Saturday, August 17, 2013

Water Tubing, Lake Luzerne , NY

பல நாட்களாக என் மகள், தண்ணீரில் மிதந்து கொண்டே போகும் காற்றடைத்த மிதவையில் போவதற்கு டிக்கெட் வாங்கி விட்டேன். இந்த கோடை விடுமுறையில் எல்லோரும் சேர்ந்து போகலாம் என்று சொல்ல, நாங்களும் பல வார விடுமுறைகளில் இன்று போகலாம், நாளை போகலாம்  என்று தீர்மானித்து ஒரு வழியாக ஒரு நன்னாளில் கிளம்பினோம். மாற்றுத்துணிகள், பழங்கள், குக்கீஸ் (ரொட்டிகள்) என்று ஒரு பொதியையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டோம். என் கணவரும் மறக்காமல் கேமரா சகிதம்!

டிக்கெட்டை பிரிண்ட் எடுத்து விட்டு, அட்ரஸையும் குறித்து வைத்துக் கொண்டு மதியம் 2 மணியளவில் கிளம்பினோம். மூன்று மணிக்குள் அங்கு போக வேண்டும். சரியாக ஒரு மணி நேரம் வீட்டிலிருந்து. இதுவரை நாங்கள் போகாத ஒரு ஏரி. நாங்கள் அடிக்கடி போகும் Lake George-க்குப் பக்கத்தில். வழியில் எல்லாம் rafting, tubing என்று பல அறிவிப்பு பலகைகள்.

எங்களை tubing அழைத்துச் செல்ல வேண்டிய அலுவலகத்தின் முன் நிற்கையில் சரியாக மூன்று மணி. உள்ளே சென்று எங்கள் டிக்கெட்டை சரிபார்த்த பிறகு எங்களைப் போல் வந்தவர்களுடன் சேர்ந்து கொஞ்ச நேரம் காத்திருங்கள், எல்லோரும் வந்தவுடன் போகலாம் என்று சொல்லிவிட்டார். மூன்று வகையான மிதவைகள்- ஒன்று வட்டவடிவமானது , இன்னொன்று கொஞ்சம் முதுகு சப்போர்ட்டுடன் , இன்னொன்று, செவ்வகமாக ஏதாவது சாப்பாடு, ஸ்நாக்ஸ் எடுத்துக் கொண்டு போகலாம் என்று சொன்னார்.

இதுவரை இந்த பகுதிக்கே வந்ததில்லை, நன்றாக இருக்கிறதே என்று பேசிக் கொண்டிருக்கும் பொழுது எனக்குத் தெரிந்த அமெரிக்கப் பெண்மணி அவருடைய் ஆண் நண்பருடன்! tubing முடித்து விட்டு வந்திருந்தார். அவருடைய கணவரை நான் தேட, ஆண் நண்பரை அறிமுகப்படுத்தினார்!!! ம்ம். அது அவரவர் விஷயம் என்றாலும் கொஞ்சம் உறுத்தலாக இருந்தது.

அதற்குள் என் மகனுக்குத் தாகம் எடுக்க, தண்ணீர் பாட்டில் எடுத்து வர மறந்து, அவசர அவசரமாக என் கணவர் கடைக்குப் போய் வாங்கிக் கொண்டு வந்தார்.

கார் சாவியையும் அந்த அலுவலகத்தில் கொடுத்து விட்டுப் போகச் சொன்னார்கள். கேமரா எடுத்துக் கொண்டுப் போக முடியவில்லை என்று வருத்தம் என் கணவருக்கு. எனக்கும் தான் :(

ஒரு வழியாக அனைவரும் வந்து சேர்ந்த பிறகு, எங்களை பின்பக்கம் வருமாறு அழைத்து life jacket கொடுத்து அணியச் சொன்னார்கள். பிறகு, அனைவரும் அங்கிருந்த பஸ்ஸில் ஏறி அமர, இரண்டு வழிகாட்டிகளும்-(கைடுகள்  ), நடுத்தர வயது அம்மணி ஒருவர் பஸ்ஸை ஒட்டிக் கொண்டு வர, ஆரம்பமானது பயணம். அந்த பஸ்ஸின் மேலே அனைவருக்கும் வேண்டிய tubes கட்டி வைத்திருந்தார்கள்.

