வெள்ளிக்கிழமை சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு கோவிலுக்குச் சென்றிருந்த பொழுது சனிக்கிழமை ஒரு நாட் டிய நிகழ்ச்சி நடக்க உள்ளது, தவறாமல் கலந்து கொள்ளுங்கள் என்று கமிட்டி தலைவரின் மனைவி சொன்னார். நானும் ஈமெயில் பார்த்தேன், கண்டிப்பாக வருகிறேன் என்று அவரிடம் சொன்னேன்.
இன்று ஒரு நண்பரின் புதுமனைப்புகுவிழாவிற்கு போய் விட்டு அங்கிருந்து என் மகன் சிறிது நேரம் அவன் நண்பனுடன் விளையாட, அவன் நண்பனின் வீட்டிற்கும் போய் சிறிது நேரம் பேசி விட்டு அய்யோயோ மணி ஐந்தாகி விட்டதே, நிகழ்ச்சிக்குப் போக வேண்டுமே என்று அவர்களிடமும் நேரமிருந்தால் நீங்களும் கோவிலுக்கு வாருங்கள் என்று சொல்லி விட்டு கல்ச்சுரல் சென்டர் போய் சேருவதற்குள் மணி ஐந்தே முக்கால் ஆகி விட்டது.
நாட்டிய நிகழ்ச்சி ஏற்கெனவே ஆரம்பித்து விட்டிருந்தது. நிகழ்ச்சிக்கான டிக்கெட்டை வாங்கிக் கொண்டு உள்ளே போகும் பொழுது இரண்டாவது நிகழ்ச்சி ஆரம்பமாக நாங்களும் ஆவலுடன் பார்க்க ஆரம்பித்தோம்.
இந்த பரத நாட்டிய நிகழச்சியில் ஆறு மாணவிகள் ஆடினார்கள். மிக அழகாக உடையணிந்து, கூந்தல் அலங்காரங்கள், மேக்கப் என்று கண கச்சிதமாக இருந்தது ஒவ்வொரு நடன நிகழ்ச்சியும். மாணவிகள் ஒவ்வொருவரும் மிக அழகாக ஒருங்கிணைந்து ஆடியதைப் பார்க்க அவ்வளவு நன்றாக இருந்தது.
கோலாட்ட நடனம், அதற்கே உரிய அசைவுகளுடன், அடுத்தவர் கோலை தொட்டு ஆடியது, இரண்டு இரண்டு பேர் சேர்ந்து ஆடியது, சுற்றி சுற்றி ஆடியது என்று கண்ணை கவரும் விதத்தில் இருந்தது.
அதற்குப் பிறகு ஒரு கர்நாடக,மராட்டிய கிராமிய நடனம். மிகவும் எளிமையான அசைவுகளை கொண்டு கன கச்சிதமாக ஆடினார்கள்.
பஞ்சாபியரின் பாங்க்ரா நடனம் பார்ப்பவர்களையே ஆட வைக்கும் துள்ளலான பாடலுடன் கைகளை தூக்கி, கலர்கலரான ஆடையில் சுழன்று ஆடிய விதமும் பார்த்தவர்களை பரவசப்படுத்தியது.
கடைசியில் அவர்கள் ஆடிய கேரள மக்களின் களரி நடனமும் வியக்க வைத்தது. ஒரு கையில் வாளும், இன்னொரு கையில் கேடயமும் வைத்துக் கொண்டு மேடை முழுவதும் சுழன்று ஆடியது நிகழ்ச்சியின் ஹைலைட்.
ஒவ்வொருமுறை அவர்கள் வித்தியாசமாக ஆடிக் காட்டும் பொழுது, இவர்களுக்கு ஒன்றும் ஆகி விடக் கூடாதே என்று மனம் பதைபதைக்கும்.
விசேஷம் என்னவென்றால் இந்த மாணவிகள் ஒருவருக்கும் கண் பார்வை கிடையாது.
அவர்களுடைய ஒவ்வொரு அசைவும், கை முத்திரைகளும் தேர்ந்த நடனக் கலைஞர்கள் ஆடியது போல் இருந்தது தான். கண் பார்த்து நடனம் ஆடுவதே கடினம், ஆனால், காதில் கேட்கும் இசை மட்டுமே அவர்களுடைய வழிகாட்டியாக இருந்து ஆறு மாணவிகளும் ஆடிய விதமும், முகத்தில் முடிந்த வரை காட்டிய பாவமும் அவர்களுக்கு இருக்கும் குறையை ஒரு பொருட்டாகாவே அவர்கள் எண்ணவில்லை என்றதை திண்ணமாக காட்டியது.
இவர்களிடம் இப்படி ஒரு குறை இருக்கிறது என்று யாராலும் சொல்ல முடியாது. அப்படி ஒரு நடனம்! சரியான இடைவெளியில், ஒருவர் மீது ஒருவர் இடித்துக் கொள்ளாமல், நடனத்திலேயே சாகசங்கள் வேறு செய்து காட்டியது மிகவும் பாராட்டத்தக்கதாக இருந்தது.
பார்த்த அனைவருக்கும் அப்படி ஒரு வியப்பு இவர்கள் ஆடிய விதம். நிச்சயம் கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் மிகச் சிறந்த ஆசான்களாக இருந்திருக்க வேண்டும். இந்த மாணவிகளும் ஒவ்வொன்றையும் புரிந்து கொண்டு நினைவில் வைத்துக் கொண்டு ஆடியிருக்க வேண்டும் என்ற நினைப்பே மலைப்பாக இருந்தது!
இவர்கள் 'தீபா அகாடமி' என்று பெங்களூரில் இருக்கும் அமைப்பைச் சார்ந்தவர்கள். பெண்களுக்கான அதுவும் குறையுடைய பெண்களுக்கான அமைப்பு. அமெரிக்கா முழுவதும் இவர்கள் நிகழ்ச்சி நடத்தி அதில் கிடைக்கும் பணத்தில் அவர்கள் அமைப்பை மேம்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தாரளமாக நிதி உதவி செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள்.
இவர்களுடைய குழுவின் தலைவரும் கண் பார்வை அற்றவர்.
இவர்களுடன் வந்திருந்த இரண்டு மாணவிகள் மிக அருமையாக கதக் நடனம் ஆடினார்கள். என்ன பாந்தமான நடனம்! கைகளினாலும், முக பாவனைகளினாலும் அப்படி ஒரு அழகிய நடனம்! பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது.
நல்ல வேளை, இந்த நிகழ்ச்சியை மிஸ் பண்ணவில்லை. அந்த மாணவிகளிடம் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களைச் சொல்லி விட்டு, அவர்கள் ஆசானையும் பாராட்டி விட்டு மன நிறைவுடன் வீட்டிற்கு வந்தோம்.
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை கண்ணா
என்று இவர்கள் பாடியது போல் இருந்தது.