜில் ஜிகர்தண்டா உடம்பிற்கு குளிர்ச்சியான பானம் என்கிறார்கள்.
இந்த திகர்தண்டா எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்றால் வீட்டில் நானே பண்ணி சாப்பிடும் அளவிற்கு :)

4 comments:

  1. சுவையான 'ஜில்'லான அனுபவம்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி, திண்டுக்கல் தனபாலன்.

      Delete
  2. நல்ல பதிவு! நானும் இங்கு பல தடவை ருசித்திருக்கிறேன்!!

    ReplyDelete

அமரன்

'அமரன்' திரைப்படம் தீபாவளிக்கு அமெரிக்காவிலும் திரையிடப்பட்டு பெரும்பான்மை மக்கள் கண்டுகளித்த சில படங்களில் அதுவும் நல்ல இடத்தைப் பி...