Wednesday, June 5, 2013

கும்பகோணம் - சுவாமிமலை

 மகாமக குளம் பார்த்த திருப்தியில் புது வருட நாளில் முருகனின் அறுபடை வீடுகளில் இதுவரை பார்த்திராத சுவாமிமலைக்குப் பயணமானோம். அதிகாலைப் பயணம் என்றுமே சுகம் தான். சாலையில் நெரிசல் இல்லை. வாசல் தெளித்து 'பளிச்' என்றிருக்கும் கோலம் போட்ட தெருக்கள். மெல்லிய மார்கழி மாத வருடும் காற்று. இளம் வெயில்...

கும்பகோணம் பஸ் நிலையம் அருகில் ஒரு சந்தில் இருந்த ஹோட்டலில் சுடச்சுட இட்லி, வடை, பூரி, தோசை, வெண்பொங்கல், கமகமக்கும் சூடான கும்பகோணம் பில்டர் காபியையும் சுவைத்து விட்டு சுவாமிமலைக்கு வழி கேட்டுக் கொண்டோம். பெரும்பாலான உணவகங்களில் வண்டிகள் நிறுத்தும் இடத்தில் ஒருவர் இருப்பதால் அந்த சிறிய தெருக்களில் இருந்து வண்டியை எடுக்கவும் வைக்கவும் அவர் உதவியுடன் கொஞ்சம் எளிதாக இருக்கிறது. மீண்டும் குறுகிய தெருக்களின் வழியே வெளியே வந்து பயணத்தை தொடர்ந்தோம்.

பெரும்பாலான வீடுகளில் முருங்கை மரம் நன்கு காய்த்துப் பச்சைப் பசலேன இருந்தது. பல வீடுகள் பச்சை வண்ணம் அடித்து முன்னிருக்கும் தாழ்வாரங்களை மாற்றி கட்டி இருந்தார்கள். உள்ளே முஸ்லிம் பெண்கள் அமர்ந்திருக்க, பழைய இந்துக்கள் குடியிறுப்பு மாறியிருந்ததை காட்டிற்று. பல வீடுகளும் இப்படி உருமாறிப் போயிருக்கிறது! நிறைய பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் கும்பகோணத்தை சுற்றி !!!

வெகு சீக்கிரத்தில் கோவிலை அடைந்து விட்டோம். கோவில் இருந்த தெருவில் டூரிஸ்ட் பஸ்கள், வேன்கள், கார்கள் வரிசையாக நின்று கொண்டிருக்க, நாங்களும் காரை ஓரிடத்தில் நிறுத்தி விட்டு கோவிலை நோக்கி போனோம். வாசலில் பூ மற்றும் அர்ச்சனைப் பொருட்களையும் வாங்கிக் கொண்டு, குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று கேள்விப்பட்டோமே இந்தக் கோவில் அப்படி தெரியவில்லையே என்று நினைத்தது என் தவறு என்று உள்ளே நுழைந்தவுடன் தெரிந்து கொண்டேன்.

அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையா இந்த சுவாமிமலை குமரன்(தகப்பன் சுவாமி) என்று ஐதீகம். குமரனைப் பார்க்க அறுபது படிகளை ஏறிப் போக வேண்டும். இந்தப் படிகள் அறுபது தமிழ் வருடங்களை குறிப்பதாக சொன்னார்கள். ஸ்பெஷல் தரிசன டிக்கெட் வாங்கிக் கொண்டு மிக அருகில் சென்று முருகனை தரிசித்தது மிகவும் நன்றாக இருந்தது. திருப்பரங்குன்றத்தில் உட்கார்ந்த நிலையில், பழமுதிர்ச்சோலை, பழனி, திருச்செந்தூரில் நின்ற வடிவில் சிறிய உருவில் இருக்கும் முருகன் இங்கு அழகாக, தீர்க்கமாக  நின்ற நிலையில் சற்று பெரியதாக இருப்பதாக தோன்றியது எனக்கு.

அங்கிருந்த மற்ற சன்னதிகளில் சிவன், பார்வதி, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், தட்சிணாமூர்த்தி, விநாயகர் என்று எல்லோரையும் வணங்கி விட்டு சிறிது நேரம் கோவிலை சுற்றி வந்தோம். மேலே கோபுரம் அருகில் வரை போக முடிகிறது. அதற்குள் கூட்டமும் வர ஆரம்பித்து விட்டது.

ஆங்கில புத்தாண்டின் துவக்கத்தில் நல்ல அருமையான தரிசனம் பார்த்த திருப்தியில் வெளியே வந்தோம் . கூட்டமும் வர ஆரம்பித்து விட்டது.

வெளியில் வந்து சிவ சூரியனார் கோவிலுக்குப் போகும் வழியில் பொங்கல் அறுவடைக்குத் தயாராக நெற்பயிர்கள் என்று வயல் வெளியை தாண்டி வந்தோம். பார்க்கவே மிகவும் நன்றாக மகிழ்ச்சியாக இருந்தது. அந்த இடங்கள் எல்லாம் இன்னும் அந்த கிராம வாசனையுடன்!!!!