தார் சாலைகளின் வழியே போய் மண் சாலைகளில் குலுங்கி குலுங்கி, பக்கவாட்டில் சலசலக்கும் நீரோடையுடன், மரங்களின் நிழல்களின் வழியே, இப்படியும் ஒரு வழி இருக்கிறதா என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டே போய்க் கொண்டிருந்தோம்.

அதற்குள் வழிகாட்டிகளுள் ஒருவர் மலையின் உச்சிக்குப் போய் அங்கிருந்து நாம் கீழிறங்கி ஹட்சன் ஆற்றில் மிதந்து கொண்டு வருவோம். அப்படியே போனால், நியூயார்க் நகரத்திற்கே போய் விடலாம் என்று சொன்னார்!

ஒரு வழியாக ஆள் அரவமற்ற ஓரிடத்தில் நிறுத்தி இறங்கச் சொன்னார்கள். எங்களுடன் பதினான்கு பேர். ஒரு தாத்தா, பாட்டி தங்கள் பேரனுடன், ஒரு அம்மா, தன் இரு குழந்தைகளுடன், அதில் சின்னவன் அநியாயத்திற்கு கேள்விகள் கேட்டுக் கொண்டு பேசிக் கொண்டே வந்தான். கேட்க நன்றாக இருந்தது. ஒரு யுவனும், யுவதியும்:) இரு கல்லூரி மாணவிகள் - அதில் ஒருவர் சமீபத்தில் வெஜிடேரியன் ஆகி அதை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். ஒரு கணவன் மனைவி, 2 பெண் குழந்தைகள், ஒரு வால் பையன் சகிதம்.

எங்களுடைய மிதவைகள் கொடுக்கப் பட்ட பிறகு, ஆற்றின் கரைக்குப் போகச் சொன்னார்கள். வழிகாட்டிகளுள் ஒருவர் முழங்கால் அளவுத் தண்ணீரில் நின்று கொண்டு மிதவையை எப்படி பிடித்துக் கொண்டு அதில் ஏறி உட்கார வேண்டும். எப்படி கைகளைத் துடுப்பாக பயன் படுத்த வேண்டும் என்று சொல்லி விட்டு, எல்லோரும் தண்ணீருக்குள் வாருங்கள் என்று சொல்ல,

நாங்களும் ஸ்ஸ்ஸ்ஸ் என்று சொல்லிக் கொண்டே சில்லென்ற தண்ணீரில் காலை மெதுவாக வைத்துக் கொண்டே உள்ளே இறங்கினோம். ஒரே கல், சிறு பாறைகள். அவர் ரெடி, ஒன் , டூ , த்ரீ என்று சொன்னவுடன் எல்லோரும் மிதவையில் உட்கார , ஹீ ஹீ, ஹா ஹா , ஓ ஓ என்று சொல்லிக் கொண்டே மிதக்க ஆரம்பித்தோம்.

எனக்குத் தண்ணீரைக் கண்டாலே கொஞ்சம் உதறல் தான். அனால் இந்தப் பயணம் சுகமாக இருந்தது. என் கணவர் ஆஹா, சூப்பர், ஆனந்தம் என்று சொல்லிக் கொண்டே எனக்கு முன்னால் அதிவேகமாக போய்க் கொண்டிருந்தார். என் மகளோ அவருக்கும் முன்னால். நானும் என் மகனும் சரியான நீரோட்டத்தில் இல்லை போலிருக்கிறது. கடைசியாக.
நல்ல வேளை, எனக்கும் பின்னால் சிலர் :)

எங்களுடைய வழிகாட்டி இரண்டு 'kayak' என்னும் சிறு படகுகள் போல இருக்கும். அதில் துடுப்பு போட்டுக் கொண்டே, என்னையும் என் மகனையும் இழுத்துக் கொண்டு நீரோட்டத்தில் சேர்த்து விட்டார்.

வால்பையன் கையால் தண்ணீரை தள்ளி விட்டுக் கொண்டே எல்லோருக்கும் முன்பாக. தாத்தா அவர் கனத்திற்கு ஒரு பக்கம் சாய்ந்து கொண்டு சுகமாக கண்களை மூடியபடி , யுவனும் யுவதியும் ஜாலியாக :) என் மகனும் குப்புறப்படுத்துக் கொண்டு ஏதோ ஒரு யோசனையாக ...

மேலே பார்த்தால் நீல நிற வானம் வெள்ளை மேகங்களுடன், இரு புறமும் அடர்ந்த மரங்கள், சுற்றிலும் பச்சைப்பசேல் மரங்களுடன் மலைகள், சலசலக்கும் தண்ணீரின் ஓசை - உள்ளம் கொள்ளை போனதே....