சிறு குடிசைகளாக இருந்தாலும் வாசல்கள் தெளித்து வண்ணக்கோலங்களுடன். விடுமுறை நாளில்  சோம்பேறித்தனத்துடன் தூங்கி வழியும் முகத்துடன்  தெருவில் விளையாடும் குழந்தைகள், நட்ட நடு சாலையில் நின்று உரக்கப் பேசிக் கொண்டு வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு விட்டு மீண்டும் பேசுவதை தொடரும் தலையில் முண்டாசு கட்டிக் கொண்ட  மனிதர்கள், மார்கழி மாத குளிருக்கு(!!!), பனிக்கு முக்காடு போட்டுக் கொண்டு பெண்கள், குரங்கு குல்லா போட்டுக் கொண்டு குழந்தைகள் ,   சாலையின் ஓரத்தில் எனக்கென்ன என்று அசை போட்டுக் கொண்டே உட்கார்ந்திருக்கும் கால்நடைகள், கோவிலுக்குப் போகும் பேருந்துகள், கார்கள், பைக்குகள் என்று அந்த சிறு சாலையே பரபரப்புடன்!

நாங்களும் வழியில் நிறுத்தி பசும்வயல்வெளிகளை கண்கொள்ளா பரவசத்துடன் பார்த்தும் படமெடுத்துக் கொண்டும் ஒரு வழியாக சிவசூரியனார் கோவிலுக்கு வந்து சேர்ந்தோம். எங்களுக்கு முன்னே அய்யப்ப பக்தர்கள் கூட்டம் படையெடுத்துக் கொண்டிருந்தது.



6 comments:

  1. பச்சைப்பசேலென ரம்மியமான வயல்வெளிகள் மனதை அவ்வளவு சந்தோசப்படுத்தும்...

    ReplyDelete
  2. ஆமாம், தனபாலன்.

    மார்கழி மாதம் வேறு. அறுவடைக்குத் தயாரான பயிர்கள் என்று கண்குளிர பார்த்தாச்சு!

    ReplyDelete
  3. சுவாமி மலைக்கும் எனக்கும் சிறுவயதில் நிறைய நெருக்கம் உண்டு. அந்த கோவிலின் ஒவ்வொரு அங்குலமும் எனக்கு பரிச்சயம். பின்னால் கல்லூரி நாட்களில் உண்டான மற்றபிற சகவாசத்தினால் அவருக்கும் எனக்கும் தொடர்பில்லாது போய்விட்டது.

    சுவாமிமலையின் உண்மையான பெயர் திருவேரகம் என்பது பலருக்கும் தெரியாது. மேலும் இந்த கோவில் ஒரு செயற்கை குன்றின் மீதுதான் அமைந்திருக்கிறது. மிகவும் அழகான ஊர். நிறைய உலோக சிற்ப கூடங்கள் இங்கேதான் இருக்கின்றன. தற்போது உலகெங்கும் உள்ள கோவில்களில் இருக்கும், பெரும்பாலான உற்சவ மூர்த்திகள் இந்த ஊர் சிற்பிகளின் கைவண்ணம்தான்.

    இந்த கோவிலின் மூலவர் அமைப்பு புதுமையான ஒன்று. வேறெந்த முருகன் கோவிலும் இத்தகைய அமைப்பினை பார்க்க முடியாது. அது பற்றிய விவரங்கள் கூகிளில் கொட்டிக் கிடக்கிறது. தேடிப் பாருங்கள்.....கிடைக்கலைன்னா சொல்லுங்க, நான் சொல்றேன். :)

    ReplyDelete
  4. கண்டிப்பாக தேடிப் படிக்கிறேன், சரவணன். கைவசம் லிங்க் இருந்தால் தெரியப்படுத்தவும்.

    //இந்த கோவிலின் மூலவர் அமைப்பு புதுமையான ஒன்று. வேறெந்த முருகன் கோவிலும் இத்தகைய அமைப்பினை பார்க்க முடியாது.// உண்மை தான்.

    ReplyDelete
  5. சிவலிங்கம் என்பது இரண்டு பகுதிகளைக் கொண்டது. நடுவில் உள்ள தண்டுப் பகுதி, மற்றது அடியில் உள்ள பீடம். தண்டு பகுதியை லிங்கம் என்றும், பீடத்தை ஆவுடை அல்லது சக்தி பாகம் என்றும் சொல்வதுண்டு.

    இந்த தண்டு பகுதி மூன்று பிரிவுகளை கொண்டது. மேலே நாம் பார்க்கும் பகுதியை ருத்ர பாகம் என்றும், ஆவுடைக்குள் இருக்கும் பகுதியை விஷ்ணுபாகம் என்றும். ஆவுடைக்கு கீழே நிலத்தில் புதைந்திருக்கும் பகுதியை பிரம்ம பாகம் என்றும் சொல்வார்கள்.

    தந்தைக்கே பாடம் சொன்ன இந்த கோவிலின் மூலவர் சுவாமிநாதரின் சிலையும் இந்த தத்துவத்தில்தான் அமைக்கப் பட்டிருக்கிறது. மற்றெந்த கோவிலின் மூலவரைப் போல அல்லாது இந்த மூலவர் ஆவுடையின் பீடத்தில் செருகப் பட்டிருக்கிறது. சிவனின் அம்சமாய் இந்த மூலவரைக் கருதலாம். இது வேறெந்த கோவிலும் காணமுடியாத சிறப்பு.

    நிறைய ஆத்திகர்களுக்குத் தெரியாத தகவல் இது. :)

    ReplyDelete
  6. அருமையான தகவல், சரவணன். நன்றி.

    இன்னும் கூகுளிலிட்டுக் கொண்டிருக்கிறேன் :(

    ReplyDelete

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...