கண்ணை மூடிக் கொண்டு ஆற்று நீரின் ஓட்டத்தில் போய்க் கொண்டே இருந்தோம். இரண்டு அடி ஆழம் தான். தீடீரென்று நடுவில் இருக்கும் சுழற்சி, இடப்பக்கமாக மாறும், கண்ணைத்திறந்து பார்த்தால் வலப்பக்க சுழற்சியில் போய்க் கொண்டிருப்போம், நடுநடுவே மேலும் கீழும் ஆடியபடியே ...இப்படியே மாறி மாறி மிதந்து கொண்டிருந்தோம்.

இயற்கையோ, சிருஷ்டியோ என்று தோன்ற வைத்த பல தருணங்கள். ம்ம். யாரவது ஊருக்கு வந்தால் இங்கும் அழைத்துச் செல்லலாம் என்று நினைத்துக் கொண்டே ...

திடீரென்றுப் பார்த்தால் நான் மட்டும் தனியாக எங்கோ போய்க் கொண்டிருப்பேன். வழிகாட்டியும் அவருடைய துடுப்பினால் தள்ளி விடுவார். இல்லை என்றால் அவருடைய படகை பிடித்துக் கொள்ளச் சொல்லி, என் கணவர் அருகே கொண்டு வந்து விட்டு விட்டுச் செல்வார் :)

நடுவில் இன்னொரு கும்பல் ஒன்றும் எங்களுடன் சேர்ந்து கொண்டது. அவர்கள் பீர் பாட்டில்களுக்கு என்று ஒரு மிதவை எடுத்து வந்திருந்தார்கள்!!! குடித்துக் கொண்டே மிதவையில்!!!!!

கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் தண்ணீரில் மிதந்து கொண்டே வந்தோம். காலை தொங்கவிட்டபடி, கைகளை தண்ணீரில் அளைந்தபடி ..வாவ்!!! என்ன ஒரு அனுபவம் .

எதுவும் ஒரு முடிவுக்கு வர வேண்டும். அது தானே நியதி? ஆம், ஒரு கரையோரமாக நிறுத்தி அனைவரும் மிதவையை கொடுக்க, மீண்டும் பஸ்ஸில் ஏற்ற, அனைவரும் பஸ் ஏறித் திரும்பினோம்.

போகும் போது அந்த ஆற்றைப் பற்றி ஒரு சின்ன தகவல். வழிகாட்டிகள் தங்களைப் பற்றி ஒரு சின்ன தகவல். வரும் போது எப்படி இருந்தது இந்த பயணம் என்று ஒரு சிட் -சாட்டுடன் நன்றாக இருந்தது.

நனைந்த துணிகளை மாற்றிக் கொண்டு வீடு வந்து சேரும் பொழுது மணி ஆறரை.

நல்ல சூடான ரவா தோசை சாப்பிட்டு திருப்தியாக போனது அன்றைய தினம் :)










8 comments:

  1. Love the way you express in Tamil!
    Rakesh

    ReplyDelete
  2. miga arumaiyaana katturai...
    pagirndhamaikku mikka nandri!!!
    Sudarsan - Michigan

    ReplyDelete
  3. ஆஹா!, குழந்தையாய் மாறி குதூகலமா!.....எஞ்சாய்ய்ய்ய்ய்!!

    இந்த மிதவைப் பயண தூரம் மொத்தம் எத்தனை கிலோமீட்டர்?

    ReplyDelete
    Replies
    1. இரண்டு மணிநேரப் பயணம். இரண்டு அல்லது மூன்று மைல் இருந்திருக்கலாம். சரியாக தெரியவில்லை :(

      Delete
  4. இரண்டே வரியில் ஒரு சம்பவத்தை, அது தந்த உறுத்தலை அதன் தாக்கம் கெடாமல் சொல்வது எல்லோருக்கும் வாய்க்காத எழுத்து.... :)

    //எனக்குத் தெரிந்த அமெரிக்கப் பெண்மணி அவருடைய் ஆண் நண்பருடன்! tubing முடித்து விட்டு வந்திருந்தார். அவருடைய கணவரை நான் தேட, ஆண் நண்பரை அறிமுகப்படுத்தினார்!!! ம்ம். //

    ReplyDelete

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...